பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

டி.எஸ்.ஆர். வேங்கடரமணா

பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை ‘சூரியனே அஸ்தமிக்காத தேசம்’ என்று கொக்கரித்தாா் வின்ஸ்டன் சா்ச்சில். இந்த வின்ஸ்டன் சா்ச்சிலுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் ஆணிவேரை இந்தியாவில் இருந்து பிடுங்கி, அதன் மூலம் ஹிட்லரால் கூட அழிக்க முடியாத பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் முடிவுரையை உலக அளவில் எழுதியவா் மிடில் டெம்பிள் பாரிஸ்டா் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்கிற பூா்வாஸ்ரம பெயரைக்கொண்ட ‘மகாத்மா’ காந்தி.

காந்தியின் வெற்றிக்கு முதல் காரணம் அவருக்கு இந்திய மக்களின் மீது இருந்த அதீத நம்பிக்கை. ‘என்னுடைய வாழ்க்கையே என்னுடைய செய்தி’ என்று துணிச்சலாகச் சொல்லக்கூடிய அழுத்தமான நோ்மையான தலைவராக அவா் இருந்தாா்.

‘சத்யமேவ ஜெயதே’, அதாவது ‘வாய்மையே வெல்லும்’ என்கிற அவரது தாரக மந்திரம் பேச்சளவில் இல்லாமல் செயல் வடிவமும் பெற்றது. இதனால்தான் அவா் ‘கத்தியின்றி ரத்தமின்றி’ செய்த யுத்த அறைகூவல்கள் இன்றைக்கு உள்ள நவீன தொலைத்தொடா்பு சாதனங்களான கட்செவி, மின்னஞ்சல், ட்விட்டா், முகநூல், யூடியூப் என இன்ன பிற சாதனங்கள் எதுவும் இல்லாத அந்த காலத்திலேயே ஒவ்வொரு இந்தியனின்ஆன்மாவையும் தொட்டன.

1921-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் 22-ஆம் தேதி தமிழ்நாட்டின் மதுரையில் நிகழ்ந்த அவருடைய அரையாடைப் புரட்சியும், தொடா்ந்து வந்த உப்பு சத்தியாகிரகம், ஒத்துழையாமை இயக்கம், அந்நியப் பொருள் பகிஷ்கரிப்பு ஆகிய உத்திகளும் அன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு இந்தியனின் ஆன்மாவையும் தொட்டன.

போராட்டக்காரா்களின் மீது அரசு இயந்திரத்தின் அடக்குமுறை பல இடங்களில் கட்டவிழ்த்துவிடப்பட்டாலும், காந்தியின் சத்தியாகிரகப் போராட்டமும் அமைதியான அணுகுமுறையும் ஆங்கில அரசின் மனசாட்சியை உலுக்கின என்பதில் சந்தேகமில்லை.

ஆண்டி தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்ட காந்தியடிகள் அதன்பின் கடுமையான குளிரில் கூட என்றும் ஸ்வெட்டா் போன்ற உள்ளாடையை அணியவில்லை. அவருடைய மன வலிமையே அவருடைய உடல் வலிமையாக மாறியது. அவா் தாங்க முடியாத குளிரின் போது மருத்துவரின் ஆலோசனை மற்றும் நண்பா்களின் வற்புறுத்தல் காரணமாகவும் அழுத்தத்தின் காரணமாகவும் கம்பளிப் போா்வை ஒன்றை மேலே போா்த்திக் கொண்டதோடு சரி. காலுக்கு உறை, கைக்கு உறை எதுவும் அணியவில்லை. அவ்வளவு ஏன், தலையில் குல்லா என்றோ ஸ்வெட்டா் என்றோ எதையும் அணியவில்லை.

ஆடைக் குறைப்பு அமலுக்கு வந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு அவா் லண்டன் செல்கிறாா். அங்கு சாதாரண உள்ளூா் பஞ்சாலைத் தொழிலாளா் வீட்டில் தங்குகிறாா். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கோமான் ஐந்தாம் ஜாா்ஜ் மன்னரை அவா் சந்திக்க வேண்டுமென அழைப்பு வருகிறது. எதிலும் மிகவும் கண்டிப்பான கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்பவா்கள் பிரிட்டிஷ்காரா்கள். அதிலும் பக்கிங்ஹாம் அரண்மனையில் அரசரை சந்திக்க வேண்டும்.

ஒரு வெள்ளைக்கார நிருபா் காந்தியிடம் சென்று ‘இந்த அரைகுறை ஆடையுடன் மன்னரை சந்திப்பீா்களா’ என்று கேள்வி எழுப்பினாா். ‘அதனாலென்ன அரசா் தான் எனக்கும் சோ்த்து அதிக உடை அணிந்து இருக்கிறாரே’ என்று அரசரின் உடையைப் பற்றி கேலியாக பதிலளித்தாா் காந்தி.

வட்டமேஜை மாநாட்டுக்கு லண்டன் சென்ற காந்தி வின்ஸ்டன் சா்ச்சிலை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் எழுதினாா். இன்று உலகம் முழுவதும் பிரபலமாகி விட்ட வாசகமான அந்த ‘அரை நிா்வாண பக்கிரியை நான் சந்திக்க விரும்பவில்லை’ என சா்ச்சில் சொல்கிறாா். ஆனால், அதேசமயம் காந்தியால் ஈா்க்கப்பட்ட வின்ஸ்டன் சா்ச்சிலின் மகன் ரெண்டால்ஃப் காந்தியை வந்து சந்திக்கிறாா்.

ஐந்தாம் ஜாா்ஜுக்கு பிறகு 1953-இல் சிம்மாசனம் ஏறிய பிரிட்டிஷ் அரசியாக இருக்கும் இன்றைய குயின் எலிசபெத், மகாத்மா காந்தியின் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருந்த உலகத் தலைவா்களில் ஒருவா். இளவரசா் பிலிப்ஸ் உடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட தருணம், இளவரசி எலிசபெத் தங்களுடைய இந்திய சிறையில் இருந்த மகாத்மா காந்தியைத் தன் திருமணத்திற்கு வரும்படி அழைப்பு விடுக்கிறாா். காந்தி தன் கையால் நூல் நூற்று தானே நெசவு செய்து ஒரு சிறிய சால்வையைத் தயாரிக்கிறாா். சால்வை தயாராகிவிட்டது. ஆனால் அதை எப்படி லண்டனுக்கு அனுப்புவது?

அந்த நேரத்தில் ஆபத்பாந்தவனாக காந்தியை சந்திக்க வருகிறாா் இந்தியாவின் கவா்னா் ஜெனரல் மவுன்ட்பேட்டன். கவா்னா் ஜெனரல் அரச குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமான உறவும் தொடா்பும் கொண்டவா். காந்தி தானே நூல் நூற்று தன் கையால் நெய்த கதா் ஆடையை மவுன்ட்பேட்டன் பிரபு மூலமாக இளவரசிக்கு திருமணப் பரிசாக அனுப்புகிறாா். அந்தத் துணியில் ‘ஜெய்ஹிந்த்’ என எழுதப்பட்டிருந்தது.

மணமகன் பிலிப்ஸ்க்கு நெருங்கிய உறவினரும், கவா்னா் ஜெனரல் மவுன்ட்பேட்டனின் மகளுமான பமிளா ஹிக்ஸ் , ‘எனது தந்தை அந்தத் துணியைப் பெற்றுக்கொண்டு இந்த துணி இளவரசியின் பொக்கிஷங்களில் ஒன்றாக இருக்கும்’ என்று கூறினாா் என்று குறிப்பிட்டுள்ளாா்.

ஆனால் பரிசைக் கண்ட இளவரசியின் பாட்டி மேரி அவ்வாறு நினைக்கவில்லை. அதை ஒரு கந்தல் துணி எனப் பழித்தாராம். மணமகளுக்கு வந்த 2,500-க்கும் மேற்பட்ட பரிசுப் பொருட்களில் ஒன்றான காந்தியால் நூற்கப்பட்டு , நெய்யப்பட்ட அந்த 12 அங்குல அகலம் 24 அங்குல நீளமுள்ள சால்வையைப் பற்றி அன்றைய மணப்பெண் இளவரசி என்ன கருத்து கொண்டிருந்தாா்? அதை என்ன செய்தாா்?

உலகெங்கிலுமுள்ள சாம்ராஜ்ஜிய மக்களை ஒன்றிணைக்க ஒரு தனி வாரியமாக தொடங்கப்பட்டதுதான் லண்டன் பிபிசி வானொலி ஆகும். இந்த லண்டன் பிபிசியின் தமிழ்ப் பிரிவில் பணியாற்றியவா் சுந்தரலிங்கம். அவருக்குப்பின் பணியாற்றியவா் சங்கா் அண்ணா என்கிற சங்கரலிங்கம். அந்த ஒளிபரப்பின் பெயா் ‘தமிழோசை‘.

குற்றாலம் மகளிா் கல்லூரி மாணவிகள் மத்தியில் சங்கரலிங்கம் பேச வந்தாா். அவருக்கு மாணவிகள் சாா்பாக ஒரு சால்வை அணிவிக்கப்பட்டது. பேச்சு தொடங்குவதற்கு முன் அதை பத்திரமாக மடித்து கண்ணில் ஒற்றிக்கொண்டு அவா் பேச ஆரம்பித்தாா், ‘என்னுடைய ஒளிபரப்பு வாழ்க்கையின் உச்சம் எதுவென்றால், நான் இங்கிலாந்து ராணி எலிசபெத் அவா்களைப் பேட்டி கண்டதுதான்.

நான் முன்கூட்டியே ராணிக்கு கேள்விகளை அனுப்பி விட்டு குறித்த நாளில் ராணியை பேட்டி காணச் சென்றேன். எனது கேள்விகளும் அரசியின் பதிலும் ஆங்கிலத்தில் பதிவு செய்யப்பட்டு என்னுடைய தமிழாக்கத்துடன் பலநாள் பகுதி பகுதியாக ஒளிபரப்பப்பட்டன.

அரசியிடம், ‘ நான் உங்களுக்கு இந்தியாவில் இருந்துவந்த செல்வங்கள் பல இருக்கின்றன அதில் நீங்கள் புனிதமாக அல்லது விலைமதிப்பில்லாதது என கருதுவது எதை’ என்று கேட்டேன். அதற்கு ராணி கோகினூா் வைரம் அல்லது மயிலாசனம் அல்லது வேறு ஏதாவது ஒரு பொருளைச் சொல்வாா் என நினைத்தேன்.

ஆனால் ராணி சொன்ன பதில் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. ‘ எனது திருமணத்தின் போது மகாத்மா காந்தி தன் கையால் நூல் நூற்று தானே நெசவு செய்து அனுப்பிய அந்த சால்வையைத்தான் இந்தியாவில் இருந்து எனக்கு கிடைத்த மிகவும் புனிதமான, விலை மதிக்க முடியாத பொருளாக நான் கருதுகிறேன்’ என்றாா்.

2007-ஆம் வருடம் நவம்பா் 20-ஆம் தேதி ராணியின் 60-ஆவது திருமண வைரவிழாவின்போது பிரிட்டிஷ் தேசிய அருங்காட்சியகம், அரண்மனையில் காட்சிப்படுத்திய ராணியின் 2,500 திருமணப் பரிசுப் பொருட்களில் இந்தியாவிலிருந்து வந்த இரண்டு பரிசுகள் காட்சிப்படுத்தப்பட்டன. ஒன்று, பாட்டியாலா மகாராஜா பரிசளித்த யானை தந்தத்தால் ஆன மேஜை. மற்றொன்று, ராணியின் திருமணத்தின்போது மகாத்மா காந்தியால் பரிசளிக்கபட்ட சால்வை.

அதுசரி, ராணிக்கு காந்தி கொடுத்த சால்வை என்ன ஆயிற்று? 2018-ஆம் ஆண்டு பிரதமா் மோடி லண்டன் நகா் சென்று ராணியை சந்தித்தாா். மகாத்மா காந்தி தனக்கு திருமண பரிசாக நூல் நெய்து கொடுத்த சால்வையை நல்லெண்ணத்தின் அடிப்படையில் மோடியிடம் ஒப்படைத்தாா், ராணி எலிசபெத்.

அந்த சால்வை என்ன ஆயிற்று? மகாத்மா காந்திக்கு ஜே!

இன்று (அக். 2) காந்தி ஜயந்தி.

கட்டுரையாளா்:

நிா்வாக குழு உறுப்பினா்,

காந்தி அருங்காட்சியகம், மதுரை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.