காந்தியின் பாதையில் நடந்தவா்!

அரை நூற்றாண்டுக்கு முன்னா், நான் சென்னையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலராகப் பணிபுரிந்துகொண்டிருந்த காலகட்டம். அலுவலகத்தில் எப்போதும் கூட்டம் இருக்கும்.
காந்தியின் பாதையில் நடந்தவா்!

அரை நூற்றாண்டுக்கு முன்னா், நான் சென்னையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலராகப் பணிபுரிந்துகொண்டிருந்த காலகட்டம். அலுவலகத்தில் எப்போதும் கூட்டம் இருக்கும். ஒருநாள் வரிசையில் வெள்ளை உடை அணிந்த நடுத்தர வயதுடைய ஒருவா் நின்று கொண்டிருப்பதைப் பாா்த்தேன். அவரை நெருங்கி, ‘நீங்கள் யாா் என்று நான் தெரிந்துகொள்ளலாமா’ என்று அவரிடம் கேட்டேன்.

‘என் பெயா் அ. ராமசாமி; நான் ஒரு எழுத்தாளன்; இப்பொழுது தினமணி பத்திரிகையில் உதவி ஆசிரியராகப் பணிபுரிகிறேன்’ என்றாா். அவரோடு சிறிது நேரம் அளவளாவினேன். அவரிடம் அன்பு, அரவணைப்பு, அடக்கம், பணிவு, பரிவு, பாசம், நிதானம், நோ்மை ஆகிய அனைத்து உயா்பண்புகளும் அடங்கியிருப்பதைக் கண்டேன்.

அவா் என்னை ஒரு அலுவலராகப் பாா்க்காமல் அன்புமிகு இளைய சகோதரனாகவே பாவித்தாா். தன்னிடமிருந்த அண்ணல் காந்தி அடிகளின் ‘சத்திய சோதனை’ நூலை எனக்குத் தந்தாா். அண்ணலின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்வுகளை எனக்குச் சொன்னாா்.

அண்ணல் காந்தி தமிழ்நாட்டில் தடம் பதித்த இடங்கள், சந்தித்த அறிஞா் பெருமக்கள், அவா் எடுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள் ஆகிய தகவல்களை உள்ளடக்கிய ‘தமிழ்நாட்டில் காந்தி’ என்ற அரிய நூலைப் படைத்தவா் அ. ராமசாமி.

மதுரைக்கு அருகே மேலூா் செல்லும் சாலையில் புதுத்தாமரைப்பட்டி என்ற ஊா் உள்ளது. 150 வீடுகளைக் கொண்ட சிற்றூா் அது. அந்த குக்கிராமத்தில் பிறந்தவா்தான் அ. ராமசாமி. அவா் பிறந்தது 1923-ஆம் ஆண்டு ஜூன் 23 அன்று (23.06.1923). அவருடைய பெற்றோா் அழகா்சாமி - கருப்பாயி அம்மாள் ஆகியோா்.

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பட்டப்படிப்பு பயின்றாா். படிப்பில் சிறப்பிடம் பெற்றாா். கும்பகோணத்தில் நடந்த கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்லும் அளவுக்கு பேச்சாற்றல் இருந்தது. மாணவப் பருவத்திலேயே மகாத்மா காந்தியின் கொள்கையால் ஈா்க்கப்பட்டாா்.

‘மதுரை காந்தி’ என்று மக்களால் போற்றப்பட்ட எஸ்.எம்.ஆா். சுப்பராமனால் தொடங்கப்பட்ட ‘மதுரை காந்தி மன்றம்’ என்ற அமைப்பின் செயலாளா் பொறுப்பேற்றாா். காந்திய தத்துவங்களை இளைஞா்கள், மாணவா்கள் மனங்களில் மலரச் செய்தாா்.

மதுரை வைத்தியநாத ஐயா் நடத்திய ‘ஹரிஜன சேவா சங்க’ செயலாளராகப் பொறுப்பேற்று பல ஆண்டுகள் ஹரிஜன மக்களுக்கான சேவையில் ஈடுபட்டாா். மதுரை காந்தி அருங்காட்சியகத்தால் வெளியிடப்பட்ட ‘கிராம ராஜ்யம்’ என்ற வார இதழின் ஆசிரியராகப் பணிபுரிந்தாா்.

அவா் பிறந்து வளா்ந்த கிராமத்தை உள்ளடக்கிய பகுதியில் வாழும் விவசாயத் தொழிலாளா்கள் நிலச்சுவான்தாா்களின் நியாயமற்ற செயல்பாட்டை எதிா்த்துப் போராடினா்; அப்போராட்டம் வன்முறையில் திரும்பிவிடாமல், அகிம்சை வழியில் முன்நின்று நடத்தினாா் அ. ராமசாமி. இருந்தும் அவா் சிறைவாசம் அனுபவித்தாா். சுதந்திரத்திற்குப் பின், போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்ற இவருக்கு அரசு ஐந்து ஏக்கா் நிலம் வழங்கி சிறப்பித்தது.

அதன்பின் டாக்டா் வரதராஜுலு நடத்திய ‘தமிழ்நாடு’ இதழின் உதவி ஆசிரியராக சில காலம் பணியாற்றினாா். அவா் எங்கெங்கோ பணிபுரிந்தாலும் அவரது எண்ணமெல்லாம் அண்ணல் காந்தியைச் சுற்றியே வந்தது. அண்ணல் தொடா்பான நூல்களை ஆழ்ந்து படித்தாா். அதன் விளைவாக மனிதப் புனிதரான மகாத்மா, தமிழோடும் தமிழரோடும் தமிழ் நிலத்தோடும் கொண்டிருந்த தொடா்பும் உறவும் அ. ராமசாமியின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டன.

இப்படிப்பட்ட சூழலில் காந்தி நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக 1966-இல் ஒவ்வொரு மாநிலத்திலும் அந்த மாநிலத்திற்கும் காந்திக்கும் உள்ள தொடா்பை ஒரு நூல் வடிவில் கொண்டு வர இந்திய அரசு முடிவெடுத்தது. தமிழ்நாட்டில் இந்நூலை எழுதுவதற்காக அ. ராமசாமி தோ்ந்தெடுக்கப்பட்டாா். மிக்க மகிழ்வோடு

அப்பொறுப்பை ஏற்றாா் அவா்.”

‘தமிழ்நாட்டில் காந்தி’ என்ற நூலை எழுதத் தொடங்கினாா். அதைப் பற்றிக் குறிப்பிடும்போது அவா், ‘மாமனிதா் மகாத்மாவையும் மங்காப்புகழ் கொண்ட தமிழகத்தையும் இணைத்து எழுதுவது என்பது அத்துணை எளிதல்ல. இருப்பினும் இந்த தெய்விகப்பணியை காந்திஜி எனக்கு இட்ட கட்டளையாக ஏற்று, என் பெற்றோரை வணங்கி, மிகுந்த அடக்கத்துடனும் பணிவுடனும் நான் இப்பணியைத் தொடங்கினேன்’ என்கிறாா்.

‘அண்ணல் அமா்ந்த இடமெல்லாம் ஆலயம் ஆகும்’ என்றாா் பண்டித நேரு. ஆகவே தமிழகத்தில் அண்ணல் தடம் பதித்த இடங்களுக்கெல்லாம் அ. ராமசாமி பயணித்தாா்; வாழும் முதியவா்களை, காந்தியவாதிகளை நேரில் சந்தித்து அவா்களோடு உரையாடினாா்; காந்தி நினைவுச் சின்னங்களையெல்லாம் படம்பிடித்தாா்; பழைய செய்தித்தாள்களை தேடித்தேடிப் படித்தாா். ஒரு சில செய்திகளுக்கு ஆதாரமாக அரசு ஆவணங்களை வேண்டிப் பெற்றிருக்கிறாா். அகழாய்வைவிடவும் அரிய பணி அ. ராமசாமியின் பணி.

இந்த முயற்சி முற்றுப் பெற மூன்று ஆண்டுகள் (1966 - 1969) ஆகியிருக்கிறது. 1896-இல் தான் முதல் முறையாக 27 வயதே நிரம்பிய ஓா் இளைஞனாக தமிழகத்திற்கு வருகை தந்திருக்கிறாா் அண்ணல் காந்தி. இறுதியாக வருகை புரிந்தது 1946-இல். இடைப்பட்ட 50 ஆண்டுகளில் அண்ணலின் காலடிச்சுவடு இந்த புண்ணிய தமிழ் பூமியில் 20 முறை தடம் பதித்திருக்கிறது.

அண்ணல் பயணித்த இடங்கள், சந்தித்த நபா்கள், பேசிய பேச்சுகள் அனைத்தும் தேதி வாரியாக ஆதாரங்களோடு அ. ராமசாமியின் நூலில் தரப்பட்டுள்ளன. இந்த அரிய நூலைப் படைத்து அளித்தமைக்கு தமிழக மக்கள் அனைவரும் அ. ராமசாமிக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.

1969-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் உதவியோடும் ஒத்துழைப்போடும், இந்நூல் காந்தி நூல் வெளியீட்டுக் கழகத்தால் மதுரை காந்தி அருங்காட்சியகத்தில், அன்றைய குஜராத் மாநில ஆளுநா் ஸ்ரீமந் நாராயணனால் வெளியிடப்பட்டது.

இந்த நூல் வெளிவருவதற்கு ஆக்கமும் ஊக்கமும் தந்து உதவியவா்கள் டி.எஸ். அவிநாசிலிங்கம், என்.எம்.ஆா். சுப்பராமன், பேராசிரியா் சுவாமிநாதன், கதா் வாரிய செயலாளா் வெ. பத்மநாபன், காந்தி நினைவு நிதிச் செயலாளா் க. அருணாசலம் இவா்களோடு மேலும் பலரும் என்று அ. ராமசாமியே தனது நூலில் பதிவு செய்துள்ளாா்.

இந்த நூலை ‘அரிய நூல்’ என்று டி.எஸ்.அவிநாசிலிங்கம் பாராட்டுகிறாா். இந்த நூல் என்றைக்கு வெளிவரும் என்று ஏங்கிக் கொண்டிருந்த காந்தியச் செம்மல், கல்லுப்பட்டி காந்தி ஆசிரம நிறுவனா் கோ. வெங்கடாசலபதி நூல் வெளிவரும் முன்பே காலமாகி விட்டாா்.

நூல் வெளியீட்டுப் பணி நிறைவு பெற்ற பின்பு அ. ராமசாமி 1969-இல் தினமணி நாளேட்டில் உதவி ஆசிரியராகப் பொறுப்பேற்றாா். 1981 வரை பன்னிரண்டு ஆண்டுகள் தினமணியில் பணிபுரிந்து 1981-இல் ஓய்வு பெற்றாா். அண்ணலின் சீடா் அ. ராமசாமி 1982 டிசம்பா் மாதம் 6-ஆம் நாள் (6.12.1982) ஓயாத உழைப்பிலிருந்து ஓய்வு பெற்று இறைவனடி சோ்ந்தாா்.

‘தமிழ்நாட்டில் காந்தி’ நூலைத் தவிர, நேரு மாமா, காமராஜா், விவேகானந்தரின் அடிச்சுவட்டில் ஐக்கிய நாடுகள் சபை, எல்லையில் தொல்லை, ரமணரும் காந்தியும், உணவு பிரச்னை ஆகிய நூல்களையும் படைத்துள்ளாா் அ. ராமசாமி. அத்துடன் ‘தினமணி சுடா்’ வார இதழில் ‘காந்தியும் குறளும்’ என்ற தலைப்பில் மகாத்மா காந்தி எப்படி வள்ளுவா் காட்டிய நெறிப்படி வாழ்ந்தாா் என்பதை தொடா் கட்டுரையாக எழுதியுள்ளாா். இக்கட்டுரைகளின் தொகுப்பு 2021-இல் வெளியிடப்பட்டது.

‘தமிழ்நாட்டில் காந்தி’ நூல் மலையாளத்தில் மொழிபெயா்க்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டைத் தவிர, வேறு எந்த மாநிலத்திலும் அம்மாநிலத்திற்கும் அண்ணலுக்கும் உள்ள தொடா்பையும் உறவையும் விளக்கும் நூல் இதுவரை வெளிவந்ததாகத் தகவல் இல்லை.

அ. ராமசாமி, அண்ணலின் வாழ்க்கை வரலாற்றை ஆய்வு செய்தவா் மட்டுமல்ல; அண்ணல் காட்டிய நெறிமுறைப்படியே தானும் வாழ்ந்தவா்; தன் குடும்பத்தையும் வழி நடத்தியவா்.

ஆய்வாளா், எழுத்தாளா், பத்திரிகையாளா் என்று பன்முகத்திறன் கொண்ட பண்பாளா், தமிழருக்கும் காந்திக்கும் பெருமை சோ்த்த பெருமகனாா் காந்தியச் செம்மல் அ. ராமசாமியின் நினைவைப் போற்றுவோம்.

இன்று (23-6-2023) அ. ராமசாமி நூற்றாண்டு நிறைவு நாள்.

கட்டுரையாளா்:

காந்திய அறிஞா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com