திருடராய் பார்த்து திருந்தாவிட்டால்...


பாரதமெங்கும் அன்று முதல் இன்று வரை கொள்ளை, கொலை, கலப்படம், பாலியல் வன்கொடுமை, தீண்டாமை, ஆள் கடத்தல், ஆள் மாறாட்டம், லஞ்சம், பதவி முறைகேடு, மோசடிகளால் செல்வம் சேர்ப்பது போன்ற தீய செயல்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. இந்திய குற்றவியல் சட்டங்களால் பிடிபட்டு, தண்டனைகள் அளிக்கப்பட்டாலும், குற்றம் புரிவோர் எண்ணிக்கைக் குறையவில்லை. விஞ்ஞானம் மலிந்த நாளில் பெருகிவரும் சைபர் வகை குற்றங்களும் புதிய சட்டமாக்கி குற்றவியல் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டாலும் சிலர் குற்றம் புரியத் தயங்குவதில்லை.
முன்னைய நாளில் தமிழர்தம் சங்கநூலில்
ஈன்று புரந்தருதல் என்தலைக் கடனே
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லாற்குக் கடனே
நன்நடை நல்கல் வேந்தற்குக் கடனே
ஒளிறுவாள் அருஞ்சமம் உருக்கிக்
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே
என்று பொன்முடியார் பாடிப் போனார்.
இக்காலத்தில் மக்களாட்சி மலர்ந்த காலை "எல்லோரும் ஒருவிலை எல்லோரும் ஒருநிறை' என்ற மகாகவி பாரதியின் வாக்குக்கேற்ப நாட்டின் சட்டதிட்டங்கள் வாழ அனுமதிக்கின்றன. ஆனால் சிலர் சட்டங்களை புறம்தள்ளி அல்லன செய்து நல்லனவற்றை நாசம் செய்கின்றனர்.
கம்பன் காட்டிய கோசல நாட்டின் பெருமைகளை ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் கண்டோம் இல்லை. அகம், புறம் விளக்கும் சங்கப் பனுவல்கள், இறைச்சாரல் வீசும் இதிகாசங்கள் எடுத்தியம்பும் விழுமியங்களை அவ்வப்போது அருளாளர்கள், அறவாணர்கள், பெருநாவலர்கள், கவிஞர்கள், அறிஞர்கள் எனப் பலரும் மக்கள் முன் உரை நிகழ்த்தினாலும், தாம் புனையும் ஏடுகளில் பாடுபொருளாக சுட்டிட்டாலும் மானுடக் கழனிகளில் விளையும் பயிர் வெறும் பதராகவே காட்சிப்படுத்துகிறது.
இன்றைய நாளில் சிறைச்சாலைகளில், கைதிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. குற்றவாளிகளுக்கோ சிறைச்சாலை குயில் கூவும் மாஞ்சோலையாக மாறிவிடுகிறது. பெரும் பொருள் படைத்தவர், அரசியல் அதிகார பலம் கொண்டவர் எனில் சிறைக்கூடங்களே வசந்த மாளிகைகளாக மாறிவிடுகின்றன.
அவர் "யாரங்கே' என்றால் பாதுகாவலர்கள் பாய்ந்து வருகிறார்கள். பின் என்ன? ஆயிரமாயிரம் குற்றங்களை அவ்வப்போது அரங்கேற்றலாம். சட்டங்களில் இருக்கும் நுண்துளைகளில் புகுந்து விளையாடும் வித்தக வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தில் வாதாடி வெற்றி பெறுவர்.
இந்த நிலையில்தான், அண்மையில் ஆங்கில நாளேடு ஒன்றில் வெளியான செய்தியைப் படித்தபோது, "நெஞ்சு பொறுக்குதில்லையே, இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்' என்று பாரதியார் போல் கோபம்கொள்ள நேரிட்டது. புனித நீராகத் தோற்றமெடுத்தும் துர்நாற்றமெடுத்த நீராக வங்கக்கடலில் கலக்கும் கூவம் ஆற்றின் முகத்துவாரத்தில் நடுநிசியில் நடக்கும் அறம் பிறழ்ந்த காட்சியை இரு நிழற்படங்களோடு வெளியிட்டிருந்தது.
நாட்டின் நலனுக்காக சட்டங்களும் திட்டங்களும் இயற்ற வல்ல தலைமைச் செயலகம் உள்ள நெடுஞ்சாலையில், அனுதினமும் அமைச்சர்களும், அதிகாரிகளும் பயணிக்கும் கடற்கரை சாலையில் நேப்பியர் பாலம் ஓரமாக ஐந்து டிப்பர் லாரிகள் நிற்கின்றன. அவற்றில் ஒன்று இரவையும், பகலாக்கும் ஒளி உமிழும் உயர்கோபுர மின் விளக்குகளின் வெளிச்சத்தில் மெரினா கடற்கரை காவல் நிலையம் கடந்த கடலில் கலக்கும் கூவம் ஆற்று மணலை லாரியில் ஏற்றி விரைவாகப் பயணிக்கிறது.
இவற்றைப் படம் பிடிக்க பத்திரிகையாளர் முற்படும்போது முன்னால் நின்றிருக்கும் கார் ஒன்று இவரை நோக்கி, பின் பக்கமாக வருவதை கவனித்தவர் அங்கிருந்து தப்பி விடுகிறார். லாரிகளின் பதிவெண்கள் கண்களுக்கு புலப்படும் நிலையில் இல்லை.
பின்னர் பத்திரிகையாளர்அக்கம் பக்கம் விசாரித்ததில் கடந்த ஓராண்டிற்கும் மேலாக இச்சம்பவம் நடந்து வருகிறது என்பதை அறிந்தார். பிறகு நிருபர் பொதுப்பணி துறையினரிடம் விசாரித்ததில் "மணல் எடுக்க யாருக்கும் அனுமதி தரவில்லை. 2013-இல் 11 ஆயிரம் கியூபிக் மீட்டர் மணலை வள்ளூர் தெர்மல் நிலையத்திற்காக எடுத்தோம். கடல் மணலை கட்டடங்கள் கட்டப் பயன்படுத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள் பொதுமக்களிடம் இருந்து வரவே 2014-இல் அந்த அனுமதியை ரத்து செய்து விட்டோம்' என்று கூறினர்.
இது குறித்து இந்திய கட்டுமான சங்கத்தின் செயலாளர் எஸ். ராமபிரபு கூறுகையில் "கடல் மணலோடு சிமென்டைச் சேர்த்தால் கலவை சரியாக அமையாது. முகத்துவாரத்தில் இருந்து எடுக்கப்படும் மணலை ஒருபோதும் கட்டடப் பணிக்குப் பயன்படுத்துவது இல்லை. இப்படிப்பட்ட கலவையில் கட்டடம் கட்டினால் கட்டடம் நிலைக்காது' என்றார்.
தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சங்கத் தலைவர், "ஒரு லோடு மணல் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. கடந்த ஏழு மாதங்களாகத்தான் ஆற்று மணலை விற்க அரசு அனுமதித்து உள்ளது. தேவை அதிகமாக இருப்பதால் மக்கள் அறியாமையால் இது போன்ற கலப்பட மணலை வாங்குகிறார்கள்' என்றார்.
ஒவ்வொரு டிப்பர் லாரியும் ஆறு யூனிட் கொள்ளளவு கொண்டது (2.83 கியூபிக் மீட்டர்). ஒவ்வொரு நாள் இரவும் 15 லோடு மணலை எடுக்கிறார்கள். இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ. 3 லட்சம் வருவாய் ஈட்டுகிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் இந்த கூவம் முகத்துவாரத்தில் 1 லட்சம் கியூபிக் மீட்டர் மணல் தேங்குகிறது. இது 25 ஆயிரம் லாரிகளில் எடுக்கப் போதுமானது. 2006-இல் மண் அரிப்பை தடுக்கும் வகையில் கட்டட இடிபாட்டுக் கழிவுகளை இங்கே கொட்டி சமன் செய்யப்பட்டது. இதுவே லாரிகள் முகத்துவாரம் வரை செல்ல வாய்ப்பாக அமைந்து விட்டது.
முகத்துவாரத்தில் அதிக அளவு மணல் எடுப்பதால் கடல் நீர் உள்புகவும் நிலத்தடி நீர் உப்பாக மாறவும் வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள் நிலத்தடி நீர் ஆய்வாளர்கள்.
பொதுப்பணித்துறையின் செயற்பொறியாளர், "இதுபோன்ற நடவடிக்கைகள் இதுவரை எங்கள் கவனத்திற்கு வரவில்லை. இது குறித்து புலன் விசாரணை மேற்கொண்டு சம்பவம் உண்மை என கண்டறியப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுப்போம்' என்றார்.
கண்காணிப்பு பொறியாளர், "இத்தகைய சம்பவங்கள் உண்மையாக இருக்கும்பட்சத்தில் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுப்போம்' என்றார். உதவி பொறியாளர், "இதுபோன்ற சட்ட விரோத சம்பவங்கள் நடைபெறும் போதெல்லாம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்திருக்கிறது. இது குறித்து எல்லா மட்டங்களிலும் விரிவான விசாரணை செய்து, கடந்த ஓராண்டாக ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதையும் விசாரிக்க வேண்டும்' என்றார்.
மீனவ நல சங்கத்தின் தலைவர் தியாகராஜன் ஆங்கில நாளேட்டின் செய்தியை மேற்கோள் காட்டி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் முறையிட்டதன் பேரில், நீதிபதி கே. இராமகிருஷ்ணனும் நிபுணத்துவம் பெற்ற உறுப்பினர் கே. சத்தியகோபாலும் "மாநில வனத்துறை - சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் முதுநிலை அலுவலர், தமிழ்நாடு கடலோர மேலாண்மை அலுவலர், சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர், பொதுப்பணித்துறையின் கண்காணிப்பு பொறியாளர், காவல்துறையின் சென்னை நகர ஆணையர் இவர்களை உள்ளடக்கிய குழு இந்த சம்பவங்களை விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்கும்' என்று உத்தரவிட்டனர்.
விரிந்து பரந்ததொரு நாட்டில் ஏதோ ஓரிடத்தில் நிகழும் சட்டமீறலை ஒரு பத்திரிகையாளர் கண்ட காட்சியின் விளைவுதான் இது. ஆயிரமாயிரம் கண்கள் கொண்டு இரவு பகலாய் நாடெங்கும் பார்ப்பின் என்னவாகும்?
சட்டத்திற்கும், தர்மத்துக்கும் புறம்பாக சமூகத் தீமைகள் சங்கிலித் தொடராக நாடெங்கிலும் நடந்து வருகின்றன. எத்தனை சட்டங்கள் இருந்தாலும், கொடிய குற்றங்களுக்கு மரண தண்டனையே விதித்தாலும் பாலியல் வன்கொடுமைகள் அனுதினமும் நடந்துகொண்டுதானே இருக்கின்றன? பச்சிளம் குழந்தைகள் கூட காமுகர்களின் கோரப்பசிக்கு இரையாகின்றனரே! என்னே மனிதர்கள்!
விலங்கிலும் கீழான குணம் கொண்ட அரக்கர்கள் ஒருபுறம்; சாதி, மத, மொழி, பிரதேசம்பால் பெரு விருப்பும் வெறுப்பும் காட்டிடும் மனிதர்கள் ஒருபுறம். கைநிறைய ஊதியமும் எவரையும் வெல்ல அரசின் அதிகாரமும் பெற்ற அலுவலர்களில் சிலர் கையூட்டு பெறும் அவலத்தை என்னென்பது?
ஆண்டிகள் கூட ஆட்சிக் கட்டிலில் சில காலம் அமர்ந்தாலே போதும், இனி நாம் பலகாலம் வசதியாக வாழ வழி செய்து கொள்வோம் என்றே எண்ணுவர். இப்படிப்பட்ட அரசியல்வாதிகள் நாடெங்கிலும் கட்சி பேதமின்றி உலாவருகின்றனர்.
இத்தகைய மனிதர்களை மக்களாட்சியில் காணும்போது மக்களாட்சி தத்துவத்தின் பேரிலே அறிஞர் பெர்னாட் ஷா போல நமக்கும் கோபம் வருகிறது. ஆரவல்லி மலைத்தொடரில் 11 மலைகளை அடியோடு அழித்த அரக்கர்கள்தாம் நாடெங்கிலும் பலவண்ண சலவைக் கற்களைப் பரப்பிவிட்டு "மலைகளின் தோற்றம் குறித்து இனி நூல்களில் கற்க' என்று எழுதிவிட்டுப் போகின்றனர்.
"நீரில் சுருட்டும் நெடுந்திரை செல்வம்', "நீரில் குமிழி இளமை', "நீர்மேல் எழுத்தாகும் யாக்கை' என்று பலவாறும் நிலையாமையை உணர்த்தி சான்றோர் பாடிய பாடல்களைப் படிக்க மறந்த அரக்கர் கூட்டம் உள்ளவரை, பாவ - புண்ணிய விளைவுகளை ஏற்க மறுக்கும் வர்க்கம் இருக்கும் வரை திருட்டை ஒழிக்க முடியாது.
"இவ்வுலகில் வாழ பொருள் வேண்டுமே', "அதை எப்படியாவது ஈட்ட வேண்டுமே',"பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை' என்று பெரியவர்களே சொல்லியுள்ளார்களே' என்று வாதிட வம்பர்கள் பலர் புறப்படக்கூடும்.
ஆனால் வள்ளுவப் பெருந்தகை "சேர்க்கும் திறம் அறிந்து, தீமை ஒன்றும் இல்லாமல் சேர்க்கப்பட்டு வந்த பொருள், ஒருவனுக்கு அறத்தையும் கொடுக்கும், இன்பத்தையும் கொடுக்கும்' என்றார்.
எனவே, குற்றம் இழைப்பவர்கள் இனியும் வேண்டாம் இந்தக் கொடுந்தொழில் என்று எண்ணவும், பிறர் கெட நாம் வாழ்வோம் எனும் இழிநிலை தொடர இனி அனுமதியோம் என்ற உளப்பாங்கு உதிக்கவும் மானுட சாதி தம்மை தயார் படுத்திக்கொள்ள எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுவோம்.
கட்டுரையாளர்:
தலைவர்,
திருக்கோவலூர் பண்பாட்டுக் கழகம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...