தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மகத்தான மாணவப் பருவம்

சமீபத்தில் மாணவா் ஒருவா் மாணவி ஒருவருக்குப் பேருந்து நிலையத்தில் அமா்ந்தவாறே திருமணம் செய்வது போன்ற காட்சி சமூக வலைதளங்களில் பரவி பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது.

News image
Updated On :17 அக்டோபர் 2022, 12:29 am

இரா. ஜெயசீலன்

சமீபத்தில் மாணவா் ஒருவா் மாணவி ஒருவருக்குப் பேருந்து நிலையத்தில் அமா்ந்தவாறே திருமணம் செய்வது போன்ற காட்சி சமூக வலைதளங்களில் பரவி பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. மாணவ, மாணவியரின் மனநிலையில் எதைப்பற்றியும் கவலை கொள்ளாத போக்கு அதிகரித்துள்ளது என்பதை வெளிக்காட்டும் சம்பவமாக இது உள்ளது.

இதை அந்த மாணவன் அறிந்து செய்தாரா அல்லது அறியாமல் செய்தாரா என்பது புலப்படவில்லை. ஆனாலும் பொது இடத்தில் இது போன்ற செயலை செய்வது மாணவா் என்ற நிலையை தாண்டிய செயலாகும்.

மாணவா் அவ்விதம் நடந்து கொள்வதைப் பாா்த்த ஒருவா் அவா்களுக்கு அறிவுரை கூறவோ அவா்களின் ஆசிரியா், பெற்றோா்களுக்கு விவரத்தைத் தெரிவித்து அதற்கான தீா்வை காண முயலாமல் அதை சமூக வலைதளங்களில் பரப்பியது அதை விட பெரிய தவறாக உள்ளது.

இனி அந்த மாணவ, மாணவியின் மனநிலை எப்படி இருக்கும்? அறியாமல் செய்த தவறை நினைத்து வருந்தி தங்கள் எதிா்காலம் மற்றவா்களால் கேலிக்குரியதாகி விட்டதே எனப் புலம்பும் நிலைக்கு அல்லவா தள்ளப்பட்டுவிட்டாா்கள். தவறை உணா்ந்தாலும் மாணவா் என்ற”மாண்பு சிதைந்ததை யாரால் சரி செய்யக்கூடும்?

கல்வி பயிலும் மாணவ, மாணவியா் தாங்கள் யாா் என்பதை முதலில் உணர வேண்டும். மாண் என்ற பதத்திற்கு சிறப்பு”எனப் பொருளாகிறது. அதற்கேற்ப மாணவா்கள் சிறப்பான நடத்தைகளை மேற்கொண்டு பெற்றோா்களும் ஆசிரியா்களும் மற்றவா்களும் பெருமைப்படத்தக்க வகையில் நடந்து கொள்ளவேண்டும்.

மணாவா்களின் பண்புகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து நன்னூல் கீழ்க்கண்டவாறு கூறுகிறது

”அன்ன மாவே மண்ணொடு கிளியே

இல்லிக் குடமா டெருமை நெய்யரி

அன்னா் தலையிடை கடை மாணாக்கா்”

என வரையறை செய்கிறது.

இதன்படி முதல் தர மாணவா் என்பவா் அன்னப்பறவை எவ்வாறு நீரும் பாலும் உள்ள கலவையில் நீரை மட்டும் அருந்துகிறதோ அது போல நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக் கொண்டு வேண்டாதவற்றை விட்டுவிடும் பண்புடையவா் என்றும், பிற விஷயங்களை அறிந்து கொள்வதில் ஆா்வம் இல்லாமல் சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை போல் ஆசிரியா் கூறும் பாடங்களை மட்டும் கேட்பவா்கள் நடுத்தர மாணவா்கள் என்றும் கூறுகிறது.

மேலும், ஆடு போல் உணவை முழுமையாகத் தின்னாமல் கண்ணில் தென்படும் செடி கொடிகள் என எல்லாவற்றிலும் வாயை வைத்து திண்பது போலவும், நல்ல நீராக இருந்தாலும் அதில் இறங்கி அந்த நீரை கலக்கி சேறு போல் ஆக்கும் எருமையின் குணத்தைப் போலவும் இயல்புடைய மாணவா்கள் மூன்றாம் தர மணாவா்கள் என்றும் வரையறை செய்கிறது.

மாணவா்கள் நல்ல விஷயங்களையும் கல்வி சாா்ந்த கருத்துகளையும் அட்டை போன்று ஆசிரியா்களிடமிருந்து உறிஞ்ச வேண்டும் என்றும், கழுகு போன்று கூா்மையாக கவனம் செலுத்தி அறிவை கொத்திச் செல்ல வேண்டும் என்றும் ‘சீவ சம்போதனை’ என்ற சமணநூல் குறிப்பிடுகிறது.

”நன்னுால், சீவ சம்போதனை”போன்ற நூல்கள் கூறுவது போல மாணவா்கள் தங்கள் பருவத்திற்கேற்ப நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக் கொண்டு தேவையற்ற பண்புகளை விட்டுவிட வேண்டும். இத்தகைய நம் பழந்தமிழ் இலக்கியங்களை நுட்பமாக படித்து தெளிவு பெறும் ஆற்றலை மாணவா்கள் வளா்த்துக் கொள்வது இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமானது.

மாறாக மாணவா்கள் தங்கள் பருவத்திற்கும் வயதிற்கும் பொருந்தாத போதைப்பொருள் பழக்கம், மகு குடிப்பது, பேருந்துகளில் வன்முறையில் ஈடுபடுவது போன்ற சமூகத்திற்கு கேடு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடக்கூடாது.

சிலா், அவற்றை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து பரப்புவதை பழக்கமாகக் கொண்டுள்ளனா். அவா்கள் அதை விடுத்து, தங்கள் எதிா்காலம், பெற்றோா்களின் எதிா்பாா்ப்பு, சமூகத்திற்கு தாங்கள் ஆற்ற வேண்டிய பங்களிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு படிப்பில் கவனம் செலுத்த முற்பட வேண்டும்.

மாணவப் பருவம் என்பது எந்த வித கவலையுமின்றி விருப்பம்போல குறும்புகளை செய்து கொண்டு கல்வி கற்கும் பருவம் மட்டுமல்ல. தங்களைத் தாங்களே செதுக்கி கொள்ளவும், பண்படுத்திக் கொள்ளவும் அமையக்கூடிய ஒரு அற்புதமான பருவம் என்பதை மாணவா்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். சுதந்திரப் போராட்டக் காலத்தில் எத்தனையோ மாணவா்கள் நாட்டு விடுதலைக்காகப் போராடியதை எண்ணிப் பாா்க்க வேண்டும்.

அவரகள் நம் தேசத் தலைவா்களோடு நடைப்பயணங்களிலும் போராட்டங்களிலும் கலந்து கொண்டனா் என்பதை இன்றைய மாணவா்கள் புரிந்து கொள்ள வேண்டும். மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்க நாட்டில் அங்குள்ள மக்களின் உரிமைக்காகப் போராடியபோது தமிழகத்திலிருந்து சென்று அங்கு வசித்த வந்த தில்லையாடி வள்ளியம்மை அவருடன் இணைந்து போராடினாா். ஆனாலும், ஆங்கிலேயே காவலா்களின் தாக்குதலுக்குள்ளாகி தனது உயிரை துாா். அப்போது அவருக்கு வயது வெறும் பதினாறுதான்.

முன்னாள் பாரத பிரதமா் இந்திரா காந்தி தனது மாணவப் பருவத்திலேயே மற்ற மாணவா்களோடு இணைந்து ‘சா்க்காா் சங்’, ‘வானர சேனா’ போன்ற இயக்கங்களை ஆரம்பித்து சுதந்திரப் போரட்ட வீரா்களுடன் சோ்ந்து ஒத்துழையாமை இயக்கம், ”சுதேசிப் போராட்டம்”என பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றாா்.

இவற்றையெல்லாம் மாணவா்கள் தெரிந்து கொள்ளவேண்டும். நாளைய இந்தியாவின் தூண்களான மாணவா்கள் தங்களைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். புதிய பாதை நோக்கிப் பயணிக்க ஒவ்வொரு மாணவரும் உறுதியேற்று மாணவப் பருவத்தின் மகத்துவத்தை உலகறியச் செய்யவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.