

அண்மையில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இரண்டு வகையான கைகழுவும் பேசின்கள் அமைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தேன். அதாவது, பெரியவர்களுக்கான உயரத்தில் ஒன்றும், சிறுவர்கள் பயன்பாட்டுக்கு உதவும் வண்ணம் ஒன்று என்பதாக அவை அமைக்கப்பட்டிருந்தன. ஏற்கெனவே தனியார் உணவு விடுதிகளில் இப்படிப்பட்ட அமைப்புகளைக் காண இயன்றது. முதன்முறையாக ரயில் நிலையத்தில் இதைக் கண்டபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பாக, அமெரிக்க நகரத்தின் தெருக்களின் கடைகளில் குழந்தைமையை கல்வியாளர் ஜான் டூயீ குழந்தைகள் பயன்படுத்தும் வகையிலான துண்டுகள், மேசைகள் போன்ற பொருள்களைக் கண்டறியத் தேடினாராம். அப்போது, அவருக்கு அவ்வாறான பொருள்கள் தென்படவில்லை எனப் புலம்பியிருப்பார். அதாவது, பெரியவர்களுக்கான உலகையே சிறிதாக்கி அதையே குழந்தைகள் பயன்படுத்திக் கொள்ளவே உலகம் முயன்றிருக்கிறது. இந்தியக் கலாசாரத்தில் நடைவண்டி கிலுகிலுப்பை, பாலாடை, கிண்டி போன்ற அம்சங்கள் உண்டு. அந்த வகையில், உலகம் முழுவதுமே குழந்தைகள் மையமான பொருள்கள் குறித்த தேடல்கள் இருப்பது கண்கூடு.
இன்றைய நுகர்வுமய உலகில் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருள்கள், பொம்மைகள் போன்றவை அதிக அளவில் தயாரிக்கப்படுவதையும் விற்பனையாவதையும் காண முடிகிறது. குறிப்பாக, 2000 ஆண்டுகளுக்குப் பிறகான காலகட்டங்களில் மின்னணு சாதனங்கள் தொடர்புடைய விளையாட்டுச் சாதனங்கள் நுழைந்தன. மின்னணு மூலம் வடிவமைக்கப்பட்ட விளையாட்டுக்களை விளையாடவே கணினி மையத்துக்கு குழந்தைகள் சென்ற காலம் உண்டு.
பிற்காலங்களில் இவ்வாறான விளையாட்டுகள் கைப்பேசியில் நுழைந்தன. இன்றைக்கு அறிதிறன்பேசியிலே உலகெங்கிலும் இருப்போர் குழுவாக விளையாடும் வாய்ப்பு வரை பெருகியுள்ளது. குழந்தைகளும் விளையாட்டுகளும் பிரிக்க இயலாதைவை என்ற வகையில் இவ்வாறான கூறுகளை உலகம் முழுவதும் எச்சரிக்கை உணர்வுகளுடன் அணுகிவருகிறது.
இவை ஒருபுறம் என்றால், மறுபுறம் குழந்தைகளின் கல்வி, ஆற்றல்படுத்துதல் போன்ற கூறுகளும் காலத்துக்கேற்ற மாற்றங்களை அடைந்து வருகின்றன. பாடத்திட்டங்கள், கற்பித்தல் முறைகள் மதிப்பீட்டு முறைகள் போன்றவற்றில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதைப் பாராட்டும் அதே வேளையில் இன்றைய குழந்தைகளின் தலைமுறை இடைவெளியை உணர்ந்து இவற்றில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
குழந்தைகளின் கல்வி தொடர்பான சில கோட்பாடுகளின் பரிணாம வளர்ச்சியுடன் இவற்றைப் பொருத்திப் பார்ப்பது சரியாக இருக்கும். குழந்தைகளின் நடத்தைகளில் ஆரோக்கியமான மாற்றங்களை அவர்களுக்கான செயல்பாடுகளைப் பாராட்டுவது தண்டிப்பது போன்றவற்றால் நடைபெறும் என்று சில கல்வி உளவியலாளர்கள் கருதினர். ஜான் பி வாட்சன், பி. எஃப். ஸ்கின்னர், பாவ்லோவ் போன்றவர்கள் இவர்களில் குறிப்பிடத்தக்கவர். பாராட்டு என்பதில் தவறில்லை. ஆனால், இதன் மறுபக்கமாக தண்டனைகள் என்பதும் வந்தபோது குழந்தைகளுக்கு உடல் ரீதியான தண்டனைகள் அளிப்பதும் அரங்கேறின. மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது இது சரியானதாகவே தோன்றும்.
பல குழந்தைகள் தண்டனைக்குட்படுவதும், அதைக் கண்ணுறும் மற்ற குழந்தைகள் பயத்துக்கு உள்ளாவதும் இதனால் பள்ளியை, கல்வியை வெறுக்கும் சூழலுக்கு தள்ளப்படுவதும் தவிர்க்க இயலாததானது.
குழந்தைகளுக்கு அவர்களின் போக்கில் இயல்பாக வாழக் கற்பிப்பதன் மூலம் அவர்களைச் சரியாக வழிநடத்தலாம் என்ற கருத்தோட்டமும் பிற்காலங்களில் வளரத் தொடங்கியது.
தற்காலங்களில் குழந்தைகள் இயல்பாகவே அறிவைப் படைப்பவர்கள் என்ற கருத்தோட்டம் மலரத் தொடங்கியுள்ளது. இதை படைப்பாற்றல் கல்வி முறை (கன்ஸ்ட்ரக்டிவ் பெடகாகி) என அழைக்கிறோம். அதாவது, குழந்தைகள் செயல்களில் ஈடுபட்டுக் கற்பதன் மூலம் நாம் நினைத்த கற்றல் இலக்கு களுக்கும் மேலான கூடுதல் திறன்களைப் பெறுகின்றனர். ஆனால், அவற்றை அவர்கள் வெளிப்படுத்த அளிக்கப்படும் தரமான சூழல்களில் மட்டுமே வெளிப்படுத்துகின்றனர்.
அந்த வகையில் இயல்பான வகுப்பறைகளில் கேட்கப்படும் வினா}விடைகளைத் தாண்டி இயல்பாகவே அவர்களுக்குள்அறிவுப்பெருக்கு உண்டாகும். அவ்வாறான அறிவுப் பெருக்கை வெளிக்கொணர்பவராக அவர்களின் ஆசிரியர்களும் ஏதுவாளர்களும் நடந்துகொள்ள வேண்டும்.
குழந்தைகளின் கல்வி என்று வரும்போது பள்ளிக்கூடங்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் பணியாக மட்டுமே பெரும்பாலும் பார்க்கப்படுகின்றன.
பங்களிப்பு செய்ய வாய்ப்புள்ள வசதி படைத்த நடுத்தர வர்க்கங்களின் பெற்றோர்கள் அதுவே பாதகமாகும் வகையில் அனைத்து வேலைநாள்களுக்கும் இன்னும் வேலைநேரத்துக்கும்கூட அட்டவணைகள் தயாரிக்கத் தொடங்கிவிடுகின்றனர்.
சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த பெற்றோருக்கோ இவ்வாறான பங்களிப்புகள் குறித்த யோசிப்பதற்கான வாய்ப்புகள் பெரும்பாலும் இல்லை. இவ்வாறான இரு தரப்பினரும் தங்களைது போக்கை மறுபரிசீலனை செய்துகொண்டு குழந்தைகளின் கல்விச் செயல்பாடுகளில் பங்களிப்பு செய்ய முன்வரவேண்டும்.
ஒரு குழந்தையை நாம் எவ்வாறான மேலான புரிதல்களோடு நாம் வளர்க்கிறோமோ, அவ்வாறே தாம் முதுமையில் குழந்தையாக மாறும்போது தம்மை தமது குழந்தைகள் நடத்துவர். இதை மனதில் கொண்டாவது குழந்தைகள் குழந்தைகளாக வளர்வதை பெற்றோர் உறுதி செய்ய வேண்டும். அவர்களின் வளர்ச்சிக்கு ஓர் இணக்கமான, ஒழுக்கமான சூழலை உருவாக்கித்தர வேண்டும். பள்ளியும் சமூகமும்
ஆயிரம் கற்றுத் தந்தாலும் பெற்றோரிடமிருந்து குழந்தைகள் கற்பதே அதிகமாக இருக்கும்.
விவேகானந்தர்கூட சொல்வார்:- "இந்த உலகம் ஓர் ஒழுக்கப் பயிற்சிக்கூடம். கல்வியைப் பெறுவதில் ஒழுக்கம் இருந்துவிட்டால் வேறு எந்த ஒழுக்கமும் இயல்பாகிவிடும். பெற்றோரைவிட வேறு யார் குழந்தைகளுக்கு ஒழுக்கத்தை கற்றுத்தந்துவிட இயலும்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.