

சுதந்திரப் போராட்டக் காலத்தில் இந்தியர்களின் உள்ளத்தில் சுதந்திரத் தீயைப் பற்றவைத்த மந்திரச் சொல் வந்தே மாதரம். வங்க மொழி கவிஞரான பங்கிம் சந்திர சட்டர்ஜி 1875-இல் எழுதிய ஆனந்தமடம் என்ற நாவலில் வந்தே மாதரம் பாடல் இடம்பெற்றது.
நம் தாய்த்திருநாடான இந்தியாவை ஒரு தாயாக நினைத்து, அதன் இயற்கை வளங் கள், பழைமையான கலாசாரம். ஒற்றுமை உணர்வு ஆகியவற்றை வீரியமிக்க கவிதை வரிகளில் பங்கிம் சந்திர சட்டர்ஜி வடித்திருந்தார். அதனால் இந்தப் பாடலும், 'வந்தே மாதரம்' என்ற சொல்லும் இந்தியர்களின் மனதை ஆட்கொண்டது.
இந்திய மண்ணில் ஆங்கிலேயர்கள் கால் வைத்ததுமுதல் அவர்களை விரட்டுவதற்கான போராட்டம் என்பது நடந்து கொண்டேதான் இருந்தது. சுதந்திரப் போராட்டம் என்பது எவ்வித ஒருங்கிணைப்பும் இல்லாமல், தனித்தனியாக நடந்து வந்தது. ஒவ்வொரு பகுதியிலும் தங்களுக்குத் தெரிந்த வகையில் மக்களைத் திரட்டி போராடிக் கொண்டிருந்தனர்.
ஆனால், 1875-இல் இயற்றப்பட்ட வந்தே மாதரம்' பாடல் மெல்ல மெல்ல மக்களைச் சென்றடைந்து, ஓட்டுமொத்த நாட்டு மக்களையும் ஒருங்கிணைத்தது. பல்வேறு இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது. தனது சுட்டெரிக்கும் கவிதைகளால், தமிழ்நாட்டில் சுதந்திர வேட்கையை ஏற்படுத்திய மகாகவி பாரதியார், 1905-ஆம் ஆண்டு வந்தே மாதரம்' பாடலை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.
வந்தே மாதரம் பாடலின் எழுச்சிதான், ஆங்கிலேயர்களை விரட்டியடித்து சுதத்திர இந்தியாவை உருவாக்க ஓர் இயக்கத்தை உருவாக்க தூண்டுகோலாக அமைந்தது.
1885-இல் சுதந்திரம் என்ற ஒற்றை நோக்கத்துக்காக இந்திய தேசிய காங்கிரஸ்' தொடங்கப்பட் டது. 1896-ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் நோபல் பரிசு பெற்ற வங்க கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் வந்தே மாதரம் பாடவை உணர்ச்சிப் பெருக்குடன் பாடினார்.
வந்தே மாதரம் பாடலையும், வந்தே மாதரம் முழக்கத்தையும் கையிலெடுத்த பிறகு இந்திய தேசிய காங்கிரஸ் மிகப்பெரிய மக்கள் இயக்கமாக மாற ஆரம்பித்தது. அதன்பிறகு காங்கிரஸின் அனைத்து மாநாடுகள், கூட்டங்கள், போராட்டங்கள் அனைத்தும் வந்தே மாதரம் பாடலுடன்தான் தொடங்கின. சுதந்திரப் போராட்ட வீரர்களும், தலைவர்களும் வந்தே மாதரம் என்று பலமுறை முழக்கமிட்ட பிறகே தனது பேச்சைத் தொடங்கினர். பேச்சை முடித்தனர். கைது செய்தாலும் காவல்துறை அடித்து சித்திரவதை செய்தாலும் தூக்கு மேடையில் நின்றாலும் நம் சுதந்திர வீரர்கள் உச்சரித்தது வந்தே மாதரம்'தான். மதம், ஜாதி, இனம், மொழி என அனைத்து வேறுபாடுகளையும் மறந்து இந்தியர்கள் அனைவரும் வந்தே மாதரம் என முழங்கினர்.
மத ரீதியாக இந்தியாவைத் துண்டாட நினைத்த ஆங்கிலேயர்கள், 1905-ஆம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்தின் மையமாக விளங்கிய வங்கத்தை இரண்டாகப் பிரித்தனர். இதை எதிர்த்து கொல்கத்தாவில் 40 ஆயிரம் பேர் ஒன்றுதிரண்டு வந்தே மாதரம்' பாடலைப் பாடி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதனால் இந்த ஒற்றைச் சொல் இந்தியர்களை ஒன்றிணைக்கிறதே என்ற அச்சமடைந்தது ஆங்கிலேய அரசு. வந்தே மாதரம்' பாடலை தடை செய்தது.
இப்பாடல் இஸ்லாமிய மத நம்பிக்கைக்கு எதிரானது என்று பிரசாரம் செய்து பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபட்டது.
ஆனால், அதையும் மீறி இந்தியா முழுவதும் வந்தே மாதரம் பாடல் ஒலித்தது. 1908-ஆம் ஆண்டு 18 வயதான சுதந்திரப் போராட்ட வீரர் குதிராம் போஸ் தூக்கிலிடும்போது வந்தே மாதரம் என முழங்கியபடியே உயிர் துறந்தார். இந்த வீரச் செயல் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை சுதந்திரப் போராட்ட களத்துக்கு அழைத்து வந்தது.
எந்த அரசோ, கட்சியோ, குழுவோ, தலைவரோ அறிவிக்காமல் மக்களே வந்தே மாதரத்தை தேசியப் பாடலாக ஏற்றுக் கொண்டனர். அதனால், 1937-ஆம் ஆண்டு வந்தே மாதரம் பாடலை தேசியப் பாடலாக காங்கிரஸ் அறிவித்தது.
வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு வந்தே மாதரம் முழக்கம் பெரும் ஊக்கத்தைத் தந்தது.
1947 ஆகஸ்ட் 15-ஆம் தேதி இந்தியா சுதந்திரம் அடைந்த தாளில் நாடெங்கும் வந்தே மாதரம் பாடல்தான் ஒலித்தது. இந்தியாவுக்கு என தேசிய கீதமாக வந்தே மாதரம் பாடலை வைக்க பெரும்பான்மை ஆதரவு இருந்தும் சில காரணங்களால் ரவிந்தீரநாத் தாகூரின், 'ஜன கண மன..." பாடல் தேசிய கீதமாக அறிவிக்கப்பட்டது. வந்தே மாதரம் பாடல் சுருக்கப்பட்டு தேசியப்பாடலாக அங்கீகரிக்கப்பட்டது.
சுதந்திரப் போராட்ட காலத்தில் மட்டுமல்ல சுதந்திர இந்தியாவிலும் அரசு அடக்கு முறைகள், அநீதிகளுக்கு எதிரான போராட்டங்களுக்கு இன்றும் உத்வேகத்தை தரும் மந்திரச் சொல் வந்தே மாதரம் தான்.
1975-ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் இந்திரா காந்தி நெருக்கடி நிலையை அறிவித்து, இந்திய அரசமைப்புச் சட்டத்தை முடக்கினார். அதற்கு எதிரான ஜனநாயகத்தைக் காக்க ஆர்.எஸ்.எஸ். ஜனசங்கம் போன்ற அமைப்புகளும், ஜெயப்பிரகாஷ் நாராயண் போன்ற பெரும் தலைவர்களும் போராடினர். அப்போது. இந்திராவின் சர்வாதிகாரத்தை முடிவுக்கு கொண்டுவர 'வந்தே மாதரம்தான் துணை நின்றது.
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இந்திய மக்கள், தாய்க்கு நிகராக தாய்நாட்டையும் நேசித்து வருகின்றனர். அதனால்தான் தாய்நாட்டை தாயாக உருவகப்படுத்தி போற்றிய 'வந்தேமாதரம் பாடல் இந்தியர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது. 'தாயே வணக்கம் என்கிற அந்தக் குரல் ஒவ்வொருவரின் இதயத்தையும் தொட்டது, இந்தியர்கள் அனைவரையும் சுதந்திரப் போராட்டத்தில் ஒருங்கிணைத்து, இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்தது. இந்திய சுதந்திரத்துக்குக் காரணமான, இந்தியர்களை ஒருங்கிணைத்த இன்னமும் ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கும் வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்ட 150-ஆவது ஆண்டு விழா கடந்த நவம்பர் 7-ஆம் தேதி கொண்டாடப்பட்டது.
'வந்தே மாதரம் என்றால் தாய் மண்ணே வணக்கம் என்று பொருள். தாய் மண்ணை நாங்கள் வணங்க மாட்டோம் என்று சொல்லி 'வந்தே மாதரம் பாடலை எதிர்ப்பதும், அதைத் தமது தாரக மந்திரமாக ஏற்றுக்கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி ஆதரிப்பதும் வேடிக்கையாக இருக்கிறது.
"வந்தே மாதரம் என்போம். எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்" -மகாகவி பாரதியார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.