இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

தொகுதி அலசல்...அவிநாசி (தனி) மத்திய அமைச்சரை எதிர்கொள்ளும் இளம் பெண் மருத்துவர்!

News image
Updated On :16 ஏப்ரல் 2026, 12:27 am

பாடல் பெற்ற தலங்களான அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில், திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோயில், அன்னூர் மன்னீஸ்வரர் கோயில் ஆகியவை அவிநாசி தொகுதியில் உள்ளன.

தொழில் இங்கு விவசாயம், விசைத்தறி, நூல் மில், பம்ப் செட் உற்பத்தி, பனியன் உற்பத்தி, சைசிங், உருக்காலைகள் ஆகியவை பிரதான தொழில்களாக விளங்குகின்றன. மேலும், திருமுருகன்பூண்டியில் மாமல்லபுரத்துக்கு நிகரான சிற்பக் கலைத் தொழில் உள்ளது.

நிறைவேறாத கோரிக்கைகள்: அவிநாசியில் ஐடிஐ தொழிற்கல்விக் கூடம், அவிநாசி அரசு மருத்துவமனைகளைத் தரம் உயர்த்துதல், அவிநாசி ஊராட்சியை இரண்டாகப் பிரித்து சேவூரை மையமாக வைத்து தனி ஊராட்சி ஒன்றியம் அமைத்தல், சேவூரில் பேருந்து நிலையம், விசைத்தறி தொழிற்பூங்கா, அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் வண்டிப்பேட்டை நிலத்தை மீட்டல், கிராமப்புறங்களுக்கு பேருந்து வசதி, அவிநாசிக்கு ஏற்கெனவே இருந்த 2-ஆவது குடிநீர்த் திட்டத்தை மீண்டும் செயல்படுத்தி, குடிநீருக்கு நிரந்தரத் தீர்வு காண்பது, சேவூரில் பேருந்து நிலையம், திருமுருகன்பூண்டியில் சிற்பக் கலைக் கல்லூரி, அவிநாசியில் ஒருங்கிணைந்த வேளாண் மையம் உள்ளிட்டவை நீண்டகால கோரிக்கைகளாகவே உள்ளன.

சமூக நிலவரம்: இங்கு அதிகப்படியாக ஆதிதிராவிடர்களும், அடுத்தடுத்து கொங்கு வேளாளர்களும், நாயக்கர், முதலியார், செட்டியார் உள்ளிட்ட வகுப்பினரும் உள்ளனர்.

2026-இல் களம் காணும் வேட்பாளர்கள்: இந்தத் தொகுதியில் பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், திமுக சார்பில் இளம் மருத்துவர் வி.கோகிலாமணி (28), நாம் தமிழர் கட்சி சார்பில் வி. மேனகா, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் எஸ்.கமலி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

பாஜக வேட்பாளர்: எல்.முருகன் ஏற்கெனவே கடந்த 2011-இல் ராசிபுரம் தொகுதியில் ப.தனபாலை எதிர்த்துப் போட்டியிட்டு 1,730 வாக்குகள் மட்டுமே பெற்று மூன்றாமிடம் பிடித்தார். கடந்த 2021-இல் தாராபுரம் தொகுதியில் 88,593 வாக்குகள் பெற்று வெறும் 1,393 வாக்குகளில் திமுகவின் என்.கயல்விழி செல்வராஜிடம் வெற்றிவாய்ப்பை இழந்தார். வென்றதால் கயல்விழி செல்வராஜ் அமைச்சரானார். தோல்வியுற்றபோதும், எல்.முருகன் மத்திய இணை அமைச்சரானார். 2024-இல் நீலகிரி மக்களவைத் தொகுதியில் 2.32 லட்சம் வாக்குகள் பெற்றபோதும், திமுகவின் ஆ.ராசாவிடம் 2.40 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

அதனால், இந்த முறை அவிநாசியில் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளார். அவருக்கு ஆதரவாக அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மத்திய அரசு, முந்தைய அதிமுக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மண்ணின் மைந்தர் அல்ல என்பதும், தொடர்ந்து அதிமுக கோட்டையாக விளங்கிவரும் இந்தத் தொகுதியை பாஜகவுக்கு விட்டுக் கொடுத்ததில் அதிமுகவினருக்கு உள்ள அதிருப்தியும் இவருக்கு பலவீனங்களாகும்.

திமுக வேட்பாளர்: திமுக வேட்பாளரான மருத்துவர் வி.கோகிலாமணிக்கு ஆதரவாக காங்கிரஸ், தேமுதிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் என கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மாநில அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். போதிய அரசியல் அனுபவம் இல்லாதவர் என்பது இவரது பலவீனமாக உள்ளது.

நாதக வேட்பாளர்: நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வி.மேனகா உள்ளூர் வேட்பாளர் என்பது பலமாக இருந்தாலும், அவிநாசி தொகுதியில் நாதகவுக்கு பெரிதாக வாக்கு வங்கி இல்லாததும், அத்தியாவசியமான செலவினங்களைக்கூட செய்யாமல் பிரசாரம் செய்து வருவதும் பலவீனங்களாகும்.

தவெக வேட்பாளர்: தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் எஸ்.கமலிக்கு நடிகர் விஜய்யின் பிம்பம் பலமாகும். வெளியூர் வேட்பாளர் என்பதும், அரசியல் ரீதியாக தவெகவுக்கு இத்தொகுதியில் அடிப்படை கட்டமைப்புகள் இல்லாததும் பலவீனங்களாகும்.

அதிமுக 8 முறை வெற்றி: இங்கு 1984, 1989, 1991, 2001, 2006, 2011-ஆம் ஆண்டுகளில் அதிமுக வெற்றி பெற்றது. பின்னர், 2016-இல் நட்சத்திர தொகுதியாக மாறிய அவிநாசியில் அதிமுக சட்டப் பேரவைத் தலைவராக இருந்த ப.தனபால் வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து 2021-இல் மீண்டும் அதிமுக வேட்பாளரான ப.தனபால் தொடர்ந்து இரண்டாவது முறையாக வென்றார். இதுவரையிலான தேர்தல்களில், இங்கு திமுக 1996-இல் மட்டுமே வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அவிநாசி (தனி) தொகுதியைப் பொறுத்தவரையில் பாஜக, திமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட 14 பேர் களத்தில் இருந்தாலும், எல்.முருகனுக்கும், வி.கோகிலாமணிக்கும் இடையேதான் முக்கியப் போட்டி நிலவுகிறது.

எட்டு முறை அதிமுக வென்ற இந்தத் தொகுதியை இந்த முறை அதன் கூட்டணிக் கட்சியான பாஜக கைப்பற்றுமா அல்லது 1996-க்குப் பிறகு முதல் முறையாக திமுக வெற்றி பெறுமா என்பது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

வாக்காளர்கள்

ஆண்கள்

1,19,841

பெண்கள்

1,30,496

மூன்றாம் பாலினத்தவர்

9

மொத்தம் - 2,50,346

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.