

நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பெரும்பாலான தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பாக, கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. அந்த சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்குமாறு, 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் புது தில்லியில் பிரதமர் மோடியிடம் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார். ஆனால், நீட் தேர்வுக்கு விலக்குப் பெற முடியவில்லை.
இந்த நிலையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால், நீட் தேர்வுக்கு விலக்குப் பெறுவோம் என்று தி.மு.க. தனது தேர்தல் வாக்குறுதியை வழங்கியது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான காரணம் தொடர்பாக பரிந்துரை வழங்க ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டது.
அந்தக் குழு அறிக்கை அளித்ததைத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி சட்டமசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால், குடியரசுத்தலைவருக்கோ, மத்திய அரசுக்கோ அந்த மசோதாவை அனுப்பாமல் ஆளுநரே வைத்துக் கொண்டிருந்தார்.
இது தொடர்பாக, குடியரசுத்தலைவரையும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் தி.மு.க. மற்றும் அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு சந்திக்க முயன்றது. ஆனால், அந்தச் சந்திப்புகளின் மூலம் முழுமையான பதிலைப் பெற முடியவில்லை.
நீட் தேர்வு விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பியதைத் தொடர்ந்து, அனைத்துக்கட்சிக் கூட்டம், அதைத் தொடர்ந்து மீண்டும் சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அவை மாநில உரிமைப் பிரச்னையாக மாறி, மீண்டும் ஆளுநருக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.
நீட் தேர்வு விலக்கு பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் கடந்த அ.தி.மு.க. அரசு மேற்கொண்டது. சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார்கள். மத்திய அரசை அணுகினார்கள். பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களைச் சந்தித்தார்கள். தமிழக அரசின் கோரிக்கையைப் பரிசீலிக்கலாம் என்கிற முடிவுக்கு மத்திய அரசு வந்தது.
எல்லாம் கூடிவரும் நேரத்தில் நீதிமன்றம் சென்று அந்த நம்பிக்கையைப் பொய்த்துப் போக வைத்து விட்டார் மூத்த வழக்குரைஞர் நளினி சிதம்பரம். ஒரு மாநில அரசுக்கு எந்த அளவிற்கு உச்சபட்ச அதிகாரம் இருக்கிறதோ, அந்த அதிகாரம் முழுவதையும் அ.தி.மு.க. பயன்படுத்தி விட்டது.
ஆனால் பிரச்னை முடிந்தபாடில்லை. அதைப்போன்றுதான் தி.மு.க. அரசு செய்து வருகிறது. சட்டப்பேரவைத் தேர்தலின் போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால், நீட் தேர்வை ரத்து செய்து விடுவோம் என்று தி.மு.க. வாக்குறுதி அளித்தது. தற்போது மாநில அரசால் என்ன முடியுமோ, அதையே தி.மு.க. அரசு மீண்டும் செய்து வருகிறது. ஆனால், விலக்கு பெறுவதற்கான சாத்தியம் உடனடியாக இல்லை என்கிற எதார்த்தத்தையும், உண்மையையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
சட்டப்பேரவையில் இந்தச் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, இம்மசோதா அடங்கிய ஷரத்து மீண்டும் ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அம் மசோதாவை, ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்புவார். அதை மத்திய அரசுக்கு குடியரசுத்தலைவர் அனுப்புவார். அதன் பின்னர் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும். அதன் பின்னர் ஒரு மசோதா கொண்டு வந்து ஒருமனதாக அதை ஏற்றுக் கொண்டு, தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வு விலக்கு அளிப்பதற்கான ஒரு கொள்கை முடிவு எடுக்கப்படும். அதன்பின்னர் குடியரசுத் தலைவர் அம்மசோதாவுக்கு ஒப்புதலை வழங்குவார். இதுதான் நடைமுறை.
இந்த சூழ்நிலையில், இதற்கு சாத்தியம் உண்டா? இப்போதைய மத்திய அரசு தி.மு.க. சொல்வதைக் கேட்டு இதுபோன்ற நடவடிக்கை எடுக்குமா என்பதில் ஆயிரம் கேள்விகள் எழுந்திருக்கின்றன. ஜல்லிக்கட்டுப் பிரச்னையில் கொண்டு வந்ததைப் போல நாங்கள் இந்த நீட் தேர்வு விலக்கைக் கொண்டு வருவோம் என்று தி.மு.க. சொன்னாலும், ஜல்லிக்கட்டு வேண்டுமென்று தன்னெழுச்சியாக 5 லட்சம் பேர் போராடிய நிலையில், அதன் ஒட்டுமொத்த கவனத்தை அன்றைய அ.தி.மு.க. அரசு சரியான முறையிலே கையாண்டு மத்திய அரசிடம் கொடுத்த அழுத்தத்தாலும், இந்த தன்னெழுச்சிப் போராட்டத்தின் தாக்கத்தாலும், தமிழர்களுடைய உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்கிற தீவிரத்தை உணர்ந்தது மத்திய அரசு.
ஆகவே, அந்த நடைமுறையை ஒரு கொள்கை முடிவெடுத்து பிரதமர், மத்திய அமைச்சரவை, நாடாளுமன்றம், குடியரசுத்தலைவர் என்கிற ஒப்புதலைப் பெற்று தமிழகத்திற்கான ஒரு வீர விளையாட்டை பாரம்பரியப் பெருமையை மீட்டெடுத்தார்கள்.
ஆனால், நீட் தேர்வு விலக்கு வேண்டும் என்று நடைபெறும் தன்னெழுச்சியான போராட்டங்கள், வீரியம் குறைந்ததாக இருக்கின்றன. கிராமப்புற மாணவர்கள், அடித்தட்டில் இருக்கிறவர்கள், விளிம்புநிலை வாழ்க்கையை வாழ்கிறவர்கள், பொருளாதாரத்தில் நசுக்கப்பட்டவர்கள் இவர்களால் பிளஸ் 2 தேர்வில் எடுத்த மதிப்பெண்ணுக்குப் பின்னர், நீட் தேர்வுக்கும் படித்து மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில், அவர்களுடைய சூழ்நிலை இல்லை.
சி.பி.எஸ்.இ., மெட்ரிகுலேஷன் இதுபோன்ற பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்களுடைய தரத்தையும், கிராமப்புறமாணவர்கள் படிக்கின்ற தரத்தையும் ஒரே சம அளவில் ஒப்பிட முடியாது. அப்படியான சூழ்நிலையில், சமவாய்ப்பு என்பது சமூகநீதிக்கு எதிரான ஒன்றாகும்.
ஆகவே, இந்த நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டால், ஏற்கெனவே படித்த பிளஸ் 2 மதிப்பெண்களை வைத்துக் கொண்டு, மருத்துவக்கல்லூரியில் சேருவதற்கான வாய்ப்பை 69சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் கிராமப்புற மாணவர்கள் பெறுவார்கள் என்பதில் கிஞ்சிற்றும் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.
அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த 7.5சதவீத இட ஒதுக்கீடு அரசுப் பள்ளியில் படிக்கின்ற மாணவர்களுக்கு பேருதவியாகவும், மருத்துவக்கனவை நிறைவேற்றுவதாகவும் அமைந்துள்ளது என்பதை மறுக்க முடியாது.
இதுபோன்று நீட் தேர்வுக்கு சட்டப்படியான விலக்குப் பெறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்க முடியுமா? அப்படி அதை உருவாக்கினால், எத்தனை காலங்கள் ஆகும்? அதுவரை மாணவர்கள் என்ன செய்வது? நீட் தேர்வுக்குப் படிப்பதா? அதற்கான பயிற்சிக்கூடங்கள் உருவாக்கப்படுகின்றனவா என்கிற கேள்விகள் எழாமல் இல்லை.
ஒருபக்கம் நீட் தேர்வுக்கு விலக்கு கோருவது என்பதும், மறுபக்கம் நீட் தேர்வுக்கான பயிற்சியை மாணவர்களுக்கு அளிப்பது என்பதும் இருவேறு சித்தாத்தங்களாக இருந்தாலும், இதைத் தவிர அரசு வேறு வழியை செய்ய முடியாத நிலையில் உள்ளது.
இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல் ஆகிய பாடங்களில் ஒவ்வொன்றில் இருந்தும் 45 வினாக்கள் கேட்கப்படும். ஒட்டுமொத்தமாக 180 வினாக்கள் இடம்பெறும். ஒரு வினாவிற்கான சரியான விடைக்கு 4 மதிப்பெண்கள் என்ற அடிப்படையில், மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது.
ஒரு கேள்விக்கு சரியான பதில் அளித்தால், 4 மதிப்பெண்கள் வழங்கப்படும். தவறான பதில் அளிக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு ஒரு மதிப்பெண் குறைக்கப்படும். ஒரு மாணவர் 3 முறை நீட் தேர்வு எழுத முடியும் என்கிற கொள்கையின் அடிப்படையில்தான் இந்த நீட் தேர்வு நடைபெறுகிறது.
கிராமப்புற மாணவர்களின் மருத்துவக்கனவை இந்த நீட் தேர்வு சிதைக்கிறது. வசதி படைத்தவர்கள் மட்டுமே நீட் தேர்வுக்கு சிறந்த பயிற்சியைப் பெற்று மருத்துவராக முடியும் என்கிற நிலை ஒரு பக்கம் ஏற்படுகிறது. நகர்ப்புற மாணவர்களுக்கு இணையாக கிராமப்புற மாணவர்களுக்கு சமமான பயிற்சி கிடைப்பதில்லை.
ஆகவே, கிராமப்புற மாணவர்களுக்கு எதிராகவும், நகர்ப்புற மாணவர்கள், வசதி படைத்தவர்களுக்கு ஆதரவாகவும் அமைந்த காரணத்தினால், இந்த நீட்தேர்வு என்பது சமூகநீதிக்கு எதிராக உள்ளது என்கிற கருத்து தமிழகத்தில் ஆணிவேரைப் போல அசைக்க முடியாமல் அனைவர் மனதிலும் வேரூன்றிப் போய்விட்டது.
குறிப்பாக, இந்த நீட் தேர்வு மூலமாக கல்வி ஒரு வணிகமயமாக்கலை நோக்கி நகர்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இதையே சென்னை உயர்நீதிமன்றம் கூட, ஏழை மாணவர்களுக்கு ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தக் கூடியது என்ற கருத்தைத் தெரிவித்திருந்தது. மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ், மருத்துவப்படிப்பிற்குத் தயாரான மாணவர்கள் நீட் பாடத்திட்டத்திற்கு தனியாகத் தயாராவதற்கான அவசியம் என்ன என்று இந்தியாவுக்கே கேள்வியை எழுப்புகிறது தமிழகம்.
சமூகநீதி கண்ணோட்டத்தில் இதைக் கூர்மையாக அவதானிக்கிற போது ஏழை மாணவர்களின் பொருளாதாரச் சுரண்டலை இந்த நீட் தேர்வு முறை தடுக்கிறது என்றும், சமூகநீதியை மேம்படுத்தும் வகையில் நீட் தேர்வு இருப்பதாகவும் ஆளுநர் தரப்பான செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, இந்த நிலையில், ஆளுநர் மசோதாவை திருப்பி அனுப்பி அதற்காக திரும்ப சட்டப்பேரவையைக் கூட்டுவது என்பது இதுவரை நடந்ததே இல்லை. ஐந்துமுறை வெவ்வேறு மசோதாக்கள், வேறு வேறு ஆளுநர்களால் திருப்பி அனுப்பப்பட்டாலும், ஒரு முறை மீண்டும் தாக்கல் செய்யப்பட்டு, மீண்டும் ஆளுநருக்கு அப்படியே அனுப்பி வைக்கப்படவில்லை.
சட்டப்பேரவையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி, மீண்டும் ஆளுநருக்கு அனுப்பப்படுவது தமிழக அரசியல் வரலாற்றில் முதல்முறை என்பதை மறுப்பதற்கில்லை.
ஆனால், நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பதற்கு குடியரசுத்தலைவர், பிரதமர், அமைச்சரவை, நாடாளுமன்றம், அதன்பின்னர் தீர்மானம், அதன்பின்னர் கொள்கை முடிவு, மீண்டும் குடியரசுத்தலைவரின் ஒப்புதல் என்கிற நீண்ட நெடிய பாதையை கடப்பதற்கான தொலைவும், காலமும் எதுவரை என்பதை கணித்துச் சொல்ல முடியவில்லை. அதுவரை மருத்துவர் கனவுகளோடு இருக்கும் மாணவர்களுக்கு ஆட்சியாளர்கள் என்ன சொல்லப் போகிறார்கள்?
கட்டுரையாளர்:
முன்னாள் அமைச்சர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.