இறையும் தமிழும் வேறு வேறல்ல!

இறையும் தமிழும் வேறு வேறல்ல!
Updated on
3 min read

 'என்னை நன்றாய் இறைவன் படைத்தனன் தன்னை நன்றாய்த் தமிழ்ச் செய்யுமாறே' என்கிறார் திருமூலர். பண்டைத் தமிழகத்தில் இலக்கியங்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பொற்றாமரைக் குளத்தில் விடப்பட்டு, அந்த ஏட்டினை இறைவன் கரை சேர்த்தால் ஏற்றுக்கொண்டதாக செவிவழிச் செய்திகள் இருக்கின்றன.
 தமிழகம் பல்லாயிரம் ஆலயங்களைக் கொண்ட ஆன்மிக பூமியாக சிறந்திருந்தது. இந்த ஆலயங்களின் இறைவன் தமிழால் பாடப்பெறும் பொழுது இன்னும் சிறப்பு அந்த இறைவனுக்கு ஏற்பட்டுவிடுகிறது. பாடல் பெற்ற தலங்கள் "திரு' என்ற அடைமொழியோடு பெருமை பெறுகின்றன. உதாரணமாக, "திருவாலாங்காடு', "திருமழிசை', "திருவல்லம்' என்று நூற்றுக்கணக்கான ஊர்கள் இருக்கின்றன.
 சைவம், வைணவம் எனப் பாகுபாடு இல்லை. சைவத் திருக்கோயில்கள் பாடல்பெற்ற தலங்கள் என்று அழைக்கப்பட்டால், வைணவ ஆலயங்கள் மங்களாசாசனம் பெற்ற தலங்கள் என்று கொண்டாடப்படுகின்றன. வைணவ நூலான நாலாயிர திவ்யப் பிரபந்தம் "தமிழ் வேதம்' என்றே போற்றப்படுகிறது. வைணவக் கோயில்களில் தமிழே இறைவன் முன் உற்சவங்களில் வருகிறது.
 சைவ சமயத்தைப் பார்த்தால் தேவாரம் பாடிய மூவருமே தமிழுக்குத் தந்துள்ள முக்கியத்துவத்தை மூவர் பாடிய தேவாரத் திருமுறைகள் உணர்த்துகின்றன. திருஞானசம்பந்தர் தன்னை, "தமிழ் விரகன்', "அருந்தமிழ் ஞானசம்பந்தன்', "முத்தமிழ் நான்மறை ஞானசம்பந்தன்', "நல்ல செந்தமிழ் வல்லவன்' என்றெல்லாம் தன்னுடைய பாடல்களில் பெருமிதத்தோடு அடையாளப்படுத்திக் கொள்கிறார். இவரைப் போல தமிழ் மொழியை அடைமொழியாகத் தனக்கு வைத்துக் கொண்டவர் வேறு எவரும் இலர்.
 அதே போல், திருநாவுக்கரசு சுவாமிகளும் இறைவன் மீது தான் கொண்ட பக்தியை, தமிழ் மீது ஏற்றியே கூறுகிறார். "தமிழோடு இசை பாடல் மறந்தறியேன்' என்று பாடி வைத்திருக்கிறார். சர்வ வல்லமை பொருந்திய மன்னரையும் எதிர்த்து நின்ற நாவுக்கரசருக்கு, தமிழ் இறைவனை அடைவதற்கான வழியாகத் தெரிந்திருக்கிறது.
 சுந்தரரின் தமிழ் கேட்க இறைவன் அவருக்காகக் காதல் தூது போனதாகச் செய்தி இருக்கிறது. சேக்கிழார் தனது பெரியபுராணத்தில், இறைவன் சுந்தரரை ஆட்கொண்டு சிவநெறியைப் பரப்ப அவருக்கு ஆணையிட்டபோது, "மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுக' என்று ஆணையிட்டதாக சேக்கிழார் பெருமான் குறிப்பிடுகின்றார்.
 அருநெறியமறை வல்ல முனியகன்
 பொய்கை அலர் மேய
 பெருநெறிய பிரமாபுர மேவிய பெம்மான்
 இவன் தன்னை
 ஒருநெறிய மனம் வைத்து உணர் ஞானசம்
 பந்தன் உரைசெய்த
 திருநெறிய தமிழ் வல்லவர் தொல்வினை
 தீர்தல் எளிதாமே
 என்று திருஞான சம்பந்தர் தனது முதல் பதிகத்திலேயே தமிழைப் போற்றத் தொடங்குகிறார்.
 அதனால்தான், "நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்' என்று கொண்டாடப்படுகிறார். இந்தத் தமிழ் வளர்த்த திருமுறைகளை பேணிக் காப்பதிலும் அதன் வழியே தமிழை வளர்ப்பதிலும் ஆதீனங்கள் பெரும் பங்காற்றுகின்றன. தருமபுர ஆதீனத்தின் கொள்கை வாசகமே "சைவமும் தமிழும் தழைத்து இனிது ஓங்குக' என்பதுதான். அதற்கேற்ப தெய்விகத் தமிழ் வளர்ப்பதில் ஆதீனம் பெரும் அக்கறை காட்டுகிறது.
 தருமபுர ஆதீனத்தின் கீழ் இருக்கும் கோயில்களில் முக்கியமான கோயில் சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில். சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடப்பட்ட திருத்தலம். இவ்வாறு மூவராலும் பாடப்பட்ட தலங்கள் மிகக்குறைவே. அதிலும் அற்புதம் நிகழ்ந்த திருத்தலம் சீர்காழி. திருஞானசம்பந்தர் "தோடுடைய செவியன்' என்ற தனது முதல் பதிகத்தைப் பாடிய திருத்தலம்.
 மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுர ஆதீனத்திற்குச் சொந்தமான சட்டைநாத சுவாமி கோயிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் மே 24-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பணிகள் நடந்துவருகின்றன. யாகசாலை அமைக்க மண் எடுப்பதற்காக கோயிலுக்குள் பள்ளம் தோண்டியிருக்கிறார்கள். இரண்டடி ஆழத்தில் விநாயகர், முருகன், வள்ளி - தெய்வானை, சோமாஸ்கந்தர், சிவகாமி, திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் உள்ளிட்ட 23 செப்புச் சிலைகள் கிடைத்தன.
 இந்தச் சிலைகள் அரையடி முதல் இரண்டு அடி வரை உயரம் கொண்டவையாக இருக்கின்றன. இதுதவிர 493 செப்பேடுகளும் 16 பூஜைப் பொருட்களும் 15 பீடங்களும் 50 வேறு சில உலோகப் பொருட்களும் கிடைத்துள்ளன. கிடைத்திருக்கும் செப்பேடுகளில் திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற சீர்காழி தேவாரப் பதிகம் இடம்பெற்றுள்ளது. செப்பேடுகளை முழுமையாக ஆய்வு செய்தால் இன்னும் தகவல்கள் கிடைக்கக்கூடும்.
 தருமபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் இதனைப் பொக்கிஷம் கிடைத்ததாகக் கருதுகிறார்கள். அவற்றைப் பராமரிக்கவும் பொதுமக்கள் தெரிந்து கொள்ளவும் இப்போதைக்கு இந்தப் பொருட்கள் கோயிலிலேயே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. கோயிலிலேயே அருங்காட்சியம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தருமையாதீன குருமகாசந்நிதானம் அறிவித்துள்ளார்கள்.
 முதல் முறையாக தேவாரப் பாடல்கள் அடங்கிய செப்பேடுகள் கிடைத்துள்ளன. இதுவரை தமிழகத்தில் எங்கும் தேவாரப் பதிகங்கள் செப்பேட்டில் கிடைக்கவில்லை. என்றாலும் செப்பேட்டில் தேவாரங்களை எழுதிப் பாதுகாத்ததற்கும் அதனை இறைபணியாகக் கருதியதற்கும் கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன.
 "சிதம்பரம் கோயிலில் குலோத்துங்கச் சோழனிடமும் அவனது மகன் விக்கிரம சோழனிடமும் தளபதியாக இருந்த நரலோக வீரன், செப்பேடுகளில் தேவாரப் பாடல்களை எழுதியதாக சிதம்பரம் கோயிலில் கல்வெட்டுகள் இருக்கின்றன. ஆகவே தற்போது கிடைத்துள்ள செப்பேடுகள் அவனால் எழுதப்பட்டதாக இருக்கலாம்' என்கிறார் ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன்.
 நரலோக வீரன் சிதம்பரம் கோயிலில் பல திருப்பணிகளைச் செய்திருக்கிறார். இந்தக் கோயிலில் இரண்டு பெரிய நுழைவாயில்களைக் கட்டவும் சந்நிதியை விரிவுபடுத்தவும் செய்திருக்கிறார். ஊர்வலப் பாதைகளில் விளக்குகள் எரிய ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார். நடராஜர், பிட்சாடனர் உலா செல்வதற்காக ரிஷப வாகனம் ஒன்றை செய்து கொடுத்திருக்கிறார்.
 நூற்றுக்கால் மண்டபம் ஒன்றையும் கட்டியிருக்கிறார். திருஞானசம்பந்தர் தேவாரத்தை ஓதுவதற்கென்று மண்டபம் ஒன்றை அமைத்ததோடு, மூவர் தேவாரத்தை செப்பேடுகளில் எழுதவும் ஏற்பாடு செய்திருக்கிறார். இதனைத் தனது "பெரியபுராண ஆராய்ச்சி' எனும் நூலில் மா. இராசமாணிக்கனார் கூறியிருக்கிறார்.
 நவலோக வீரன் போலவே தேவாரப் பதிகங்களை செப்பேட்டில் எழுதச் செய்வதை இறைபணி என்று இன்னும் பலரும் எண்ணியிருக்கக் கூடும். அன்றைய தமிழகத்தில் இறைபணி என்பதே தமிழ்ப் பணியோடு இணைந்தது என்ற சிந்தனை இருந்துள்ளது என்பதை இந்தச் செப்பேடுகள் நிறுவுகின்றன.
 கிடைத்திருக்கும் பொக்கிஷங்களான சிலைகளும் செப்பேடுகளும் எப்படி மண்ணுக்குள் சென்றன? மண்ணுக்குள் மறைந்தனவா? மறைக்கப்பட்டனவா? இத்தனை சிலைகளும் செப்பேடுகளும் பூஜைக்கான பாத்திரங்களும் மண்ணுக்கடியில் புதைந்திருந்தாலும் இவற்றில் பாதிப்புகள் எதுவும் இல்லாமல் முழுமையான வடிவத்தில் கிடைத்திருக்கின்றன என்றால் இறை வடிவங்களைக் காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மண்ணுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்றே தோன்றுகிறது.
 குடவாயில் பாலசுப்ரமணியன், "தமிழ்நாட்டின் மீது பல முறை அந்நியர் படையெடுப்புகள் நிகழ்ந்திருக்கின்றன. மாலிக்காபூர் படையெடுப்பு, பிரெஞ்சு படையெடுப்பு, ஆங்கிலேயர் படையெடுப்பு என தொடர்ந்து சரித்திரத்தில் படையெடுப்புகளைப் பார்க்கிறோம். இப்போது கிடைத்திருப்பவை முதலாம் குலோத்துங்கச் சோழன் காலத்தைச் சேர்ந்தவை என்பதால் மாலிக்காபூர் படையெடுப்பிலிருந்து இந்தப் பொருட்களைக் காக்க புதைத்து வைக்கப் பட்டிருக்கலாம்' என்று கூறுகிறார்.
 செப்பேடுகள் தமிழின் பெருமையைத் தாங்கி நிற்கின்றன. ஏற்கெனவே, சட்டைநாதர் ஆலயத்தில் நாற்பதுக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் வரலாற்றுச் சான்றாக நிற்கின்றன. பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்தக் கோயில் சோழ மன்னர்களால் நிவந்தங்கள் தந்து காக்கப்பட்டிருக்கிறது. வீர ராஜேந்திரன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் ராஜராஜன், ராஜாதிராஜன் ஆகிய சோழ மன்னர்கள் இந்தக் கோயிலுக்கு நிவந்தங்கள் அளித்துள்ள செய்தியை அவை பேசுகின்றன.
 ஆலயத் திருப்பணி செய்த மன்னர்கள், நிவந்தங்களும் கொடையும் அளித்து ஆலயங்களுக்குப் பங்களிப்புச் செய்த செல்வந்தர்கள் முதல் சாமானியர்கள் வரை அனைவரும் ஒரு காரணத்திற்காகவே செய்துள்ளனர். சமயம் பேணுவதும் இறைநம்பிக்கையை ஏத்திப் போற்றுவதும் முதன்மை நோக்கம். அதனைச் செய்வதற்கான சிறந்த வழி தமிழ் போற்றுதல். தமிழ், இறை இரண்டும் ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாதவை. ஆலயங்களும் இறைவனும் வணங்கப்படும் காலம் வரை திருப்பதிகங்களில் தமிழ் வாழும்; தமிழ் வாழும் வரை இறைக்கோட்பாடு நிலைத்திருக்கும்.
 தமது வாழ்நாள் உழைப்பை, சேர்த்த செல்வதை இறை நம்பிக்கையைக் காக்க அவர்கள் தத்தம் செய்திருக்கிறார்கள். நம் முன்னோரின் இந்த நம்பிக்கையை நமது தனிப்பெரும் அடையாளத்தை இனிவரும் தலைமுறைக்குக் கடத்த வேண்டிய பொறுப்பு தமிழராகிய நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.
 
 கட்டுரையாளர்:
 ஊடகவியலாளர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com