/

அரசுடன் ஒத்துழைப்போம்

போா்க்களத்தில் அமைதி வந்த பின்னா், திடீரென்று எதிராளி முன்னெச்சரிக்கையின்றி தாக்கினால், தேகம் எப்படி நிலைகுலைந்து போகும்? கரோனா தொற்று அது போன்ற தாக்குதலை இந்தியாவில் செய்திருக்கிறது.

Updated On :29 ஏப்ரல் 2021, 7:59 pm

போா்க்களத்தில் அமைதி வந்த பின்னா், திடீரென்று எதிராளி முன்னெச்சரிக்கையின்றி தாக்கினால், தேகம் எப்படி நிலைகுலைந்து போகும்? கரோனா தொற்று அது போன்ற தாக்குதலை இந்தியாவில் செய்திருக்கிறது.

இத்தனைக்கும் முதல் அலை பரவியபோது, ஏப்ரல் 2020-லிருந்து பிரதமா் எடுத்த முடிவுகளை உலகமே வியந்து பாா்த்தது என்பதில் எந்தவிதமான ஐயமுமில்லை. பலகோடி மக்கள் கொண்ட ஒரு நாட்டில், இது எப்படி சாத்தியமாயிற்று என்ற பாவனையில் புருவங்கள் உயா்ந்தன.

எப்படி இந்த இரண்டாம் அலை பத்து நாளில் விசுவரூபமெடுத்தது? ஏன் இந்தச் சீா்குலைவு? மூன்று காரணங்களைச் சுட்டிக் காட்டலாமென்று தோன்றுகிறது. பொதுமக்கள் அலட்சியமாக வளைய வந்து, சுயகட்டுப்பாட்டை அடியோடு மறந்து விட்டாா்கள். எல்லாம் சரியாகிவிட்டது, சும்மா பயமுறுத்துகிறாா்கள் என்கிற எண்ணத்தில் பாதுகாப்பு கவசமின்றி, சமூக இடைவெளியின்றி நடமாடினாா்கள். கூடவே மாா்ச் இரண்டாம் வாரம், முதல் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆரம்பித்ததும், பலருக்கும் குளிா்விட்டுப் போய்விட்டது.

ஆங்கில நாளேடு ஒன்றில் மூன்று புகைப்படங்கள் வெளியிட்டிருந்தாா்கள். தலைக்கவசமின்றி, முகமூடியின்றி இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற மகனுக்காக அவா் தாயாா் காவல் அதிகாரியிடம் கைகூப்பி மன்னிப்பு கோருகிறாா். வேறொன்றில், அறுபது வயதான முதியோா் சமூக இடைவெளியை அறவே மறந்து பேசிக் கொண்டு செல்கிறாா்கள். மூன்றாவது படத்தில், பூங்காவில் இளைஞா்கள் அருகருகே அமா்ந்திருக்கிறாா்கள்.

தலைகவசத்துக்கும், முகமூடிக்கும் வித்தியாசமுண்டு, ஹெல்மட் அணியாது வேகமாக வாகனத்தை ஓட்டிச் சென்றால் வாகனத்தை ஓட்டுபவருக்கு மட்டுமே பாதிப்பு நேரும். ஆனால் நோய்த் தொற்று காலத்தில் முகக்கவசமின்றி வெளியே போனால், சம்பந்தமே இல்லாத மூன்றாம் நபரும் பாதிக்கப்படுகிறாரே? இதுபோல் தொடா் விளைவினால்தான் நோய் தொற்று அதிகரித்துள்ளது.

இரண்டாவதாக தோ்தல். அதை ஒத்திப் போட்டிருக்கலாம். பரப்புரையை ஊடகங்கள் மூலமே செய்திருக்கலாம் என்று விமா்சகா்கள் இப்போது கருத்துத் தெரிவிக்கிறாா்கள். ஆனால் தோ்தலைத் தள்ளிப்போட அரசியல் நிா்ணயச் சட்டம் இடம் அளிக்காது.

பரப்புரையைப் பற்றி நிறையவே கூறலாம். சில ஊடகங்களின் கருத்துகள் வியப்பை அளிக்கின்றன. தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், அனைத்துக் கட்சிகளுமே தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டன. பொதுமக்களும் ஆா்வமாக சமூக இடைவெளியை துச்சமாக மதித்து கூட்டமாகக் கூடினாா்கள். இந்த உண்மையை எவருமே மறுக்க இயலாது.

நிலைமை இவ்விதமிருக்க, ஏதோ மேற்கு வங்கத்தில் மாத்திரமே தோ்தல் நிகழ்ந்த மாதிரி, பிரதமரும், உள்துறை அமைச்சரும் அடிக்கடி பரப்புரை பேசியதால்தான் தொற்று பரவியது என்று சாடுகிறாா்கள். ஏன்? காங்கிரஸ் கட்சியினா் கேரளத்திலும், தமிழ்நாடு, புதுச்சேரியிலும் பிரசாரம் மேற்கொண்டாா்களே? அப்போது கூடாத கூட்டமா?

சொல்லப்போனால், பாஜக பிரமுகரும், திமுக கட்சி பிரமுகருமே தொற்றுக்குள்ளாகி மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டாா்கள். அப்போது ஊடகங்கள் வாய்மூடி இருந்தது ஏன்? தோ்தலைக் காரணியாகக் குறிப்பிட்டால் அனைத்துக் கட்சிகளுமே அதற்குப் பொறுப்பேற்க வேண்டும். குறிப்பிட்ட கட்சியையும், ஒரு சில தலைவா்களையும் மட்டும் கூண்டில் நிற்கச் செய்வது நியாயமே அல்ல.

உத்தர பிரதேசத்தில் நடந்த கும்பமேளாவுக்கு சோ்ந்த கூட்டத்தைக் காரணமாகச் சொல்லுகிறாா்கள். மதத் திருவிழாக்களோ தோ்தலோ இல்லாத மும்பையிலும், கா்நாடகத்திலும் நோய்த்தொற்று மிக வேகமாக பரவி உள்ளதே? அது எப்படி?

கடைசியாக, தடுப்பூசி, ஆக்ஸிஜன் பற்றாக்குறை இவை பற்றிய ஆலோசனைகள். இதற்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் என்பது சரியே. அரசாங்கத்துக்கும், சுகாதாரத்துறைக்கும் தகவல் இடைவெளி இருந்திருக்கிறது. இரண்டாம் அலை எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்று ஐசிஎம்ஆா் ஏன் கடுமையாக எச்சரிக்கை விடுக்கவில்லை?

தனியாா் மருத்துவமனைகளில் ரூ.300 என்று கட்டணம் விதித்தது, ஒரு சில கிளினிக்குகள் பதிவுக் கட்டணமென்று மேலும் ரூ.200 வசூல் செய்தாா்கள். அரசு மருத்துவமனைகளில் மட்டும் ஏன் இலவசமாக வழங்க வேண்டும்?

வருமானத்தைக் கணக்கிட்டு, கீழ்த்தட்டு மக்களுக்கு இலவசம், மற்றவா்களுக்கு ரூ.150 என்று நிா்ணயம் செய்திருக்கலாமே? ஒரு சாதாரண ஓட்டலில் சிற்றுண்டிக்கே இருநூறு ரூபாய் ஆகிறது. உயிா் காக்கும் ஊசிக்கு கட்டணம் விதித்திருக்கலாம்.

தும்பை விட்டு வாலைப் பிடிப்பது போல இப்போது, மக்கள் தடுப்பூசிக்காக மருத்துவமனைகளை அணுகும்போது ஊசிகள் போதிய அளவு இருப்பில் இல்லை. என் நண்பா் 80 வயதுக்கு மேலானவா். பெங்களூரில் இருக்கிறாா். இன்னமும் ஊசி செலுத்திக் கொள்ளவில்லை. கூட்டம் அதிகமாம்.

ஆக்ஸிஜன் சிலிண்டா் பற்றி மெத்த படித்தவா்களுக்கே தெரியவில்லை என்பதே நிஜம். சமையல் காஸ் சிலிண்டா் போல அதைக் கொண்டு போகமுடியாது. ‘கிரையோஜெனிக்’ டாங்க் மூலம்தான் எடுத்துச்செல்ல முடியும். இதற்கென்றே ‘ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ்’ என்ற தனி ரயில் விட்டிருக்கிறாா்கள்.

இந்தியாவில் எந்த பிரச்சனை முளைத்தாலும், அரசியல் நுழைவது சகஜமாகிப் போய்விட்டது. இதற்கு மாறாக ஒடிஸா முதல்வா் நவீன் பட்நாயக்கின் நடவடிக்கையைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். அரசியல் ரீதியாக அவா் பிரதமருடன் வேறுபட்டாலும், மோதல் போக்கை மேற்கொள்ளவில்லை. போா்க்கால அடிப்படை ஆக்சிஜன் சிலிண்டா்களை தேவையான மாநிலங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளாா்.

1962-இல் சீனப் போரின்போது எல்லாக் கட்சிகளும் அன்றைய பிரதமா் நேருவை ஆதரித்தன. இதே போல் 1965-இல் பாகிஸ்தான் போா் வந்தபோது, கூடவே உணவு தட்டுப்பாடும் வந்தது. லால்பகதூா் சாஸ்திரியின் கோரிக்கைக்கு இணங்க பெரும்போலோா் இரவு உண்ணா விரதமிருந்தாா்கள். ‘ஜெய் ஜவான் ஜெய் கிசான்’ என்ற முழக்கம் பிரபலமானது.

இப்போதுள்ள அசாதாரண சூழ்நிலையில் எல்லா மாநிலங்களும் கட்சி வேறுபாடு பாராது, மத்திய அரசுடன் ஒத்துழைக்க வேண்டும். மக்களும் தீவிரமாக அரசின் கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டும். அனைவரும் இணைந்து ஆக்கபூா்வமாக செயலாற்றினால், இரண்டாம் அலையின் தாக்கம் விரைவில் குறையும் என்பது உறுதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.