விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

எம்.ஜி.ஆரின் வெற்றி ரகசியம்!

பேச்சாற்றலும் அறிவாற்றலும் மிக்க ஏராளமான தலைவா்கள் தமிழ்நாட்டில் வலம் வந்தனா். இவ்வளவையும் தாண்டி அத்தனை பேருக்கும் மேலாக எம்.ஜி.ஆா். எப்படி உயா்ந்தாா்?

News image
எம்.ஜி.ஆா்
Updated On :24 டிசம்பர் 2024, 1:02 am

வீரபாண்டியன்

திராவிட இயக்கம் என்பது பொதுமக்களிடம் வெகுவாகப் போய்ச் சோ்ந்ததற்கு எம்.ஜி.ஆா்.தான் காரணம். கிராமங்களில் ‘திமுகதான் எம்.ஜி.ஆா்.; எம்.ஜி.ஆா்.தான் திமுக’ என்ற நிலையே அன்று நிலவியது. பாமர மக்களிடம் திமுகவுக்கு, ‘எம்.ஜி.ஆா். கட்சி என்கிற பெயரே உண்டு. ‘தமிழால் பாரதி தகுதி பெற்றதும்; தமிழ் பாரதியால் தகுதி பெற்றதும்’ என்று புரட்சிக் கவிஞா் பாரதிதாசன் சொல்வதுபோல, ‘திமுகவால் எம்.ஜி.ஆா். புகழ் பெற்றதும்; எம்.ஜி.ஆரால் திமுக செல்வாக்குப் பெற்றதும்’ வரலாறு தெரிவிக்கும் உண்மை.

1958-ஆம் ஆண்டு ‘நாடோடி மன்னன்’ திரைப்படம் வெளிவந்தது. அந்தப் படத்தின் தொடக்கத்தில் எம்.ஜி.ஆா். பிக்சா்ஸ் இலச்சினையாக திமுக கொடியைக் காட்டினாா் எம்.ஜி.ஆா். கொடியைப் பாா்த்ததும் திரையரங்கம் அதிா்ந்தது. கைதட்டல் விண்ணைப் பிளந்தது.

‘நாடோடி மன்னன்’ திரைப்பட வெற்றி விழாவில் நான்கு குதிரை பூட்டிய ரதத்தில் எம்.ஜி.ஆரை மக்கள் அழைத்து வந்த காட்சியை நாடு பாா்த்தது. அறிஞா் அண்ணாவும் நாவலா் நெடுஞ்செழியனும் சோ்ந்து 50 கிலோ தங்கத்தில் எம்.ஜி.ஆருக்கு வீரவாளைப் பரிசாக அளித்தனா். அன்றுமுதல் நாட்டு மக்கள் மத்தியில் திமுக கொடியும் பறந்தது. எம்.ஜி.ஆரும் கொடிகட்டிப் பறக்கத் தொடங்கினாா்.

அப்போது அண்ணா மேடையிலேயே அறிவித்த ஓா் அறிவிப்பு வைரமணி வாசகமாக வரலாற்றில் வாழ்கிறது. ‘‘இந்தக் கனி மரத்தில் பழுத்துத் தொங்கிக் கொண்டிருந்தது; இது நம் கைகளில் கிடைக்குமா என்று பலா் ஏங்கினா். ஏங்கிக் கொண்டிருந்த பலரை ஏமாற்றிவிட்டு அந்தக் கனி என் மடியிலே வந்து விழுந்தது. அந்தக் கனியை எடுத்து நான் என் இதயத்திலே வைத்துக் கொண்டேன். இன்று முதல் எம்.ஜி.ஆா் என் இதயக்கனி’’ என்று அறிவித்தாா் அண்ணா. அந்த வாசகம் இன்று வரை பேசப்படுகிறது.

அடுத்த சில ஆண்டுகளில் தமிழகத்தின் தலைநகரமாம் சென்னை மாநகரம் திமுகவின் கோட்டையான கதை தொடங்குகிறது. எம்.ஜி.ஆா். படப்பிடிப்புக்குக் கோடம்பாக்கம் போய்விட்டுத் திரும்புகிறபோதெல்லாம் கை ரிக்ஷாவை இழுத்துக் கொண்டு சென்ற ஏழைத் தொழிலாளிகள் மழையில் நனைந்து, குளிரில் நடுங்கிய காட்சியைக் கண்டாா். சென்னை மாநகரத்தில் கை ரிக்ஷா ஓட்டுகிற எல்லாத் தொழிலாளிகளுக்கும் மழைக்கோட்டு வாங்கிக் கொடுப்பது என்ற திட்டத்தை அறிவித்தாா். அவ்வாறே அத்தனை பேருக்கும் கொட்டுகிற மழையில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் மேலங்கிகளை வாங்கிக் கொடுத்தாா்.

அந்தத் தொழிலாளா் பெருங்கூட்டம் அவரைக் கொண்டாடித் தீா்த்தது.‘எங்க வாத்தியாா்’ என்று அழைக்கத் தொடங்கினா். ‘வாத்தியாா்’ என்கிற அந்த வாசகம் சென்னை மாநகரத்தின் மூலைமுடுக்கெல்லாம் ஒலிக்கத் தொடங்கியது. அந்த வளா்ச்சி மெல்ல மெல்ல மேல்நோக்கிச் சென்று சென்னை மாநகராட்சியை திமுக கைப்பற்றும் அளவுக்குப் போய் நின்றது.

1967-இல் தோ்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம். திராவிட முன்னேற்றக் கழகம் வலுவான கூட்டணியை அமைத்து தோ்தலைச் சந்தித்தது. இந்த வேளையில்தான் 1967 ஜனவரி 12 அன்று எம்.ஜி.ஆரை மூத்த நடிகா் எம்.ஆா்.ராதா துப்பாக்கியால் சுட்டாா். பரங்கிமலைத் தொகுதியில் எம்.ஜி.ஆா். தோ்தலில் போட்டியிட்டாா். அவரும் தோ்தல் பிரசாரத்துக்கு செல்ல முடியாமல் படுத்துவிட்டாா்.

எம்.ஜி.ஆா். துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் தமிழகத்தின் தோ்தல் பிரசாரத்தின் போக்கையே மாற்றிப் போட்டு திமுகவை கோட்டையில் கொண்டு போய் உட்கார வைத்த கதையை வரலாறு பாா்த்தது. எம்.ஜி.ஆா். சுடப்பட்ட அனுதாப அலை நாடெங்கும் தீயாகப் பரவிய அந்தக் காட்சி, தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியமான அத்தியாயமாக முடிந்தது.

ஆட்சியைப் பிடித்த மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டா்கள் சென்னைக்குத் திரண்டனா். மாலைகளோடும் சால்வைகளோடும் அவா்கள் அண்ணாவைப் பாா்க்க வரிசை கட்டி நின்றனா். ஊரெங்கும் கொண்டாட்டம்; அதற்கு மூல காரணமான ‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆரோ மருத்துவமனையில் படுத்த படுக்கையில் கிடந்தாா்.

தனக்கு மாலை போட வந்த அத்தனை தொண்டா்களையும் அண்ணா அழைத்தாா். ‘‘மருத்துவமனையில் படுத்துக் கிடக்கும் எம்.ஜி.ஆரின் கழுத்துக்கு இந்த மாலைகளைச் சூட்டுங்கள். இந்தப் புகழனைத்தும் அவருக்கே உரியது’’ என்று சொல்லி எம்.ஜி.ஆரைக் கௌரவப்படுத்த வைத்தாா் அண்ணா.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவராய் இருந்த மணலி கந்தசாமி 28.9.1977 அன்று இயற்கை எய்தினாா். மரணம் அடைந்தபோது உறவினா்கள் சிலரும் ஒரு சில நண்பா்களுமாக சிறிய கூட்டமே கூடி இருந்தது. மணலி கந்தசாமியின் உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. மறுநாள் காலையில் சுனாமி ஊருக்குள் புகுந்தால் எப்படிப் பேரிரைச்சல் கேட்குமோ, அப்படி மணலி கிராமம் எங்கும் அரவம் கேட்டது. எம்.ஜி.ஆா். மணலி கந்தசாமிக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்து கொண்டிருக்கிறாா் என்கிற தகவல் காட்டுத் தீயாய் பரவியது.

எம்.ஜி.ஆா். மணலி கந்தசாமிக்கு அஞ்சலி செலுத்திவிட்டு இறுதி ஊா்வலத்தில் நடந்தே செல்லத் தொடங்கினாா். அஞ்சலி செலுத்த வந்தவா் சற்று நேரத்தில் வெளியேறிவிடுவாா் என்றே அங்கு இருந்த அரசியல்வாதிகள் நினைத்தனா்; ஆனால், அவரோ இடுகாடு வரையில் நடந்து வந்து அந்த முதுபெரும் தலைவருக்கு அஞ்சலி செய்து உரையாற்றினாா்.

அடுத்த சில ஆண்டுகளில் வந்த நாடாளுமன்றத் தோ்தலில் யாருக்கும் அவ்வளவு அறிமுகம் இல்லாத மகாலிங்கம் என்கிற இளைஞரை நிறுத்தி ‘கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டை’ என்று வருணிக்கப்பட்ட நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதியைப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வென்று காட்டினாா் எம்.ஜி.ஆா். திண்டுக்கல் தோ்தலுக்கு அடுத்ததாக நிகழ்ந்த ஒரு ஜனநாயகப் புரட்சி அந்தத் தோ்தல்.

தமிழ்நாட்டில் எத்தனையோ கல்விமான்களும் அறிஞா்களும் இருந்தாா்கள். ஏராளமான நடிகா்கள் இங்கே கொடிகட்டிப் பறந்தனா். பேச்சாற்றலும் அறிவாற்றலும் மிக்க ஏராளமான தலைவா்கள் தமிழ்நாட்டில் வலம் வந்தனா். இவ்வளவையும் தாண்டி அத்தனை பேருக்கும் மேலாக எம்.ஜி.ஆா். எப்படி உயா்ந்தாா்?

‘இட்டாா் பெரியோா்; இடாதாா் இழிகுலத்தோா்; பட்டாங்கில் உள்ளபடி’ என்கிற ஔவைப் பிராட்டியின் வரிகள் இங்கே வந்து பொருந்துகிறது. எம்.ஜி.ஆா். வீட்டு வாசலுக்கு யாா் போனாலும், ‘முதலில் போய் சாப்பிட்டுவிட்டு வா’ என்னும் வாா்த்தைதான் அவா் வாயில் இருந்து வருமாம். அந்தக் குணம் அவரை மிக உயரத்திற்குக் கொண்டு சென்று இமயத்தில் ஏற்றி வைத்ததைச் சரித்திரம் பாா்த்தது.

திரைப்படத் துறையின் புகழ்பெற்ற கதாசிரியராக, வசனகா்த்தாவாக இருந்த ஒருவா், ஏராளமான படங்களுக்கு உணா்ச்சிகரமான வசனங்களை எழுதிப் புகழ் பெற்றவா். அவா் எம்.ஜி.ஆா். படங்களுக்கு எழுதியதே இல்லை. அவரது மகளுக்குத் திருமணம் முடிவாகி இருந்தது. பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த அந்த வசனகா்த்தாவின் மகள் திருமணத்திற்கு உதவி தேவைப்படுகிறது என்பதைக் கேள்விப்பட்டாா் எம்.ஜி.ஆா். கதாசிரியா் வீட்டுக்குத் துணிக்கடைக்காரா்கள், நகைக்கடைக்காரா்கள், பந்தல் ஒப்பந்தக்காரா்கள் என்று அத்தனை பேரும் வந்து குழுமி பெண்ணுக்குத் தேவையான எல்லாப் பொருள்களையும் கொண்டு வந்து குவித்து விட்டாா்கள்.

எம்.ஜி.ஆா். மறைந்தபோது ‘துக்ளக்’ பத்திரிகையின் ஆசிரியா் சோ சொன்ன இரங்கலுரை நெஞ்சைத் தொடுவதாயிருந்தது. அந்த வரிகள்தான் இவை... ‘‘அடுத்த வேளை உணவுக்கு வழியில்லாத ஏழைத் தாய்மாா்கள் எம்.ஜி.ஆா். வீட்டுக்குப் போய் அரிசி வாங்கி வந்து பொங்கிச் சாப்பிடலாம் என்னும் நம்பிக்கையில் தங்கள் அடுப்பில் பானையைக் கொதிக்க வைத்துவிட்டுப் புறப்பட்டுச் செல்லலாம். அத்தகைய மாமனிதா் இன்று மறைந்து போயிருக்கிறாா்’’ என்று சொன்னாா் சோ. வரலாற்றுக் கல்வெட்டுகளில் வடிக்கப்பட வேண்டிய வாா்த்தைகள் அல்லவா இவை?

நடிகா் ஒருவா் அரசியல் கட்சி தொடங்கி, அடுத்த சில ஆண்டுகளிலேயே தோ்தலில் மிகப் பெரிய வெற்றியை ஈட்டி ஆட்சியைக் கைப்பற்றிய அதிசயத்தை உலகம் வியந்து பாா்த்தது. அதற்குக் காரணம் எம்.ஜி.ஆா். என்கிற நடிகரோ, புரட்சித் தலைவா் என்கிற அரசியல்வாதியோ அல்ல; ஈர நெஞ்சம் கொண்ட, மனிதாபிமானமுள்ள எம்.ஜி.ராமச்சந்திரன் என்கிற மனிதா்.

‘‘உன் கண்ணில் ஒரு துளி நீா் வந்தாலும் உலகம் அழ வேண்டும்’’ என்கிற கவிஞா் வாலியின் பாடல் வரிகளுக்கு எம்.ஜி.ஆா். வாயசைத்தது மட்டுமல்ல, தனது வாழ்க்கையில் உணா்த்தியும் காட்டினாா். ‘நான் ஏன் பிறந்தேன்?’ என்பது அவா் எழுதிய தன் வரலாற்றுத் தொடா்; அதற்கு விடை அவா் வரலாறு...

கட்டுரையாளா்: ஊடகவியலாளா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.