

நினைவுகள் அற்புதமானவை. அதிலும் மகிழ்ச்சியான நினைவுகள் விலைமதிப்பற்றவை. படித்து முடித்த ஒரு நல்ல புத்தகத்தை ஆசையுடன் புரட்டிப் பார்க்கும் நிறைவு இதில் ஏற்படும். மகிழ்ச்சியான நினைவுகளில் நீந்திக் குளிப்பது மிகவும் ரம்மியமானதொரு அனுபவம். நினைவுகள் என்பது மறவாமல் மனதில் தோன்றும் நம் எண்ணங்கள். நினைவுக்கும் மனதுக்கும் ஆச்சரியமான ஒற்றுமை உண்டு. நினைவுகளை அசை போடுவது என்பது நம் நினைவக அடுக்கில் சென்று நினைவுகளை தட்டி எழுப்புதல் போல்தான்.
நமக்கு நன்கு பரிச்சயப்பட்ட நம் இளமைக் கால நண்பர் ஒருவரை தற்செயலாக சந்திக்கிறோம் என வைத்துக் கொள்வோம். அவருடன் பேசியது பழகியது அனைத்தும் நம் நினைவுக்கு வருகிறது. ஆனால், அவரின் பெயர் மட்டும் எவ்வளவு யோசித்தும் நினைவுக்கு வரவில்லையெனில் அது எவ்வளவு பெரிய தர்மசங்கடம்! உன்னை நன்றாக தெரியும். ஆனால் உன் பெயர் மட்டும் நினைவிலில்லை என்பதை சொன்னால் கேட்பவருக்கு நம் மீதான அபிப்பிராயமே மாறிப் போக வாய்ப்புண்டு அல்லவா? அதனாலேயே நாம் நம் நினைவுகளை அவ்வப்போது சரியாக பண்படுத்தி வைத்திருக்க வேண்டும்.
ஒரு நூலகத்தில் புத்தகங்கள் சீராக அடுக்கி வைக்கப்பட்டிருந்தால் தேவைப்படும் நூலை சுலபத்தில் எடுத்து விட முடியும். அடுக்கப்படாமல் அனைத்தும் கலைத்து குவித்து போட்டு வைத்திருந்தால், நாம் ஒரு நூலைத் தேடி எடுப்பது மிக மிக சிரமமான வேலையாக தானே இருக்கும். அது போல தான் நம் நினைவடுக்கை சரியாகப் பராமரித்தால் நினைவுகள் தொலைந்து போவதிலிருந்து விடுபடலாம்.
இப்படித்தான் ஒரு திருமண நிகழ்ச்ச்சியில் என் தோழி என்னைப் பார்த்து நலம் விசாரித்தார். முன்பொரு காலத்தில் எங்கள் தெருவில் அவர் குடியிருந்தார். அவர் என்னைப் பற்றிய தகவல்களை சொல்லிக் கொண்டே போகிறார். என்னால் சில மணித்துளிகளுக்கு அவர் யார் என்று என் நினைவுக்குள் கொண்டு வரமுடியவில்லை.
பின் அவர் பெரும் சிரத்தை எடுத்து எங்கள் இருவருடன் தொடர்பில் இருந்த மற்றொரு தோழியை நினைவுகூர்ந்து நிகழ்வுகளை விவரித்த பின் ஒரு புகைமூட்டத்திலிருந்து பிம்பம் வெளிவருவது போல மெல்ல ஒன்றன் பின் ஒன்றாக காட்சிகள் மனக்கண்ணுக்குள் விரிய ஆரம்பித்தன. அந்த நூல் பிடித்து பேசத் துவங்கியதும் எண்ணற்ற நபர்களை, சம்பவங்களை நான் மறந்துவிட்டிருக்கிறேன் என உணர்ந்தேன். நினைவுகளை செம்மைபடுத்த வேண்டியதன் அவசியம் விளங்கியது.
ஏன் நினைவுகளை முறையாக வைத்திருக்க வேண்டும்? வாழ்வை ரசிக்கத்தான். நம் வாழ்வில் சந்தித்த முக்கியமான மனிதர்களைக் கூட சமயத்தில் மறந்துவிடுகிறோம். ஒருவர் பணம் பொருளுடன் நல்லபடி வாழ்கிறார் என்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் நல்ல நினைவாற்றலுடன் வாழ்வின் இறுதிவரை தொடர்வது. நினைவும் சங்கீதம் போலத் தான். அவ்வபோது இசைத்தட்டுகளில் ஓடவிட்டு கேட்க வேண்டும். இல்லையெனில் நினைவு ஒரு பறவை போல நம்மை விட்டு பறந்து சென்றுவிடும்.
இந்த நினைவாற்றலை நீட்டித்துக் கொள்ள பல வழிமுறைகள் சொல்லப்பட்டாலும் நம் பள்ளி கல்லூரி நாட்களுக்குப் பிறகு முறையாக நாம் எதையும் பின்பற்றுவதில்லை. ஆனால் நல்ல நண்பர்களை பெற்றவர்கள் இதிலிருந்து விலக்கு பெறுகிறார்கள்.
நண்பர்களுடன் பல செய்திகளைப் பகிர்வதால் நினைவு சுழற்சி சீராக நடைபெறுகிறது. ஒன்றை பற்றி பேசும் போது மற்றொன்று அதை சேர்த்து கட்டி வருகிறது. இதனால் நம் நினைவு தட்டுகளில் தேக்கம் ஏற்படாமல் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டும் இருக்கிறது. சொல்லிக் கொள்ளும் படியாக நண்பர்கள் இல்லாதவர்களின் நிலை கொஞ்சம் சிரமம் தான். இவர்கள் நினைவுகளை அசைபோட்டு மெல்ல அவற்றை மீட்டு உயிர்ப்புடன் மனதுக்குள் உலவவிட்டுக் கொள்ள முடியும்.
நமது மூளை நினைவுகளை ஒருங்கிணைக்கும் வழிகளில் ஒன்று, அனுபவத்தை மனரீதியாக மீட்டெடுப்பதாகும்" என்று ஜெர்மானிய பேராசிரியர் ஃபேபியன் க்ளூஸ்டர்மேன் சொல்கிறார்.
இன்று முதியவர்களிடையே அல்ûஸமர் எனும் நினைவுத் திறன் குறைப்பாடு பரவலாக காணப்படுகிறது. இப்படி பாதிக்கப்பட்டவர்களின் நினைவுத்திறன் குறைந்து மிகவும் பலவீனமான நினைவகமாக உருமாறிவிடுகிறது. இது ஒரே நாளில் நடைபெறுவதில்லை. படிப்படியாக மோசமடையத் தொடங்குகிறது. பொதுவாக மனிதர்களுக்கு வயதான பிறகு இயல்பாகவே பல விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்ள சிரமப்படுவார்கள். ஒவ்வொரு விஷயத்தையும் பல முறை சொன்னாலும் அதை நினைவுபடுத்தி கொள்ளமுடியாமல் திணறுவார்கள்.
இது இப்படியே போனால் காலப்போக்கில் அவர்கள் தங்கள் பெயரையே மறந்துவிடுவார்கள். அப்பொழுது தான் உணவு பரிமாறிவிட்டு வந்திருப்போம். அடுத்த பத்தாவது நிமிடத்தில் எனக்கு ஏன் இன்னும் உணவு தரவில்லை என கேட்பார்கள். விருந்தினர் யாரேனும் வீட்டிற்கு வந்திருந்தால் அவர்கள் எதிரில் நம்மிடம் உணவு தரவில்லை என சங்கடப்படுத்துவார்கள்.
இது ஏன் ஏற்படுகிறது? சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்பது போல் மூளையில் உள்ள பதிவுகளை அகழ்ந்து பாராததும் இதற்கு ஒரு காரணம். நினைவுகளை உளவியல் சார்ந்து மீட்டெடுக்க முடியும் என உளவியளாளர்கள் சொல்கிறார்கள். உதாரணமாக அடக்கப்பட்ட நினைவாற்றலை ஒரு குறிப்பிட்ட வாசனை, சுவை அல்லது இழந்த நினைவகத்துடன் தொடர்புடைய பிற அடையாளங்களால் தூண்டலாம் என்கிறார்கள்.
நமது முந்தைய கூட்டுக்குடும்ப வாழ்வுமுறையில் முதியவர்களுக்கு மிக அதிக முக்கியத்துவம் இருந்தது. எந்த விஷயமாக இருந்தாலும் இறுதி முடிவெடுப்பது அவர்களாகத் தான் இருப்பார்கள். அவர்கள் ஒவ்வொரு இல்லத்திலும் செல்வாக்கு மிக்கவர்களாக விளங்கினர். ஆனால் தனிக்குடித்தன வாழ்வு முறை பெருகிப் போயுள்ள இந்த நவீன காலங்களில் பெரியவர்களை கலந்தாலோசிக்காமல் இளையவர்களே அவரவர்கான முடிவுகளை எடுத்துக் கொள்கின்றனர். நமக்கான முக்கியத்துவம் குறைந்துவிட்டது என்ற எண்ணமே அவர்களுக்கு நாம் தகுதியற்றவர் என்ற உணர்வை ஏற்படுத்திவிடுகிறது.
வேலை இருக்கிறது என்ற நிர்ப்பந்தம் இருப்பதால் தான் உடல் சீக்கிரம் எழுகிறது. இன்று விடுமுறை என்றவுடன் எல்லா வேலைகளிலும் ஒரு சுணக்கம் ஏற்படுகிறதுதானே. அதுபோல நம்முடைய ஆலோசனைகள், யோசனைகள், பணிகள் குடும்பத்துக்கு தேவை என்பது வரை நம் மூளை சிறப்பாக வேலை செய்து கொண்டே இருக்கிறது. போதும் நம் பங்கு என மனம் நினைத்து விட்டால் அனைத்தும் மங்கத் தொடங்கி விடும். இந்த நிலையை தவிர்ப்பதற்கு வீட்டிலிருக்கும் முதியவர்களுடன் சில மணித்துளிகள் நாம் செலவிட வேண்டும்.
நமக்கு "அ'னா "ஆ'வன்னா சொல்லிக் கொடுக்க எவ்வளவு நாட்கள் அவர்கள் மெனக்கெட்டிருப்பார்கள்? ஆனால் நாம் தற்போது அவர்கள் முன் அமர நேரம் இல்லை என்று நொண்டிச் சாக்கு சொல்கிறோம். குடும்பத்தினருடன் தினசரி இயல்பாக உரையாடல் நடைபெறும் போது அனைத்து விஷயங்களுக்கும் மூளை வினை புரிகிறது. எப்படி கணினியின் சேமிப்பிலிருந்து (ஸ்டோரேஜ்) எடுத்து விரைவாக பயன்படுத்துகிறதோ அதுபோல இதுவும் இயல்பாக நடைபெறும்.
பல வருடங்களுக்கு முன்பாக நடைபெற்ற கதைகளை, நிகழ்வுகளை, உண்மைகளை கேட்டு பதிலுக்கு பகிரும் போது வயதாவதால் ஏற்படும் நினைவு தவறுதலில் இருந்து அவர்களை நாம் காப்பாற்றலாம். முன்பொரு காலத்தில் பல தொலைபேசி எண்களையாவது மனப்பாடமாக தெரிந்து வைத்திருந்தோம். இன்று கைப்பேசி வந்த பிறகு இரண்டொரு எண்களை நினைவு வைத்துக்கொள்வதே பெரும்பாடாக இருக்கிறது
நல்ல ஆரோக்கியம் என்பது நல்ல நினைவாற்றலையும் உள்ளடக்கியது. பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், ஆசிரியர்கள் என மூளையையே மூலதனமாக கொண்டவர்களுக்கு மட்டுமல்லாது உடலுழைப்பு பணிகளில் ஈடுபடுவோர் கூட நினைவுகள் சரியாக இருந்தால் பல மணி நேரங்களை மிச்சப்படுத்தலாம். எப்பொழுதும் எதையாவது எங்காவது வைத்துவிட்டு தேடுபவர்களிடம் கேட்டுப் பாருங்கள். நினைவு சரியாக வைத்திருத்தலின் அருமையை சொல்வார்கள்.
நம்மில் பதிவாகி போயிருக்கும் அனைத்து தரவுகளையும் ஏதோ ஒரு முனையில் நம்மால் மீட்டெடுக்க முடிந்தால் நிச்சயம் அது நல்லது தான்.
ஆயினும் தொழில்நுட்பத்தில் திளைப்பவர்களை தனிமை பாதிப்பதில்லை. அவர்கள் தனி உலகத்தில் பயணிப்பார்கள். இனிவரும் காலங்களில் இது போன்ற சூழல்கள் மாறலாம். எப்படி நாம் வெவ்வேறு ஊர்களில் இருந்து இணையத்தில் செயலிகள் வழி இணைகிறோமோ அதிலிருந்து இன்னும் ஒரு படி முன்னேறி போய் தற்போது அலுவலக கூட்டம் தொடர்பான கட்டமைப்பை "மெட்டாவர்ஸ்' தொழில்நுட்பம் உருவாக்கியுள்ளது.
நாற்காலி, மேஜை, சுவரோவியங்கள் கொண்டதாக அந்த கூட்ட அரங்கு தயாராக இருக்கும். நாம் வீட்டிலிருந்தபடியே மெட்டாவர்ஸ்க்கான கண்ணாடியை அணிந்து கொண்டால் நம்முடைய அனுமான உருவம் அந்த கூட்ட அரங்கில் கலந்து கொள்ளும். சக பயனாளர்களுடன் நேருக்கு நேர் சந்தித்து உரையாடுவது போல உணர்வைப் பெற முடியும் என நிபுணர்கள் அடித்துச் சொல்கிறார்கள். இது இளையவர்களை விட முதியவர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக இருக்கும் என நம்பப்படுகிறது.
ஆக தொழில்நுட்பத்தை தெரிந்து வைத்துக் கொள்வதின் மூலம், நம்மை மட்டுமல்ல நம் நினைவுகளையும் புதுப்பித்துக் கொள்வதில் எந்த சிரமமும் இருக்காது. ஏனெனில் நினைவுகள் விலைமதிப்பு மிக்கவை.
கட்டுரையாளர்:
எழுத்தாளர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.