இலங்கையின் புதிய அதிபராக ஜனதா விமுக்தி பெரமுன (மக்கள் விடுதலை முன்னணி) கட்சியின் தலைவர் அநுர குமார திசாநாயக கடந்த திங்கள்கிழமை பதவியேற்றுள்ளார். அந்த நாட்டில் இடதுசாரி தலைவர் ஒருவர் அதிபராகத் தேர்வு பெற்றுள்ளது இதுவே முதல் முறையாகும்.
கரோனா தீநுண்மி பரவலுக்குப் பிறகு அந்த நாட்டில் பிரதான வருவாய் அளிக்கும் தொழிலான சுற்றுலாத் தொழில் முடங்கியதையடுத்து கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அத்தியாவசிய பொருள்களின் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. அந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு கடனுதவி அளித்த சர்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) விதித்த நிபந்தனைகளால் விலைவாசி தாறுமாறாக ஆனதால் மக்கள் சொல்லொணா துயரத்தை அனுபவித்தனர்.
அதனால் பொங்கி எழுந்த பொதுமக்கள் பெரும் போராட்டத்தை 2022-ஆம் ஆண்டு முன்னெடுத்தனர். அதிபராக இருந்த கோத்தபய ராஜபட்ச ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார். அவரது மாளிகை சூறையாடப்பட்டது. ரணில் விக்ரமசிங்கவின் வீடு கொளுத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தில் அநுரகுமார திசாநாயகவின் ஜனதா விமுக்தி பெரமுன முக்கிய பங்கு வகித்தது. ஒரு வகையில், அந்தப் போராட்டத்தின் பலன்களை அநுரகுமார இப்போது பெற்றுள்ளார் எனலாம்.
2019-இல் முதல் முறையாக அதிபர் தேர்தலில் அநுரகுமார போட்டியிட்டார். அப்போது வெறும் 3% வாக்குகள் மட்டுமே பெற்று கோத்தபயவிடம் தோல்வி அடைந்தார். இப்போது இரண்டு சுற்று வாக்கு எண்ணிக்கைக்குப் பின்னர் 57.40 லட்சம் வாக்குகள் பெற்று கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சி வந்த ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, மகிந்த ராஜபட்ச ஆகியோரது கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளி அநுரகுமார திசாநாயக வெற்றி பெற்றது மக்கள் மாற்றத்தை விரும்புவதன் அறிகுறியாகும்.
ஊழல் ஒழிப்பு, பொருளாதார மீட்சி ஆகியவற்றை முன்னிறுத்தி அநுரகுமார பிரசாரம் மேற்கொண்டார். ஏற்கெனவே ஆட்சியில் இருந்த கட்சிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்ததால், கடந்த தேர்தலில் வெறும் 3% வாக்குகளைப் பெற்ற அநுரகுமார இப்போது இரண்டு சுற்றுகளையும் சேர்த்து 56% வாக்குகள் பெற்றுள்ளார்.
ஜனதா விமுக்தி பெரமுன வன்முறையில் தொடங்கி ஜனநாயக நடைமுறைக்கு மாறிய கட்சியாகும். உலகின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையைப் பெற்ற சிறிமாவோ பண்டாரநாயக ஆட்சிக் காலத்தில் 1971-இல் ஜனதா விமுக்தி பெரமுன ஆயுதம் தாங்கிய கிளர்ச்சியில் ஈடுபட்டது. அப்போது சுமார் 20,000 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். இந்தக் கிளர்ச்சியை இலங்கை அரசு அடக்கிவிட்டது.
அதன் பின்னர், அந்த நாட்டில் சிறுபான்மையினரான தமிழ் மக்களுக்கு அதிகாரம் அளிக்க இந்தியா - இலங்கை அரசுகள் 1987-இல் ஒப்பந்தம் செய்துகொண்டபோது தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்கக் கூடாது என்று அந்தக் கட்சி கிளர்ச்சியில் ஈடுபட்டது. சிறுபான்மைத் தமிழரின் அரசியல் தன்னாட்சிக் கோரிக்கைக்குத் தீர்வு காண்பதில் இந்தியா நேரடியாகத் தலையிட்டது. இந்த தலையீடு இறையாண்மைக்கு இழைத்த துரோகம் என்று கருதி, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை ஜேவிபி எடுத்தது.
1994-இல் வன்முறைப் பாதையைக் கைவிட்டு ஜனநாயகப் பாதைக்குத் திரும்பி தேர்தல்களில் பங்கெடுக்கத் தொடங்கியது. கம்யூனிஸ்ட் கட்சி என்பதால் கொள்கை ரீதியாகவே சீனாவுக்கு நெருக்கமாகவே ஜனதா விமுக்தி பெரமுன இருக்கும் என்பது பொதுவான கருத்தாகும்.
இதற்கு முன்பு, தங்கள் நாட்டு பால் நிறுவனங்களுக்கு கேடு விளைவிக்கும் என்பதால் அமுல் நிறுவனம் இலங்கையில் வர்த்தகத்தில் ஈடுபட அநுரகுமார எதிர்ப்பு தெரிவித்தார். காற்றாலை நிறுவனம் தொடங்க அதானி குழுமத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வேன் என்றார்.
இவரது எழுச்சியை மோப்பம் பிடித்ததாலோ என்னவோ, அவருக்கு இந்தியா அழைப்பு விடுத்தது. இந்த அழைப்பை ஏற்று கடந்த பிப்ரவரியில் புது தில்லிக்கு வந்த அநுரகுமார வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் ஆகியோரை சந்தித்தார்.
பிரபலமாகத் தொடங்கிய பின்னர் அவரது நிலைப்பாட்டில் சிறிய மாற்றங்களைக் காண முடிகிறது. தனியார்மயத்தை தான் முழுமையாக எதிர்க்கவில்லை என்றும், மற்ற நாடுகளுக்கு எதிராக இலங்கையை பயன்படுத்த எந்த நாட்டையும் அனுமதிக்க மாட்டேன் என்றும் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.
கடந்த 2022-ஆம் ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கித் தவித்தபோது, உடனடியாக ஆதரவுக் கரம் நீட்டியது சீனா அல்ல, இந்தியாதான் என்பது அவர் அறியாததல்ல. இலங்கை முழுமையாக இந்தியாவைப் புறக்கணிப்பது என்பது சாத்தியமல்ல.
நடந்து முடிந்த தேர்தலில், தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்கும் 1987 ஒப்பந்தம் குறித்து சஜித் பிரேமதாச தவிர எவரும் வாக்குறுதி அளிக்கவில்லை. தமிழர்கள் அதிகம் வாழும் மாவட்டங்களில் சஜித் பிரேமதாச சுமார் 42% வாக்குகளும், அநுரகுமார 15% வாக்குகளும் பெற்றுள்ளனர்.
பொதுவாக இந்தியாவுக்கு சாதகமாக கருதப்பட்ட ரணில் விக்ரமசிங்க ஆட்சியில் இருந்தபோதே தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கதையாகவே இருந்தது. சமீபகாலமாக மீனவர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுவருகிறது.
உள்நாட்டில் கடும் நெருக்கடி, ஆட்சி செய்து அனுபவம் இல்லாதது போன்றவற்றை எதிர்கொள்ளும் அநுரகுமார அந்த நாட்டில் உள்ள தமிழர்களின் பிரச்னைகளுக்கும், தமிழக மீனவர்களின் பிரச்னைகளுக்கும் எவ்வாறு தீர்வு காணப் போகிறார் என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும்.