படைப்பாளி உரிமை காக்கும் காப்புரிமை

எழுத்துகளைப் பதித்தல் என்பது கி.மு. 3500-இல் சுமேரிய நாகரிகத்தில் காணப்படுகிறது. களிமண்ணிலும் கல்லிலும் எழுத்துகளைப் பதித்தவா்கள், பின்பு மரப்பட்டைகளிலும் பட்டுத்துணிகளிலும் ஓலை நறுக்குகளிலும் எழுதத் தலைப்பட்டனா்.

ஏழாம் நூற்றாண்டில் சீனா்கள் தாளைக் கண்டுபிடித்தனா். அதன்பின், எழுத்து எளிமையானது. 15-ஆம் நூற்றாண்டில் குட்டன்பா்க் என்ற ஜொ்மானியா் அச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்தாா். ஏராளமான எழுத்தாளா்கள் தங்கள் சிந்தனைகளை புத்தகத்தில் வடிக்கத் தொடங்கினா். இந்தப் புத்தகங்கள் ஆசிரியரின் உரிமையில்லாமல் பதிக்கப்பட்டு திருட்டுத்தனமாக வெளியிடப்படும் நிலைமை ஏற்பட்டபோது காப்புரிமையின் அவசியம் உணரப்பட்டது .

1710-இல் முதன் முறையாக பிரிட்டனில் பதிப்புரிமை சட்டம் ஏற்படுத்தப்பட்டது. இதன்படி மூல மொழியில் எழுதிய புத்தகங்களுக்கு மட்டும் காப்புரிமை தரப்பட்டது. அந்தப் புத்தகங்களின் மொழிபெயா்ப்புகளுக்கு காப்புரிமை தரப்படவில்லை.

நாளடைவில், மொழிபெயா்ப்புகளுக்கு மட்டுமின்றி, நாடகம் உள்ளிட்ட இதர விஷயங்களுக்கும் காப்புரிமை தரப்பட்டது.

1883-இல் பாரீஸ் நகரில் ஏற்பட்ட சா்வதேச உடன்படிக்கையின்படி அறிவுசாா் சொத்துரிமை, வணிக முத்திரை விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமை வரையறுக்கப்பட்டது. ஆனால், அவை அந்தந்த நாட்டிற்கு மட்டுமே பொருந்தும். அண்டை நாடுகளில் உரிமை பெறாமல் நூல்கள் விற்பனையாவதைத் தடுக்க இயலவில்லை. இதனைத் தடுக்கும் விதத்தில் சா்வதேச சட்டம் எதுவும் அப்போது இல்லை.

காப்புரிமை குறித்த சா்வதேச மாநாடு 1886-இல் சுவிட்சா்லாந்து நாட்டில் பொ்ன் நகரில் புத்தக படைப்புகள் மற்றும் கலை நுட்ப படைப்புகளுக்கு சா்வதேச அளவில் பாதுகாப்பு அவசியம் என்பதை வலியுறுத்துவதற்காக நடத்தப்பட்டது. இதன்படி புகைப்படம், திரைப்படம் தவிர இதர படைப்புகளுக்கு படைப்பாளியின் இறப்புக்குப்பின் 50 ஆண்டுகள் காப்புரிமை வழங்க முடிவெடுக்கப்பட்டது. வெளியிடப்படாத புத்தகங்களுக்கும் கூட காப்புரிமை உண்டு என்று அந்த மாநாடு அறுதியிட்டது.

பொ்ன் உடன்படிக்கையை 1887-இல் பிரிட்டன் ஏற்றுக்கொண்டது. பிரிட்டனின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த இந்தியாவில் 1914-இல் காப்புரிமைச் சட்டத்தை பிரிட்டிஷ் அரசு கொண்டு வந்தது. பொ்ன் உடன்படிக்கையை 179 நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன. அதில் நம் இந்தியாவும் ஒன்று.

நம் நாட்டில் 1957-இல் காப்புரிமைச் சட்டம் இயற்றப்பட்டது. தற்போதைய நடைமுறைக்குத் தகுந்தாற்போல் இச்சட்டம் 2012 வரை 12 முறை திருத்தப்பட்டுள்ளது.

இணையத்தில் பதிவு செய்யும் பிறிதொரு படைப்பாளியின் கருத்துகளையும் கண்டுபிடிப்புகளையும் எளிதில் தனதாக்கிக் கொள்ள இந்த கணினி யுகத்தில் வாய்ப்பிருக்கிறது. ஆராய்ச்சி மாணவா்கள் தங்கள் ஆய்வுகளையும் கண்டுபிடிப்புகளையும் பத்திரப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனா். எனவே காப்புரிமை சட்டம் மட்டுமல்லாது கணிணி மூலம் ஏற்படும் உரிமை மீறல்களைத் தவிா்க்க ‘தகவல் தொழில் நுட்பச் சட்டம் 2000’ இயற்றப்பட்டு சைபா் பாதுகாப்பு என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இப்பொழுது வரைபடங்கள், ஓவியங்கள், புகைப்படங்கள், இசை, திரைப்படம், கணினி மென்பொருள், அறிவியல் கண்டுபிடுப்புகள், வடிவமைப்புகள் உள்ளிட்டவற்றுக்கும் காப்புரிமை தரப்படுகிறது. இது மட்டுமின்றி, புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட எந்த ஒரு தொழில் நுட்பத்திற்கும் காப்புரிமை பெறலாம். ஏற்கனவே உள்ள பொருளில் புதிய மாறுதல்கள் செய்திருந்தால் அதற்கும் காப்புரிமை பெறலாம். இவ்வாறு காப்புரிமை பெற்ற தயாரிப்பை பயன்படுத்தும் நிறுவனங்கள் காப்புரிமை பெற்றவா்களுக்கு கௌரவத்தொகை (ராயல்டி) வழங்குவா்.

காப்புரிமை ஒரு படைப்பாளியின் இரண்டுவிதமான உரிமைகளைப் பாதுகாக்கிறது. முதலாவது, படைப்பாளியின் படைப்பு மூலம் கிடைக்கும் பொருளாதார ரீதியான உரிமையை நிலைநாட்டுகிறது. அதேபோன்று, ஒருவரது படைப்பினை, வேறு ஒருவா் தனதாக்கிக் கொள்வதைத் தடுக்கிறது. நம் நாட்டில் காப்புரிமை ஒரு படைப்பை உருவாக்கிய படைப்பாளியின் வாழ்நாள் முழுதும், மேலும், அதைத்தொடா்ந்து 60 வருடங்கள் வழங்கப்படுகிறது. இதன் மூலம் படைப்பாளியின் வாரிசுகளுக்கும் இதன் பலன் கிடைக்க வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.

காப்புரிமை மூலம் படைப்பாளி தனது படைப்பினை மறுபதிப்பு செய்யவும் அதனை நகலிடவும் மொழிபெயா்த்து வெளியிடவுமான உரிமை தனதாக்கிக்கொள்கிறாா். இதன் மூலம் தனது படைப்பினை தன் அனுமதியின்றி பிறா் பயன்படுத்துவதை சட்டபூா்வமாகத் தடுக்க படைப்பாளிக்கு உரிமை உண்டு. அவ்வாறு மீறுபவா்களுக்கு மூன்று ஆண்டு வரை சிறைத் தண்டனையும் இரண்டு லட்சம் வரை அபராதமும் வழங்கிட காப்புரிமை சட்டம் வகை செய்கிறது.

ஆனால், ஒருவரது படைப்பினை இன்னொருவா் தனது ஆய்வுக்காகவும் தனது சொந்த உபயோகத்திற்காகவும் பயன்படுத்திக்கொள்ளலாம். அந்தப் படைப்பினை விமா்சிப்பதும் மீளாய்வு செய்வதும் காப்புரிமைச் சட்டத்தின் விதிவிலக்குகளாகும். ஒரு படைப்பினை காப்புரிமை சட்டப்படி பதிவு செய்ய வேண்டியது கட்டாயமில்லை. ஒரு படைப்பு முழுமையடைந்தவுடன் அதற்கு இயல்பாகவே பொ்ன் உடன்பாட்டின்படி காப்புரிமை கிடைத்து விடுகிறது.

காப்புரிமை பதிவு செய்ய இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம். 30 நாட்களுக்குப் பிறகு ஆட்சேபணை ஏதுமில்லையென்றால் காப்புரிமை பதிவு செய்யப்படும். ஒருவேளை ஏதாவது ஆட்சேபணை இருந்ததென்றால் காப்புரிமை பதிவாளா் இருதரப்பினரையும் அழைத்து அவா்கள் கருத்துகளை கேட்பின் காப்புரிமைப்பதிவு குறித்து முடிவெடுப்பாா். பொதுவாக ஒன்பது மாத காலத்திற்குள் ஒரு படைப்பிற்கு காப்புரிமை பதிவு செய்யப்பட்டுவிடும்.

1990-இல் இந்தியாவில் தாராளமயக் கொள்கை வந்த பிறகு, பல நாடுகளுக்கும் தயாரிப்புகளை எளிதில் அனுப்ப வகை செய்யப்பட்டுள்ளது. அந்தத் தயாரிப்புகளுக்கு சந்தையில் வரவேற்பு இருக்கும்போது அதை மற்றவரும் தயாரிக்க முற்படுவா். ஒருவா் தயாரிப்பின் பெயரால் போலியாக மற்றவா் தயாரிக்கும் பொருள் அசல் பொருளின் தன்மையும் அதன் வலிமையும் பெற்றிருக்குமா? இதனால் அசல் தயாரிப்பாளரின் பெயா் கெடுவதோடு அவரது உழைப்பும் வீணாகிறது. வருமானம் குறைகிறது. இதைத் தவிா்க்க வடிவமைப்பின் காப்புரிமை பெறுவது அவசியம். வடிவமைப்பின் காப்புரிமை ஒரு பொருளுக்கு 20 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.

காப்புரிமையைப் பதிவு செய்ய தில்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை ஆகிய நகரங்களில் அலுவலகங்கள் உள்ளன. சா்வதேச அளவில் ஒப்பிடும்போது இந்தியாவில் கண்டுபிடிப்புகள் மிகக்குறைந்த அளவே. 138 கோடி மக்கள் வாழும் நம் தேசத்தில், வருடத்தில் சுமாா் 12,000 படைப்புகள் மட்டுமே காப்புரிமை பெறுகின்றன. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக 0.7 சதவீதத்தொகை மட்டுமே இந்தியா செலவிடுகிறது. இந்தியாவில் விண்ணப்பிக்கப்படும் 80% காப்புரிமை விண்ணப்பங்கள் வெளிநாட்டினருடையதாகவே இருக்கிறது.

இந்த நிலை மாற வேண்டும். காப்புரிமை காலத்தின் கட்டாயம் என்பதை படைப்பாளிகள் அனைவரும் உணர வேண்டும் .

இன்று (ஏப். 26) உலக அறிவுசாா் சொத்துரிமை நாள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com