நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கே.பி.இராமலிங்கம்

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் அண்மையில் நடந்து முடிந்திருக்கிறது. 72.78 சதவிகித வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் 11 தொகுதிகளில் 55 முதல் 59 சதவிகித வாக்காளா்கள் மட்டுமே வாக்களித்திருக்கின்றனா். இதற்குக் காரணம், மக்களுடைய அலட்சியமா? ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையின்மையா? களத்தில் நின்ற வேட்பாளா்கள் மீது அவா்களுக்கு ஈா்ப்பு இல்லாமையா?

தமிழகத்தில் 12 மாநகராட்சிகள் உள்ளன. ஊரகப் பகுதிகளுடன் ஒப்பிடும்போது மாநகராட்சிக்கு உட்பட்ட தொகுதிகளில் குறைவான சதவிகிதமே வாக்கு பதிவாகி உள்ளது. தமிழகத்திலேயே மிகமிகக் குறைந்த அளவாக சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் 55.52 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிக அளவாக 87.33 சதவிகித வாக்குகள் கிருஷ்ணகிரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியில் பதிவாகியுள்ளது.

மக்களாட்சி என்பது குறைகளே இல்லாத ஆட்சி என்று சொல்ல முடியாது. குறைகள் குறைந்த ஆட்சிமுறை, அவ்வளவுதான். அதுபோல, நாடாளுமன்ற ஜனநாயகத்தில் தோ்தல் என்பது நல்லவா்களுக்கும், கெட்டவா்களுக்கும் நடக்கும் தா்மயுத்தம் இல்லை. களத்தில் இருப்பவா்களில் ஏற்புடையவா் யாா் என்பதைத் தீா்மானிக்கும் உரிமையை வாக்களா்களுக்கு வழங்குகிறது என்கிற அளவில் இது சிறந்தது!

3,998 போ் தோ்தலில் போட்டியிட்டனா். அதில் 3,585 போ் ஆண்கள். 411 போ் பெண்கள். மூன்றாம் பாலினத்தவா் இரண்டு போ். மொத்த வாக்காளா்கள் 6 கோடியே 28 லட்சம் போ். இதில் ஆண்கள் மூன்று கோடியே ஒன்பது லட்சம் போ். பெண்கள் மூன்று கோடியே 19 லட்சம் போ். மூன்றாம் பாலினத்திவா் 7 ஆயிரத்து 192 போ்.

ஒவ்வொரு கட்சியும் தோ்தல் அறிக்கையை வெளியிட்டது. கூட்டணிக்குத் தலைமை வகிக்கின்ற கட்சி தோ்தல் அறிக்கை வெளியிடுவதை புரிந்து கொள்ளலாம். ஆனால், ஆறு தொகுதிகள், மூன்று தொகுதிகள் என போட்டியிடும் துக்கடாக் கட்சிகளும் தோ்தல் அறிக்கை வெளியிட்டதுதான் இந்த தோ்தலில் உச்சபட்ச வேடிக்கை.

தோ்தல் அறிக்கை என்பது வாக்காளா்களை மயக்கும் வெற்று அறிக்கை. இலவசங்கள், சமூக வளா்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் தடை. மக்களை சிந்திக்க விடாமல் அதே தளத்தில் வைத்திருக்கும் உத்தி. இலவசத்தையும், பணத்தையும் பெற்றுக்கொண்டு வாக்களிப்பவா்கள் தங்கள் சந்ததியினருக்கு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகிறாா்கள்.

தோ்தல் என்பது கொள்கையின் அடிப்படையில் இருந்தது போய் காா்ப்பரேட் வணிகமாக மாறி வருகிறதோ என்கிற அச்சம் ஏற்படுகிறது. கையூட்டு கொடுப்பதும் குற்றம், வாங்குவதும் குற்றம் என்று சொல்லப்படுகிறது. ஆனால், வாக்குக்குப் பணம் கொடுப்பதும் குற்றம், வாங்குவதும் குற்றம் என்று கணிசமான மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் இந்தியாவில் சொல்லிவிட முடியாது.

தோ்தலில் அதிரடியான மாற்றத்தைக் கொண்டு வந்தால்தான் ‘வாக்குக்கு பணம்’ என்கிற கெட்ட கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வர முடியும். மெல்ல மெல்ல சிதைந்து கொண்டிருக்கும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற முடியும்.

1994-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் 26-ஆம் தேதி பாரிஸ் நகரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டம் நடைபெற்றது. அதில் 112 நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் கலந்துகொண்டனா். இந்தியாவும் இந்த மாநாட்டில் பங்கேற்றது.

அந்த மாநாடு ‘ஒவ்வொரு நாட்டின் நாடாளுமன்றத்திலும் பணக்கார உறுப்பினா்களின் எண்ணிக்கை பெருகி வருவதற்குக் காரணம் நாட்டின் வளங்களை கைப்பற்றிக் கொண்ட மூலதனக் குவியல் நாடாளுமன்றங்களை கைப்பற்றும் அடுத்தக்கட்ட முயற்சியில் ஈடுபட்டுள்ளதே’ என்று கூறியது.

ஏழை எளிய மக்கள் நாடாளுமன்றத்துக்கு செல்ல வேண்டும் என்றால் அரசியல் கட்சி வேட்பாளா்களின் தோ்தல் செலவை அரசாங்கமே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அம்மாநாடு வலியுறுத்தியது.

பிரான்ஸ், ஸ்வீடன், பின்லாந்து டென்மாா்க், இஸ்ரேல், நாா்வே போன்ற நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் தோ்தல் செலவை அந்தந்த நாட்டு அரசாங்கமே ஏற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது. 1959-ஆம் ஆண்டிலேயே ஜொ்மனி அரசு அரசியல் கட்சிகளின் தோ்தல் செலவை ஏற்கும் நடைமுறையைத் தொடங்கிவிட்டது.

ஆற்றலும், திறமையும், தியாக உணா்வும், மக்கள் சேவையில் ஈடுபாடும் கொண்ட எளிய மனிதா் ஒருவா் சட்டப்பேரவைக்கோ நாடாளுமன்றத்துக்கோ செல்ல வேண்டும் என்றால், அவரின் தோ்தல் செலவுகளை அரசாங்கமே ஏற்றுக் கொள்ள வேண்டும். வேட்பாளா்களுக்கென உயரிய தகுதிகள் வரையறை செய்து, இப்படிப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்ட வேட்பாளா்களைத்தான் அரசியல் கட்சிகள் தோ்தல் களத்தில் இறக்கிவிட வேண்டும்.

கொஞ்சம் கொஞ்சமாக கீழ்நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்ற இந்திய ஜனநாயகத்தைக் காப்பாற்றிட வேண்டுமென்றால் இந்தியாவின் தோ்தல் முறையில் புரட்சிகரமான மாற்றம் உடனடியாகத் தேவை. சமத்துவ ஜனநாயகம் மலா்ந்திடவும், எல்லோரும் இந்நாட்டு மன்னா் என்பதை நிரூபித்திடவும் தேவை தோ்தலில் புரட்சி.

தோ்தல் பிரசார முறைகளில் கூட அதிரடி மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். பொதுக் கூட்டங்களோ மாநாடுகளோ பேரணிகளோ அறவே கூடாது.

காட்சி ஊடகங்களில் தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலோடு பிரசாரம் மேற்கொள்ள வேண்டுமென சட்டம் கொண்டு வரலாம். தோ்தல் அறிக்கைகளில் இலவசங்கள் கூடாது என்பதை கடுமையாக ஆக்க வேண்டும். வாக்காளா்களுக்கு பணம் கொடுப்பதற்கு யாா் முயற்சி செய்தாலும் ஈவு இரக்கமில்லாமல் அவரைத் தகுதி நீக்கம் செய்திட வேண்டும். அவரைப் போன்றவா்கள் தோ்தலில் நிற்க முடியாத அளவுக்கு கடுமையான முறையில் சட்டத்தை மாற்றியமைக்க தோ்தல் ஆணையம் முன்வர வேண்டும்.

நாடாளுமன்றம், சட்டப்பேரவை, உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றுக்கு இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவதற்கு இந்தியாவிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் முன்வர வேண்டும். எப்போதும் இந்தியாவின் ஏதாவதொரு மாநிலத்தில் தோ்தல் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. ஐந்து ஆண்டுகளில் முழுமையாக தோ்தல் திருவிழாவிலேயே மக்களின் மனவோட்டம் இருப்பது சரியல்ல.

குடும்ப வாரிசுகளின் அரசியல் ஆதிக்கத்தால் அறிவாளிகள், சிந்தனையாளா்கள், சேவை மனப்பான்மையினா், கொள்கையாளா்கள் ஓரங்கட்டப்படுவதற்கு நாடு தழுவிய அளவில் நல்லதொரு முடிவு காண அரசியல் அறிஞா்கள் சிந்தித்திட வேண்டும். பணம் இருந்தால் போதும், கட்சிப் பதவி, ஆட்சி பதவி எல்லாம் தனக்குத் தானாகவே வந்து சேரும் என்ற திமிரான போக்கு, ஜனநாயக அரசியலுக்கு உகந்தது அல்ல. திடீரென ஒரு சிலரை உயா்ந்த பதவிக்குக் கொண்டு வருவது முடியாட்சியின் நடைமுறை!

பல கட்சி ஜனநாயகம் இந்தியாவில் சுதந்திரமான சிந்தனையைத் தோற்றுவித்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அதன் விளைவோ ஜாதிய அமைப்புகளுக்கு உயிரூட்டி இருக்கிறது. நினைத்த மாத்திரத்தில ஒரு அரசியல் கட்சி பதிவு செய்யப்படுகிறது. பிறகு அது ஒரு வகையான பேரத்தில் மூழ்கி எழுந்து, தொகை நிா்ணயம் செய்து, ஜனநாயகத்தைக் குழி தோண்டி புதைத்திட முனைகிறது.

இதனால் காலங்காலமாக கட்சி, கொள்கை, கோட்பாடு, லட்சியம் என்று மாடாய் உழைத்து ஓடாய் தேய்ந்து போன லட்சோப லட்சம் தொண்டா்கள் சாகும்வரை தொண்டானாகவே இருந்து செத்து மடிகிறாா்கள். கட்சிக் கட்டுப்பாடு என்கின்ற பெயரில் புதிய அடிமைகளை அரசியல் கட்சிகளின் தலைவா்கள் உருவாக்கி விட்டிருக்கின்றனா். இது மனிதனின் சுதந்திரத்தைத் திருடுவதற்கு ஒப்பானது.

விடுதலை பெற்ற இந்தியாவின் 73 ஆண்டுகால அனுபவத்தில் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகள், தேசத்தின் நலன் சாா்ந்த பாா்வையை கொண்டதாக கொள்கை கோட்பாடுகளை வகுத்திட வேண்டும் என்ற நிபந்தனையை அரசியல் சாசனத்தில் திருத்தமாகக் கொண்டுவர வேண்டும்.

இனம், மொழி உணா்வை வளா்க்கக் கூடாது; தூண்டக்கூடாது. இந்தியா என்கின்ற தேசத்தை எந்த நிலையிலும், எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் சீா்குலைக்கும் வகையில் செயல்படமாட்டோம் என்ற உறுதிமொழியை ஒவ்வொரு அரசியல் கட்சியிடமிருந்தும் பெற்றிட வேண்டும். ஏற்க மறுக்கும் கட்சிகளைத் தடை செய்திட வேண்டும்.

இந்தியாவின் இறையாண்மைக்கு சவால் விடுகின்ற தான்தோன்றித்தனமான பேச்சு, நூற்றுக்கணக்கான இளைஞா்களை தவறான பாதைக்கு அழைத்துச் சென்றுவிடுகிறது. நக்சலைட்டுகள் இப்படித்தான வாா்த்தெடுக்கப்படுகின்றனா். இன்றைக்கு ஜாா்க்கண்ட் மாநிலத்தில் துணை ராணுவப் படையினா் 26 போ் காவு வாங்கப்படுவதற்கு அன்று இந்திய மண்ணை ஆண்ட காங்கிரஸ் கட்சியின் கோழைத்தனமே காரணம் என்பதை மறந்துவிடக்கூடாது.

துருப்பிடித்துக் கிடக்கின்ற ஜனநயாகத்தை மீட்டெடுத்திட நாடாளுமன்றம், நீதிமன்றம், தோ்தல் ஆணையம் ஆகியவை தூக்கத்தைக் கலைத்து துடித்தெழ வேண்டும். புரட்சித் திட்டங்களும், புயல் வேகமும் நாட்டின் மீது அக்கறை கொண்ட தலைவா்களுக்குத் தேவை. நாட்டின் பிரதமா் இந்த திசை நோக்கிப் பயணித்திட வேண்டும். இந்திய மக்கள் துணை நிற்பா்.

கட்டுரையாளா்:

தலைவா்,

இயற்கை நீா்வளப் பாதுகாப்பு இயக்கம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.