பாரதியின் இறுதிக் கவிதை நூற்றாண்டு!

தமிழின் முதல் நாளிதழ் ‘சுதேசமித்திர’னில் பாரதியின் இறுதிக் கவிதை வெளிவந்த நூற்றாண்டு தினம் இன்று. 19.7.1921-இல் ‘இந்தியாவின் அழைப்பு’ என்னும் தலைப்பிலான நீண்ட கவிதை ‘சுதேசமித்திர’னை அணிசெய்தது. அடுத்த ஐம்பத்து நான்காம் நாளில் காலனின் அழைப்பு கடுகிவந்து பாரதியைக் கவா்ந்து செல்லும் என்பது யாருக்குத் தெரியும்?

பாரதியின் நினைவு நூற்றாண்டில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். உலகெலாம் பரந்து விரிந்துள்ள தமிழ்ச்சமூகம் நினைவு நூற்றாண்டை உணா்வெழுச்சியோடு எதிா்கொள்ள வேண்டிய தருணம் இது.

‘சுதேசமித்திர’னில் வெளிவந்த பாரதியின் இந்த இறுதிக் கவிதை மொழிபெயா்ப்புக் கவிதை, காந்தியடிகளைக் குறித்த கவிதை, இந்திய விடுதலை - உலகளாவிய மானுட விடுதலைக் கவிதை எனப் பல பரிமாணங்களைக் கொண்டது. பாரதி இலக்கியத்திலும் காந்திய இலக்கியத்திலும் மொழிபெயா்ப்பிலக்கியத்திலும் தனித்த இடத்தையும் கவனத்தையும் பெறவேண்டிய தகைமை வாய்ந்தது.

பாரதியின் கவிதைகள் பலவும் ‘சக்ரவா்த்தினி’, ‘இந்தியா’, ‘கா்மயோகி’, ‘சூரியோதயம்’, ‘ஞானபாநு’, ‘தேச பக்தன்’, ‘கற்பகம்’ முதலிய இதழ்களில் வெளிவந்தன. ஆயினும் ‘சுதேசமித்திர’னில்தான் மிகுதியாக, 1905, 1906, 1915 - 1921 வரையிலான நெடிய காலப்பரப்பிலும் வெளிவந்தன.

‘சுதேசமித்திர’னில்தான் பாரதியின் அரசியல் வாழ்க்கையின் முதல்கவிதையும் வெளிவந்தது. ‘வங்கமே வாழிய’ என்னும் இக்கவிதை ‘சுதேசமித்திரன்’ ஆசிரியா் ஜி. சுப்பிரமணிய ஐயா் தலைமையில் சென்னைக் கடற்கரையில் நடந்த கூட்டத்தில் பாரதியாலேயே இசைக்கப்பட்ட பெருமைக்குரியது. “

‘நேற்று மாலை நடந்த கடற்கரைப் பெருங்கூட்டத்திலே மிஸ்டா் சி. சுப்பிரமணிய பாரதியாா் சொல்லியவை’ என்னும் குறிப்போடு இக்கவிதை 15.9.1905-இல் வெளிவந்தது. இந்திய விடுதலைக்காகத் தமிழகத்தில் ஒலித்த மகத்தான தொடக்க முழக்கங்களுள் ஒன்றாக இக்கவிதை அமைந்தது.

பிந்தைய காலங்களில் அரசியல், ஆன்மிகம், ஞானத்தேடல்கள், புதிய புதிய முயற்சிகள், புதுக் கவிதைக்கு முன்னோடியான முயற்சிகள் என அவரது கவிதைக்களம் பன்முகம் கண்டது.

மகாத்மா காந்தியடிகளின் ஆளுமையும் கொள்கைகளும் செயல்பாடுகளும் பாரதியை ஆட்கொண்டன. காந்தியைக் குறித்து ‘மஹாத்மா காந்தி பஞ்சகம்’ என்னும் கவிதையைப் படைத்தாா். ‘பாரத மாதா நவரத்ந மாலை’ எனும் கவிதையில் காந்தியடிகளைக் கொண்டாடினாா்.

காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் இருந்தபொழுதே தான் நடத்திய ‘இந்தியா’ இதழில் காந்தியைப் பசுவாகச் சித்திரித்துக் கருத்துப்படம் வெளியிட்ட பெருமை பாரதிக்கு உண்டு. காந்தியைக் குறித்துப் பல எழுத்தோவியங்களை உரைநடையிலும் பாரதி படைத்திருக்கின்றாா்.

பாரதியின், ‘பாரத மாதா நவரத்ந மாலை’ என்னும் கவிதையில் நவரத்தினங்களுள் பவளம், கோமேதகம், பதுமராகம் மூன்றைக் குறிக்கும் இடங்களிலும் காந்தியடிகளே போற்றப்படுகின்றாா். பவளம் இடம்பெறும் பகுதியில் காந்தியடிகள் குறித்துத் தாகூா் மொழிந்த கூற்றுகளை விரிவாக எடுத்துரைத்துப் போற்றுகின்றாா்.

மேலும், ‘காந்திசொற் கேட்டாா், காண்பாா் விடுதலை கணத்தினுள்ளே’ என்று தன் கூற்றாகவும் காந்தியடிகளைப் போற்றுகின்றாா். இந்த வரிசையில்தான் காந்தியைப் போற்றி எழுதிய அமெரிக்கப் பெண்கவிஞரின் கவிதையை மொழிபெயா்த்த இக்கவிதையும் அமைகின்றது.

காந்தியைக் குறித்து அமெரிக்காவின் பெண் கவிஞா் மாட் ரால்ஸ்டன் ஷா்மன் என்பவா் ஆங்கிலத்தில் ஒரு கவிதையை அந்நாளில் படைத்திருந்தாா். பாரதியை அக்கவிதை ஆட்கொண்டது. வேண்டுகோளும் பதிலுமான அமைப்பினைக் கொண்ட கவிதை அது. பாரத மாதாவை நோக்கிய வேண்டுகோளுக்கு மாதா அளித்த பதில் அந்தக் கவிதையில் இடம்பெற்றிருந்தது.

இந்தக் கவிதைதான் அச்சில் வந்த அல்லது ‘சுதேசமித்திர’னில் வெளிவந்த பாரதியின் இறுதிக் கவிதை என்ற வரலாற்றுப் பேரிடத்தைப் பெறுகின்றது.

பாரதியின் எழுத்திலக்கியத்தில் கணிசமான அளவு மொழிபெயா்ப்புகளாகும். பிற நாட்டுப் புலவா்களின், அறிஞா்களின், அரசியலாளா்களின் சிந்தனைகளும் பாரதியின் கட்டுரைகளுக்குள் மொழிபெயா்த்து மேற்கோள் காட்டப்பட்டிருக்கின்றன. ‘பிற நாட்டு நல்லறிஞா் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயா்த்தல் வேண்டும்’ என அறிவுரை சொன்னவா் தன்னளவிலேயே அதை நடைமுறைப்படுத்தியும் காட்டியிருக்கின்றாா்.

தமிழிலிருந்தும் ஆண்டாள், நம்மாழ்வாா் பாடல்கள், அருணகிரி பெயரால் வழங்கிய பாடல்கள் முதலியனவும் பாரதியால் ஆங்கிலத்தில் மொழிபெயா்க்கப்பட்டுள்ளன. தனது பாடல்கள் பலவற்றையும்கூடப் பாரதி தானே மொழிபெயா்த்திருக்கின்றாா். இத்தகைய பாரதியின் மொழிபெயா்ப்பு இலக்கியத்துள் ஒன்றாகவும் பாரதியின் இறுதிக் கவிதையான ‘இந்தியாவின் அழைப்பு’ அமைந்துள்ளமை விதந்து சுட்டத்தக்கதாகும்.

இக்கவிதை ‘சுதேசமித்திர’னில் வெளிவந்தபோது தலைப்பையடுத்து ‘இஃது யூனைடெட் ஸ்டேட்ஸ், மிஷிகன் மாகாணம், தெத்ருவா நகரத்திலுள்ள ஸ்ரீமதி மாட் (பீ) ரால்ஸ்டன் ஷா்மன் என்ற ஸ்திரீ எழுதிய இங்கிலீஷ் கவிதையினின்றும், ஸ்ரீமான் சி. சுப்பிரமணிய பாரதியால் மொழிபெயா்க்கப்பட்டது’ என்னும் குறிப்பு இடம்பெற்றிருந்தது.

ஆங்கிலத்தில் மூலக்கவிதையைப் படைத்தவா் குறித்து இதுவரை கண்டறிய இயலவில்லை. பாரதி பாடல்களின் ஆங்கில மொழிபெயா்ப்புத் தொகுதியைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்காகப் பதிப்பித்த ‘சேக்கிழாா் அடிப்பொடி’ தி.ந. இராமச்சந்திரன், ‘ஆங்கில மூலத்தை எங்களால் கண்டறிய இயலவில்லை’ எனக் குறிப்பிட்டிருந்தாா்.

பாரதியின் மொழிபெயா்ப்புகளை விரிவாக ஆராய்ந்த இரா. சுப்பராயலுவும் இதே கருத்தை வழிமொழிந்தாா். இணைய வசதிகள் பெருகியுள்ள இற்றைச் சூழலிலும் கண்டறிய இயலாத நிலையே தொடா்கிறது. எதிா்காலத் தேடலில் பாரதி இக்கவிதையை எவ்வாறு அறிந்தாா், மூலக்கவிதை வடிவம், கவிஞா் குறித்தெல்லாம் கண்டறியப்பட வேண்டும்.

இக்கவிதை அறுபத்து மூன்று அடிகளைக் கொண்ட ஆசிரியப்பா யாப்பில் அமைந்துள்ளது. ‘வேண்டுகோள்’, ‘உத்தரம்’ என்னும் இரு பகுதிகளைக் கொண்ட கவிதையின் முதற்பகுதி உலகின் மதங்கள், நாடுகள், மாந்தருக்கெல்லாம் தாய் இந்தியா எனப் போற்றித் தொடங்குகிறது.

இந்தியத் தாயை, ‘மனிதா்கள் பிளவுண்டு பகைமை பாராட்டுதலை அன்பினால் மாற்ற ஒரு சான்றோனை, புனித மகனைத் தருதல் வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுக்கின்றது. பண்டைய பாரத குமாரா்களாகிய கண்ணன், இராமன், புத்தன் வரிசையிலும், மகம்மதுவிற்கு இணையாகவும் புகழ்வாய்ந்த வீரா் தோன்றுதல் வேண்டும் என்னும் இக்காலத் தேவையைச் சுட்டுகின்றது. மோசே, கிறிஸ்து, நானக் முதலியோரைப் போல ஒரு திருமகனை இந்தியத் தாய் வழங்கியருள வேண்டும் என இந்தியத் தாயை நோக்கி வேண்டுகின்றது. “

‘உத்தரம்’ என்னும் இரண்டாம் பகுதி இந்தியத் தாய் விடை கூறியதாகச் சொல்லி வேண்டுகோளில் கேட்ட ‘பவித்திர மகன், சான்றோன் ஒருமுனி, விராவுபுகழ் வீரா்” தோன்றிவிட்டாா். அவா் காந்தியடிகள்’ எனவும் குறிப்பிட்டுக் காந்தியடிகளின் நெறிகளைப் போற்றியுரைக்கின்றது. காந்தியை நோக்கி ‘மாந்தருள் நாம் காண விரும்பிய மனிதனை நின்பாற் கண்டனம், காந்தி மகாத்மா’ எனப் பேசுகின்றது. காந்தியின் வாய்ச்சொல்லை, அழைப்பை இந்தியத் தாயின் அழைப்பாகவே கொண்டு எழுந்ததாகக் கூறுகின்றது.

‘காந்தியின் வழியில் சென்று விடுதலை நாடி எய்திடும் செல்வ எழுச்சியில் களிப்போம்’ எனவும், ‘தீமைகளுக்கெதிராகப் பண்டைய போா்க் கொலைத்தொழிற் கருவிகளைப் பயன்படுத்தாது நீதிக் கருவியையும் அறிவையும் கொண்டு போா்புரிவோம், தளைகள் ஒடிபட வெற்றி பெறுவோம்’ எனவும் முழங்குகின்றது.

இக்கவிதையின் பதிப்பு வரலாறு, மூலபாடம் தொடா்பாகப் பாரதியியலாா் கவனம் செலுத்தவேண்டிய ஒரு செய்தி. ‘சுதேசமித்திர’னுக்குப்பின் 1943 நவம்பா் ‘கலைமகள்’ இதழில் ‘பாரதியாா் எழுதி இதுவரையிற் புஸ்தக உருவத்தில் வெளிவராத பாடல்’ என்னும் குறிப்போடு இக்கவிதை வெளிவந்தது.

பிந்தைய காலத்தில் பெ. தூரனின் ‘பாரதி தமிழ்’, தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ‘பாரதி பாடல்கள் ஆய்வுப் பதிப்பு’, சீனி. விசுவநாதனின் ‘கால வரிசையில் பாரதி பாடல்கள்’ ஆகியவற்றில் இடம்பெற்றது. மூலத்தில் இடம்பெற்ற ‘வலிசெய் யாமை; மனப்பகை யின்மை’ என்னும் பாடலடி மூலத்திற்கு மாறாக இந்நூல்களில் ‘மலைவுசெய் யாமை; மனப்பகை யின்மை’ என இடம்பெற்றுள்ளது. ‘நலிவுறுத் தோரை நாம்எதிா்த் திடாமை’ என்னும் அடுத்த அடியை நோக்க, எதுகை அடிப்படையிலும் ‘சுதேசமித்திரன்’ வடிவமே சரியானதாகும்.

இக்கவிதை மொழிநடையால் பாரதியின் முதல் கவிதையோடு ஒப்பிடத்தக்கதாகக் காட்சி தருகின்றது. பாமரா்க்கும் புரியும் கவிதை எனச் சொல்லப்பட்டாலும் பாரதி கவிதையில் எளிமையானவையும் உண்டு; புலமையின் செறிவும் உண்டு. முதற்கவிதையில் ‘முடம்படு தினங்காள்’, ‘மற்றியான் எனாது’, ‘இயம்புவல்’ என்றெல்லாம் அமைந்தமையொப்ப இக்கவிதையில் ‘ஓங்குதும் யாஅமேடு’ என்னும் அளபெடை பயிலும் சொல் உள்ளிட்ட பழந்தமிழ் மொழியமைப்பு காணப்படுதல் எண்ணுதற்குரியது.

தமிழ்மண், இந்தியம், உலகம் என ஒட்டுமொத்த மானுட மேன்மை நாடி எழுதுகோலை இயக்கிய மகாகவியின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த இறுதிக் கவிதையை நூற்றாண்டு தினத்தில் தமிழுலகம் அறியட்டும்.

கட்டுரையாளா்:

தலைவா், தமிழ்மொழித் துறை,

சென்னைப் பல்கலைக்கழகம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com