நதிகளைப் பாதுகாப்போம்!

நதிகளைப் பாதுகாப்போம்!

உலக நாகரிகங்கள் நதிக்கரையிலேயே உருவாயின என்பது வரலாறு. பண்டைய பிரிக்கப்படாத இந்திய நிலப்பரப்பில் சிந்துநதி நாகரிகம்; ஐரோப்பாவை ஒட்டி இன்றைய உக்ரைன் - ஈரான் நிலப்பகுதிக்கும், காஸ்பியன் கடலுக்கும் நடுவில் "காக்கசஸ்' என்ற மலைப்பகுதியில் பரிணமித்த யூக்ரட்டீஸ் - டைகிரிஸ் நதிகளிடை நாகரிகம்; இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் மஞ்சள் நதிக்கரையில் தோன்றிய மங்கோலாயிடு இனம்-இவை ஆசிய கண்டத்தில் மூன்று முதன்மை நாகரிகங்கள்.

ஆப்பிரிக்க கண்டத்தின் நைல் நதி நாகரிகமும், ஆப்பிரிக்க, ஆசிய கண்டங்களுக்கு அப்பால் அமெரிக்க கண்டத்தின் அமேசான் நதி நாகரிகமும் பிற நாகரிகங்கள். நம் நாட்டில் தமிழர் நாகரிகமும் தாமிரபரணி, வைகை, காவிரி ஆகிய நதிக்கரைகளில் முகிழ்த்தவையே.

இவ்விதம் மனித இனத்தோடு பிரிக்க முடியாத அங்கமாகிவிட்ட நதிகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் 2005-ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபை, ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் நான்காவது ஞாயிற்றுக்கிழமையை "உலக நதிகள் தினம்' என்று அறிவித்தது.

1995-செப்டம்பரில் சர்வதேச நதிகள் வலைத்தொடர்புக் குழுமம் (இன்டர்நேஷனல் ரிவர்ஸ் நெட்வொர்க்), இந்தியாவின் "நர்மதா நதியைக் காப்போம்' (நர்மதா பச்சாவோ ஆந்தோலன்) என்னும் இயக்கம், சிலி நாட்டின் "உயிரிகள் பாதுகாப்பு நடவடிக்கைக் குழு' (பயோபயோ ஆக்ஷன் குரூப்), ஐரோப்பிய நதிகள் வலைத்தொடர்புக் குழுமம் (யூரோப்பியன் ரிவர்ஸ் நெட்வொர்க்) உட்பட பல அமைப்புகள் ஒன்று கூடி பிரேசிலில் ஒரு கூட்டத்தை நடத்தினர். அவர்கள் பிரேசிலின் பெரிய அணைகளால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் தலைமையில் ஒரு சர்வதேச குழுவை உருவாக்கினர்.

அதில் பங்கெடுத்த "நர்மதா நதியைக் காப்போம்' எனும் இயக்கம், ஆதிவாசிகள், விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் எனப் பலரும் பெரிய நர்மதா திட்டங்களுக்கு எதிராக முன்னெடுத்த ஒரு சமூக இயக்கமாகும். அந்த இயக்கத்தின் மையப் புள்ளிகளில், குஜராத்தின் சர்தார் சரோவர் அணையும் ஒன்றாகும்.

1997 மார்ச் மாதத்தில் பிரேசிலில் உள்ள குரிடிபாவில், அணைகளால் பாதிக்கப்பட்ட மக்களின் முதல் சர்வதேசக் கூட்டம் நடத்தப்பெற்றது. அதன் தீர்மானத்தின்படி ஆறுகளின் அடிப்படை முக்கியத்துவத்தையும், காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வையும் பரப்புவதற்காக "ஆறுகளுக்கான சர்வதேச நதிகள் பாதுகாப்பு நாள்' ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 14 அன்று அனுசரிக்கப்படுகிறது.

2020-ஆம் ஆண்டு ஆறுகளுக்கான சர்வதேச நடவடிக்கை நாளின் கொள்கை வாசகமாக, "பெண்கள், நீர் மற்றும் காலநிலை மாற்றம்' என்று அறிவிக்கப்பட்டது.

ஆறுகள், காடுகள், நிலங்கள் ஆகியவற்றைப் பேணவும், நன்னீர் வளங்கள் தொடர்பாக அனைத்து நிலைகளிலும் முடிவெடுப்பதில் பெண்களின் தலைமையை உறுதிப்படுத்தவும், நதிகளைக் காப்பாற்றும் இயக்கத்தில் முன்னணியில் இருக்கும் பெண்களுக்கு ஆதரவு அளிப்பதே அந்த ஆண்டின் முக்கியக் குறிக்கோளாக இருந்தது.

2021-இல், நதிகளை தேசிய சொத்தாக அங்கீகரிக்கும் "நதிகளின் உரிமைகள்' என்ற வாசகம் கருப்பொருளாக இருந்தது. 2023-ஆம் ஆண்டு பல்லுயிர் பெருக்கத்திற்கு நதிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாக அமைந்தது. இந்த ஆண்டு (2024) "அனைவருக்கும் தண்ணீர்' என்ற கொள்கையில் கவனம் செலுத்துகிறது.

நாடு முழுவதும் ஏராளமான ஆறுகள் ஓடுவதால், இந்தியா நதிகளின் நாடாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் உள்ள ஆறுகளை வடக்கே இமயமலை ஆறுகள், தெற்கே தீபகற்ப ஆறுகள் என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். காரணம், இமயமலை ஆறுகள் வற்றாதவை. பனி உருகி ஓடும் நதிகள் அவை. அதே சமயம் தெற்கின் ஆறுகள் பருவ மழையையே நம்பியுள்ளன. வடக்கின் நதிகள், பனி மலையை நம்பி உள்ளன.

வற்றாத ஆறுகள் பல நூற்றாண்டுகளாக தெற்காசியாவின் வரலாறு, அரசியல், கலாசாரம் மற்றும் பொருளாதாரத்தை வடிவமைத்துள்ளன. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், பூடான், நேபாளம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியவை முக்கிய நதிகளைப் பகிர்ந்து கொள்கின்றன.

"சிந்து நதியின் மிசை நிலவினிலே தோணிகள் ஒட்டி விளையாட' கனவு கண்ட மகாகவி பாரதியாருக்கு அன்றைக்குத் தெரியாது, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சுதந்திரம் பெற்றதில் இருந்து பிரச்னை உண்டாகும் என்று.

1960-ஆம் ஆண்டு உலக வங்கியின் முன்னெடுப்பில் தயாரான ஒப்பந்தத்தின்படி சிந்து நதி அமைப்பில் இருந்து 20% நீர் இந்தியாவிற்கும், மீதமுள்ள 80% நீர் பாகிஸ்தானுக்கும் பகிர்ந்து வழங்கப்படுகிறது.

அண்டை நாட்டில் ஆங்காங்கே குறுக்கே அணைகள் எழுந்துவிட்டால் நேரும் சிக்கல்கள் வேறு மாதிரியானவை. இந்தத் திட்டத்தினை தேசிய அளவில், குறைந்த செலவில் விரைவில் இணக்கமாக நிறைவேற்றுவது உண்மையிலேயே பெரும் சவால்.

காரணம், சிந்துநதி, மேற்கு திபெத்தில் உருவாகிறது. காஷ்மீரின் சர்ச்சைக்குரிய பகுதி வழியாக வடமேற்கே பாய்கிறது. மேலும், பாகிஸ்தான் வழியாக தெற்கேயும் தென்மேற்காகவும் பாய்கிறது, கராச்சி துறைமுக நகருக்கு அருகில் அரபிக் கடலில் கலக்கிறது. இந்தியாவும் வங்கதேசமும் கங்கை, பிரம்மபுத்திரா உள்ளிட்ட 54 நதிகளைப் பகிர்ந்து கொள்கின்றன.

இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையிலான கங்கை ஒப்பந்தம் (1996) நீண்டகால இருதரப்பு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. ஆசியாவின் எல்லைக்குட்பட்ட இந்தியாவின் நீளமான கங்கை (2525 கி.மீ.), வங்கதேசம் வழியாகப் பாய்கிறபோது அதன் பெயர் "பத்மா' என்பதாம். அத்துடன் தீஸ்தா என்னும் ஆறு, இந்தியா, வங்கதேசம் வழியாகவும் பாய்கிறது.

இந்தியாவும் நேபாளமும் 1954, 1959, 1996 ஆகிய ஆண்டுகளில் முறையே கோசி, கண்டகி, மகாகாளி நதிகளின் நீர்ப் பங்கீடு, திட்ட மேம்பாடு தொடர்பான ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டன.

"அஸ்ஸôமின் உயிர்நாடி' என்று அறியப்படும் பிரம்மபுத்திரா (916 கி.மீ.) இந்தியா-சீனா பிராந்தியத்தில் மிகவும் சர்ச்சைக்குரிய நதி ஆகும். இது திபெத்தில் இமயமலையின் வடக்குப் பகுதியில் கைலாச மலைக்கு அருகில் உள்ள மானசரோவர் ஏரிப் பகுதியில் உருவாகிறது. திபெத்தில் இந்நதி யார்லுங் சாங்போ என்று அழைக்கப்படுகிறது.

கங்கை, யமுனா, பிரம்மபுத்திரா போன்ற இமயமலை ஆறுகள் மாசு பிரச்னைகளை எதிர்கொள்கின்றன. இதை சமாளிக்க, சதுப்பு நிலங்களை சரிசெய்வதோடு, நதி மாசுபாட்டைக் கையாள்வதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

நீர் மேலாண்மை, நதிகள் மேம்பாடு, கங்கையைப் புதுப்பித்தல் ஆகிய குறிக்கோளுடன் மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தை இந்தியா அமைத்துள்ளது. பொருளாதார வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழல் பராமரிப்புக்கும் இடையே சமன்பாட்டைக் கண்டறிய இத்துறை முயன்று வருகிறது.

காவிரி, கர்நாடகத்தின் குடகு அருகே, மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உருவாகி, கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு வழியாக வங்காள விரிகுடாவில் கலக்கிறது. குடிநீர், பாசனம் மற்றும் பிற தேவைகளுக்கு தண்ணீர் வழங்குவதால், இது கர்நாடகம் மற்றும் தமிழகத்தின் உயிர்நாடி என்று அழைக்கப்படுகிறது.

இதற்கிடையில் பல விவாதக் களங்களில் கங்கை-காவிரி இணைப்பு பற்றி வாய்வீச்சுகள் பரவி விட்டன. ஆயின் அதன் பின்னணியில் மூன்று முக்கிய தரவுகள் ஆய்வுக்கு உரியவை.

முதலாவதாக, புவியியல் ரீதியில் வடக்கு தாழ்ந்து இருக்கிறது. தக்காண பீடபூமி கடல் மட்டத்திலிருந்து 600 மீட்டர் உயர்ந்து இருக்கிறது. இதுவும் சிந்து-கங்கைச் சமவெளிகளைக் காட்டிலும் 300-350 மீட்டர் உயர்ந்த மேட்டுப்பரப்பாகவே இருக்கிறது.

அத்துடன் வடபுல, தென்புல சமவெளிகளுக்குக் குறுக்கே தடுப்பு மலையாக விந்திய மலைத்தொடர், குஜராத் முதல் வாரணாசி வரை 1,086 கி.மீ. நீளத்தில் உயரத்தில் படுத்துக்கிடக்கிறது.

விந்திய மலைகளின் மிக உயரமான இடம் "சத்-பாவ்னா ஷிகர்' (நல்லெண்ண சிகரம்). இது கடல் மட்டத்திலிருந்து 752 மீட்டர் உயரத்தில் உள்ளது. இமயமலை ஆறுகளை தெற்கு நதிகளுடன் இணைப்பதானால், தண்ணீரை உயர்த்திப் பாய்ச்சுவதோ ஆங்காங்கே மலைக்குகைகள் குடைந்து வழியுண்டாக்குவதோ மட்டுமே சாத்தியம். ஆனால், இது ஒரு மகத்தான தொழில்நுட்ப பிரச்னை.

இரண்டாவதாக, நதிகள் இணைப்பு வெவ்வேறு மாநிலங்கள் வழி வருவதால், பல தரப்பட்ட மக்களை அங்கிருந்து அகற்ற வேண்டி வரும்; அல்லது விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட வேண்டும். அவர்களின் இசைவினைப் பெறுவதற்கும் போதிய கால அவகாசம் தேவைப்படும். இது ஒரு சமூகவியல் பிரச்னை.

மூன்றாவதான பிரச்னை, தெற்கே கொண்டு வரப்படும் தண்ணீர் ஆலைக்கழிவுகளும், நச்சு நுரைகளும், இறந்தோரின் அஸ்தியும் அரைகுறைச் சடலங்களும் இல்லாமல் ஓரளவு தூயதாகவும் இருக்க வேண்டும். இது பன்முகத்தன்மை கொண்ட சிக்கலான மாசு கட்டுப்பாட்டு பிரச்னை.

அழிவுகரமான நீர் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு எதிராக ஒருமித்த குரல் எழுப்புவதும், நதி மேலாண்மை, நதி மாசுபாடு, நதி பாதுகாப்பு போன்றவற்றின் மூலம் நதிகளை காப்பாற்றவும் நாடெங்கிலும் உள்ள மக்களை ஒன்றிணைப்பதே இந்த "சர்வதேச நதிகள் பாதுகாப்பு நாளின்' முக்கிய நோக்கம் ஆகும்.

இன்று (மார்ச் 14)

சர்வதேச நதிகள் பாதுகாப்பு நாள்.

கட்டுரையாளர்:

இஸ்ரோ விஞ்ஞானி (ஓய்வு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com