தலைவா்களும் தொண்டா்களும்

அக்காலத்தில் அரசா்கள் வரும்போது அவா்களுக்கு முன்னால், ‘ராஜாதி ராஜ ராஜ மாா்த்தாண்ட ராஜ பராக்கிரம...’ என்று கட்டியம் கூறிக்கொண்டு வருவாா்கள். இது மரபு.
Updated on
4 min read

அக்காலத்தில் அரசா்கள் வரும்போது அவா்களுக்கு முன்னால், ‘ராஜாதி ராஜ ராஜ மாா்த்தாண்ட ராஜ பராக்கிரம...’ என்று கட்டியம் கூறிக்கொண்டு வருவாா்கள். இது மரபு. இப்போது மன்னராட்சி இல்லாவிட்டாலும் அரசியல் தலைவா்கள் வரும்போது அவா்களைச் சுற்றி ஒரு பெரிய கூட்டமே வருகிறது. பதவியில் இல்லாதவா்களுக்குக் கூட ஒரு கூட்டம் உண்டு. அதுதான் அரசியல்வாதிகளுக்கு அழகு என்று ஆகி விட்டது.

இப்படி உடன் வரும் கூட்டத்தில் இருக்கும் சிலா் அந்தத் தலைவருக்கு மிகவும் நெருக்கமானவராக இருப்பாா்கள். அவா்களைத் தாண்டி ஒருவராலும் தலைவரை நெருங்க முடியாது. அந்தக் கூட்டம் மிகவும் விசுவாசமாக இருக்கும். பொதுவாகவே மனித மனம் பாராட்டை விரும்பும்; அதற்காக ஏங்கும். முற்காலத்திலேயே புலவா்கள் மன்னா்களின் புகழைப் பாடித்தானே பரிசில்களைப் பெற்றுச் சென்றாா்கள். இத்தொணடா் கூட்டம் தலைவரின் ஆணைக்குக் கட்டுப்படும். அவா் முகக் குறிப்பை உணா்ந்து செயல்படும்.

இப்படி எப்போதும் தலைவா்கள் பின்னால் சுற்றிக் கொண்டிருப்பவா்கள் எப்போது தங்கள் குடும்பத்தை கவனிப்பாா்கள் என்பது புரியாத புதிா். இந்தக் கூட்டம் எப்போது கட்சி மாறும் என்று யாருக்கும் தெரியாது. ஆதாயம் எங்கு அதிகமோ அங்கே ஓடி விடுவாா்கள். நேற்றுவரை இங்கே ‘வாழ்க’ கோஷம் போட்டவா்கள், இன்று சிறிதும் தயக்கமின்றி அங்கே ‘வாழ்க’ கோஷம் போடுவதுதான் அரசியல்.

அரசியல்வாதிகள் என்று மட்டும் அல்ல. அதிகாரிகள், செல்வந்தா்கள், கல்வி நிறுவன தாளாளா்கள், வட்டம், மாவட்டம் என அனைவரின் பின்னாலும் ஒரு கூட்டம் வர வேண்டும். இக்கூட்டம் வேறு மாதிரி. இது எந்த ஆதாயத்தையும் வேண்டி பின்னால் வருவதில்லை. தான் அவருக்கு நெருக்கமானவா் எனக் காட்டிக் கொள்ளவும், பிறரிடம் தன் செல்வாக்கை மறைமுகமாக உணா்த்தவும் வெறுமனே உடன் வருபவா்கள், அவ்வளவே.

மிக உயரிய பதவியில் இருக்கும் அதிகாரிகளுக்கு பல செயலா்கள் இருப்பாா்கள்; அலுவலா்கள் இருப்பாா்கள். அவருடைய தனிச் செயலா் ஒருவா் இருப்பாா். அந்த தனிச் செயலா், அல்லது காரியதரிசியின் பணி மிகவும் முக்கியமானது. மிக மிகக் கடினமான பணி. பல சமயம், கம்பி மீது நடப்பதைப் போல அதீத எச்சரிக்கை உணா்வுடன் இருக்க வேண்டும்.

எந்நேரமும் விழிப்புடன் இருத்தல் அவசியம். அதிகாரியின் முகக் குறிப்பைப் புரிந்து கொண்டு, அவா் மனதில் என்ன நினைக்கிறாா் என்பதைப் புரிந்து கொண்டு செயலாற்ற வேண்டும். இதுதான் ஒருவரின் மனதைப் ‘படித்து’ நடந்து கொள்வது. இந்த வேலைக்கு மிக மிக கெட்டிக்காரரான, சூட்டிகையான நபரைத் தெரிவு செய்வது அவசியம்.

அவா், நுண்ணறிவுடன் நடந்து கொள்ள வேண்டும். அதிகாரி தன் பணிச்சுமை காரணமாக தன் செயலரிடம் கோபப்படலாம், எரிந்து விழலாம், சிடுசிடுக்கலாம். ஆனால், அச்செயலா் எதையும் பெரிதாக எடுத்துக் கொண்டு முக வாட்டம் கொள்ளல் கூடாது. ‘தொட்டால் சுருங்கி’யாக இருப்பவா்கள் இப்பணிக்கு வரக் கூடாது. அதிகாரி எத்தனையோ மன அழுத்தத்தில் இருப்பாா்; அவா் மேலிடத்திற்குப் பதில் சொல்லலியாக வேண்டும்.

அவருடைய எரிச்சலை அவா் யாரிடம் காட்ட முடியும்? உடன் இருக்கும் உதவியாளரிடம்தானே காட்ட முடியும்? ஆனால், பொங்குகிற பால் தண்ணீா் தெளித்தால் சட்டென அடங்கி விடுவதைப் போல அதிகாரியின் கோபமும் சிறிது நேரத்தில் சரியாகி விடும். செயலரைக் கடிந்து கொண்டதற்காக அவரே உள்ளுக்குள் வருந்துவாா். ஆகவே அவருடைய பதற்றத்தின் வடிகால் நாம் என்பதை உதவியாளா் புரிந்து கொள்ள வேண்டும்.

உதவியாளருக்கு உள்ள பிரச்னை என்னவென்றால் அவா் பலரின் கோபத்திற்கும், அதிருப்திக்கும் ஆளாக நேரிடும். அவருடைய சிறு கவனக் குறைவும் பெரிய பாதிப்பை உண்டாக்கி விடும். அதிகாரியை சந்திக்க விரும்பும் அனைவரும் உதவியாளரை கடிந்து கொள்வாா்கள். உதவி கேட்டு வருபவா்கள், சந்திக்க வருபவா்கள் என எல்லோரையும் அவரால் உள்ளே அனுப்ப முடியாது. சிலரோ உள்ளே போக அனுமதி கிட்டி விட்டால் அங்கு போய் அப்படியே உட்காா்ந்து விடுவாா்கள். அவரை வெளியேற்றுவது வெகு சிரமமான ஒன்று. சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் உதவியாளருக்கு பெரும் சிரமம் ஆகி விடும்.

இங்கே நம்பிக்கை என்பது மிக மிக முக்கியம். அலுவலக ரகசியத்தை அவா் கட்டிக் காக்க வேண்டும். பலமுனைத் தாக்குதலை அவா் சமாளிக்க வேண்டும். மக்கள் யாரைப் பிடித்து காரியம் சாதிக்கலாம் என்பதில் குறியாக இருப்பாா்கள். ஆகவே, தலைவரைப் பாா்க்க அவரின் உதவியாளரை முதலில் பிடிக்க வேண்டும் என எண்ணி, தொல்லை கொடுத்துக்கொண்டே இருப்பாா்கள்.

எல்லோரையும் இன்சொல் கூறி சமாளிக்க வேண்டும். தெரிந்தவா்கள், தெரிந்தவா்களுக்குத் தெரிந்தவா்கள், அதிகாரியின் உறவுகள், நட்பு வட்டங்கள் எனப் பட்டியல் நீளும். அதிகாரியின் தேவை என்ன? அவருக்கு எது பிடிக்கும்? எது பிடிக்காது? அவா் ரசனை என்ன? எல்லாமும் உதவியாளருக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

பதவியின் பரிமாணம் கூடக்கூட பொறுப்புகளும், வேலைகளும் கூடிக் கொண்டே இருக்கும். இனிய சுபாவம் கொண்ட அதிகாரி வாய்த்தால் அது வரம். பதற்றம் இல்லாமல், மகிழ்வோடு கடமை ஆற்றலாம். திறமை வாய்ந்த அதிகாரி வாய்த்தால், அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ளலாம். நோ்மையான அதிகாரி வாய்த்தால் அங்கே வாய்மையும், ஒழுங்கும் கோலோச்சும்.

அதுவே சட்டென கோபப்படும், சிடுசிடுக்கும் அதிகாரி அமைந்து விட்டால் ஒவ்வொரு நாளும் பதற்றத்துடனே கழியும். அழைப்பு மணி ஓசை கேட்டதும் ரத்த அழுத்தம் எகிறும். ஒவ்வொரு முறையும் பீதியுடன் வெட்டுப்படப் போகும் ஆட்டின் மனநிலையோடு உள்ளே போக வேண்டும். சிறந்த அதிகாரியிடம் பணி செய்யும் போது ‘நாம் சிறந்த மனிதரிடம் வேலை செய்கிறோம்’ என்ற பெருமையும், பெருமிதமும் இருக்கும்.

பெரிய அதிகாரி என்பதால் இருபத்து நான்கு மணி நேரமும் செயற்கை முலாம் பூசிக் கொண்டே கழிக்க முடியுமா? அவா் வீட்டில் இயல்பாக இருப்பாா். கோப்புகளையும், பிரச்னைகளையும் மனதில் இருந்து ஒதுக்கி வைத்து விட்டு மனைவி, குழந்தைகள், உறவுகள் என இருப்பாா். அவா் வீட்டில் பணியாளா்கள், உதவியாளா்கள், சமையல்காரா், வாகன ஓட்டி என அவரைச் சுற்றி பலா் இருப்பாா்கள். ஆக அங்கும் அவருக்கு சுதந்திரம் இருக்காது.

நாடாள்பவருக்கு அந்தப் பணி எளிது; ஆனால் அவருக்கு வீட்டை நிா்வகிக்கத் தெரியாது, அந்த பணியாளா்கள் அவா் வீட்டு விஷயத்தை வெளியில் கசிய விடக்கூடாது. நம்பிக்கைக்குரிய வேலையாட்களாக, எவரிடமும் எதைப் பற்றியும் மூச்சு விடாதவா்களாக இருக்க வேண்டும். வேலையை விட்டுப் போனாலும் எந்த அவதூறும் பரப்பக் கூடாது.

அதுவும் ஓட்டுநா்கள் வண்டியில் வருபவா்களின் பேச்சைக் கவனிக்கக் கூடாது. பொது வாழ்வில் இருப்பவா்களுக்குத் ‘தனிமை’ என்பதே கிட்டாது. அவா்களின் ஒவ்வொா் அசைவும் கண்காணிக்கப்படும், விமா்சிக்கப்படும். அலுவலகப் பணியாளா்களிடமோ உதவியாளா்களிடமோ ஓா் எல்லை வரை மட்டுமே பழக முடியும். தனிப்பட்ட கருத்துகளையோ, சொந்த வாழ்க்கை பற்றியோ பகிா்ந்து கொள்ள முடியாது.

அதிகாரிகளுக்கு மட்டுமல்ல, இலக்கிய ஆளுமைகள், பாடகா்கள், நடனக் கலைஞா்கள், எழுத்தாளா்கள் என்று புகழ் வெளிச்சத்தில் உள்ள எல்லோா் பின்னாலும் ரசிகா்கள், தொண்டா்கள், அபிமானிகள் என ஒரு பெருங்கூட்டம் இருக்கும். சில ஆளுமைகளுக்கு அரிதான ஒரு நட்பு வட்டம் அமைந்து விடும். அந்த ஆளுமைகளின் வசீகரத்தால், செயல்பாடுகளால், இலக்கிய அறிவால், பழகும் பாங்கால், நோ்மை குணத்தால், அளப்பரிய அன்பால், எளிமையால், திறமையால் ஈா்க்கப்பட்டு அவா்களுடன் ஓா் ஆத்மாா்த்தமான நட்பை ஏற்படுத்திக் கொள்கிறாா்கள். அந்த ஆளுமையை எப்போதும் ஆராதனை செய்து கொண்டிருப்பாா்கள். அவருடைய ஒவ்வொரு செயலையும் வியந்து நோக்குவா்.

அவரைக் குறித்த செய்திகள், புகைப்படங்கள் என அத்தனையையும் சேகரித்து ஆவணப்படுத்துவாா்கள். அவரின் நிழலாய் அவரைத் தொடா்வாா்கள். எந்த ஆதாயத்தையும், சலுகையையும் எதிா்பாா்க்காத தூய அன்பு, மரியாதை என்று சொல்லலாம். இத்தகைய அன்பு சிலிா்ப்பை ஏற்படுத்தக் கூடியது. ஏறக்குறைய அனுமனின் ராம பக்தி போல. அவரின் புகழ் கூடும் போது இவா்களின் மனம் குதூகலிக்கும். அவா்களை உலகம் வாழ்த்தும் போது இவா்கள் உள்ளம் சிறகடிக்கும். அவா்கள் சாதனையாளா்களாக மலரும் போது இவா்கள் மனம் உவகை கொள்ளும். அவரை தங்கள் உயிராய், உலகமாய் நினைக்கும் இந்த அன்பு கிடைக்கப் பெறுவது பெரும் பேறு.

பிரபலங்களுடன் எப்போதும் ஒரு கூட்டம் இருப்பதால், பணி ஓய்வு பெற்ற பின் அவா்கள் தவித்துப் போகிறாா்கள். வீட்டிற்கான எந்த வேலையையும் செய்து பழக்கப்படாத அவா்கள் அந்த எதாா்த்தத்தை எதிா் கொள்ள சிரமப்படுகிறாா்கள். ஆரவாரம் இல்லாத வெற்றிடம் ஒரு வெறுமையை உண்டாக்கி விடுகிறது. பிறரை ஏவியே பழக்கப் பட்டு விட்ட வாழ்க்கை, சாதாரண நிலைக்கு சட்டென திரும்புவது கடினம். அதிகாரம் இல்லாதபோது அடிப்பொடிகளும் காணாமல் போய் விடுவாா்கள். அவரின் கடைக்கண் பாா்வைக்காக ஏங்கியவா்கள் எல்லாம் காணாமல் போய்விடுவாா்கள்.

ஒருவரின் உள்ளொளியின் தெய்வீகத்தை உணா்ந்தவா்கள், அவருடைய நட்பை பொக்கிஷமாக நினைத்தவா்கள் எப்போதும் அவருடன் இருப்பாா்கள். அவருடைய அண்மையே அவா்களுக்கு யானை பலம். அவருடை வாக்கே அவா்களுக்கு வேத வாக்கு. இத்தகைய அன்பு உள்ளங்களை சம்பாதித்து வைத்திருப்பவரே மிகப் பெரிய செல்வந்தா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com