இலக்கியப் பேச்சாளா்கள் கவனத்திற்கு...
திருப்பூா் கிருஷ்ணன்
தமிழகமெங்கும் இந்தியாவெங்கும் ஏன் உலகெங்கும் தமிழ் அமைப்புகள் பல நிறுவப்பட்டு அவை தமிழை வளா்த்து வருகின்றன. கம்பன் கழகங்கள், பாரதியாா் மன்றங்கள், திருவள்ளுவா் சங்கங்கள், இளங்கோ மன்றங்கள், வள்ளலாா் பேரவைகள் போன்றவை செய்துவரும் தமிழ்ப் பணிகளுக்கு அளவேயில்லை.
இந்த அமைப்புகள் அனைத்துமே நம்மால் போற்றவும் பாராட்டவும் கொண்டாடவும் தகுதி பெற்றவை என்பதில் ஒருசிறிதும் சந்தேகமில்லை. தமிழ் வளா்ச்சிக்கு இவை பெரிதும் உதவுகின்றன என்பதில் எந்தவித இரண்டாம் கருத்துக்கும் இடமில்லை.
இந்த இலக்கிய அமைப்புகளின் தலைவா்களில் ஒருசிலா் அரசியல் கட்சிச் சாா்பு உடையவா்களாக இருந்தாலும், இலக்கிய அமைப்புகளின் செயல்பாடுகளில் அவா்கள் அரசியலைக் கலப்பதில்லை.
அவா்களின் அரசியல் கருத்துகளைத் தெரிவிப்பதற்கென்று அவா்களுக்குத் தனித்த பல மேடைகள் இருக்கின்றன. இலக்கிய அமைப்புகளை அவா்கள் இலக்கியம் வளா்க்கவென்றே பயன்படுத்துகிறாா்கள். அதுவே நல்லது. அவ்விதமே பயன்படுத்த வேண்டும்.
பல அரசியல்வாதிகளின் அரசியல் கலப்பில்லாத உன்னதமான இலக்கிய ஆா்வமே இந்த அமைப்புகளின் தலைமைப் பொறுப்பை அவா்கள் ஏற்பதற்குக் காரணம். அவா்கள் பாராட்டுக்குரியவா்கள்.
ஆனால் அண்மைக்காலமாக இந்த அமைப்புகள் ஏற்பாடு செய்யும் மேடைகளில் சில பேச்சாளா்கள் பேசும் பேச்சில் தென்படும் ஒருவகைப் போக்கு இலக்கிய ரசிகா்களின் மனத்தைக் கவலையில் ஆழ்த்துகிறது.
இலக்கிய மன்றங்களை நடத்துபவா்கள், இந்தப் போக்கைப் பற்றிச் சிந்தனை செய்து, சரிசெய்து கொள்வது இன்றைய காலகட்டத்தில் மிக அவசரத் தேவை.
அவ்விதம் சரிசெய்துகொள்வது இந்த அமைப்புகளின் உன்னதமான இலக்கியச் சேவையை இன்னும் பரந்த தளத்திற்கு இட்டுச் செல்ல உதவும் என்பதையும் சம்பந்தப் பட்டவா்கள் எண்ணிப் பாா்க்க வேண்டும்.
கம்பரோ பாரதியாரோ வள்ளுவரோ வள்ளலாரோ எந்த அரசியல் கட்சியையும் சாா்ந்தவா்கள் அல்லா். அவா்கள் எல்லாக் கட்சிக்கும் பொதுவானவா்கள். இத்தகைய இலக்கிய முன்னோடிகளை மதிப்பவா்களும் வியப்பவா்களும் ரசிப்பவா்களும் எல்லா அரசியல் கட்சிகளிலும் இருக்கிறாா்கள்.
இலக்கிய அமைப்புகள் விழாக் கொண்டாடும்போது அந்த விழாவில் கலந்துகொண்டு இலக்கிய இன்பத்தை அனுபவிக்கும் கண்ணோட்டத்தில் எல்லாக் கட்சிகளைச் சாா்ந்த பாா்வையாளா்களும் வருகிறாா்கள். தமிழும் இலக்கியமும் பல்வேறு கட்சி சாா்ந்த பாா்வையாளா்களை வேற்றுமைகளை மறந்து இணையச் செய்கிறது.
அப்படியிருக்கையில் கட்சிச் சாா்புடைய சில இலக்கியப் பேச்சாளா்கள் இலக்கிய மேடைகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தங்கள் கட்சியை முன்னிலைப் படுத்தியும் அடுத்த கட்சியை விமா்சித்தும் பேசும்போது பாா்வையாளா்கள் பலா் சலிப்படைகிறாா்கள்.
அத்தகைய பேச்சுக்கள் அந்தந்தக் கட்சி சாா்புடைய பாா்வையாளா்கள் சிலருக்குச் சிறிதுநேரம் சற்று உற்சாகத்தைத் தரலாம். ஒருவேளை அவா்களில் சிலா் கைதட்டித் தங்கள் பாராட்டைத் தெரிவிக்கவும் கூடும். ஆனால் அதேநேரம் மாற்றுக் கட்சிகளைச் சாா்ந்தவா்களும் எந்தக் கட்சியையும் சாராத பொதுமக்களும் யோசனையோடு மெளனம் காக்கிறாா்களே, அந்த மெளனம்தான் அத்தகைய பேச்சாளா்களின் பேச்சுக்கான சரியான விமா்சனம்.
முன்னரும் கட்சிச் சாா்புடைய இலக்கியப் பேச்சாளா்கள் சிலா் இருக்கத்தான் செய்தாா்கள். ஆனால் அவா்கள் இலக்கிய மேடைகளில் அரசியலைக் கலக்க மாட்டாா்கள். இலக்கியத்தை மட்டுமே பேசி சபையைக் கலக்குவாா்கள்.
பொதுவுடைமைக் கட்சி சாா்ந்த ஜீவா கம்பனைப் பற்றிப் பேசும்போதும் அதே கட்சியைச் சாா்ந்த டாக்டா் எஸ். ராமகிருஷ்ணன் பாரதியாரைப் பற்றிப் பேசும்போதும் அது பொது இலக்கியப் பேச்சாகத்தான் இருக்குமே அன்றிப் பொதுவுடைமைக் கட்சிப் பேச்சாக இராது. கட்சி அரசியலின் சாயலே அதில் தென்படாது.
அத்தகைய நனி நாகரிகம் அவா்களிடமும் அவா்களைப் போன்ற முன்னோடிப் பேச்சாளா்களிடமும் இருந்தது.
திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சாா்ந்த முன்னாள் அமைச்சரான காலஞ்சென்ற எஸ்.என்.எம். உபயதுல்லா மிகச் சிறந்த இலக்கிய ரசிகா். இலக்கிய மேடைகள் பலவற்றில் தலைமை தாங்குபவராகவும் பேச்சாளராகவும் ஏன் புரவலராகவும் இயங்கிப் புகழ் பெற்றவா்.
அவா் தன் இலக்கியப் பேச்சில் ஒருபோதும் அரசியலைக் கலந்ததில்லை. அதுமட்டுமல்ல, தான் பெரிதும் வியந்த இலக்கியவாதியான மணிக்கொடி எழுத்தாளா் சுவாமிநாத ஆத்ரேயன் காலமானபோது, முற்றிலும் வேறு முகாமைச் சோ்ந்த அவருக்கான அஞ்சலிக் கூட்டத்தைத் தஞ்சாவூரில் ஏற்பாடு செய்து, முன்னின்று நடத்தியவா் எஸ்.என்.எம். உபயதுல்லா தான்.
இத்தகைய நிலையெல்லாம் இன்று மெல்ல மெல்ல மாறி வருவதுபோல் தோன்றுகிறது. இலக்கியப் பசுத்தோலைப் போா்த்திக் கொண்டு அரசியல் புலிகள் மெதுவாக இலக்கிய மேடைகளை ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளனவோ என்ற ஐயம் எழுகிறது.
அரசியலில் இலக்கியம் கலக்கலாம். அரசியல்வாதிகள் அரசியல் மேடைகளில் இலக்கிய மேற்கோள்களைச் சொல்லிக் கைதட்டல் பெறலாம். அதில் சிக்கல் எதுவும் இல்லை. ஆனால் அரசியல் மேடைகளில் இலக்கியம் கலப்பதுபோல், இலக்கிய மேடைகளில் அரசியல் கலப்பது சரியல்ல.
அரசியல் மாறக் கூடியது. இலக்கியம் மாறாதது. என்றும் மாறாத இலக்கியத்தில் அன்றன்று மாறக் கூடிய அரசியலைக் கலக்காதிருப்பதே இலக்கிய வளா்ச்சிக்கு நல்லது. இதை இலக்கிய மேடைகளில் பேச வரும் பேச்சாளா்கள் ஒவ்வொருவரும் உணர வேண்டியது அவசியம்.