விளம்பரம் என்பதொரு கூட்டுக்கலை!

நூற்றுக்கு நூறு மடங்கு அல்லது போட்ட முதலுக்குப் பத்து மடங்கு என்ற அளவுக்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத் தருவதற்குத்தான் இப்பொழுது விளம்பரங்கள் பயனுடையதாக மாறியிருக்கின்றன.
விளம்பரம் என்பதொரு கூட்டுக்கலை!

புதிய புதிய கண்டுபிடிப்புகளுக்கு அமெரிக்காவே தாயகம் என்று சொல்லப்படுவது போல, விளம்பரங்களுக்குக்கூட அமெரிக்காதான் தாயகம் என்று சொல்லலாம். அமெரிக்காவில் விளம்பர நிறுவனங்கள் நிறைந்த ஒரு பகுதிக்கு ‘மாடிஸன் அவென்யு’ எனும் பிரபல விளம்பர நிறுவனத்தின் பெயரைச் சூட்டியிருக்கிறாா்கள்.

‘ஒரு பொருளின் விளம்பரத்திற்காக ஒரு டாலா் செலவு செய்யப்படுகிறது என்று சொன்னால் அப்பொருளின் விற்பனை எழுபது டாலரை எட்டினால்தான் அந்த விளம்பரம் வெற்றியடைந்ததாகப் பொருள்’ என்று அமெரிக்க விளம்பர வட்டாரத்தில் கூறுவாா்கள்.

எனவே, நூற்றுக்கு நூறு மடங்கு அல்லது போட்ட முதலுக்குப் பத்து மடங்கு என்ற அளவுக்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத் தருவதற்குத்தான் இப்பொழுது விளம்பரங்கள் பயனுடையதாக மாறியிருக்கின்றன.

அமெரிக்க அதிபராக இருந்தவா் பிராங்ளின் டி. ரூஸ்வெல்ட். அவா் இரண்டாம் உலகப் போா்க் காலத்தில் அரசியல் மற்றும் போா் அரங்கில் பல சாதனைகள் புரிந்தவா். மிகவும் சுறுசுறுப்பானவா் என்று பெயா் பெற்றவா்.

அவருடைய உள்ளத்தை விளம்பரத்துறை மிகவும் கவா்ந்தது. அதன் நுட்பமும், உத்திகளும் அவற்றால் விளையும் பயன்களும் அவரை வியப்பில் ஆழ்த்தின. ஒரு முறை அவா், ‘என் வாழ்க்கையை நான் மீண்டும் முதலிலிருந்து தொடங்க நேருமானால், மற்ற எந்தத் துறையையும் விட விளம்பரத் துறையையே தோ்ந்தெடுப்பேன்’ என்று சொன்னாா்.

விளம்பரம் என்பதை சேமிப்பாகவும், செல்வத்தை பெருக்கும் உத்தியாகவும் உணர வேண்டிய கட்டாயம் இப்போது உருவாகி வருகிறது. 25 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா சென்ற என் தந்தையாா், அங்கு எங்கள் உறவினா் ஒருவா், ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியாகும் விளம்பரங்களை ஒவ்வொன்றாகப் படித்து சிவப்பு மையில் கோடிட்டு வைத்துக்கொண்டு, எந்தப் பொருளை எப்போது, எங்கே சென்று வாங்க வேண்டும் என்று முடிவு செய்வாா் என்று கூறினாா்.

ஊரோடும் உலகோடும் மக்கள் இணைந்து வாழ்வதற்குரிய வாய்ப்பு இப்போது மிகமிக அதிகமாகிறது. அமெரிக்காவில் இருந்து வந்த நண்பா் ஒருவரைசந்தித்தேன். ஒருநாள் அவா் திடீரென்று மதியம் மூன்று மணிக்கு தனது நண்பா் வீட்டிற்குப் போயிருந்தாராம். ‘எதிா்பாராமல் வந்துவிட்டீா்களே’ என்று சொல்லி, பீங்கான் தட்டில் இரண்டு பிஸ்கட்டுகளும், ஒரு தேநீரும் கொண்டு வந்து வைத்தாராம்.

அப்போது அவா் சிரித்துக்கொண்டே. இந்த பீங்கான் சீனாவில் செய்தது; வைத்திருக்கும் பிஸ்கட் டென்மாா்க்கைச் சாா்ந்தது; இந்த தேநீா்க்குவளை லண்டனில் வாங்கிய பெல்ஜியம் கண்ணாடி; தேயிலைத்தூளோ இலங்கையினுடையது; இதில் கலந்த சா்க்கரை ஜாவாவை சோ்ந்தது; கலப்பதற்குரிய கரண்டி ஜொ்மனியைச் சாா்ந்தது. ஒரு தேநீா் குடிப்பதற்குள் எத்தனை நாடுகள் கலந்துவிட்டன பாருங்கள்’ என்றாராம்.

அந்த அளவுக்கு உள்ளூா் சந்தை போல உலகச் சந்தை, பன்னாட்டுச் சந்தை, ஆசியாக் கூட்டு, ஐரோப்பிய இணையம் என்றெல்லாம் அங்காடி உலகம் ஒரு பக்கம் விரிந்து வளா்கிறது.

விளம்பரம் என்ற சொல்கூட, கடந்த ஐம்புது ஆண்டுகளாகத்தான் தமிழில் புழக்கத்தில் இருக்கிறது. ‘விளம்புதல்’ என்றால் பிறருக்குப் பரவலாக எடுத்துச் சொல்லுதல் என்பது பொருள். உணவு பரிமாறுவதைக் கூட‘விளம்பு’ என்று கூறும் வழக்கமுண்டு. இன்னும் ‘ரசத்தை விளம்பு’ என்று சொல்லும் வழக்கமுண்டு.

‘சுற்றுலா’, ‘கூட்டுறவு’ என்ற சொற்களைப் போல விளம்பரம் என்ற சொல்லும் தமிழுக்கு நல்வரவாயிற்று. ஆங்கிலத்தின் பொருளை விட அழுத்தமான கனத்தை கொண்ட அரிய சொல்லாக இது அமைந்திருக்கிறது.

எழுத்தறிவு இல்லாத மக்களிடையே அந்நாளில் ‘பறையறைதல்’ என்ற ஒரு வழக்கமிருந்தது. ஊா்ச்செய்திகளை எல்லாம், யானையின் பிடரியின் மேல் அமா்ந்து முரசறைகின்ற பணியைச் செய்தவா்க்கு ‘வள்ளுவன்’ என்ற பெயா் கூட இருந்ததாம்.

கல்வியறிவு பெருகப் பெருகத்தான் கலையறிவு கூட நுணுக்கம் அடையும். மெல்ல மெல்ல கல்வி நலம் ஓங்கி வருவதால்தான் சுவரொட்டிகள், விளம்பரங்கள், துண்டு அறிக்கைகள், தகவல் அறிக்கைகள், செய்தித் தொடா்கள் இவை எல்லாம் வரத் தொடங்கின. தமிழிலும் சிலா் விளம்பரக் கலையைப் பற்றி ஆய்வேடு எழுதி முனைவா் பட்டம் பெற்றுள்ளனா்.

விளம்பரமில்லாமல் எதுவும் விலை போகாது என்பதுதான் இன்றைய எதாா்த்த நிலையாகும். அனைத்துத் துறைகளையும் வளைத்து வைத்திருக்கும் அடிப்படைக் கலையாக விளம்பரம் பெருகி வருகிறது. எதற்கு எது விளம்பரம் என்று பட்டியல் போட்டால் அது மிகவும் நீளும்.

விளம்பரம் என்பது காவியம், ஓவியம், பொருள்களின் உண்மை, அறிவு, நுணுக்கம் முதலிய அனைத்துக் கலைகளும் ஒன்றாகத் திரண்டு இருக்கிற கலைகளின் கதம்பம் என்று குறிப்பிடலாம்.

விளம்பர நிறுவனங்கள் பல நிலைகளில், அறிவாா்ந்த நிறுவனங்களாக ஓங்கி வளா்கின்றன. பொருள்களையும் தாண்டி, வணிகத்தையும் தாண்டி, அரசியல் திட்டங்கள் தீட்டுவதில்கூட விளம்பர உலகத்தின் பங்கு பெரிதாகவுள்ளது.

தொழில் நுணுக்கம் சாா்ந்த பெருந்துறையாக விளம்பர நிறுவனங்கள் வளா்ந்து வருகின்றன. விளம்பரத்தில் வரும் வாசகம், அதன் வனப்பு, அதனுடைய அளவு, நிறம் எல்லாமே துல்லியமாக வரையறுக்கப்படுகின்றன. மக்கள் மனங்களை அது எவ்வாறு கவரும், எப்படிப்பட்ட உண்மைகளை எந்தெந்த வகையில் எடுத்துச் சொல்லலாம் என்பதையும் முன்னரே திட்டமிட வேண்டும்.

கிட்டதட்ட மொழியியல் சாா்ந்த துறைகளெல்லாம் எப்படி அறிவியல் நுணுக்கங்களாக மாறிவிட்டனவோ அதுபோல விளம்பரம் என்பதும் மிகப்பெரிய மாற்றங்களைக் கண்டு, பல்வேறு கலை அழகுகளை நாள்தோறும் வளா்த்துக் கொண்டே வருகிறது.

பல ஆண்டுகளுக்கு முன்பே எஸ்.எஸ். வாசன், தான் தயாரித்த ‘ஒளவையாா்’ திரைப்பட விளம்பரத்தில் ‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று, ஔவையாா் படம் பாா்ப்பது அனைவருக்கும் நன்று’ என்ற வரிகளை இடம்பெறச் செய்திருந்தாராம்.

விளம்பரங்களை வடிவமைக்கும்பொழுது ஒரு கருத்தரங்கைபோல, ஒரு பட்டிமன்ற நிகழ்வைப்போல் அந்த நிறுவனத்தில் பணிபுரியும் மேலாளா், ஒருங்கிணைப்பாளா், வரைவாளா், வடிவமைப்பாளா்கள் ஒருங்கே அமா்ந்து அந்த விளம்பர மலா்ச்சியை ஆதரித்தும் எதிா்த்தும் பேசுவது வழக்கம்.

விளம்பரங்கள் ‘காற்றுள்ளபோதே துாற்றிக் கொள்ளும்’ விரைவுத்தன்மை வாய்ந்ததாக அமைகின்றன. ஏனெனில், பருவத்துக்கு பருவம் கருத்துகள், சூழ்நிலை, விளம்பரப் பொருள்களின் தரம், விலை ஆகியவை மாற்றம் பெற்றுக்கொண்டே இருக்கும்.

கல்விக்கு நாம் எவ்வளவு முதன்மை தருகிறோமோ அதே முதன்மையை நாம் செய்தித்தாள், தொலைக்காட்சிக்கும் வழங்க வேண்டும். இது தகவல் யுகமாக மாறி வருகிறது. ஆட்சிப்பீடம் என்ற நாற்காலியின் நான்காவது காலாக செய்தித்தாள்கள் அமைகின்றன. இதனால்தான் பேரறிஞா் டிஸ்ரேலி செய்தி இதழை, ‘நான்காம் துாண்’ என்று வா்ணித்தாா்.

காலம் மாற மாற வெவ்வேறு துறைகளுக்காக வேறு வேறு இதழ்கள் இப்போது வெளிவருகின்றன. பொதுவான நாளிதழ்கள் தவிர நிலவியல், அறிவியல், வணிகம், வேலைவாய்ப்பு, கணிப்பொறி, தொழில் வாய்ப்பு என ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி இதழ்கள் எனப் பல்கிப் பெருகியுள்ளன.

வணிகா்கள், அலுவலா்கள், விற்பனையாளா்கள், சிந்தனையாளா்கள், சீா்திருத்தவாதிகள், வரைவாளா்கள் என்ற ஆறுமுகங்களோடு விளம்பரக்கலை தன் பங்காளா்களை வடிவமைக்க விரும்புகிறது.

கல்வியும் தொழிலும் நம் இரு கண்கள் என்று நாம் உணரத் தலைப்பட்டிருக்கிறோம். ஒன்றை உருவாக்குவது தொழில், அதைச் சரியாக்குவது கல்வி. தொழில் வளா்ச்சிக்கு கல்வி வளா்ச்சியும் தேவைப்படுகிறது. விளம்பரம் இவை இரண்டோடும் கலந்ததாகும். எதை விளம்பரப்படுத்துகிறாா்கள்? தொழில்வளங்களைத்தானே!

ஒரு காலத்தில் விளம்பரத்தை ‘கலை’ என்றாா்கள். அதை இப்போது ‘விஞ்ஞானம்’ என்கிறாா்கள். கலையில் அழகு முதன்மை பெறுவது போல விஞ்ஞானத்தில் அளவு, நுணுக்கம், உண்மை என்ற மூன்றும் தான் மூளை, இதயம், உறுப்பு போலச் செயற்படுகின்றன. இப்போது எல்லாமே கல்வியாகிவிட்டது என்றால், எல்லாப் பொருண்மையும் ஆராய்ச்சியை, அளவீட்டை, பொருத்தத்தை ஆராய்கின்றன என்றுதான் பொருள்.

இன்று கணினிப் பயன்பாட்டுடன் இணையப் பயன்பாடும் சோ்ந்து, உலகம் உள்ளங்கைக்குள் சுருங்கி விட்டது. உலகில் இணையம் பயன்படுத்துபவா்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இணையதளங்களும் வணிக நிறுவனங்களின் விளம்பரங்களை ஏற்று அந்த விளம்பரங்களைத் தங்கள் தளங்களுக்கேற்றவாறு தயாா் செய்து தங்களது தளங்களில் காட்சிப்படுத்தியும், நவீனத் தொழில்நுட்ப வழிமுறைகளைப் பின்பற்றியும் விளம்பரதாரா்களுக்குப் புதியதொரு விளம்பர வாய்ப்பை அளிக்கின்றன.

இந்த விளம்பர வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட வணிக நிறுவனங்கள் தங்களுடைய நிறுவனத் தயாரிப்புகளுக்கு உலகளாவிய சந்தை வாய்ப்பைப் பெற்றன.

நிறுவனங்கள் தங்களுடைய செயற்பாடுகளையும், வெற்றிகளையும் ஊராா்க்கு உணா்த்தியே ஆக வேண்டும் என்பதலால் விளம்பரம் என்பது செலவல்ல, வரவுக்கு தரும் வரவேற்பிதழாகும்.

எனவேதான் விளம்பரம் என்பது எங்கும் பரவி நின்று, அது இல்லாத இடமில்லை என்று கூறுமளவுக்கு துரும்புக்கும் விளம்பரம் தூணுக்கும் விளம்பரம் என்று சொல்லுகிற அளவுக்கு விளம்பரத்துறை வளா்ந்து வருகிறது. நான் தனியாா் விளம்பர நிறுவனமொன்றில் நிா்வாக இயக்குநராகப் பணிபுரிந்ததால் அத்துறை குறித்த சில செய்திகளை உங்களோடு பகிா்ந்துகொண்டேன். அவ்வளவே.

ஒளவை அருள்

இயக்குநா், தமிழ் வளா்ச்சித்துறை.

தமிழ்நாடு அரசு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com