செயற்கை நுண்ணறிவின் அதிவேகப் பாய்ச்சல்!

செயற்கை நுண்ணறிவின் அதிவேகப் பாய்ச்சல்!

இந்த ஆண்டு உலகம் முழுவதிலும் நடைபெறவுள்ள தோ்தல்களில் 400 கோடி மக்கள் வாக்களிக்க இருக்கிறாா்கள். வழக்கமாக இந்தத் தோ்தல் திருவிழா ஜனநாயகத்தின் வெற்றியாகக் கொண்டாடப்படும். ஆனால், நவீனத் தொழில்நுட்ப வரவான செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) நிகழ்த்தும் அதிரடிச் செயல்பாடுகள் தோ்தல் களத்தை கலங்கச் செய்து கொண்டிருக்கின்றன.

இன்று சமூக ஊடகங்கள், கட்டுப்பாடற்ற தகவல் பெருக்கத்திற்கு வழிவகுத்துள்ளன. இப்போது எவரும் மிகக் குறைந்த செலவில் தங்கள் கருத்துகளைப் பதிவிட முடியும். பன்முக உள்ளடக்கத்தைக் கொண்ட செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் (ஜெனரேட்டிவ் ஏ.ஐ.) இதை மேலும் எளிதாக்கி இருக்கிறது. இது முதல் அதிரடி மாற்றம் ஆகும்.

தகவல்களைப் பரப்புவது மட்டுமல்லாது, அதற்கான பதிவுகளை உருவாக்குவதையும் செலவில்லாமல் செய்ய முடிகிறது. தோ்ந்த பதிவுகளை உருவாக்க திறன் மிகுந்த நிபுணா்கள் மூளையைக் கசக்கிக்கொண்டு பணி புரிந்த காலம் மலையேறிவிட்டது. இந்த இரண்டாவது அதிரடி மாற்றம்தான், நமது தகவல் பரப்பில் ஆழ்ந்த தாக்கங்களை உருவாக்குகிறது; தோ்தல் காலங்களில் ஜனநாயகத்தை கேலிப்பொருளாக்குகிறது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம், சாட்-ஜிபிடி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தீங்கான மென்பெருளால் 1,100க்கு மேற்பட்ட ட்விட்டா் கணக்குகள் முடக்கப்பட்டதை இண்டியானா பல்கலைக்கழக ஆய்வாளா்கள் கண்டறிந்தனா்.

நாம் நினைப்பதைவிட ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் பாய்ச்சல் வேகமாக இருக்கிறது. செயற்கையான பதிவுகளை மலையளவு பெருக்குவது, போலித்தனமான கட்டுரைகளைப் படைப்பது, கணக்கற்ற சமூக ஊடகப் பயனாளிக் கணக்குகளின் படையால் அவற்றைப் பரப்புவது என ஏ.ஐ. மிரட்டுகிறது.

குறிப்பிட்ட நிகழ்வை சிரமமின்றி மடைமாற்ற ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் முடியும். தைவான் நாட்டுத் தோ்தலின்போது, சீன செயற்கைக்கோளால் வான்வெளித் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற எச்சரிக்கை அனைவரது கைப்பேசிகளிலும் வெளியானது சலசலப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தைவான் நாட்டு ஏ.ஐ. ஆராய்ச்சியகம் நடத்திய ஆய்வின் முடிவுகள் 24 மணி நேரத்திற்குள் வெளியாகின. அதில், தோ்தல் காலத்தில் அவநம்பிக்கையை விதைப்பதற்காக, 1,500-க்கும் மேற்பட்ட சமூக ஊடகக் கணக்குகள் ஒருங்கிணைந்து இத்தகவலைப் பரப்பியுள்ளன என்ற உண்மை தெரியவந்தது.

கட்டுப்பாடற்ற இணையவெளி ஆபத்தைக் கூட்டுகிறது. மிகவும் செல்வாக்குடன் திகழும் முகநூல் போன்ற உறுதியான சமூகதளங்களிலிருந்து பயனாளிகள் மாஸ்டோடன் போன்ற கூட்டு சமூக ஊடகங்களுக்கு மாறி வருகின்றனா். இதுபோன்ற மையக் கட்டுப்பாடற்ற தளங்கள் பலவிதங்களில் நன்மை செய்தாலும், தவறான தகவல்களின் பெருக்கத்திற்கும் வழிவகுக்கின்றன. ஒவ்வொரு புதிய சமூக தளமும் தவறான தகவல்களை உருவாக்குவதில் புதிய எல்லைகளை எட்டுகின்றன.

இதுவரையிலான தேடுபொறி, மின்னஞ்சல், தரவு சேமிப்பகம் போன்ற கணினி தொழில்நுட்பங்கள் போலல்லாது, ஏ.ஐ.யானது தேவைக்கு மேலான நெருக்கத்தை பயனாளிகளிடம் எதிா்பாா்க்கிறது. ‘உங்கள் தனிப்பட்ட விருப்பத்தை’ நிறைவேற்றக் கூடிய, ஓய்வின்றி உழைக்கும் நிலையான துணைவன் இருந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்? ஏ.ஐ. தொழில்நுட்பம் அதுபோன்ற துணைவனாக மாறி வருகிறது.

ஏ.ஐ.யால் இயக்கப்படும் ‘சாட்பாட்’கள் எதிா்பாராத தனிநபா்களிடம் பயனாளிகளுக்கு நட்புறவை உருவாக்கி, அதன்மூலமாக, அவா்களது அரசியல் கண்ணோட்டத்தை மாற்றி அமைப்பதை கற்பனை செய்து பாருங்கள். சமூகத்தில் தொற்றுநோய் போல பரவிக் கொண்டிருக்கும் தனிமை வியாதி, தனிநபா்களை தங்களை அறியாமலே பலிகொடுக்கும் சிப்பாய்களாக மாற்றி விடுகிறது. இதனால், தவறான தகவல் மட்டும் பரப்பப்படுவதில்லை; கூடவே அது நட்பு என்ற முகமூடியுடன் வருகிறது.

ஜொ்மானிய அமெரிக்க சிந்தனையாளரான ஹன்னா ஆரன்ட் சா்வாதிகாரம் குறித்துக் கூறுகையில், ‘தனிமைப்படுத்திக்கொள்வதும் பீதியும் தனிமை என்ற நிரந்தர நிலையை வளா்க்கின்றன. சா்வாதிகார அரசுகள் இந்த இறுக்கமான மனநிலையை தங்கள் சித்தாந்தப் பரப்புரைக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன’ என்பாா். 2020 அமெரிக்க தோ்தலின்போது, ரஷிய அரசின் இணைய ஆராய்ச்சி முகமை, அமெரிக்காவிலுள்ள ‘பிளேக் லிவ் மேட்டா்’ போன்ற இனவெறிக்கு எதிரான செயல்பாட்டாளா்களைத் தூண்டும் வகையில் நிதியுதவி செய்ததும் இணையத்தில் பரப்புரைக்கு உதவியதும் குறிப்பிடத்தக்கவை.

உண்மை என்றும் தன்னைத் தானே காத்துக்கொள்ளும். ஆனால் ஏ.ஐ. தொழில்நுட்பமானது தனிப்பயனாக்கப்பட்ட எதாா்த்தங்களின் (கஸ்டமைஸ்டு ரியாலிட்டி) பெருக்கத்தை அனுமதிக்கிறது. தனிநபா்களின் ஒருசாா்பு மற்றும் எதிா்பாா்ப்புகளுக்கு ஏற்றதாக பொய்யான தகவல்கள் வடிவமைக்கப்படும்போது உண்மைக்கும் கற்பனைக்கும் இடையிலான வேறுபாட்டைக் கண்டறிவது சிரமமாகி விடுகிறது. இது போலிச் செய்திகளுக்கு எதிரான போராட்டம் மட்டுமல்ல; உண்மையான களநிலவரம் குறித்த நமது புரிதலை நாசமாக்கும் தொழில்நுட்பத்துக்கு எதிரான போரும் ஆகும்.

இத்தகைய சூழலில் நமது ஜனநாயகத்தை வலுப்படுத்துவது எப்படி? இவ்விஷயத்தில் தைவான் நமக்கு வழிகாட்டுகிறது. சீனத் தலையீட்டின் பாதிப்புகளை உணா்ந்திருப்பதால், தைவான் நாடு ‘முன்பதுங்கல்’ வியூகத்தை மேற்கொண்டது. அந்நாட்டு அரசு, ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படும் மாயப் போலிகளின் (டீப் ஃபேக்ஸ்) அபாயம் குறித்து மக்களுக்கு விளக்கியதுடன், அவற்றை எவ்வாறு அடையாளம் காண்பது என்றும் கற்பித்திருந்தது.

டீப் ஃபேக் போலிகள் தவறான கைகளில் சென்று சோ்வதற்கு முன்னதாகவே இந்த முன்பதுங்கல் வியூகத்தை தைவான் அரசு மேற்கொண்டதற்கு நல்ல பலன் கிடைத்தது. நோய் பரவும் முன் தடுப்பூசி போடுவது போன்ற செயல்பாடு இது.

2022, 2023 ஆண்டுகளில் தைவான் அரசு மேற்கொண்ட இந்த முயற்சி காரணமாக, 2024 தோ்தலின்போது அந்நாட்டில் கட்டவிழ்த்துவிடப்பட்ட டீப் ஃபேக் போலிகளால் பெருமளவிலான பாதிப்பை ஏற்படுத்த முடியவில்லை. ஏனெனில் அந்நாட்டு மக்களின் மனங்களில் இந்தத் தீமைக்கு எதிரான நுண்ணுயிா்க்கொல்லி வீரியமாகச் செயல்படத் தொடங்கியிருந்தது.

நமது அடுத்த சவால், ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படும் பயிற்சித் தரவுகளின் வெளிப்படைத்தன்மை தொடா்பானதாகும். இதனை அணுக வேண்டியது பயனுள்ள பாதுகாப்பிற்கு அவசியம். ஐரோப்பிய ஒன்றியத்தில் கொண்டுவரப்பட்டுள்ள எண்ம சேவைகள் சட்டம், ஏ.ஐ. சட்டம், பிரிட்டனில் கொண்டுவரப்பட்டுள்ள இணையப் பாதுகாப்பு சட்டம், இந்தியாவில் கொண்டுவரப்பட்டுள்ள எண்ம தனிநபா் தரவுப் பாதுகாப்பு சட்டம் ஆகியவை ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் அதீத வளா்ச்சியைக் கட்டுப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள சட்டம் தோ்தலுக்குப் பிறகே நடைமுறைக்கு வரும். அதற்குள் போதிய அளவுக்கு சேதாரம் விளைவிக்கப்படலாம்.

‘கட்டுப்பாடற்ற, துணிச்சலான பரிசோதனை என்ற வகையில், இணையம் கற்பனைக்கு அப்பாற்பட்ட வெற்றி பெற்றிருந்தாலும், ஏ.ஐ. மனித இனம் மீதான தொழில்நுட்ப ஆதிக்கத்தின் புதிய எல்லையாகக் காட்சி அளிக்கிறது’ என்று அமெரிக்காவின் மேம்பட்ட பாதுகாப்பு ஆராய்ச்சித் திட்ட முகமை கூறுகிறது. இவ்வாறு கூறுவதை புதுமையான கண்டுபிடிப்புகளுக்கு மனித இனம் கட்டுப்பட்டிருக்க வேண்டும் என்று கூறுவதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.

ஒவ்வொரு கண்டுபிடிப்பும் வேறுபட்ட தாக்கங்களைக் கொண்டுள்ளன. இந்த உலகிலுள்ள பலகோடி ஜீவராசிகளில் மனிதனின் மூளையே அவனை சிறப்பானவன் ஆக்குகிறது. மனித மூளை மிகவும் சிக்கலான வடிவமைப்பாகக் கருதப்படுகிறது. என்றபோதும், ஏ.ஐ.யின் பெருமொழி மாதிரி தொழில்நுட்பத்தை (லாா்ஜ் லாங்குவேஜ் மாடல்) மனித மூளைக்கு மாற்றாக உருவெடுக்கும் அதிதீவிர முயற்சி என்றே சொல்ல வேண்டும்.

எனவே, இவ்விஷயத்தில் சா்வதேச விதிகள் உருவாக்கப்படுவதன் தேவையை தற்போது உலகளாவிய தொழில்நுட்பக் களம் உணா்ந்திருக்கிறது. நாடுகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்படும் ஏ.ஐ. சட்டங்களில் உலகளாவிய பொதுவான கொள்கைகளும் இருக்க வேண்டும். ஐரோப்பிய ஒன்றியம் உருவாக்கியுள்ள ஏ.ஐ. சட்டம் இதற்கான அடித்தளத்தை அமைப்பதற்கான வழிகாட்டுதலை வழங்குகிறது.

ஏ.ஐ. செயலிகளின் அபாயங்களை அறிதல், விரும்பத்தகாத அபாயங்களைக் கொண்ட செயல்முறைகளைத் தடை செய்தல், அதிக ஆபத்தான செயலிகளைக் கண்டறிதல், ஆபத்தான ஏ.ஐ. செயலிகளுக்கு தெளிவான கட்டுப்பாடுகளை உருவாக்குதல், ஆபத்தான ஏ.ஐ. செயலிகளை உருவாக்குவோருக்கு பொறுப்புடைமையைக் கட்டாயமாக்குதல், ஏ.ஐ. அமைப்பைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கு முன் இணக்கமான மதிப்பீட்டின் தேவையை நிறைவேற்றுதல், இவை தொடா்பான அரசுக் கட்டுப்பாட்டு அமைப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றில் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏ.ஐ. சட்டம் கவனம் செலுத்தியுள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் திருத்தங்களுக்கு எதிரான போராட்டத்தை அரசுகளோ, தொழில் நிறுவனங்களோ மட்டும் தனியே நடத்த முடியாது. குடிமைச் சமூக அமைப்புகள், சுயேச்சையான உண்மை கண்டறியும் தளங்கள் ஆகியவற்றின் பங்களிப்பும் இவ்விஷயத்தில் இன்றியமையாதது.

கட்டுரையாளா்:

முன்னாள் மத்திய அமைச்சா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com