வரலாறு மன்னிக்காது!

இந்தியா- பாகிஸ்தான் மோதலை முடிவுக்குக் கொண்டு வந்தேன் என தொடர்ச்சியாகக் கூறிவரும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பைப் பற்றி...
அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பிரதமர் மோடி.
அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பிரதமர் மோடி.
Published on
Updated on
3 min read

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா- பாகிஸ்தான் மோதலை வர்த்தகத்தை முன்வைத்து நான்தான் முடிவுக்குக் கொண்டு வந்தேன் என தொடர்ச்சியாகக் கூறிவரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தற்போது இந்தியப் பொருள்களின் மீது 25% வரி விதித்திருக்கிறார்.

ஏற்கெனவே, ஆப்பிள் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்களிடம் தங்களின் தொழிற்சாலைகளை இந்தியா உள்ளிட்ட நாடுகளில் நிறுவக் கூடாது என எச்சரித்து வந்த டிரம்ப், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை அந்த நாட்டின் பொருளாதாரத்துக்கும், உக்ரைன் போருக்கு இந்தியா மறைமுக ஆதரவு வழங்குவதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்தார். அதை இந்தியா நிறுத்தாவிட்டால், வரியை மேலும் அதிகரிப்பேன் என்று டிரம்ப் கூறிவந்த நிலையில், அடுத்த 24 மணி நேரத்திலேயே இந்தியா மீதான வரியை மேலும் 25% உயர்த்தி, 50% அதிகரித்திருக்கிறார்.

ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா வாங்கி வருவதால், அதற்கு அபராதமாக இந்த 25% வரியை உயர்த்தியிருப்பதாக டிரம்ப் அறிவித்திருக்கிறார். இந்த அபராத வரி விதிப்பு அடுத்த 21நாள்களில் நடைமுறைக்கு வருவதாகத் தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் பிரேசிலுக்கு அடுத்தபடியாக, அமெரிக்காவால் 50% வரி விதிப்புக்கு உள்ளான நாடாக இருக்கிறது இந்தியா.

ஒரு நாடு எந்த நாட்டுடன் வர்த்தகம் செய்ய வேண்டும் என்பது அந்நாட்டின் உரிமை. அதை யாரும் கட்டுப்படுத்தக் கூடாது. டிரம்ப்பின் இந்த நடவடிக்கை நியாயமற்றது; காரணமற்றது.

ரஷியாவிடம் இருந்து நாம் கச்சா எண்ணெய் வாங்குகிறோம்; ஆனால், ரஷியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்திருக்கிறது. இதற்கு உக்ரைன் மீதான போர்தான் முக்கியக் காரணம். நம் நாட்டின் கச்சா எண்ணெய் தேவையில் 36% முதல் 38% வரை ரஷியாதான் நிறைவு செய்கிறது.

ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என்று டிரம்ப் கூறிவந்த நிலையில், இந்தியா அதை ஏற்கவில்லை. தேச நலன்தான் முக்கியம் என்று இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டது.

இந்தியாவுக்கு 50% வரியை விதித்திருப்பது, நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கான ஏற்றுமதியை மொத்தமாக முடக்கியுள்ளது. இது ஒருபுறம் இருக்க, இந்த உத்தரவின் மூலமாக உலகிலேயே அதிகப்படியான வரிகளை இந்தியாவுக்குத்தான் டிரம்ப் விதித்திருக்கிறார். இதேபோன்ற தாக்குதலைப் பிரேசிலும் சந்தித்து வருகிறது. நம் நாடும், பிரேசிலும் நட்பு நாடுகளாகும். இரு நாடுகளும் பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ளது.

அமெரிக்க டாலருக்கு எதிராக பிரிக்ஸ் கரன்சியை உருவாக்க வேண்டும் என்று பிரேசில் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், டிரம்ப் அந்த நாட்டுக்கு 50% வரி விதித்திருக்கிறார். தற்போது ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரத்தில் நம் நாட்டுக்கும் அதிக வரியை விதித்திருக்கிறார். இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் நாடு ஸ்விட்சர்லாந்து. இந்த நாட்டுக்கு 39% வரியை விதித்துள்ளார். மூன்றாவதாக இரண்டு நாடுகள் உள்ளன; ஒன்று கனடா, இன்னொன்று இராக்.

இந்த இரண்டு நாடுகளுக்கும் 35% வரியை விதித்திருக்கிறார். இதில் கனடா, அமெரிக்காவின் அண்டை நாடாகும். கனடாவை அமெரிக்காவின் 51-ஆவது மாகாணமாக டிரம்ப் இணைக்கும் ஆசையைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதுதொடர்பாக, இரு நாடுகளுக்கும் இடையே கடும் பிரச்னை ஏற்பட்டு வரும் நிலையில், கனடாவைப் பழி தீர்க்க 35% வரியை டிரம்ப் விதித்து, தீராப் பழியைத் தீர்த்திருக்கிறார்.

இந்தப் பட்டியலில் அமெரிக்காவின் பரம எதிரியான சீனா 4-ஆவது இடத்தில்தான் உள்ளது. சீனாவுக்கு தொடக்கத்தில் டிரம்ப் அதிரடியாக வரிகளை விதித்தார். சீனாவும் போட்டி போட்டுக் கொண்டு வரிகளை உயர்த்தியது. இதனால், மூச்சடைத்துப் போன டிரம்ப் சீனாவுக்கான வரியைத் தற்காலிகமாக நிறுத்தி ஒரு பின்னடைவைச் சந்தித்தார். இருப்பினும், சீனாவுக்கு தற்போது டிரம்ப் 30 % வரியை விதித்துள்ளார். இப்படி அமெரிக்காவுக்கு எதிராக உள்ள சீனா, கனடாவைக் காட்டிலும் இந்தியாவுக்கு 50% கூடுதல் வரியை விதித்திருப்பது, நமக்கும், அமெரிக்காவுமான உறவில் ஒரு பெரும் விரிசலை ஏற்படுத்தி விட்டார்.

இந்தியா இதற்கு கிஞ்சிற்றும் அசைந்து கொடுக்கவில்லை. தேச நலனுக்காக இந்தியா எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்காவின் வர்த்தகத்துக்கு எதிரான இந்தத் தாக்குதல் மக்களுக்கு எதிரான தாக்குதல் என்றும், இந்த நியாயமற்றப் போக்கை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது என்றும், 140 கோடி இந்திய மக்களைக் கொண்ட இந்தியா தனது சொந்த நாட்டைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும் பதிலடி கொடுத்திருக்கிறது.

இந்தியாவுக்கான சீனத் தூதர் சூ ஃபீஹாங் தனது சமூக வலைத்தளப் பதிவில், "ஒருவரது பேராசைக்கு அடிபணிந்தால் அவர் மீண்டும் மீண்டும் நம்மை மிரட்டி ஆதாயம் அடைய முயற்சி செய்வார். இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடிப்பார்' என்று தெரிவித்திருக்கிறார். "வரி விதிப்புகளை ஆயுதமாகப் பயன்படுத்தி உலக நாடுகளை அடிபணிய வைப்பதற்கான முயற்சி இது; ஐ.நா. மற்றும் உலக வர்த்தக அமைப்புக்கு எதிரான இத்தகைய செயல்கள் என்றும் நிலைத்திருக்காது' என்று மிகக் காட்டமாக சீன அமைச்சர் வாங்யி தெரிவித்திருக்கிறார்.

வேளாண் பொருள்களை இந்தியாவில் அமெரிக்கா சந்தைப்படுத்த மற்றும் மீனவர்கள், கால்நடை வளர்ப்போர் நலனில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது. அவர்களது நலனை ஒருபோதும் விட்டுத்தராது. அதற்காக எந்த விலையும் கொடுக்கத் தயாராக இருக்கிறோம் என்று பிரதமர் மோடி உறுதிபடத் தெரிவித்து விட்டார். அமெரிக்காவில் இருந்து பால், பாலாடைக்கட்டி ஆகியவற்றை இந்தியாவில் இறக்குமதி செய்ய அந்த நாடு விரும்புகிறது. இது இந்திய விவசாயிகளின் நலனுக்கு எதிரானது என்பதால், அமெரிக்க பால்பொருள்களுக்கு அனுமதி வழங்க மத்திய அரசு மறுத்து விட்டது.

இதுபோல் அமெரிக்காவில் இருந்து பருத்தி, சோளம், கோதுமை, சோயா பீன்ஸ் மற்றும் கொட்டை வகைகளை இந்தியாவில் விற்பனை செய்யவும், அந்த நாடு அனுமதி கோரி வருகிறது. அதோடு மரபணு மாற்றம் செய்யப்பட்ட, உணவு தானியங்களையும், இந்தியாவில் விற்பனை செய்ய அமெரிக்கா விரும்புகிறது. அதற்கும் மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை. கச்சா எண்ணெயை ரஷியாவிடம் இருந்து பெறக்கூடாது என்றும், அமெரிக்க நிறுவனங்களிடம் மட்டுமே இறக்குமதி செய்ய வேண்டும் என்றும் டிரம்ப் நிர்பந்தம் தெரிவித்திருக்கிறார்.

இதில் அமெரிக்காவின் அழுத்தத்தை மீறி ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா தொடர்ந்து கொள்முதல் செய்து வருகிறது. உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடு இந்தியாதான் என்றும், இந்தியா நட்பு நாடு என்றால் வர்த்தகத்தில் நல்ல உறவு இல்லை என்று முன்பே சொன்னார் டிரம்ப். இந்தியா, ரஷியாவுடன் சேர்ந்து என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். அதைப்பற்றி எனக்கு கவலையில்லை.

இந்தியா, ரஷியா பொருளாதாரம் சிதைந்து போய்விட்டால், இரு நாடுகளின் பொருளாதார வளம் முற்றிலுமாக அழித்தொழிக்கப்படும் என்பதற்கான இந்த மிரட்டல் போக்கில் டிரம்ப் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் 140 கோடி மக்களும் விழிப்போடு எதிர்கொள்ள வேண்டும் என்பதே இப்போதைக்கான நமது நிலை.

2024-ஆம் நிதியாண்டில் நாம் அமெரிக்காவுக்கு 7.6 லட்சம் கோடி ரூபாய்க்கு பொருள்களை ஏற்றுமதி செய்தோம். ஆனால், அமெரிக்கா நமக்கு 3.6 லட்சம் கோடி பொருள்களை மட்டுமே விற்பனை செய்தது. அதன்படி பார்த்தால், இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தகத்தில் ரூ.4 லட்சம் கோடி வரை அதிகம் வர்த்தகம் செய்துள்ளோம்.

இவை டிரம்ப்பின் கண்ணை உறுத்துகிறது. தங்களிடம் ஆண்டுதோறும் அதிகமான பொருள்களை விற்பனை செய்யும் இந்தியா, எதிரியான ரஷியாவிடம் கூடுதல் பொருள்களை இறக்குமதி செய்வதை டிரம்ப்பால் தாங்க முடியவில்லை. இதனால்தான் டிரம்ப் பதவியேற்ற பிறகு, வெள்ளை மாளிகையில் அவரைச் சந்தித்த மோடியிடம், அமெரிக்கா ராணுவத் தளவாடங்களை இந்தியாவுக்கு தரத் தயாராக இருக்கிறது என்றும், ஐந்தாம் தலைமுறையைச் சேர்ந்த எப்35 ரக போர் விமானங்களைத் தருகிறோம் என்று வலிய முன்வந்தார்.

இவை அனைத்தும் ரஷியாவுடனான நம் வர்த்தகத்தை முடக்கும் வகையில், டிரம்ப் செய்த சூழ்ச்சியாகும். ஆனால், அமெரிக்காவைவிட ரஷியாதான் முக்கியம் என்று நம் நாடு எப்35 ரக போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக அமெரிக்காவுக்கு எந்த உத்தரவாதத்தையும் வழங்கவில்லை.

இது டிரம்ப்புக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த 4 லட்சம் கோடி ரூபாய் வர்த்தக உபரியை எப்படியாவது டிரம்ப் சரி செய்துவிட வேண்டுமென்று துடிக்கிறார். இதனால்தான் இந்தியாவை ஒருவழிக்குக் கொண்டு வரவேண்டுமென்று கூடுதல் வரியைத் திணித்திருக்கிறார். டொனால்டு டிரம்ப், ஜனநாயகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்க அதிபரா அல்லது வியாபாரியா என்பது கேள்விக்குறியாய் இருக்கிறது. தம் மக்கள்போல் பிறரையும் நேசிக்காத ஓர் அதிபர் வரலாற்றால் தூக்கி எறியப்படுவார்.

கட்டுரையாளர்: முன்னாள் அமைச்சர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com