

‘ஆட்சியில் பங்கு' என கடந்த இரண்டு மாதங்களாக காங்கிரஸ் - திமுக இடையே ஏற்பட்டுள்ள முரண்பாடு முடிந்தபாடில்லை.
திமுகவா, விஜய்யின் தவெகவா என இரட்டை நிலைப்பாட்டுடன் காங்கிரஸ் கட்சி இருந்தது. இது கூட்டணிக்கு தலைமை தாங்கும் திமுகவுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது. எனினும், கடந்த டிச. 3 -ஆம் தேதி தொகுதிப் பங்கீட்டுக்கான காங்கிரஸ் குழு திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து இதற்கு முற்றுப்புள்ளி வைத்தது.
காங்கிரஸ் கூட்டணி உறுதியான மகிழ்ச்சியில் இருந்த திமுகவுக்கு, காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பார்வையாளர் வைத்த "கூட்டணி ஆட்சி' கோரிக்கை பெரும் இடியாக அமைந்தது. இது வழக்கமானது எனப் பொருட்படுத்தாமல் இருந்த திமுக, தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசனை நடத்த குழு அமைக்காமல் காலம் தாழ்த்தியது.
கடந்த நவம்பரில் நடைபெற்ற பிகார் பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஒரு மாதம் தொடர் களப் பணியாற்றியும் போட்டியிட்ட 61 தொகுதிகளில் 6 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்று காங்கிரஸ் பெரும் பின்னடைவைச் சந்தித்தது.
இதற்கு கூட்டணிக்குத் தலைமை வகித்த ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் வேட்புமனு தாக்கல் இறுதிநாள் வரையில் நடைபெற்ற தொகுதிப் பங்கீடும், வேட்பாளர் தேர்வும்தான் காரணம் என்று ராகுல் கருதியதால், தமிழகத்தில் உடனடியாக இந்தப் பணியைத் தொடங்க உத்தரவிட்டார்.
ஆனால், கூட்டணிப் பேச்சுக்கு திமுக குழு அமைக்காமல் காலம் தாழ்த்தியது ராகுலுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதை கடந்த ஜன.25-ஆம் தேதி தன்னைச் சந்தித்த திமுக துணை பொதுச் செயலர் கனிமொழியிடம் ராகுல் வெளிப்படுத்தி, உடனடியாக குழுவை அமைத்து தொகுதிப் பங்கீட்டைத் தொடங்க வலியுறுத்தினார். ஆனாலும், வரும் பிப். 22-ஆம் தேதிமுதல் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை தொடங்கும் என கடந்த பிப்.10-ஆம் தேதிதான் திமுக அறிவித்தது.
மனக்கசப்பு: ஆட்சியில் திமுக பங்கை அளித்தே தீர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து காங்கிரஸ் எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, முன்னாள் எம்.பி. விஸ்வநாதன், கே.எஸ். அழகிரி உள்ளிட்டோர் பொதுவெளியில் திமுக மீது கடுமையான விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.
இதற்கு திமுக அமைச்சர்கள் ரகுபதி, ராஜகண்ணப்பன் உள்ளிட்டோர் கடுமையான பதிலடி அளித்து வருவது இரு கட்சிகளின் தொண்டர்களிடையே மனக்கசப்பை ஏற்படுத்தத் தொடங்கிவிட்டது.
"ஆட்சியில் பங்கு தமிழகத்துக்கு ஒத்துவராது' என திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் கடந்த பிப்.11-ஆம் தேதி கூறிய பிறகும் இந்த முரண்பாடு நின்றபாடில்லை. இரு கட்சிகளின் தலைவர்களும் சமூக ஊடகங்களில் கருத்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
திமுகவுடன்தான் கூட்டணி என உறுதி செய்துவிட்டு, கூட்டணிக்கு எதிராக காங்கிரஸ் தலைவர்கள் பேசி வருவதை அக்கட்சி தலைமை அமைதியாக கவனித்து வருகிறது. பிகார் தேர்தல் பின்னடைவையும், தமிழகத்தில் காங்கிரஸுக்கு சரிந்துவரும் வாக்கு வங்கியையும் கணக்கில் வைத்து அக்கட்சிக்கு திமுக சொற்ப எண்ணிக்கையிலான இடங்களே ஒதுக்க முன்வந்ததுதான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இளைஞர்களுக்கு வாய்ப்பு: "இந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு அதிக எண்ணிக்கையிலான இடங்களைப் பெற்று இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கவில்லை என்றால், பல இளம் நிர்வாகிகள் விஜய்யின் தவெகவுக்கு சென்றுவிடுவார்கள்' என்று, போர்க் கொடி தூக்கியுள்ள அக்கட்சித் தலைவர்கள் மேலிடத்திடம் தெளிவாக கூறிவிட்டனர்.
மேலும், 1967-இல் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழந்த பிறகு இதுவரை ஆட்சி அதிகாரத்துக்கு வரவில்லை என ஆதங்கத்துடன் அக்கட்சித் தலைவர்கள் தெரிவித்ததாவது:
1984-இல் எங்கள் கட்சியின் தலைவர் இந்திரா காந்தியை இழந்தபோது ஏற்பட்ட அனுதாப அலையைப் பயன்படுத்தி தமிழகத்தில் கூட்டணிக் கட்சியான அதிமுக ஆட்சியைப் பிடித்தது. அப்போது 61 தொகுதிகளில் காங்கிரஸ் வென்றது.
அதேபோல், 1991-இல் கட்சியின் தலைவர் ராஜீவ் காந்தியை இழந்து காங்கிரஸ் 60 தொகுதிகளில் வெற்றி பெற்றும் எதிர்க்கட்சியாகத்தான் காங்கிரஸ் கட்சி அமர்ந்தது.
2006-இல் 34 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸின் கூட்டணி தயவில்தான், 96 தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுக மைனாரிட்டி ஆட்சி நடத்தியது. இப்படி காங்கிரûஸ திராவிட கட்சிகள் பயன்படுத்திவிட்டன.
தமிழகத்தில் இருந்து ஒரு மாநிலங்களவை எம்.பி. பதவியைப் பெறுவதற்கு திமுகவிடம் கையேந்தும்நிலைதான் உள்ளது. இதைப் போக்கவும், காங்கிரஸ் இழந்த கௌரவத்தை மீட்கவும் இளைஞர்களுக்கு அதிக இடங்களில் போட்டியிட வாய்ப்பளிக்கும் வகையில் அதிகபட்சமாக 45 தொகுதிகளை திமுக ஒதுக்க வேண்டும்.
தேர்தலில் கூட்டணி பலத்துடன் வெற்றி பெற்ற பின்னர் திமுக அமைச்சர்கள் எங்களின் கோரிக்கைகளைக் கண்டுகொள்வதே இல்லை. ஆகையால்தான், இந்த முறை ஆட்சி அதிகாரத்தில் பங்கு அளிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். பேரவைத் தேர்தல் முடிந்த பிறகு வரும் உள்ளாட்சித் தேர்தலில் அதிகார பதவிகளை வழங்கவும் திமுக இப்போதே முன்வர வேண்டும்.
கடந்த 2021 தேர்தலில் 173 இடங்களில் போட்டியிட்டு 133 இடங்களில் மட்டும் திமுக வென்றது. ஆனால், 25 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 18 இடங்களை வென்றது. இதில் திமுகவைவிட காங்கிரஸுக்குதான் வெற்றி சதவீதம் அதிகமாகும்.
எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் பாஜக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியைப் பிடித்து வந்த காரணத்தால், 2021-இல் திமுக ஒதுக்கிய 25 இடங்களை ஒப்புக்கொண்டோம். ஆனால், இந்த முறை அதிகாரப் பகிர்வு என்பது எங்களின் உரிமையாகும் என்று அவர்கள் திட்டவட்டமாகக் கூறுகிறார்கள்.
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 10 ஆண்டுகள் திமுக அங்கம் வகித்ததைப்போல், தமிழகத்தில் "இண்டி' கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் திமுகவின் ஆட்சியில் காங்கிரஸ் ஏன் அங்கம் வகிக்கக் கூடாது என காங்கிரஸ் மேலிடம் யோசிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திமுகவின் வியூகம்: கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக இடங்களைக் கொடுத்துவிட்டால் பெரும்பான்மை பலம் கிடைக்காமல் போய்விடும் என்பதால், திமுகவும் கூடுதலாக தொகுதிகளை ஒதுக்க முரண்டு பிடித்து வருகிறது. கோஷ்டி பூசலைத் தடுக்க கடந்த முறை காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதிகளை தங்கள் வசம் வைத்துக் கொள்ளவும் திமுக திட்டமிடுகிறது.
வரும் 22-ஆம் தேதிமுதல் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சை தொடங்க உள்ள திமுக, முதலில் சிறு தோழமைக் கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்கிவிட்டு, இறுதியாகவே காங்கிரஸுக்கு இடங்களை ஒதுக்கும் என்று கூறப்படுகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப். 24-ஆம் தேதி முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட அதிமுக ஆயத்தமாகி வருகிறது. அத்துடன் தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்து பிற கட்சிகளும் வேட்பாளர்களை அறிவிக்கக்கூடும்.
தேர்தலுக்கு சுமார் ஒன்றரை மாதம் உள்ள நிலையில், இறுதிக்கட்டத்தில் தொகுதிகளை ஒதுக்கி காங்கிரûஸ ஏற்றுக் கொள்ள வைக்கும் நெருக்கடிக்குத் தள்ளவும் திமுக வியூகம் வகுத்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
"ஆட்சியில் பங்கு தர முடியாது- பங்கு வேண்டும்' என்ற முரண்பாட்டில் மூழ்கியிருக்கும் திமுக - காங்கிரஸில் வெற்றி பெறுவது யார் என்பதில்தான் தற்போது போட்டி ஏற்பட்டுள்ளது.
பிப்ரவரி 22-ஆம் தேதிமுதல் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சை தொடங்க உள்ள திமுக, முதலில் சிறு தோழமைக் கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்கிவிட்டு, இறுதியாகவே காங்கிரஸுக்கு இடங்களை ஒதுக்கும் என்று கூறப்படுகிறது.
தேர்தலுக்கு சுமார் ஒன்றரை மாதம் உள்ள நிலையில், இறுதிக்கட்டத்தில் தொகுதிகளை ஒதுக்கி காங்கிரஸை ஏற்றுக் கொள்ள வைக்கும் நெருக்கடிக்குத் தள்ளவும் திமுக வியூகம் வகுத்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.