தமிழகத்தில் தற்போது நோய்த்தொற்று பாதிப்பு வெகுவாகக் குறைந்துவிட்டது. இருந்தாலும், நோய்த்தொற்றின் மூன்றாம் அலை அக்டோபரில் தொடங்கும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் நாளை (செப். 1) முதல் 9 முதல் 12 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சுழற்சி முறையில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஆசிரியர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சரும் தெரிவித்திருக்கிறார். இவை பல்வேறு கேள்விகளுக்கு வித்திடுகின்றன.
பள்ளிகளில் போதுமான அடிப்படை வசதிகள் உறுதி செய்யப்படும் என அரசு உத்தரவாதம் அளித்தாலும், அது எந்த அளவுக்கு நடைமுறை சாத்தியம் என்பது கேள்விக்குறியே. காரணம், பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் சுகாதாரத்தைப் பேணுவது என்பது இயலாத காரியம். பள்ளிகளில் நெருக்கமான கழிவறைகளையே மாணவர்கள் பயன்படுத்த நேரிடுவதால், அதுவே தொற்று பரவலுக்கு காரணமாகிவிடக் கூடாது. கழிப்பறைத் தூய்மை மிக முக்கியம்.
தலைநகர் தில்லியிலும் செப்டம்பர் முதல் தேதியிலிருந்து 9 முதல் 12}ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட இருப்பதாக தில்லி மாநில அரசு அறிவித்துள்ளது. இதற்கு எய்ம்ஸ் கொவைட் 19 பணிக்குழு தலைவர் டாக்டர் நவீத் விக், அதிருப்தி தெரிவித்திருக்கிறார்.
அவர் "மாணவர்கள் தொடர்ந்து வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதால், மன அழுத்தத்திற்கு ஆளாகி இருப்பர் என்பது உண்மைதான். ஆனால், பள்ளிகளைத் திறப்பதால் ஏற்படக்கூடிய இடர்ப்பாடுகளையும் நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். பள்ளிக்கு மாணவர்கள் சென்றால், அவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத தனிநபர்களாகவே கருதப்படுவர்' என்று கூறியுள்ளார்.
இது ஒருபுறமிருக்க, இந்தியாவில் தடுப்பூசி திட்டம் இன்னும் எதிர்பார்த்த இலக்கை எட்டவில்லை என்பதையே தற்போதைய புள்ளிவிவரங்கள் உணர்த்துகின்றன. 138 கோடி மக்கள்தொகையைக் கொண்ட நம் நாட்டில், கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை, 63 கோடி தடுப்பூசிகள் மட்டுமே செலுத்தப்பட்டுள்ளன. இதில், 13 கோடி பேர் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.
இந்தியாவில் 12 முதல் 18 வயதுக்கு உட்பட்டோர் 12 கோடி பேர் இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் புள்ளிவிவரம் கூறுகிறது. தமிழகத்தில் மட்டும் 1.26 கோடி பேர் இருப்பதாக கடந்த 2014}இல் எடுக்கப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.
வடகிழக்கு மாநிலமான மேகாலயம், "கடைக்காரர்கள், உள்ளூர் வாடகை கார் ஓட்டுநர்கள், தினக்கூலி தொழிலாளர்கள் ஆகியோர் கட்டாயம் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்' என்று அண்மையில் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது.
மேகாலய அரசின் இந்த அறிவிப்பு, அரசியல் சாசனம் வழங்கும் அடிப்படை உரிமைகளை மீறும் செயல் என்று சிலர் மாநில உயர்நீதிமன்றத்தை நாடினர். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், "அரசின் இந்த அறிவிப்பு தனிமனித உரிமை மீறல் மட்டுமன்றி, பொதுமக்களின் தன்மறைப்பு, வாழ்வாதார உரிமைகளுக்கும் எதிரானது' என்று கூறியது.
இதைத்தொடர்ந்து மேகாலய அரசு, "இது வெறும் உத்தரவுதானே தவிர, கட்டாயம் அல்ல' என விளக்கம் அளித்தது. நாட்டில் பொதுமக்களிடையே தடுப்பூசியை செலுத்திக் கொள்வதில் காணப்படும் தயக்கத்துக்கும், பெருந்தொற்றுப் பரவலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் மீது இந்த வழக்கு பல்வேறு வினாக்களை எழுப்பியது.
ஏற்கெனவே, கரோனா தடுப்பூசியை பொதுமக்கள் தாமாக முன்வந்து செலுத்திக்கொள்ள வேண்டுமென மத்திய அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதை மேற்கோள்காட்டி, இந்த உத்தரவை மேகாலய நீதிமன்றம் பிறப்பித்திருந்தது.
மேலும், "பொதுமக்களை தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு வற்புறுத்துவதை காட்டிலும், உரிய விழிப்புணர்வு வாயிலாக அவர்களை தடுப்பூசி செலுத்திக்கொள்ளத் தூண்டலாம்' என்றும் நீதிமன்றம் கூறியிருந்தது.
இந்த விவகாரத்தில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் கட்டாய தடுப்பூசி கொள்கை காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது என்பதுதான். தடுப்பூசி சட்டம் 1880, குறிப்பிட்ட ஒரு பகுதியில் சிறுவர்களுக்கு கட்டாயம் பெரியம்மை தடுப்பூசி செலுத்த அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது.
இதேபோல, நகராட்சிகளையும், நகர் மன்றங்களையும் நிர்வகிக்கும் பல்வேறு மாநிலச் சட்டங்கள், கட்டாய தடுப்பூசி திட்டங்களை நடைமுறைப்படுத்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் அளிக்கின்றன.
இந்தியாவில் தடுப்பூசி சட்டம் 1880 மட்டுமின்றி, தொற்றுநோய் சட்டம் 1897}இன்கீழும், தடுப்பூசிகளைக் கட்டாயமாக்கவும், தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை வகுப்பதற்கும் மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருக்கிறது.
கனடாவில் 12 முதல் 17 வயதுக்கு உட்பட்ட வளரிளம் பருவத்தினருக்கு ஃபைஸர் நிறுவன தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது மாடர்னா தடுப்பூசிக்கும் அங்கீகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது. அவற்றைத் தருவித்து, மாணவர்களுக்கு செலுத்த மத்திய அரசு முன்வர வேண்டும்.
பள்ளித்திறப்பை அரசு உறுதிப்படுத்திவிட்டது. ஆயினும் மிகமிக கவனம் தேவை. ஏற்கெனவே கரோனா நோய்த்தொற்றுக்கு நான்கு லட்சத்துக்கும் மேற்பட்டோரை இழந்துவிட்டோம். விரைவில் மூன்றாம் அலை வரும் என்கிற அச்சமும் நிலவுகிறது.
இந்த நிலையில், பள்ளிகள் திறக்கப்படுவது தவிர்க்க முடியாதது என்றாலும் மாணவர்கள் நலனில் அரசு இரட்டிப்பு எச்சரிக்கையோடு செயல்பட வேண்டியது அவசர அவசியம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகர ராசிக்கு இன்று எப்படி? தினப்பலன்கள்!

10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ கணித மதிப்பெண் சரிவு: மறு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள்!

தமிழக டிஜிபி நியமன உத்தரவில் திருத்தம் கோரி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் திமுக மனு

தொகுதி அலசல்...அவிநாசி (தனி) மத்திய அமைச்சரை எதிர்கொள்ளும் இளம் பெண் மருத்துவர்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

