இந்த வாரம் கலாரசிகன் - 01-03-2026
சில வாரங்களுக்கு முன்பு "பசும்பொன்' முத்துராமலிங்க தேவர் குறித்த சில தகவல்கள் எனக்கு தேவைப்பட்டன.


சில வாரங்களுக்கு முன்பு "பசும்பொன்' முத்துராமலிங்க தேவர் குறித்த சில தகவல்கள் எனக்கு தேவைப்பட்டன. தில்லியில் இருந்து வங்க மொழி நாளிதழ் நிருபர் ஒருவர் தனது நேதாஜி குறித்த ஆய்வுக்காக அந்தத் தகவல்களைக் கேட்டிருந்தார்.
உடனே நினைவுக்கு வந்தவர்கள் கவிஞர் ஜீவபாரதியும் "காவ்யா' சண்முகசுந்தரமும்தான். "காவ்யா' வெளியிட்டிருந்த பசும்பொன் தேவர் குறித்த புத்தகங்களைப் பெறுவதற்காக நண்பர் சண்முகசுந்தரத்தின் சென்னை டிரஸ்ட்புரம் இல்லத்துக்குச் சென்றிருந்தேன்.
தனது வாழ்நாளை நல்ல புத்தகங்களைப் பதிப்பித்து வெளியிடும் பணிகளுக்காகவே அர்ப்பணித்திருக்கிறவர்களில் "காவ்யா' சண்முகசுந்தரம் முதன்மையானவர். இந்தப் புத்தகம் விற்குமா விற்காதா என்கிற கேள்விக்கே இடம் இல்லாமல், வருங்கால சந்ததியினருக்குத் தேவையா இல்லையா என்கிற ஒற்றைச் சிந்தனையுடன் தனது காவ்யா பதிப்பகத்தை நடத்தி வருபவர்.
இப்படி பெரிய பெரிய புத்தகங்களைப் பதிப்பித்து வெளியிடுகிறீர்களே இதை இன்றைய தலைமுறையினர் படிப்பார்களா என்கிற எனது கேள்விக்கு அவரிடமிருந்து ரத்தின சுருக்கமாக வெளிவந்த பதில் என்ன தெரியுமா? படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் உள்ளவர்கள் நிச்சயம் படிப்பார்கள் என்பதுதான். அப்படி ஒரு தன்னம்பிக்கை அவருக்கு.
பெங்களூரு செயின்ட் ஜோசப் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற பிறகு "காவ்யா' பதிப்பகத்தைத் தொடங்கி நூற்றுக்கணக்கான புத்தகங்களை வெளிக்கொணர்ந்திருக்கும் பேராசிரியர் சண்முகசுந்தரம் "காவ்யா தமிழ்' என்கிற காலாண்டு இலக்கிய இதழையும் நடத்தி வருகிறார். பிறந்த நூற்றாண்டு சிறப்பிதழாகப் பேராசிரியர் ந.சஞ்சீவியின் சிறப்பிதழாக வெளிவந்திருக்கிறது சமீபத்திய "காவ்யா தமிழ்'. அதன் பிரதியை அவரது வீட்டிலிருந்து வரும்போது கொண்டு வந்தேன்.
டாக்டர் மால்கம் எஸ்.ஆதிசேஷையா சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தபோது பேராசிரியராகவும், தமிழ்த் துறைத் தலைவராகவும் இருந்தவர் ந.சஞ்சீவி. அவரது பதவிக்காலத்தில்தான் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை, ஆய்வியல் நிறைஞர் படிப்புகள் தொடங்கப்பட்டன. இன்றைய மூத்த தமிழறிஞர்கள் பலர் பேராசிரியர் ந.சஞ்சீவியின் மாணாக்கர்கள்.
தெ.பொ.மீ., ரா.பி. சேதுப்பிள்ளை, மு.வ., அ.ச.ஞா. வரிசையில் வைத்துப் போற்றப்படுபவர் பேராசிரியர் ந.சஞ்சீவி. அவர்களைப்போலவே "சிலம்புச் செல்வர்' ம.பொ.சி.யைத் தலைவராக ஏற்றுக்கொண்டு தமிழரசுக் கழகத்தின் ஆதரவாளராக இருந்தவர். பெரியார் ஈ.வெ.ரா.வின் திராவிடர் கழகத்துடன் அவர்கள் உடன்படவில்லை. தனித் தமிழ்நாடு பிரிவினைவாதத்தை எதிர்த்தவர்கள். வ.உ.சி. உள்ளிட்ட தேசியவாதத் தமிழர்களைக் தூக்கிப் பிடித்தவர்கள்.
மூவேந்தர்கள் குறித்துப் பேசிய சிலப்பதிகாரத்தையும், வீரபாண்டிய கட்டபொம்மனையும் ம.பொ.சி. பரப்புரை செய்தார் என்றால், அவரைப் பின்பற்றிய பேராசிரியர் ந. சஞ்சீவி பூலித்தேவன் குறித்தும், 1806 வேலூர் புரட்சி குறித்தும் புத்தகங்கள் எழுதி தமிழனின் பெருமையை எடுத்துரைக்க முற்பட்டார். அவரது "செந்தமிழ் படைக்கும் சிந்தனைகள்' என்கிற நூல், தமிழ் வளர்ச்சிக்கான 40 கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு. இப்போது பல்கலைக்கழகத் தமிழ்த் துறைகளின் செயல்பாடுகளுக்கு அடித்தளமாகவும், இலக்கணமாகவும், வழிகாட்டியாகவும் இருக்கும் நூல் அது.
சுதேசமித்திரன், தினமணி, தமிழன்குரல், செங்கோல் என்று தொடங்கி பேராசிரியர் ந.சஞ்சீவி எழுதிய கட்டுரைகள் வெளிவராத இதழ்கள் மிகக் குறைவு. அவரது படைப்புகள்தான் தமிழுக்கு அவர் வழங்கிய கொடை. அவர் உருவாக்கிய தமிழறிஞர்கள், பெரும் கொடை.
பேராசிரியர் ந.சஞ்சீவியின் பிறந்த நூற்றாண்டை மறந்து விடாமல் சிறப்பு மலர் வெளிக்கொணர்ந்து கொண்டாடும் "காவ்யா' சண்முகசுந்தரத்தின் தமிழ்ப் பற்றையும், குரு பக்தியையும் நினைத்து வியந்தேன். இதைப் பதிவு செய்வதன் மூலம் "தினமணி' நாளிதழும் பேராசிரியர் ந. சஞ்சீவிக்கும் பிறந்த நூற்றாண்டு மரியாதை செலுத்த வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
அன்றைய சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவர் குறித்த பதிவைத் தொடர்ந்து, அரை நூற்றாண்டு காலத்துக்குப் பிறகு அவரைப் போலவே தமிழ்த் தொண்டாற்றும் இன்றைய தமிழ்மொழித் துறையின் தலைவர் பேராசிரியர் ய. மணிகண்டன் எழுதிய "பாரதியின் தராசு' நூல் குறித்த பதிவு எதேச்சையாக அமைவது என்பது சிறப்பு. மகாகவி பாரதியாருக்கு அவர் வழங்கும் மற்றுமொரு கொடை இந்த நூல்.
புதுச்சேரிக்குச் சென்ற பிறகு, சுமார் எட்டாண்டுகள் சுதேசமித்திரனில் பாரதியார் அதிகம் எழுதவில்லை. ஏ. அரங்கசாமி ஐயங்கார் ஆசிரியராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, அவருடைய அன்புக்கு ஆட்பட்டு கவிதைகளையும், உரைநடைகளையும் பாரதியார் மீண்டும் எழுதத் தொடங்குகிறார். அப்போது வெளிவந்தவைதான் "காளிதாஸன்' என்கிற புனைபெயரில் அவரால் எழுதப்பட்ட "தராசு' கட்டுரைகள்.
1915 நவம்பர் 25-இல் தொடங்கிய இந்தத் தொடர் 1917 ஜூலை 11 வரை சீரற்ற இடைவெளிகளுக்கு இடையில் வெளிவந்தது. "தராசு' தொடர் வெளிவந்துகொண்டிருந்த காலத்திலேயே "உல்லாஸ சபை' என்ற தொடரையும் பாரதியார் சுதேசமித்திரனில் எழுதியிருக்கிறார் என்று தெரிகிறது. மகாத்மா காந்தி ஒய்.எம்.ஸி.ஏ. சங்கத்தில் பேசியது; சீனாவின் குடியரசுத் தலைவர் யுவான்-ஷி-காய் தாமே சீன அரசராக முயன்றது; புதுக்கோட்டை மன்னர்
ஆஸ்திரேலிய மாதை மணந்தது; பம்பாயில் காங்கிரஸ் மகாசபை கூடியது என்று அவ்வப்போது நடைபெற்ற நிகழ்வுகள் குறித்த பாரதியாருடைய எழுத்துக்களின் பதிவுதான் "தராசு' கட்டுரைகள்.
பாரதியின் "தராசு' ஓர் உரைநடை இலக்கியம். "பத்தி எழுத்து' வகையின் முன்னோடி ஆக்கம். தமிழ் உரைநடை வரலாற்றில் இப்படிப்பட்ட படைப்பு இதற்கு முன்பு இல்லை. பாரதியாரின் பருந்துப் பார்வை உலக வரலாற்றை தனக்கே உரித்தான பாணியில் விமர்சிக்கும் கட்டுரைகள்தான் "தராசு'. பாரதிதாசனைத் தமிழ்ச் சமூகத்துக்கு அறிமுகப்படுத்தியது இந்தத் தொடர்தான்.
நூறாண்டு இடைவெளிக்குப் பிறகு பாரதியாரின் "தராசு' கட்டுரைகளின் தொகுப்பு, சுதேசமித்திரனின் மூலத்தின் அடிப்படையில் கண்டறியப்பட்ட புதிய பகுதிகளோடு ஒரே தொகுதியாகப் பேராசிரியர் ய. மணிகண்டனால் வெளிக்கொணரப்பட்டிருக்கிறது.
பிற்சேர்க்கையாக "உல்லாஸ சபை' கட்டுரைகள் இரண்டு இணைக்கப்பட்டிருப்பது அடுத்து வரவிருக்கும் தொகுப்புக்கான முன்னோட்டப் பதிவு என்று கருதலாம்.
யார் எழுதிய ஹைக்கூ என்று குறித்து வைக்க மறந்துவிட்டேன். மு.முருகேஷ் என்று நினைக்கிறேன். தவறாக இருந்தால் தெரியப்படுத்தவும், திருத்திக் கொள்கிறேன்.
எப்படி அழைப்பது
தூங்கும் குழந்தையருகே
காது கேளாத தாய்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...