பாதைகள் பயணத்திற்கே...
அண்மையில் விழுப்புரம் நகரில் ஒரு விழாவுக்காக அரசியல் கட்சிக் கொடிக்கம்பம் நட முயன்ற 13 வயது சிறுவன் தினேஷ், மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


அண்மையில் விழுப்புரம் நகரில் ஒரு விழாவுக்காக அரசியல் கட்சிக் கொடிக்கம்பம் நட முயன்ற 13 வயது சிறுவன் தினேஷ், மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து பேனர், அலங்கார வரவேற்பு கலாசாரத்திற்கு எதிராக பலர் குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர்.
இந்த நிகழ்வு குறித்து இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் "கட்சி நிகழ்ச்சிக்காக பேனர்கள், வரவேற்பு வளைவுகள் வைக்கக் கூடாது; சாலையில் அலங்காரப் பணிகள் எதையும் செய்யக் கூடாது என்று கூறி இருக்கிறேன். உயிரைக் குடிக்கும் பேனர் கலாசாரத்தை உடனே நிறுத்துங்கள். இனி யாரும் பேனர் கலாசாரத்தால் இறக்கக்கூடாது. இனி எங்கும் இதுபோன்ற இறப்பு நடக்காமல் தடுக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.
பேனர் கலாசாரம் கூடாது என நீதிமன்றம் பலமுறை உத்தரவுகளைப் பிறப்பித்தும்கூட, அவை காற்றில் பறக்கவிடப்பட்டு வருவதை பல சமயங்களில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. 2019-இல் சென்னை குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்த இளம் பொறியாளர் சுபஸ்ரீ(23), பைக்கில் சென்றபோது சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்து விழுந்ததன் விளைவாக கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதி அவர் உயிரிழந்தது பலரையும் வேதனைக்குள்ளாக்கியது.
இது தொடர்பான வழக்கின்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், "தமிழகத்தில் சட்ட விரோத பேனர் கலாசாரத்தை அதிகாரிகள் தொடர்ந்து ஊக்குவித்து வருகின்றனர். சட்ட விரோத பேனர் வழக்கு தொடர்பான பதில் மனுவில், தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமைச் செயலர் தெரிவித்துள்ளார்.
ஆனால், தற்போது ஓர் உயிர் பலியாகிவிட்டது. இதற்கு யார் பொறுப்பேற்பது? குடிமக்களின் உயிர் அவ்வளவு சாதாரணமாகிவிட்டதா? மனித உயிர்களுக்கு அரசு அளிக்கும் மரியாதை இவ்வளவு தானா? திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு பேனர் வைத்துதான் அழைக்க வேண்டுமா? பேனர் வைக்காவிட்டால் அவர்களுக்கு வழி தெரியாதா' என்று கடுமையான கேள்விகளை முன்வைத்தனர்.
இந்நிலையில், மீண்டும் இது போன்ற விபத்து ஏற்பட்டு ஒரு சிறுவன் இறந்துள்ளது வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த காலங்களில் விளம்பரங்கள் எல்லாம் சுவரில் எழுதப்படுவதுதான் வழக்கமாக இருந்தது. அடுத்து, சுவரொட்டி கலாசாரம் தொடங்கியது.
அப்போதெல்லாம் அவற்றால் உயிருக்கு பாதிப்பு ஏற்படவில்லை. அதன் பின் தொடங்கிய இத்தகைய பிளக்ஸ், பேனர், கட்-அவுட் கலாசாரம் தற்போது வானளாவ வளர்ந்து விட்டது. விதவிதமான வடிவங்களுடன், ஆர்ப்பாட்டமாக உருவாகிவிட்ட இத்தகைய கலாசாரம் முடிவதாகத் தெரியவில்லை.
அனைத்து காலகட்டத்திலும் நம்முடன் ஒன்றிவிட்டது பேனர் கலாசாரம். பிறந்த குழந்தைக்கு பெயர் சூட்டு விழா தொடங்கி, குடும்ப விழாக்கள், அரசியல் கட்சியினரின் பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், அரசு விழாக்கள், தனியார் நிறுவன நிகழ்வுகள் என நீண்டு கொண்டே செல்கிறது இந்தப் பட்டியல்.
அரசியல்வாதிகள் மட்டுமல்ல, அனைத்துத் தரப்பு மக்களுமே இத்தகைய விளம்பரங்களை விரும்புவதால்தான் நீதிமன்றங்கள் பலமுறை கூறியும்கூட பேனர் கலாசாரம் தொடருகிறது.
போட்டி போட்டுக் கொண்டு பேனர் வைக்கும் போக்கும் அதிகரித்து வருகிறது. இதனால், நாள்தோறும் பேனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அரசியல் கட்சித் தலைமையை ஈர்க்க வேண்டும் என்று நினைக்கும் கட்சி நிர்வாகிகளால் இத்தகைய பேனர் கலாசாரத்தை விட்டு வெளியே வர முடியவில்லை.
இவற்றையெல்லாம் தாண்டி தற்போது, சாலையின் இருபுறமும் குழிகள் தோண்டி வளைவான வரவேற்பு வளைவுகள் வைப்பதும் நடைபெறுகிறது. இப்படி வைக்கப்படும் குறுகிய வளைவிற்குள் நுழைந்துதான் வாகனங்கள் செல்ல வேண்டும் என்பதால், எதிரே வரும் வாகனங்கள் வளைவுக்குள் நுழைந்து வர முடியாத நிலை ஏற்பட்டு போக்குவரத்து நெரிசல் உருவாவதையும் பார்க்க முடிகிறது.
பெரும்பாலும் தலைவர்கள் வரும்போதுதான் சாலைகளில் இவை அமைக்கப்படுகின்றன. ஏற்கெனவே தலைவர்கள் வரும்போது சாலைப் போக்குவரத்து பாதிக்கப்படும் நிலையில், இந்த வரவேற்பு வளைவுகளால் கூடுதல் நேரம் போக்குவரத்து முடங்குகிறது.
இவை எல்லாம் அதிகாரிகளுக்குத் தெரிந்தாலும்கூட அவர்களால் எதுவும் செய்ய முடிவதில்லை. ஆளும் கட்சி பேனர் வைக்கும் போது தடுக்க முடியாத அதிகாரிகள், எதிர்க்கட்சியினர் வைக்கும்போது தடுத்தால் தேவையில்லாத பிரச்னை ஏற்படும் என்பதற்காக அதையும் கண்டுகொள்வதில்லை.
அதையும் தாண்டி எதிர்க்கட்சியினர் வைக்கும் பேனரை அகற்ற நினைத்தால், ஆளும் கட்சியினர் வைக்கும் பேனர்களுக்கு அனுமதி அளித்தீர்களே என்ற கேள்விகளுக்கு விடை அளிக்க வேண்டிய நிலை உருவாகும் என்பதால், அதிகாரிகள் பலரும் அமைதி காக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர்.
2019-இல் அன்றைய அதிமுக ஆட்சியின்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் கட்சியினர் கண்டிப்பாக பேனர் வைக்கக் கூடாது என அறிவித்தனர். பேனர் வைத்திருந்தால் அந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ள மாட்டேன் என அன்றைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த இன்றைய முதல்வர் தெரிவித்தார். மற்ற கட்சித் தலைவர்களும்கூட பேனர் கலாசாரத்தை கைவிட வேண்டும் என தெரிவித்தனர்.
இப்படி தலைவர்கள் அறிவுறுத்திவிட்ட நிலையில், கட்சியினர் அதைக் கண்டிப்பாக கடைப்பிடித்திருக்க வேண்டும். அவர்கள் கடைப்பிடிக்கவில்லை என்பதையே தற்போது விழுப்புரத்தில் நிகழ்ந்துள்ள துயர சம்பவம் வெளிப்படுத்துகிறது.
பாதை பயணத்திற்காக மட்டுமே. பாதையில் கொடிக்கம்பத்தையும், பேனரையும், கட்அவுட்டையும் வைத்து பயணத்துக்கான பாதையை மரணத்துக்கான பாதையாக மாற்றிவிடக் கூடாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...