கண்களைக் காப்போம்

கண்களைக் காப்போம்

 நம்மில் எத்தனை பேர் ஊசியில் நூல் கோக்கச் சொன்னால் முதல் முயற்சியிலேயே கோத்து விடுவோம்? கண் பார்வை துல்லியமாக இருக்கும் வெகு சிலராலேயே அது முடியும். மற்றவர்கள் கண்களைப் பரிசோதனை செய்துகொள் வேண்டியது அவசியம்.
 கண் பரிசோதனை செய்ய கண் மருத்துவமனைக்குச் சென்றவுடன், பரிசோதனைக்காக கண்களில் மருந்து ஊற்றினால் ஓரிரு மணி நேரமாவது சரியாக கண்பார்வை தெரியாது. இப்படி ஓரிரு மணி நேரத்திற்கே நமக்குப் பிறர் உதவி தேவைப்படுகிறது என்றால் வாழ்நாள் முழுவதும் கண்பார்வையற்றோர் எவ்வளவு சவால்களை சந்திப்பார்கள்? பிறக்கும்போதே சிலர் கண்பார்வை இல்லாமல் பிறக்கின்றனர். சிலருக்குக் காலப்போக்கில் பார்வைக் குறைபாடு ஏற்படுவதும் உண்டு. பார்வையற்ற மக்கள் பிறரைச் சார்ந்து வாழவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
 உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி உலகம் முழுவதும் பார்வை பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 285 மில்லியன் (28.5 கோடி) ஆகும். இவர்களில் 39 மில்லியன் (3.9 கோடி) மக்கள் பார்வை இழந்தவர்கள் என்றும், 246 மில்லியன் (24.6 கோடி) மக்கள் குறைந்த பார்வை உடையவர்கள் என்றும் அந்தக் கணிப்பு தெரிவிக்கிறது. வளரும் நாடுகளில் மட்டும் 90 % பேர் பார்வைக்குறைபாடு உடையவர்களாக இருக்கிறார்கள்.
 பார்வை இழப்பு ஏற்படுவதற்கு மக்களிடையே போதுமான விழிப்புணர்வு இல்லாததும், கண்ணைப் பாதுகாக்க அவர்கள் அக்கறை எடுத்துக் கொள்ளாததுமே காரணங்களாகும். உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை, ஐந்தில் நான்கு பேர் தேவையின்றி பார்வை இழப்பதாகவும், பெரும்பாலான பார்வையிழப்புகள் தவிர்க்கக்கூடியவையே என்றும் கூறுகிறது. முன்பெல்லாம் முதுமையில் கண்ணாடி அணிந்தது போக இப்போது பள்ளி செல்லும் வயதிலேயே பலரும் கண்ணாடி அணியும் நிலை ஏற்பட்டுள்ளது.
 ஒவ்வொரு நிமிடமும் ஒரு குழந்தை பார்வையற்றதாக மாறுகிறது என்றும், உலகில் 6 மில்லியன் (60 லட்சம்) குழந்தைகள் பார்வையற்றவர்களாக மாறுவதாகவும், அவர்களில் 80 % பேர் வளரும் நாடுகளில் வாழ்கின்றனர் என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
 இதில் முக்கியப்பங்கு கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்ட பொதுமுடக்கத்திற்கு உண்டு. அது வளரும் பிள்ளைகளிடையே கைப்பேசி, தொலைக்காட்சி உபயோகத்தினை அதிகரித்து கண்பார்வை இழப்பினை ஏற்படுத்தியது எனலாம். கைக்குழந்தைகள்கூட இப்போதெல்லாம் கைப்பேசியின்றி உணவு சாப்பிட மறுப்பதைப் பார்க்கிறோம். இது அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அறிந்தும் பெற்றோர் அனுமதிப்பது கவலையளிக்கிறது.
 பார்வைத் திறன் அதிகரிக்கவும், கண்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் கண் மருத்துவர்கள் கூறும் அறிவுரைகள் சில: கண்பார்வை இழப்பு ஏற்படாமல் தவிர்க்க, இரவு தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பே தொலைக்காட்சி, கைப்பேசி, கணினி போன்றவற்றை தவிர்க்கப் பழக வேண்டும். அதிகரித்து வரும் மாசு, தூசிகளினால் கண்கள் பாதிப்படையாமல் தவிர்க்க, வெளியில் சென்று வந்தவுடன் சுத்தமான நீரினால் கண்களைக் கழுவ வேண்டும்.
 வெளிச்சம் குறைந்த இடங்களில் படிப்பது, கண்களுக்கு அதிக அழுத்தம் தரும் செயல்களில் ஈடுபடுவது போன்றவற்றை கைவிடுதல், பச்சை நிறக் காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுதல் போன்றவை கண்பார்வை இழப்பிலிருந்து கண்களைப் பாதுகாக்கும்.
 கண் பார்வை மேலும் குறைந்து விடாமல் இருக்கவும், இருக்கின்ற பார்வையைத் தக்கவைத்துக் கொள்ளவும் கண்கள் சம்பந்தமான பயிற்சிகளை மேற்கொள்ளலாம். முக்கியமாக வெள்ளைச் சுவரைப் பார்த்து, தலையை அசைக்காமல், திருப்பாமல் கண்களால் எண் 8 போடலாம்.
 புத்தகங்களை படித்துக் கொண்டிருக்கும் போது இடையிடையே இமைத்தல் பயிற்சி செய்தால் கண்களுக்கு சற்று ஓய்வு கிடைக்கும். தலைவலி, கண் எரிச்சல், சோம்பல் இல்லாமல் உற்சாகமாகப் படிக்கவும் முடியும்.
 கண்களைப் பொறுத்தவரை எந்தவொரு பிரச்னை ஏற்பட்டாலும் உடனடியாக உரிய சிகிச்சை எடுத்தால் போதும். பார்வை இழப்பைக் கண்டிப்பாகத் தவிர்க்கலாம்.
 ஒரு முறை கிருபானந்தவாரியார் ஆலயம் ஒன்றில் ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்த்திக்கொண்டிருந்த போது ஆனந்தக் கண்ணீருக்கும், சோகக் கண்ணீருக்கும் உள்ள வித்தியாசத்தை விளக்கினார். எந்த ஒரு மனிதரும் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கும்போது அவரையும் அறியாமல் கண்ணீர் விடுவது ஆனந்தக் கண்ணீர்.
 ஒருவர் சோகத்தில் இருக்கும்போது அவர் கண்களில் வருவது சோகக் கண்ணீர். எப்போதுமே சோகக்கண்ணீர் நமது மூக்கை ஒட்டி வழிந்தோடும். ஆனந்தக் கண்ணீர் கண்களின் ஓரத்தில் வந்து கன்னத்தில் வழிந்தோடும். இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் சோகக் கண்ணீரை தொட்டு வாயில் வைத்துப் பார்த்தால் உப்புக் கரிக்கும். ஆனால், ஆனந்தக் கண்ணீரை தொட்டு வாயில் வைத்துப் பார்த்தால் இனிக்கும் என்றார்.
 நம் கண்களிலிருந்து வரும் கண்களில் கூட இவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறது என்பதை நினைக்கும் போது வியப்பாகத்தான் இருக்கிறது.
 பார்வையற்றவராக இருந்த ஹெலன் கெல்லர் கணிதம், இயற்பியல், தாவரவியல் ஆகியவற்றைக் கற்றதுடன் பிரெஞ்சு, லத்தீன் உள்ளிட்ட மொழிகளையும் கற்றார். "த ஸ்டோரி ஆஃப் மை ûலைஃப்' என்ற அவரது சுயசரிதை உலகத்தின் கவனத்தையும் ஈர்த்து பாராட்டுகளைப் பெற்றது. கண்கள் தெரியாமலிருந்த நிலையிலும் "இழந்த சொர்க்கம்' என்ற மகத்தான இலக்கியத்தைப் படைத்தவர் கவிஞர் மில்டன்.
 ஐந்து நிமிடம் மின்சாரம் இல்லையென்றாலும் ஆடிப்போகிறோம் நாம். ஆனால் பார்வையற்ற நிலையிலும் வாழ்நாள் முழுவதும் தன்னம்பிக்கையோடு தடைகளை தாண்டி சாதனை படைக்கிறார்கள் பார்வையற்ற பலர். அவர்களை இந்த நாளில் போற்றுவோம். அவர்களுக்கு உதவியாக இருப்போம்.
 
 இன்று உலக கண்ணொளி நாள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com