ஆங்கிலேயருக்கு எதிரான முதல் போர் பிரகடனம்

ஆங்கிலேயருக்கு எதிரான முதல் போர் பிரகடனம்
Updated on
2 min read

 வர்த்தகம் செய்ய வந்த பிரிட்டிஷார் படிப்படியாக நமது நாட்டை அடிமைப்படுத்தினர். இயற்கை வளங்களை எல்லாம் சுரண்டி தங்களது நாட்டுக்கு கொண்டு சென்றனர். சட்ட திட்டங்களையும் சமூக ஒருங்கிணைப்பையும் சிதைத்தனர்.
 ஒன்றுபட்டு போராட்டம் நடத்த பாளையக்காரர்களை அழைத்தார் சின்னமருது. திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டையின் பிரதான நுழைவாயிலிலும், ஸ்ரீரங்கம் கோயில் கோபுரத்திலும் ஒட்டப்பட்ட மருதுபாண்டியரின் பிரகடனங்கள், போராட்டத்தின் நோக்கங்களையும் குறிக்கோள்களையும் தெளிவாகக் கூறின.
 ஆங்கிலேயர்களுக்கு எதிராக மருது சகோதரர்களால் தென்னகத்தில் வெளியிடப்பட்ட ஜம்புத் தீவு பிரகடனம், ஆங்கிலேயர்களை ஆட்டம் காண வைத்தது. தென் தமிழகத்தின் சிவகங்கை சீமையை ஆண்ட வீரமங்கை வேலு நாச்சியாரின் தளபதிகளான மருது சகோதரர்கள் 1801-ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களுக்கு எதிராக போர் பிரகடனம் செய்தனர். இதன் மூலம் விடுதலைப் போராட்டத்தில் நாட்டுக்கே முன்னுதாரணமாகத் திகழ்ந்தனர் மருது சகோதரர்கள்.
 அனைத்து தரப்பு மக்களும் ஒன்றுபட்டு ஆங்கிலேயர்களிடம் இருந்து தாய்நாட்டை விடுவிக்க வேண்டும் என்று விரும்பினர். அதனை வலியுறுத்தி பல வீர தீர கருத்துகள் அடங்கிய அறிக்கையை திருச்சி மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம் கோயில் சுவர் போன்ற இடங்களில் ஒட்டினார் சின்னமருது. இந்த அறிக்கையே ஜம்புத் தீவு பிரகடனம் என்று அழைக்கப்படுகிறது.
 ஜம்பு தீவு அல்லது நாவலந் தீவு என இந்தியப் பெரும் கண்டம் அழைக்கப்பட்டது. அகில இந்திய அளவில் போராட்டம் அமைய வேண்டும் என்பதற்காகவே ஜம்புத் தீவு பிரகடனம் என்று இதற்குப் பெயரிட்டார். முன்னர் நமது பாரத கண்டம் ஒரு தீவாக இருந்தது. அதன் பெயர்தான் ஜம்புத் தீவு. ஜம்பு என்பது நாவல் பழத்தைக் குறிக்கிறது.
 ஜம்புத் தீவு பிரகடனம் அறிக்கை 1801-ஆம் ஆண்டு ஜூன் 16-ஆம் நாள் வெளியிடப்பட்டது. இன்றைக்கு 220 ஆண்டுகளுக்கு முன்னர், ஆங்கிலேயர்களுக்கு எதிரான இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு அடித்தளம் இட்ட பிரகடனம் இதுதான்:
 "ஜம்புத் தீவில் வாழும் அனைவருக்கும் தெரியப்படுத்தும் அறிவிப்பு என்னவென்றால் ஐரோப்பியர்கள் தங்களுடைய வாக்குறுதிகளை மீறி நமது நாட்டின் பல பகுதிகளைத் தங்களுடையதாக்கிக் கொண்டுவிட்டனர்.
 நமது நாட்டு மக்கள் அனைவரையும் நாய்களாக கருதி ஆட்சியதிகாரம் செய்து வருகிறார்கள். உங்களிடையே ஒற்றுமையும் நட்பும் இல்லாத காரணத்தினால் ஐரோப்பியரின் சூழ்ச்சியைப் புரிந்துகொள்ள இயலாமல் உங்களுக்குள் ஒருவரை ஒருவர் பழிதூற்றிக் கொண்டீர்கள். அதுமட்டுமின்றி நாட்டையும் அந்நியரிடம் பறிகொடுத்து விட்டீர்கள்.
 ஆங்கிலேயர்களால் இப்போது ஆளப்படும் இந்தப் பகுதிகளில் எல்லாம் மக்கள் பெரிதும் ஏழ்மையில் வாழுகிறார்கள். சோற்றுக்குப் பதில் நீராகாரம்தான் உணவு என்று ஆகிவிட்டது. இத்தகைய வேதனைகளும் துன்பங்களும் எக்காரணங்களினால் ஏற்பட்டன என்பதைப் பகுத்து ஆராயவும் புரிந்துகொள்ளவும் இயலாத நிலையில் மக்கள் இருக்கின்றனர்.
 ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தாலும், மனிதன் கடைசியில் செத்துதான் ஆக வேண்டும். ஆதலால் பாளையங்களில் உள்ள ஒவ்வொருவரும் போர்க் கோலம் பூண்டு எழுச்சி பெற வேண்டும்.
 ஆங்கிலேயர்களின் பெயர்கள் கூட நாட்டில் எஞ்சியிருக்காமல் செய்ய வேண்டும். அப்போதுதான் ஏழைகளும், இல்லாக் கொடுமையால் அல்லல்படுவோரும் வாழமுடியும்.
 ஐரோப்பியர்களாகிய இந்த அந்நியர்களை நாட்டைவிட்டே துரத்த வேண்டும். இந்த அந்நியனுக்கு அடிபணிந்து எவனொருவன் தொண்டூழியம் செய்கிறானோ அவனுக்கு இறந்தபின் மோட்சம் கிடையாது என்பதை நான் உறுதியாகக் கூறுவேன். எனவே, அனைவரும் ஒன்று சேருங்கள். இதைப் படிப்பவர்களோ கேட்டவர்களோ இதில் கூறியிருப்பதைப் பரப்புங்கள். இப்படிக்கு, மருதுபாண்டியன்.
 பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து சுதந்திரப் போருக்கு முன்பாகவே, மருது சகோதரர்கள் அறைகூவல் விடுத்தார்கள் என்பதை அறிய வேண்டும். மருது சகோதரர்களின் இந்த போர் பிரகடனம் ஆங்கிலேயர்களுக்கான முதல் எதிர்ப்பாக இருந்தது. அதனால் மருது சகோதரர்களை ஒழிக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் முடிவு எடுத்தனர். தங்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்த பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரைக்கு அடைக்கலம் கொடுத்ததாகக் கூறி மருது சகோதரர்களின் மீது போர் தொடுத்தனர்.
 சுமார் 150 நாள்களுக்கும் மேலாக போர் நீடித்தது. மருதுபாண்டியரைப் பிடிக்க முடியவில்லை. நயவஞ்சகமாக அறிவிப்பு வெளியிட்டனர். குறிப்பிட்ட நாளில் சூரிய அஸ்தமனத்துக்குள் மருது சகோதரர்கள் சரணடையாவிட்டால், அவர்களால் கட்டப்பட்ட காளையார்கோவில் ராஜகோபுரம் இடித்துத் தள்ளப்படும் என்று மிரட்டினார்கள் ஆங்கிலேயர்கள். அதற்காக பீரங்கிகளை காளையார்கோவில் ராஜகோபுரம் முன்பு நிறுத்தினார்கள்.
 காளையார்கோவில் கோபுரத்தைக் காப்பதற்காக உயிரையும் பொருட்படுத்தாது ராஜகோபுரம் முன்பு மருது சகோதரர்கள் சூரிய அஸ்தமனம் முன்பு குதிரைகளில் வந்து இறங்கினர். பிரிட்டிஷார், அவர்களை கைது செய்தனர். அப்போது தங்களைத் தூக்கிலிட்ட பின்பு தலையைக் கோயில் முன்பு விதைக்க வேண்டும் என்றனர் மருது சகோதரர்கள்.
 பின்னர், 1801, அக்டோபர் 24 அன்று மருது சகோதரர்கள், அவர்களின் வாரிசுகள், குடும்பத்தினர் என சுமார் 500 பேரை திருப்பத்தூர் கோட்டை முன்பு ஆங்கிலேயர்கள் தூக்கிலிட்டுக் கொன்றனர். துரைசாமி என்ற ஒரே வாரிசையும், வேறு சிலரையும் மலேசியாவின் பினாங்குத் தீவுக்கு நாடு கடத்தினர்.
 இந்த இழிசெயல் ஆங்கிலேயர்கள் செய்த பயங்கரமான கொடுமை, அக்கிரமம் ஆகும். தென் தமிழகத்தில் கிளர்ச்சியை ஏற்படுத்திய மருது சகோதரர்கள் சாதாரணமானவர்கள் அல்லர். ஆங்கிலேயர்களுக்கு எதிராக நாட்டிலேயே முதன்முதலில் போர்ப் பிரகடனம் வெளியிட்டவர்கள்.
 
 கட்டுரையாளர்:
 முன்னாள் ஆளுநர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com