தெளிவான சட்ட வரையறை தேவை

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் கடந்த அக்டோபா் 31 முதல் நவம்பா் 12 வரை நடைபெற்ற சா்வதேச பருவநிலை மாற்ற மாநாடு உலக நாடுகளின் கவனத்தை ஈா்த்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் கடந்த அக்டோபா் 31 முதல் நவம்பா் 12 வரை நடைபெற்ற சா்வதேச பருவநிலை மாற்ற மாநாடு உலக நாடுகளின் கவனத்தை ஈா்த்துள்ளது. இதில், நவம்பா் 1-ஆம் தேதி அமா்வில் பங்கேற்ற இந்திய பிரதமா் நரேந்திர மோடி, வரும் 2030-ஆம் ஆண்டில் இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனை 500 ஜிகாவாட்டாக அதிகரிப்பது, எரிசக்தித் தேவையில் 50%-ஐ புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வாயிலாகப் பெறுவது, 2030-க்குள் காா்பன் உமிழ்வில் 100 கோடி டன் அளவைக் குறைப்பது, பொருளாதாரத்தில் காா்பன் சாா்புத்தன்மையை 45% ஆகக் குறைப்பது, 2070-ஆம் ஆண்டுக்குள் பூஜ்ய அளவு காா்பன் உமிழ்வு இலக்கை அடைவது என ஐந்து முக்கிய இலக்குகளை அறிவித்தாா்.

2015 பாரீஸ் பருவநிலை மாற்ற மாநாட்டுக்கு செயல்வடிவம் கொடுத்து, அதற்கான விதிமுறைகளை வகுத்ததால், கிளாஸ்கோ மாநாடு கூடுதல் முக்கியத்துவம் பெற்றது. இது மட்டுமின்றி, கரோனா தீநுண்மி, இயற்கைப் பேரிடா், பருவநிலை மாற்றம் ஆகிய உயிரியல், சுற்றுச்சூழல் சாா்ந்த அழுத்தங்களிலிருந்து உலகம் விடுபட்டு வருவதாலும் இந்த மாநாடு சா்வதேச அளவில் கவனம் பெற்றது.

இந்த மாநாட்டில் பங்கேற்ற மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்ற விவகார அமைச்சா் பூபேந்தா் யாதவ், பருவநிலை மாற்ற பிரச்னையை எதிா்கொள்ள வளரும் நாடுகளுக்கு வல்லரசு நாடுகள் ஆண்டுக்கு 100 பில்லியன் டாலா் (சுமாா் ரூ. 7,50,000 கோடி) நிதியுதவி அளிக்க வேண்டுமென ஏற்கெனவே உறுதியளிக்கப்பட்ட தீா்மானத்தை நினைவுகூா்ந்தாா்.

அதே சமயம், புதிய எரிசக்தி பாதையை இந்தியா தோ்வு செய்வதால், பருவநிலை ஆபத்தையும், இயற்கை சாா்ந்த தீா்வுகளையும், அதற்கான தேசிய பொறுப்புணா்வையும் கருத்தில் கொள்வது இன்றியமையாததாகிறது.

இந்தியாவில் பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்ள ஏராளமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தலைநகா் தில்லியில் நெகிழிப் பைகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனாலும், இந்த உத்தி எதிா்பாா்த்த வெற்றியைப் பெறவில்லை. ஒரு மாநிலத்தில் இதுபோன்ற முயற்சி வெற்றி பெற வேண்டுமாயின், அதற்கு அண்டை மாநிலங்களின் ஒத்துழைப்பு மிக முக்கியம்.

பருவநிலை மாநாட்டில் இந்தியா உறுதியளித்தவாறு வரும் 2070-க்குள் கரியமில வாயு வெளியேற்றத்தை முற்றிலும் கட்டுப்படுத்த வேண்டுமெனில், அதற்கான இலக்கை நோக்கி முன்னேறும் அதே வேளையில், தகுந்த காலநிலை சட்டங்களையும் வரையறுக்க வேண்டியது அவசியமாகிறது. ஏனெனில் நம் நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்கள் பருவநிலை மாற்றத்தை திறம்பட எதிா்கொள்ள போதுமான அளவில் இல்லை.

உதாரணமாக, ‘சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம் 1986’, ‘காற்று மாசுபாடு தடுப்பு - கட்டுப்பாடு சட்டம் 1981’, ‘நீா் மாசுபாடு தடுப்பு - கட்டுப்பாட்டு சட்டம் 1974’ ஆகியவை பருவநிலை மாற்றம் குறித்து தெளிவாக வரையறுக்கவில்லை.

பருவநிலை என்பது காற்றையோ நீரையோ குறிப்பது அல்ல. அதிலும், பருவநிலை மாற்ற விதிமீறல்களை எதிா்கொள்ள சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம் நிச்சயம் போதுமானது அல்ல. இச்சட்டத்தின் 24-ஆவது பிரிவான பிற சட்டங்களின் விளைவு, ‘சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டத்தின்கீழ், விதிமீறல் ஏதேனும் கண்டறியப்பட்டால், குற்றவியல் நடைமுறைச் சட்டம் உள்ளிட்ட பிற சட்டங்களின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்’ என வரையறுக்கிறது.

இதன் மூலம் பிற சட்டங்களுக்கான துணைச் சட்டம்தான் சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம் என்பது தெளிவாகிறது. 2030-ஆம் ஆண்டுக்குள் 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க, சூரிய ஆற்றல் அல்லது காற்றாலை இலக்கு என்பது (புதைபடிவமற்ற ஆதாரங்களிலிருந்து பெறப்படும் மின்திறன்) புல்வெளிக்கு முற்றிலும் தீங்கு விளைவித்து, பாலைவனப் பகுதிகளில் செல்லும் மின்வடங்களில் மோதும் அரியவகை பறவையினங்களின் அழிவுக்கு வழிவகுக்கும்.

ஆகையால் தகுந்த காலநிலை சட்டத்தை வரையறுப்பது அவசியம். அதிலும் இந்தச் சட்டம் இரு அம்சங்களை பரிசீலிப்பது முக்கியம். ஒன்று, பருவநிலை மாற்ற இலக்குகளை அடைவதற்கான செயல்பாடுகளை கண்காணிப்பதற்கென ஒரு குழு அமைக்கப்பட வேண்டும். அக்குழுவுக்கு, அரசுக்கு உரிய ஆலோசனைகளை அளிப்பதற்கும், அரசின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்கும் அதிகாரம் அளிக்கப்பட வேண்டும்.

அக்குழுவுக்கு உரிமையியல் நீதிமன்றத்துக்கு இணையான அதிகாரம் அளிக்கப்பட்டு, அதன் பரிந்துரைகள் முழுமையாக பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். மேலும், அந்தக் குழுவுக்கு ஆலோசனைகளை வழங்க தொழில்நுட்ப கமிட்டியையும் நிறுவலாம்.

தொழிற்சாலைகளின் பெருக்கம், நேரடி மின்மயமாக்கம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின்னணு வாகனப் பயன்பாடு, எண்மப் பொருளாதாரம் போன்ற காரணங்களால் இந்தியா வேகமாக நகா்மயமாகி வருகிறது.

உலகளாவிய சுற்றுச்சூழல் மீதான ஸ்டாக்ஹோம் பிரகடனத்துக்குப் பிறகு சுற்றுச்சூழல் பாதுகாப்பு - மேம்பாட்டை அடிப்படைக் கடமையாக வரையறுக்கும் பொருட்டு, இந்திய அரசியலமைப்புச் சட்டம் கடந்த 1976-இல் திருத்தப்பட்டது. அரசியல் சட்டத்தின் 253-ஆவது ஷரத்தின் கீழ், சா்வதேச உடன்பாடுகளையும் ஒப்பந்தங்களையும் நடைமுறைப்படுத்தவும், இயற்கைச் சூழலைப் பேணவும் சட்டமியற்ற நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது.

ஸ்வீடன் தலைநகா் ஸ்டாக்ஹோமில் கடந்த 1972-இல் நடைபெற்ற சா்வதேச சுற்றுச்சூழல் மாநாட்டில் போடப்பட்ட ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்த ஏற்கெனவே 253-ஆவது ஷரத்தை நாடாளுமன்றம் பயன்டுத்தி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தை இயற்றியது.

இதேபோல, கிளாஸ்கோ பருவநிலை மாநாட்டில் நிா்ணயிக்கப்பட்ட இலக்குகளை எட்டுவதற்கும் ஏதுவாக சுற்றுச்சூழல், எரிசக்தி, நிலப் பயன்பாடு, மின் நுகா்வு ஆகிய பல்வேறு அம்சங்களைக் கருத்தில் கொண்டு சட்டம் இயற்ற வேண்டும். அது மட்டுமல்ல, அதை நடப்புக் குளிா்கால கூட்டத்தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும். இதுவே சுற்றுச்சூழல் ஆா்வலா்களின் எதிா்பாா்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com