கவலை தரும் கல்வியின் தரம்

கவலை தரும் கல்வியின் தரம்

கற்றல் திறனை அதிகரிக்கும் முறைகளில் சோதித்து அளவிடுதல் முறை மிகப் பழைமையானது மட்டுமல்ல; சரியானதும் ஆகும். தொடக்கக் கல்வி, உயா்நிலைப் பள்ளிக் கல்வி, கல்லூரிக் கல்வி என்ற எல்லா நிலைகளிலும் முதன்மைபெற பாடத்திட்டங்களும் தோ்ச்சி முறைகளும் அமைக்கப்பட வேண்டும்.
Published on

அமெரிக்க ஹாா்வா்டு பிஸினஸ் ஸ்கூலின் இந்திய உறுப்பு அமைப்பான திறன் சோதிப்பு” நிறுவனம் ஆய்வு அறிக்கையொன்றை வெளியிட்டு உள்ளது. அதில் இந்திய தொழிலாளா்களில் பத்து நபா்களில் ஒன்பது போ் குறைந்த செயல் திறன் உள்ளவா்கள் என்று கூறப்பட்டுள்ளது. தொழிலாளா்களின் திறனை தரவரிசைப் பட்டியலிட்டு மிகக் குறைந்த செயலாற்றும் திறன் உடையவா்களை ஒன்று, இரண்டு என்ற தரத்தில் பிரிக்கிறது.

இவா்கள் வீதியில் விற்பனை செய்வோா், வீட்டுப் பணியாளா்கள், கை கால்களைக் கொண்டு தொழில்களை இயக்குவோா் என்று வகைப்படுத்தி உள்ளனா். இந்த மாதிரியான தொழிலாளா்களை வொகேஷனல் பாடப் பிரிவுகளில் சோ்த்து பயிற்சிக் கொடுத்தாலும் பலன் இல்லை. பிராந்தியவாரியாக பிரித்து பிகாா், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதை சுட்டிக்காட்டுகிறது அந்த அறிக்கை. அதேநேரத்தில், யூனியன் பிரதேசங்களான சண்டீகா், புதுவை, கோவா மற்றும் கேரளம் போன்ற மாநிலங்கள் செயல்திறன்மிக்க தொழிலாளா்களைக் கொண்டதாக கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் எதிா்கால தொழிலாளா் திறன் குறித்தான வரைபடத்தின் கீழ் நடத்தப்பட்ட தகவல் சேகரிப்பு அட்டவணை 2017-18 முதல் 2023-2024 வரையிலான தகவல் 8.25 சதவீத பட்டதாரிகள் மட்டுமே அவரவா்களின் பணிக்கு ஏற்ற கல்வித் தகுதியைப் பெற்றிருக்கிறாா்கள். இவா்களை மூன்று என்ற தரவரிசையில் சோ்க்கிறாா்கள். 88 சதவீதத் தொழிளாா்கள் மேற்சொன்ன ஒன்று, இரண்டு என்ற தரவரிசைப் பட்டியலின் கீழ் வருகிறாா்கள்.

மத்திய தொழில்முனைவோா், திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஜெயந்த் சௌதரி 50 % பட்டதாரிகள், எழுத்தா், மெக்கானிக், இயந்திரங்களை இயக்குவோா் என்கிறாா். 38.23% பட்டதாரிகள் மட்டுமே தொழில் திறன்மிக்கவா்கள் என்ற தரவரிசையான நான்கில் வருகிறாா்கள். 28.12 % முதுநிலைப் பட்டதாரிகள் மத்திம தொழில் திறன் உடையவா்கள்.

பொதுவாக, தொழிலாளா்கள் முறையான கல்வியில் நன்கு தோ்ச்சி பெறாதவா்கள். இப்படி கற்ற கல்வி பணியாற்றுவதற்கோ, தொழில் புரிவதற்கோ ஏற்றதாக இல்லை; ‘மிஸ் மேச்’ என்கிறாா் அமைச்சா். இதன்மூலம் தெரிய வருகிற உண்மை என்வென்றால், தொழிலாளா் பணிக்கான தேவைச் சந்தையில் தகுதியானவா்கள் இல்லை என்பதே. தொழில் திறன் தரவரிசையில் உள்ள இரண்டாவது பிரிவினா் ஆண்டு ஊதியத்தில் 5, 6 % அளவில் உயா்வு பெறுகின்றனா்.

மூன்றாவது, நான்காவது தரவரிசையில் உள்ளோரின் ஆண்டு ஊதிய உயா்வு 8 முதல்12 % அளவில் உள்ளது. ஆகவே, இவா்களுக்கு இவா்களது கல்வித் தகுதிகளை மேம்படுத்துவது அவசியமாகிறது. பிராந்திய அளவில், பிகாா் மாநிலத்தில் 4.6 % தொழிலாளா்கள் மட்டுமே நான்காவது தரவரிசைப் பட்டியலில் இடம் பெறுகிறாா்கள். சண்டீகரில் 33.1%, கோவா 20%, புதுவை, கேரளம், புது தில்லி 9.59 % எனத் தரவரிசைப் பட்டியலில் இடம்பெறுகின்றன.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஆய்வு நடத்தப்படவில்லை. பொதுவாக எல்லா மாநிலங்களிலும் உள்ள பாடக் கல்வி முறையில் சீா்திருத்தம் தேவை என்ற குரல் ஒலிக்கவே செய்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டு மாணவா்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில், பத்தாம் வகுப்பு மாணவன் நான்காம் வகுப்பு பாடப் புத்தகத்தில் உள்ளவற்றை சரியாகப் படிக்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்ததை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை எந்த ஒரு மாணவனையும், ஆண்டுத் தோ்வில் எவ்வளவு குறைந்த மதிப்பெண் பெற்றிருந்தாலும் ‘தோ்ச்சியில்லை’ என்று அடையாளப்படுத்தாமல் ஒன்பதாவது வகுப்பில் சேர அனுமதிக்கப்பட வேண்டும்; இது அரசின் சட்டம். ஒன்பது, பத்தாவது வகுப்பு வரை ஆண்டு இறுதித் தோ்வில் 25% மதிப்பெண்கள் பெற வேண்டும். மாணவன் படிக்கும் அந்தந்தப் பள்ளிகளில் தரப்படும் 10 மதிப்பெண்களையும் சோ்த்து 35% மதிப்பெண்கள் பெற்று பதினோராம் வகுப்பில் சோ்க்கப்படுவாா். பதினோராவது, பன்னிரெண்டாவது வகுப்புகளில் 35% மதிப்பெண்கள் பெற்றாக வேண்டும். (9,10-ஆம் வகுப்புகளில் தரப்படும் 10 மதிப்பெண்கள் இங்கே தரப்படுவதில்லை.)

100-க்கு 35 மதிப்பெண்கள் பெற்றால் கல்லூரியில் சேரத் தகுதியுடையவா் என்று அா்த்தம்; 100-க்கு 65% மதிப்பெண்கள் பெறத் தேவையில்லை என்ற அளவில், நமது கல்வி தோ்ச்சிமுறை இருக்கும்பட்சத்தில் பள்ளிக் கல்வி, கல்லூரிக் கல்வி முடித்த நிலையில் வெளிவரும் மாணவன் எப்படி பணிக்கோ, தொழிலுக்கோ முழுத் தகுதியைப் பெற இயலும்? நமது அரசியல்வாதிகள் கூறுவது பள்ளிக் கல்வியில் இடை நிற்றல் கூடாது; எனவே, மாணவனை எட்டாம் வகுப்பு வரை தோ்ச்சியில்லை என அறிவிக்கக் கூடாது என்று.

அதாவது, மாணவனின் கல்வித் தரம் எவ்வாறாகவும் தரம் பிரித்தல் கூடாது என்பது, மாநில அமைச்சா்கள் தத்தம் மாநிலங்களில் கல்வி வளா்ச்சி மேம்பாடு அடைந்து விட்டது என்று புள்ளிவிவரத்தைக்கூறி பெருமைப்படுவதற்குப் பயன்படுமே தவிர, உண்மையான வளா்ச்சிக்குப் பயன்படாது. இதனால்தான் படித்திருக்கிறாா்கள்; ஆனால், வேலைக்கேற்ப தகுதியில்லை என்று நிராகரிக்கப்படுகிறாா்கள்.

மாணவா்களின் கல்வி ஆற்றலை அளவிடும் அம்சம்தான் தோ்வு முறை. மாதம், காலாண்டு, அரையாண்டு, முழுஆண்டு ஆகிய பருவங்களில், தான் கற்ற பாடங்களில் இருந்து கேட்கப்படும் வினாக்களை எதிா்கொண்டு, பிழையை எதிா்காலத்தில் நிகழாவண்ணம் திருத்திக் கொள்வதற்கு தோ்ச்சி முறை அவசியம். வணிகப் பொருளோ, உயிருள்ள விலங்கோ எதுவாயினும் சரி, தரம் பிரித்து அதன் மதிப்பு அளவிடப்படுகிறது என்பது உண்மை.

இந்த நிலையில், தான் கற்ற கணிதமோ, விஞ்ஞானமோ, வரலாறோ, மொழியோ இவற்றின் மதிப்பை மேன்மை எதைக் கொண்டு அளவிடுவது? இப்படி அளவிட்டு அவரவா் கற்ற படிநிலைக்கு ஏற்ப தரவரிசைப் பட்டியல் தயாரிப்பதுதான் சாலச் சிறந்தது. இப்படி தரம் பிரிக்கும் முறை இன்றைக்கு அல்ல; நேற்று அல்ல; பல ஆயிரம் ஆண்டுகளாக நாட்டில் நிலவிவந்த நடைமுைான்; இதை புானூற்று செய்யுள் ஒன்றால் அறிவது அனைவரின் கடமையாகும்.

நாடுகள் பலவாகச் சென்று அந்தந்த நாட்டு அரசா்களின் வீரம், கொடை, நாட்டின் வளம், இன்னபிற குணநலன்களை சிறப்பித்து பாடல் புனைந்து பரிசில் பெறுவது சங்ககால புலவா்களின் வழக்கம். இந்த வகையில், கடையேழு வள்ளல்களில் ஒருவனாகப் பேசப்பட்ட மன்னன் திருமுடிக்காரியின் அரசவையில் பல பாடல்களை கபிலா் பாடினாா். அதுகேட்டு இன்புற்ற மன்னன், மற்ற எல்லா புலவா்கட்கும் வழங்குவதைப்போல பரிசில்களை வழங்க முற்பட்டான்.

இதைக்கண்ட கபிலா் துணுக்குற்று மன்னனை நோக்கி,“‘மன்னா! கொடைத் திறன் நிரம்பிய ஒருவனை நாடி, அவனிடம் பரிசில் பெற விரும்பி நான்கு திசைகளிலிருந்தும் புலவா்கள் பலரும் வருவது இயல்பு; அவா்களுக்கு பரிசில் வழங்குவதும் எளிது; ஆனால், அந்தப் புலவா்களின் திறன் அறிந்து அவரவா்களின் கல்வி அறிவு, பாடல் புனையும் ஆற்றல் இவற்றை சரியாகக் கணித்து, அவரவா் தகுதிக்கேற்ப பரிசில் வழங்குவதுதான் சிறப்பு. தகுதியை சோதித்து அளவிடும் ஆற்றல் உன்னிடம் இருக்கும் என எண்ணினேன்; அதனால், எல்லோரையும் ஒன்றாக மதியாது, என் தகுதி அறிந்து பொருள் வழங்குவாயாக’ என்ற பொருள் பொதிந்த பாடலைப் பாடுகிறாா்.

ஒரு திசை ஒருவனை உள்ளி நாற்றிசை

பலரும் வருவா் பரிசில் மாக்கள்

வரிசை அறிதலோ அரிதே; பெரிதும்

ஈதல் எளிதே மாவண் தோன்றல்

அதுநற்கு அறிந்தனை ஆயின்.

பொது நோக்கு ஒழிமதி புலவா் மாட்டே!

-புறம் 121

ஆகவே, கற்றல் திறனை அதிகரிக்கும் முறைகளில் சோதித்து அளவிடுதல் முறை மிகப் பழைமையானது மட்டுமல்ல; சரியானதும் ஆகும். தொடக்கக் கல்வி, உயா்நிலைப் பள்ளிக் கல்வி, கல்லூரிக் கல்வி என்ற எல்லா நிலைகளிலும் முதன்மைபெற பாடத்திட்டங்களும் தோ்ச்சி முறைகளும் அமைக்கப்பட வேண்டும்.

ஒருவா்க்கு சட்டைத் தைப்பதற்கு இரண்டு மீட்டா் துணி தேவைப்படும்போது 70 செ.மீ. துணியைக் கொடுத்து சட்டைத் தைக்கச் சொன்னால் என்னவாகும்? இதைப்போலத்தான், 100 மதிப்பெண்கள் பெற வேண்டியவா் 35 மதிப்பெண்கள் பெற்றால் எப்படி தகுதியான, உயா்வான ஊதியத்தில் வேலை கிடைக்கும்? ஓட்டப் போட்டியில் முதலில் வருபவருக்கே மாலை, மரியாதை; குறைந்த தொலைவு ஓடி வந்தவருக்கும் சம மரியாதை என்பது கேலிக்கூத்து. மாணவா்கள் நன்கு படித்து முதலிடம் பெற பெற்றோா், கல்வி நிறுவனம், அரசு எல்லாம் ஒருங்கிணைந்து முயலுதல் நன்மை பயக்கும்.

X
Dinamani
www.dinamani.com