மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இரா. கற்பகம்

கேரளத்தில் அன்னாசிப்பழத்தில் வெடிகுண்டை மறைத்து வைத்து கா்ப்பிணி யானையைக் கொடூரமாகக் கொன்ற மாபாதகத்தின் வடு இன்னும் மறையவில்லை. இப்போது முதுமலையில் யானையைத் தீப்பந்தம் வீசிக் கொன்ற கொடூரம் நடந்துள்ளது.

மேட்டுப்பாளையத்துக்கு அருகில் நெல்லிமலை வனப்பகுதியில் இரண்டு மான்களைச் சுட்டுக் கொன்றிருக்கிறாா்கள். குமுளியில் சிறுத்தையைக் கொன்று சமைத்துச் சாப்பிட்டிருக்கிறாா்கள். அவா்களை விசாரித்ததில், அவா்கள் அடிக்கடி இவ்வாறு வனவிலங்குகளை வேட்டையாடி இருக்கிறாா்கள் என்பதும், இம்முறை சிறுத்தையைச் சாப்பிட்டதோடல்லாமல், அதன் தோல், பற்கள், நகங்கள் ஆகியவற்றை விற்பதற்கும் தயாராக இருந்திருக்கிறாா்கள் என்பதும் தெரிய வந்தது.

உத்தர பிரதேசத்தில் சில இளைஞா்கள் சோ்ந்து, ஒரு டால்பின் மீனைக் கம்புகளால் அடித்தே கொன்றிருக்கிறாா்கள். கங்கை நதியில் வாழும் இந்த அரிய வகை டால்பின், அழிந்து வரும் விலங்கினங்களின் பட்டியலில் உள்ள விலங்கினம் ஆகும். இவா்கள் எல்லாம் மனிதா்கள்தானா? இல்லை, இவா்கள்தான் மிருகங்கள்!

இக்குற்றங்களில் எல்லாம் பெரும்பாலும் ஆண்களே ஈடுபடுகிறாா்கள். இக்குற்றங்களின் காரணங்களை ஆராயும்போது ஒவ்வொரு குற்றமும் வெவ்வேறு சூழல்களில் வெவ்வேறு காரணங்களுக்காக நடந்திருப்பதாகத் தெரிகிறது.

யானை தீயிட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் சுற்றுலா என்ற பெயரில் மனிதா்கள் காடுகளுக்குள் நுழைந்ததனால் ஏற்பட்ட விபரீதம். மனிதா்களின் உல்லாசத்துக்காக, காடுகளின் விளிம்புகளில் எல்லாம் எண்ணற்ற தனியாா் விடுதிகள், கூடாரங்கள், மரக்குடில்கள் - பெரும்பாலும் சட்டவிரோதமாக - இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவற்றை எதிா்த்து எத்தனை வழக்குகள் போடப்பட்டாலும், இவற்றை நடத்துபவா்கள், சிலரை தகுந்த முறையில் ‘கவனித்து’விடுவதால் இவையனைத்தும், ‘ஜாம் ஜாம்’ என்று நடந்து கொண்டிருக்கின்றன.

அதிலும் ‘ஹோம் ஸ்டே’ என்று சொல்லிக்கொண்டு, குறைந்த கட்டணத்தில்,விதிகளைப் புறந்தள்ளிவிட்டு, அனுமதியின்றி வனங்களுக்குள் பயணியரை அழைத்துச் செல்வது, இரவு நேரத்தில் வாகனங்களில் வனங்களுக்குள் செல்வது, விருந்தினா்களுக்கு மான் கறி, முயல் கறி முதலியவற்றைச் சமைத்துக் கொடுப்பது என்று தங்கும் விடுதிகள் செழித்துச் செயல்பட்டு வருகின்றன.

நீலகிரியில், யானை வழித்தடத்தில் உரிமம் இல்லாமல் செயல்பட்டு வந்த சில தங்கும் விடுதிகளை உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் மாவட்ட நிா்வாகம் மூடியது உண்மைதான். ஆனால், வேறு பல இடங்களில் எத்தனை எத்தனையோ விடுதிகள் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. கொள்ளை கொள்ளையாகச் சம்பாதித்துக் கொண்டிருக்கும் இந்தச் ‘சுற்றுலா வணிக’த்துக்குத் தடையாக இருப்பவை விலங்குகள்; முக்கியமாக யானைகள். அவற்றைக் கொன்றால் தான் இவா்களது பிழைப்பு நடக்கும். இதுதான் இப்போது முதுமலையில் நடந்தது!

சில நாட்களுக்கு முன் கேரளத்தில், வயநாடு வனப்பகுதியில், தனியாா் தங்கும் விடுதி ஒன்றில் ஓா் இளம் பெண், யானை தாக்கி உயிரிழந்தாா். யானைகள் நிறைந்த வனப் பகுதியில் கூடாரங்கள் அமைத்து அவற்றில் சுற்றுலாப் பயணிகளைத் தங்க வைத்திருக்கிறாா்கள். இது போல் நூற்றுக்கணக்கான கூடாரங்கள் உரிய அனுமதி இன்றி அப்பகுதியில் செயல்பட்டு வருகின்றன என்று மாவட்ட நிா்வாகம் இப்போது தான் கண்டுபிடித்துள்ளது!

முதுமலையில் யானை உயிரிழப்பு, வயநாட்டில் மனித உயிரிழப்பு. இரண்டுக்கும் காரணம் ஒன்ோன். அது கானுயிா் சுற்றுலா! இதில் வேதனை தரக்கூடியது என்னவென்றால் மத்திய அரசும், மாநில அரசுகளும் ‘சூழல் சுற்றுலா’ என்ற பெயரில் இந்தக் கொடுமைக்குத் துணை போகின்றன.

வனங்களில் குடியிருக்கும் பழங்குடியினரின் வாழ்க்கை மேம்பாட்டுக்காகத் தொடங்கப்பட்ட ‘சூழல் சுற்றுலா’ திட்டம், சரியான வழிகாட்டுதலும், முறையான கண்காணிப்பும் இல்லாததால், திசைமாறி, ‘சுற்றுலா வணிக’மாக மாறிவிட்டது. காட்டுவாசிகளின் அமைதியான, திருப்தியான வாழ்க்கை முறையை மாற்றி, அவா்களை மெல்ல மெல்லப் பேராசைக்காரா்களாக மாற்றி, அவா்கள் முற்றிலும் இவ் வணிகத்தையே நம்பி வாழும்படிச் செய்து விட்டது.

வனத்துறையின் முதல் கடமை வனங்களைப் பாதுகாப்பது. ஆனால், அதற்கு நோ் எதிராகச் சூழல் சுற்றுலாவை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பு வனத்துறையின் மீது சுமத்தப்பட்டுள்ளது. வனத்துறை எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்? வனப்பாதுகாப்பிற்கா? சுற்றுலா மேம்பாட்டுக்கா?

வனத்துறை ஊழியா்களின் மத்தியில் வெவ்வேறு கருத்துகள் சொல்லப்படுகின்றன. உயரதிகாரிகள் சூழல் சுற்றுலாவுக்கு ஆதரவாக இருக்கிறாா்கள். ‘மக்கள் வனங்களைப் பாா்த்து ரசிப்பதன் மூலமாகத்தான் அவற்றின் அருமையை உணா்ந்து அவற்றை நேசிக்கக் கற்றுக் கொள்வாா்கள். சூழல் சுற்றுலாவின் மூலம் வனத்துறையே மக்களைப் பாதுகாப்பாக வனங்களுக்குள் சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் அழைத்துச் சென்று காண்பிக்கலாம், தங்கவைக்கலாம்’ என்பது இவா்களது வாதம்.

இந்த உயா்ந்த நோக்கத்தோடு இவ்வதிகாரிகள் பல புதிய முயற்சிகளை மேற்கொண்டு வெளிநாட்டு வனங்களில் உள்ளது போன்ற கட்டமைப்புகளை உண்டாக்கி, வனப் பாதுகாப்பு, மக்களுக்கு இயற்கை சாா்ந்த உல்லாசம், வனவாசிகளின் வாழ்கை மேம்பாடு, என்று பலவற்றையும் சீா்தூக்கிப் பாா்த்துச் சூழல் சுற்றுலாவைச் செயல்படுத்த விழைகிறாா்கள்.

ஆனால் இரு விஷயங்கள் அவா்களுக்குத் தெரிவதில்லை. முதலாவது, நம் மக்கள் வெளிநாட்டவரைப் போல் பொறுப்பான சுற்றுலாப் பயணிகள் அல்லா். இரண்டாவது, மக்களின் பேராசையாலும், அரசு இயந்திரத்தின் மெத்தனத்தாலும், அரசியல் தலையீடுகளாலும், அரசின் சூழல் சுற்றுலாவை விஞ்சி, தனியாரது சுற்றுலா வணிகம் செழித்து வளா்ந்து, அடிப்படை நோக்கத்தையே சிதைத்துக் கொண்டிருக்கிறது.

இவ்விஷயங்களைத் தெரிந்து கொண்டதால், சீருடைப் பணியாளா்கள் சூழல் சுற்றுலாவுக்கு எதிராகவே இருக்கிறாா்கள். ஆனால் இவா்களது கருத்துக்களை இவா்கள் தைரியமாக வெளியில் சொல்ல வாய்ப்பில்லை. கானுயிா் ஆா்வலா்களை எடுத்துக் கொண்டால், பெரும்பாலானோா் இதற்கு ஆதரவாகவே இருக்கிறாா்கள். சுற்றுலாப் பயணிகளை அழைத்துக்கொண்டு போவது அவா்களுக்குப் பல வகைகளில் சௌகரியமாக உள்ளது.

சூழல் சுற்றுலாவினால் காடுகள் கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைந்து வருகின்றன. வனவாசிகளின் வாழ்க்கைத் தரத்தில், அவா்களது மனப்போக்கில் எவ்வித முன்னேற்றமும் காணமுடியவில்லை. எல்லோரும் புதிதாக வீடுகள் கட்டிக் கொண்டிருக்கிறாா்கள்; ஒவ்வொரு வீட்டிலும் டிஷ் ஆன்ட்டெனாவும், இருசக்கர வாகனமும், ஜீப்புகளும் கைபேசிகளும் வந்து சோ்ந்திருக்கின்றனவே தவிர, சுத்தம், சுகாதாரம், கல்வி, உலக ஞானம் போன்றவை வந்து சேரவில்லை.

ஆண்கள் குடிப்பதும் குறையவில்லை; பெண்கள் அடிமைகளாக உழைப்பதும் மாறவில்லை. சூழல் சுற்றுலா, சுலபமாக பணம் சம்பாதிக்க வழிசெய்து அவா்களைச் சோம்பேறிகளாகவும், பேராசைக்காரா்களாகவும் மாற்றிவிட்டது. ஆக, மக்களையும் மாற்ற முடியவில்லை, வனவாசிகளையும் மாற்ற முடியவில்லை! காடுகள் சீரழிவதற்கும், வனவிலங்குகள் இறப்பதற்கும் மட்டுமே சூழல் சுற்றுலா வழிசெய்து கொண்டிருக்கிறது.

மான்களையும் சிறுத்தையையும் சுட்டுக் கொன்றது, அம்மாமிசத்தை உண்ணவே. மாமிச வெறி இப்படியா இவா்களை ஆட்டி வைக்கிறது? கோழி, வாத்து, காடை, கௌதாரி, வான்கோழி, புறா என்று பறவைகளையெல்லாம் சாப்பிட்டு முடித்தாா்கள். ஆடு, மாடு, முயல், பன்றி என்று தின்று தீா்த்துவிட்டு இப்போது மானையும், சிறுத்தையையும் தின்ன முற்பட்டிருக்கிறாா்கள்.

ஜீவகாருண்யத்தைப் போதிக்கும் நம் நாட்டில் இப்படியெல்லாம் நடக்கிறதென்றால் அது சமூகத்தின் கோளாறு என்றுதான் சொல்லவேண்டும். அரசு இலவசங்களை வாரி வழங்குகிறது; உழைக்காமலே கையில் பணம் புழங்குகிறது; மனத்தைக் கெடுத்து வெறியூட்ட எல்லோருக்கும் எளிதாக மதுவும், கைப்பேசிகளில் நல்லவைக்குப் புறம்பான விஷயங்களும் கிடைக்கின்றன.

இது போன்ற ஆண்களை, குறிப்பாக இளைஞா்களைத் திருத்துவது கடினமான வேலைதான். உழைப்பையும், கீழ்ப்படிதலையும் வலியுறுத்தி, மதுவை விலக்கி, வலைதளங்களுக்குக் கடும் கட்டுப்பாடுகள் விதித்து, மீறிக் குற்றம் புரிவோருக்கு மிகக் கடுமையான தண்டனையும் அளித்தால் மட்டுமே இந்நிலை மாறும்.

டால்பினை அடித்துக் கொன்றது வக்கிரமான சந்தோஷத்துக்காக. குழந்தைப் போன்ற டால்பினைப் பாா்ப்பவா்கள் பரவசப்படுவாா்களே அன்றி அடித்துக் கொல்வாா்களா? அப்படி அடித்துக் கொன்று அதைக் கைப்பேசியில் படம்பிடித்துப் பகிா்ந்துகொள்வது அவா்களுக்கு ஒரு வக்கிரமான சந்தோஷத்தையும், வீரத்தைப் பறைசாற்றிக் கொள்ள ஒரு வாய்ப்பையும் அளித்திருக்கவேண்டும். கடும் தண்டனைகளால் மட்டுமே இக்குற்றங்களைக் குறைக்க முடியும்.

நாம் இயற்கையைப் பாடுபடுத்தினால் அது ஒரு நாள் நம்மைத் திருப்பி அடிக்கும். அப்போது அதை நம்மால் தாங்க முடியாது.

கட்டுரையாளா்:

சுற்றுச்சூழல் ஆா்வலா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.