Enable Javscript for better performance
மறக்க முடியா மக்கள் தலைவர்!- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

  மறக்க முடியா மக்கள் தலைவர்!

  By ஹாரி ஷெரிடன்  |   Published On : 27th July 2022 04:09 AM  |   Last Updated : 27th July 2022 12:50 PM  |  அ+அ அ-  |  

  abdul_kalam

  இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் மறைந்து ஏழு ஆண்டுகள் கடந்து விட்டன. இன்றும் நாம் அவரைக் கொண்டாடுகிறோம்; அவரது பொன்மொழிகளை நினைவுகூர்கிறோம். இதுவரையிலான குடியரசுத் தலைவர்களில் மிகவும் நேசிக்கப்பட்டவரான டாக்டர் அப்துல் கலாம், இந்திய ஏவுகணைத் திட்டங்களின் கதாநாயகரும்கூட.
  அவர் பதவியில் இருந்தபோதும், இல்லாதபோதும் அசாதாரணமான புகழ்வட்டம் அவரைச் சூழ்ந்திருந்தது. பலதரப்பட்ட பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் மத்தியிலும் அவர் எளிமையையே கடைபிடித்தார். அவரது பெருந்தன்மை, வெளிப்படையாகப் பேசும் குணம், நகைச்சுவை உணர்வு ஆகியவற்றை விளக்கவே முடியாது. அவர், மனிதநேயம், அறிவாற்றல், நன்னடத்தை ஆகியவற்றால் அனைத்துத் தரப்பு மக்களையும் வசீகரிப்பவராக மிளிர்ந்தார்.

  தோட்டக்காரர்கள், உதவியாளர்கள், காவல்துறையினர், மெய்க்காவலர்கள், லிஃப்ட் இயக்குவோர், குழாய் பழுது நீக்குவோர், சமையல்காரர்கள் உள்ளிட்ட ராஷ்ட்ரபதி பவனில் உள்ள அனைத்து பணியாளர்களும், தங்கள் நலம் மீது மிகுந்த அக்கறை கொண்ட குடியரசுத் தலைவராக அவர் திகழ்ந்ததை இன்றும் நன்றியுடன் நினைவுகூர்கின்றனர். அவர்கள் வியப்புடன் சொல்வது, தங்கள் ஒவ்வொருவருடைய பெயரையும் டாக்டர் கலாம் நினைவில் வைத்திருந்ததைத்தான்.

  அவர் ஒவ்வொரு பணியாளரையும் பெயரைச் சொல்லி அழைப்பார். அப்போது அவர்கள் முகம் ஒளிவீசுவதை நான் நேரில் கண்டிருக்கிறேன். இது மிகைப்படுத்தல் அல்ல. ராஷ்ட்ரபதி பவனில் பணியாற்றிய எங்களைப் பொறுத்தவரை, துணிச்சல், பதவிக்குப் பொருத்தமான தன்மை, நிமிர்ந்த தோற்றம், நட்புணர்வு, நேர்மை ஆகிய பண்புகளின் ஒட்டுமொத்த உருவமாகவே அவர் விளங்கினார்.


  இரவு நீண்ட நேரம் அவர் பணியாற்றுவார். அதிகாலையில் தேநீர் அருந்தும்போதே செய்தித்தாள்களைப் படித்து விடுவார். காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு இடைவேளைகளின்போதும்கூட அலுவலகக் கோப்புகளைப் பார்வையிடுவார்; நிகழ்ச்சிகளில் சொற்பொழிவாற்றுவதற்கான உரைகளையும் அப்போது அவர் தயாரிப்பார். எந்த நேரத்திலும் மக்களை சந்திக்க அவர் தயங்கியதில்லை.

  பணியாளர்கள் அறிக்கைகளைப் படிப்பதையும், கடிதங்கள், மின்னஞ்சல்களைத் தெரியப்படுத்துவதையும் எந்த நேரத்திலும் அவர் அனுமதிப்பார். அரசின் எந்த முடிவும் தாமதமாகிவிடக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்ததே அதற்குக் காரணம். அவரைப் பற்றி மக்களிடையே நிலவும் பொதுத்தோற்றத்துக்கும் அவரது தனிப்பட்ட தோற்றத்துக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்பதே உண்மை. ஆனால் அவருடன் நெருங்கிப் பழகியவர்களுக்கு மட்டுமே அவரது வெளிப்படுத்தப்படாத உணர்ச்சிகள் தெரியும்.

  அரசுமுறைப் பயணமாக தமிழ்நாட்டுக்கு வரும்போது, நேரம் இருக்குமானால் ராமேஸ்வரத்துக்கு குறுகிய கால விஜயம் இடம்பெற்றுவிடும். அங்கு தனது சகோதரருடனும் குடும்பத்தாருடனும் அளவளாவுவார். மேலும், தனது சகோதரர் மூலமாக தேவையானோருக்கு நிதி வழங்கி, அவர்களது முன்னேற்றத்தை தொடர்ந்து கண்காணித்து வந்தார். அவர்களது வாழ்க்கையை உயர்த்துவதை தனது கடமையாகக் கொண்டிருந்தார் அவர்.

  கலாம், தனது சகோதரர் கூறும் நெடுங்கதைகளை பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருப்பார். அண்டைவீட்டுக்காரர்கள், நல்ல வேலையிலிருக்கும் பட்டதாரி இளைஞர்கள், சமூகத்தில் நிகழ்ந்து வரும் மாற்றங்கள், நமது வாழ்வுக்கு முன்னும் பின்னுமான நிலைமைகள், ராமேஸ்வரத்தில் வாழ்வோர், அங்கிருந்து வெளியேறியோரின் சமுதாய வளர்ச்சி நிலைகள், கோயில்கள், புனிதப் பயணிகளின் அனுபவங்கள், சமய ஒற்றுமை என அந்த நெடுங்கதைகள் நீளும்.

  ஒருமுறை ராமேஸ்வரம் சென்று திரும்புகையில் கலாம் என்னிடம், "எனது அண்ணன் கூறும் கதைகளை விரும்புகிறீர்களா?' என்று கேட்டார். அவர் கேள்வியை முடிப்பதற்கு முன்னதாகவே "உங்களைவிட நன்றாக கதை சொல்கிறார் சார்' என்று நான் சொன்னேன். அதைக் கேட்டவுடன் உரக்கச் சிரித்தார். "காலம் விரைந்தோடிக் கொண்டிருக்கிறது. எனவே மூத்தவர்கள் தங்கள் கருத்துகளைக் கூற அனுமதிப்பதன் மூலமாக, அவர்களது உணர்வுகளை நம்மால் பகிர்ந்துகொள்ள முடியும். நான் சொல்வது சரிதானே?' என்றார் அவர். "நாம் அவர்களது கருத்துகளை பொறுமையுடன் கேட்பதுதான் மனிதநேயத்தை வெளிப்படுத்துவதாகும்' என்று நான் ஒப்புக்கொண்டேன். அவரது சிந்தனையில் பொதிந்திருந்த இந்த மனிதநேயமே, ராக்கெட் தயாரிப்பில் பயன்படும் எடை குறைந்த, வலிமையான உலோகக் கலவையைக் கொண்டு ஊனமுற்றோருக்கு உதவும் லேசான செயற்கைக்கால்களைத் தயாரிக்க, அவரை உந்தியிருக்கிறது.

  டாக்டர் கலாம் எப்போதும் நல்லதையே சிந்தித்தார்; நம்பிக்கையுடனே செயல்பட்டார். அவர் யதார்த்தவாதி. வெறுப்புணர்வையோ, தவறான முன்முடிவுகளையோ, மாயைகளைத் தொடர்வதையோ நம்புபவர் அல்ல.

  தைவானைச் சேர்ந்த ஹிஸýவான் சுவாங் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் இந்திய- பாகிஸ்தான் உறவு குறித்து கலாமிடம் கேள்வி எழுப்பியபோது, அவரது நம்பிக்கை வெளிப்பட்டது. "ஐரோப்பிய ஒன்றியம் போல வருங்காலத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து செயல்படக் கூடும்' என்றார் அவர்.

  பெரும்பாலான நேரங்களில் நாம் மனிதர்களை தவறாக மதிப்பிட்டு விடுகிறோம். அது சரியல்ல என்பதை கலாம் சிறு சிறு நிகழ்வுகளில் நமக்கு கற்பித்து விடுகிறார். தான் சந்திக்கும் அனைவருடனும் உரையாடுவதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். ஓட்டுநர், பணியாளர், சலவைத் தொழிலாளர், உதவியாளர் என தனது அலுவலக ஊழியர் அனைவரிடமும் அவர் இயல்பாகப் பேசுவார். சில சமயங்களில் அவர் உரையாடும்போது, எதிர்த்தரப்பில் ஆர்வத்துடன் பதில் வருவதில்லை என்பதைக் கண்டேன். அவர்கள் அச்சத்தாலோ, பணிவாலோ அவருடன் பேசுவதைத் தவிர்ப்பதாக நான் நினைத்தேன். அதனை அவரிடமே கூறவும் செய்தேன்.

  டாக்டர் கலாம் போன்ற உயர்ந்த மனிதர் தங்களிடம் பேசுகையில் அவர்கள் அதை மகிழ்ச்சியாக வெளிப்படுத்த வேண்டாமா? அவர்களிடம் இருந்த இந்தத் தவறான குணம் எனக்குப் புரியவே இல்லை. எனவே அடிக்கடி அவர்களிடம் நலம் விசாரிக்க வேண்டாமே என்றும் வேண்டுகோள் விடுத்தேன். உடனே "நான் என்ன பயமுறுத்தும் தோற்றத்துடனா இருக்கிறேன்' என்று சிரித்தபடியே கேட்ட கலாம், "சிலருக்கு எல்லா நாட்களும் நல்ல நாட்களாக அமைந்து விடுவதில்லை' என்றார். அவர் சொன்னது முற்றிலும் உண்மை. ஒவ்வொருவருக்கும் மோசமான நாட்கள் உண்டு. காலப்போக்கில், ராஷ்ட்ரபதி பவன் ஊழியர்கள் பலர், கலாம் அவர்களுடன் உரையாடவும், தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கவும் தாமாக முன்வந்ததைக் கண்டேன்.

  கலாம் போல, தாவரங்கள் மீதும் விலங்கினங்கள் மீதும் ஆர்வம் காட்டிய வேறொரு குடியரசுத் தலைவரை ராஷ்ட்ரபதி பவன் அதுவரை கண்டதில்லை. "அழகிய பொருட்களை அதிகமான மக்கள் நேசிப்பதானால், இந்த உலகம்தான் அதற்கு மிகப் பொருத்தமான இடம்' என்று டாக்டர் கலாம் அடிக்கடி கூறுவதுண்டு. "எனவேதான் என்னால் இயன்றவரை இந்த அழகிய தோட்டம் குறித்து மக்களுக்கு விளக்கவும், எனது கவிதைகள் வாயிலாகக் கூறவும் முயல்கிறேன்' என்றார் அவர்.

  டாக்டர் கலாமின் கவிதைகள் தனித்துவமானவை. வாழ்க்கையின் நேர்மறையான அம்சங்களை எளிமையான சொற்களில் கவிதையாகத் தீட்டிக் காட்டுவார் அவர். இந்த பிரபஞ்சத்தைப் படைத்த பெரும் சக்தி குறித்த பதிவு அவரது கவிதைகளில் பெரும்பாலும் இடம்பெறும். அது அளவற்ற அருளாளன் மீதான அவரது நன்றியுணர்வை வெளிப்படுத்தும்.

  "டாக்டர் கலாமின் கவிதை வரிகளை இதயத்திலிருந்து கேட்டால், ஒவ்வொரு கவிதையும் உலகிற்கு வலுவான சேதி ஒன்றைச் சொல்வது புரியும். மாபெரும் செயல்பாடுகளை அவர் முன்னிறுத்துகிறார். அதில் அவர் சற்றும் விட்டுக் கொடுப்பதில்லை' என்று கூறுவார், தைவானைச் சேர்ந்த சமயத் தலைவரும் கலாமின் நண்பருமான கவிஞர் யூ ஹ்ஸி.

  யூ ஹ்ஸியின் சிந்தனையிலும், கலாமின் வழிகாட்டலிலும் உருவான சமய ஒருமைப்பாட்டுக்கான அறிவார்ந்த குடிமக்களின் சங்கமான "ஃபியூரெக்' அமைப்பு தன் நோக்கங்களை நிறைவுசெய்யும் வகையில் இயங்குகிறது. தமிழின் மிகச்சிறந்த இலக்கியமான திருக்குறளை, கலாமின் பரிந்துரையை ஏற்று யூ ஹ்ஸி சீன மொழியில் மொழிபெயர்த்தார்.

  ராஷ்ட்ரபதி பவனில் டாக்டர் கலாம் உருவாக்கிய புதுமைகளுள் முதன்மையானது மழலையர் காட்சிக்கூடம். 2003-இல் அது அமைக்கப்பட்டது. பெயருக்கேற்ற வகையில் அது, குழந்தைகளால் உருவாக்கப்பட்ட வண்ண ஓவியங்கள், பின்னலாடைகள், உருவப்படங்கள், கவிதைகளால் நிறைந்திருக்கிறது. குழந்தைகள் மட்டுமல்லாது பெரியவர்களும் விரும்பிப் பார்வையிடும்படி இக்காட்சிக்கூடம் அமைந்திருக்கிறது. பிற கோள்களில் நமது எடை என்னவாக இருக்கும் என்று கணக்கிடக்கூடிய பகுதி ஒன்று இங்கு உள்ளது. இந்த இடத்தில் பெரியவர்களும், குழந்தைகளைப் போல தமது எடையை ஒப்பிட்டுச் சிரித்துக் கொள்வர்.

  ஒருமுறை டாக்டர் கலாமுடன் விமான நிலையத்தில் காத்திருந்தபோது, அவரது மெய்க்காவல் அதிகாரிகளுடன் ஒரு சிறுமி வாதாடிக் கொண்டிருப்பதைக் கண்டேன். கலாமை சந்திக்க அவள் துடிப்பதையும் காவலர்கள் அதற்கு அனுமதி தராததால் அவளது முகம் வாடியிருப்பதையும் புரிந்துகொண்டேன். உடனே டாக்டர் கலாமிடம் அனுமதி பெற்று அந்த சிறுமியை வரவழைத்தேன். அவள் வந்தவுடன் கலாமிடம் ஆசி பெற விரும்புவதாகத் தெரிவித்தாள்.

  அங்கு இருந்த பலருக்கு அது வியப்பாக இருந்தது. கலாமை சந்திக்கும் பலரும் அவரிடம் கையொப்பம் பெறவும், அவருடன் புகைப்படம் எடுக்கவும் துடிப்பார்கள். அந்தச் சிறு குழந்தை கலாமிடம் ஆசி பெற்றது போன்ற நிகழ்வை அதுவரை அங்கிருந்தவர்கள் கண்டிருக்கவில்லை. இதுகுறித்து கலாமே வேடிக்கையாக, "பிறரை ஆசிர்வதிக்கும் அளவுக்கு பெரிய மனிதராக நான் ஆசிர்வதிக்கப்படுவேன் என்று கனவிலும் நினைத்ததில்லை' என்று கூறினார்.

  இந்த நாடு அளவற்ற திறன்களைக் கொண்டது என்று நமக்கு நன்னம்பிக்கை ஊட்டிய தனித்துவமான குடியரசுத் தலைவர் அவர். அருங்கனவுகளை விதைத்து நம் அனைவரையும் உற்சாகப்படுத்திய மகத்தான ஆளுமை அவர். கடினமான பிரச்னைகளுக்கு எளிய தீர்வு கண்ட நல்லறிஞர் அவர். அழகிய, உறுதியான செயல்களை சாதித்துக் காட்டிய பெருந்தகை டாக்டர் அப்துல் கலாம். அவரது நினைவு நம்மை என்றும் வழிநடத்தும்.

  இன்று (ஜூலை 27) முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நினைவு நாள்.
  கட்டுரையாளர்:
  டாக்டர் அப்துல் கலாமின்
  தனிச்செயலராகப் பணியாற்றியவர்.


  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை
  kattana sevai
  flipboard facebook twitter whatsapp