பிகாரில் புதிய திருப்பம்
"பிகார் தேர்தலில் நிதீஷ் குமாரை தோற்கடிக்காமல் விடமாட்டேன். ஆனால், பிரதமர் மோடியுடன் எனக்கு எந்த விரோதமும் இல்லை' இதுதான் லோக் ஜனசக்தி (எல்.ஜே.பி.) கட்சித் தலைவர் சிராக் பாஸ்வானின் புதிய கோஷம்.
"பிகார் தேர்தலில் நிதீஷ் குமாரை தோற்கடிக்காமல் விடமாட்டேன். ஆனால், பிரதமர் மோடியுடன் எனக்கு எந்த விரோதமும் இல்லை' இதுதான் லோக் ஜனசக்தி (எல்.ஜே.பி.) கட்சித் தலைவர் சிராக் பாஸ்வானின் புதிய கோஷம். அவரது முக்கிய நோக்கம் தேர்தலில் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைத் தோற்கடிப்பதுதான்.
தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் போட்டியிடும் இடங்களில் தமது கட்சி போட்டியிடும் என்றும் ஆனால், பா.ஜ.க. போட்டியிடும் இடங்களில் எல்.ஜே.பி. போட்டியிடாது என்றும் சிராக் அறிவித்துள்ளார். இந்த இரண்டு கட்சிகளுமே மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இது என்ன குழப்பம்? அதுதான் பிகார் அரசியல். சிராக் பாஸ்வானின் தந்தை ராம்விலாஸ் பாஸ்வான், இப்போது மத்திய அமைச்சராக உள்ளார். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாலிவுட்டில் தடம் பதிக்க முயன்று அது கைகூடாத நிலையில் அரசியலுக்கு வந்தவர் சிராக் பாஸ்வான்.
இரண்டு நாள்களுக்கு முன்பு தில்லியில் அமித் ஷாவை சந்தித்த சிராக் பாஸ்வான், "நிதீஷுக்கு ஆதரவு இல்லை, பா.ஜ.க.வுடன் மோதல் இல்லை' என்று அறிவித்தார். இதன் பின்னணியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இருப்பதாகவும், நிதீஷ் குமாருக்கு கிடைக்கும் வாக்கு சதவீதத்தை குறைக்க அமித் ஷா மேற்கொண்ட உத்திதான் இது எனவும் கூறுகின்றனர் அரசியல் நோக்கர்கள்.
இந்த தேர்தலில் பா.ஜ.க.வுக்கு பெரிய வெற்றி கிடைத்தால், நிதீஷ் குமாருடன் பேரம் பேச வழிபிறக்கும். அது ஒத்துவரவில்லை எனில் சிராக் பாஸ்வான் கட்சியின் ஆதரவுடன் ஆட்சியமைத்து விடலாம் என்று பா.ஜ.க. கணக்குப் போடுகிறது.
ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்துவதன் மூலம் வாக்குகளைப் பிரித்து அக்கட்சியை தோல்வி அடையச் செய்ய வேண்டும். அதே சமயத்தில் பா.ஜ.க.வுக்கு ஆதரவு என்பதன் மூலம் அக்கட்சி போட்டியிடும் இடங்களில் வெற்றிபெறச் செய்வது பாஸ்வானின் நோக்கம். பிகார் மாநில மக்கள் தொகையில் தாழ்த்தப்பட்ட வகுப்பினரான பாஸ்வான்கள் 4.5 சதவீதம் பேர் உள்ளனர்.
நிதீஷ் குமாருக்கு எதிர்ப்பு அலை வீசுவதாகவும் இந்த நேரத்தில் இந்த உத்தியைக் கையாண்டால் தமது கட்சிக்கு வெற்றி கிடைக்கும் என்று கணக்குப் போடுகிறார் சிராக். மாநிலத்தில் லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் போட்டியிடுகின்றன. கடந்த தேர்தலில் லோக் ஜனசக்தி 40 இடங்களில் போட்டியிட்டது.
இந்தத் தேர்தலில் பா.ஜ.க. திட்டமிட்டு காய் நகர்த்துகிறது. நிதீஷ் குமார்தான் முதல்வர் வேட்பாளர் என்ற அடிப்படையில் நாங்கள் தேர்தலை சந்திப்போம் என்று பிரதமர் மோடி ஏற்கெனவே அறிவித்துள்ளார். கடந்த காலங்களில் மோடியின் செல்வாக்கு அதிகரித்து வந்துள்ளதால் தேர்தலில் எளிதாக வெற்றிபெற முடியும் என்று பா.ஜ.க. நினைக்கிறது. மேலும், இப்போது நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் கூட்டாளியாக இருக்கும் பா.ஜ.க., இந்த தேர்தல் வெற்றி மூலம் பெரியண்ணன் நிலைக்குச் செல்ல காத்திருக்கிறது.
பிகார் சட்டப்பேரவையில் 243 தொகுதிகள் உள்ளன. இந்தத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி 122 தொகுதிகளிலும், பா.ஜ.க. 121 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. ஜிதன்ராம் மாஞ்சியின் ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா (மதச்சார்பற்ற) கட்சிக்கு ஐக்கிய ஜனதா தளம் ஏழு தொகுதிகளை ஒதுக்க முடிவு செய்துள்ளது. அதாவது இதன் மூலம் பா.ஜ.க.வைவிட சற்றுக் குறைவான தொகுதிகளிலேயே, அதாவது 115 தொகுதிகளிலேயே நிதீஷ் கட்சி போட்டியிடுகிறது.
எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. நாங்கள் (ஐக்கிய ஜனதா தளம்-பாஜக) கூட்டாகத்தான் தேர்தலில் போட்டியிடுகிறோம் என்று நிதீஷ் குமாரும், பா.ஜ.க. தலைவர் சுஷில் மோடியும் தெரிவித்துள்ளனர். ஆனால், தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாகவும், ஐக்கிய ஜனதா தளத்தை எதிர்த்து வேட்பாளர்களை நிறுத்தப் போவதாகவும் சிராக் பாஸ்வான் கூறியுள்ளார்.
பிகாரில் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. நவம்பர் 10 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
"முதல்வர் நிதீஷ் குமாரின் நிர்வாகம் சரியில்லை'. "கரோனா தொற்றுப் பரவலை அவர் முறையாக கையாளத் தவறிவிட்டார்'. "பொது முடக்கத்தின்போது தில்லி, மும்பையிலிருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் பிகார் திரும்ப முற்பட்டபோது அவர்களை முதல்வர் நிதீஷ் குமார் கண்டுகொள்ளவில்லை' என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டு வருகின்றன.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ராஷ்ட்ரீய ஜனதா தளம் - காங்கிரஸ் மகா கூட்டணியின் பலம் வலுவாக இல்லாத நிலையில் ஐக்கிய ஜனதாதளம்- பா.ஜ.க. கூட்டணி எளிதில் வெற்றி பெற்றுவிடும் என்று பேசப்பட்டு வந்தது. ஆனால், இப்போது நிதீஷ் குமாருக்கு எதிராகவும், பா.ஜ.க.வுக்கு ஆதரவாகவும் லோக் ஜனசக்தியின் சிராக் பாஸ்வான் கொடி பிடித்திருப்பது பிகார் தேர்தலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிதீஷ் குமார் கடந்த ஓராண்டாக ஆட்சி நிர்வாகத்தில் போதிய கவனம் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக இருந்தாலும், மாநிலத்தில் கூட்டணி கட்சியான பா.ஜ.க. மற்றும் பிரதமர் மோடியின் செல்வாக்கில் எந்த சரிவும் ஏற்படவில்லை. எனவே இந்த தேர்தலில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அது நிதீஷ் குமாரைத்தான் பாதிக்கும் என்று கருதப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

