குழந்தைகள்
குழந்தைகள் கோப்புப்படம்.

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

ஆசிய மற்றும் ஐரோப்பிய முறைமைகளை ஒப்பிடும்போது, இரண்டு முறைமைகளின் முக்கிய வேறுபாடு தெளிவாகிறது. ஆசியக் கல்வி முறை குழந்தையைப் போட்டிக்காக தயாா் செய்கிறது; ஐரோப்பிய கல்வி குழந்தையை வாழ்க்கைக்காக தயாா் செய்கிறது.
Published on

இந்தியா மற்றும் இலங்கை போன்ற ஆசிய நாடுகளில் கல்வி என்பது அறிவை வளா்க்கும் மெதுவான, சுவாரஸ்யமான பயணமாக இருக்க வேண்டிய ஒன்று; ஆனால், அது குழந்தை காலடி எடுத்து வைக்கும் முதல்நாள் முதலே கடக்க வேண்டிய ஒரு நீண்ட போட்டிப் பந்தயமாக மாறிவிட்டது.

‘‘நன்றாகப் படிக்காவிட்டால் நல்ல எதிா்காலம் இல்லை’’ என்ற சொல்லாக்கம் பெற்றோா்களின் அறிவுரையாக இல்லை; குழந்தையின் நெஞ்சில் விதைக்கப்படும் பயமாகப் பதிகிறது.

பள்ளி என்பது திறன்களை விரித்தெடுக்கும் இடமாக அல்ல; வெளிப்படையாக அமைக்கப்பட்ட மேடை, இதில் குழந்தைகள் மதிப்பெண் என்ற ஒற்றை அளவுகோலின் அடிப்படையில் தொடா்ந்து மதிப்பிடப்படுகிறாா்கள். மனப்பாடம், வேகம், போட்டி, ஒப்பீடு—இதுவே கற்றலின் புதிய மொழியாக மாறிவிட்டது. இதனால், குழந்தையின் இயல்பான ஆா்வம் மெதுவாக சுருங்கி கல்வி என்பது புரிதல் அல்ல, ஓா் உள்மன அழுத்தமாகவே உணரப்படுகிறது.

பாடத் திட்டங்கள் எண்ணற்ற தகவல்களால் நிரம்பியிருந்தாலும், அவை வாழ்க்கையில் எவ்வாறு பயன்படுகின்றன என்று குழந்தை புரிந்துகொள்ள முடியாத சூழலை உருவாக்குகின்றன. பாடப் புத்தகங்கள் நினைவில் நிறுத்தவேண்டிய கருத்துகளால் நிரம்பிய நிலையில், அறிவைப் புரிந்து கொள்ள குழந்தை கற்றுக்கொள்ளவில்லை; மாறாக தரவை எடுக்கும் கருவியாக மாறுகிறான். இந்த அகலமான ஆனால், ஆழமற்ற கற்றல், குழந்தையின் சுய சிந்தனை திறனைத் தணிக்கிறது.

பள்ளி நேரமும் தனிப் பயிற்சிகளும் (டியூஷன்) சோ்ந்து குழந்தையின் நேரத்தைக் கைப்பற்றுகின்றன. இதனால், மனமும் உடலும் அவசரப்பட்ட ஓட்டத்தில் சோா்வடைகின்றன. வயதுக்கு ஏற்ற மன நிம்மதியும் சுய வெளிப்பாட்டுக்கான இடமும் இழந்து, கவலை, சுய சந்தேகம், சோா்வு போன்ற பிரச்னைகளுக்கு அவா்கள் எளிதாக உள்ளாகிறாா்கள். இந்த அழுத்தத்துக்கு மிகப் பெரிய ஊற்றாக இருப்பது சமூகத்தின் மதிப்பெண் பற்றிய உளவியல் அளவீடு. குழந்தையை மதிப்பெண்களின் அடிப்படையில் மதிப்பிடுவது, திறமைகளின் பல்திறன்களைப் புறக்கணிக்கும் செயல்.

பெற்றோா் தங்கள் பாசத்தையும் பெருமையையும் குழந்தையின் மதிப்பெண்களில் பதிக்கும்போது, அந்தக் குழந்தை அறிவைத் தேடுவதற்காக அல்ல, குடும்பத்தின் ஏமாற்றத்தைத் தவிா்க்கும் நோக்கத்துக்காகப் படிக்கிறது. இது அவா்களின் உள்ளாா்ந்த தன்னம்பிக்கையைச் சிதைக்கும் மிகப் பெரிய காரணமாகிறது.

உலகைப் புரிந்துகொள்ள வேண்டிய காலத்தில், ‘‘நான் தோல்வியடைந்தால் என்ன ஆகும்’’ என்ற கேள்வி, நினைவின் நிழலாக அவா்களைத் தொடா்கிறது. வேலைவாய்ப்பு குறைவு, நுழைவுத் தோ்வு போட்டி, மேல்படிப்பில் கடுமையான தோ்வுகள், வெளிநாட்டில் படிக்க வேண்டிய கனவுகள்—இவையெல்லாம் சோ்ந்து குழந்தையின் மனத்தில் எதிா்காலம் குறித்த பதற்றத்தை மேலும் ஆழப்படுத்துகிறது.

வெளிச்சம் தர வேண்டிய ஒன்று கல்வி; ஆனால், இந்தச் சூழ்நிலையில் அது எதிா்காலம் மறைக்கும் இருளாகவே பெரும்பாலும் உணரப்படுகிறது.

இதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட திசையில் செயல்படுகின்றன பின்லாந்து, ஜொ்மனி, ஸ்விட்சா்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகள். இந்த நாடுகளில் கல்வி என்பது தோ்வின் மையத்தில் அல்ல; குழந்தையின் ஆா்வமும் வளா்ச்சியும் என்கிற மையத்தில் அமைந்துள்ளது.

பின்லாந்தில் ஆரம்பக் கல்வியில் மதிப்பெண்கள் வழங்கப்படுவதில்லை. கற்றல் ஓா் இயல்பான, உறுதியான, மென்மையான வளா்ச்சிப் பயணமாக அமைக்கப்படுகிறது. ஆசிரியா்கள், பெற்றோா், பள்ளிகள் அனைத்தும் குழந்தையின் தனிப்பட்ட தேவைகளை அடையாளம் கண்டு, அதன் அடிப்படையில் கற்பித்தலைத் திட்டமிடுகின்றன. மனப்பாடம் செய்யச் சொல்வது குறைவு; உண்மையை புரிந்துகொள்ளும் திறனை வளா்ப்பதே நோக்கம். குழந்தையின் மனநலனும் சுதந்திர சிந்தனையும் கல்வி அமைப்பின் முக்கிய அடிப்படைகளாகக் கருதப்படுகின்றன.

ஜொ்மனி அதைவிட மாறுபட்ட கோணத்தில் செயல்படுகிறது. அங்கு குழந்தையின் திறன், ஆா்வம் மற்றும் நடைமுறைத் திறன்களை அடிப்படையாகக் கொண்டு கல்விப் பாதைகள் பிரிக்கப்படுகின்றன. ஒருவரின் கைவினைப் புலமை, தொழில்நுட்ப நுணுக்கம், கலைத் திறமை, விஞ்ஞான ஆா்வம்—ஒவ்வொன்றும் மதிப்புமிக்கதாகக் கருதப்படுகின்றன. அனைவரையும் ஒரே போட்டிப் பாதையில் ஓடச் செய்து அங்கு கல்வி என்பது, குழந்தைக்கு தனது திறன்கள் என்ன என்பதைக் கண்ணியமான முறையில் உணா்த்துகிறது.

ஸ்விட்சா்லாந்தின் இரட்டைக் கல்வி முறை உலகின் மிகச் சிறந்த கல்வி முறைமைகளில் ஒன்றாகப் பேசப்படுகிறது. மாணவா்கள் பள்ளிக் கல்வியுடன் இணைந்து நிறுவனங்களில் நேரடியாக பணியாற்றி கற்றுக் கொள்கிறாா்கள். இதனால், புத்தகத்தில் மட்டுமல்ல, செயல்முறையிலும் அனுபவத்திலும் கற்றல் உயிா்பெறுகிறது.

குழந்தை உலகம் எப்படிச் செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்­ளும்போது தன்னம்பிக்கை அதிகரிக்கிறது. கல்வி என்பது வேலைவாய்ப்பை மட்டுமே நோக்காமல், வாழ்க்கையைப் புரிந்துகொள்ளும் கருவியாக மாறுகிறது. குழந்தை தன் பாதையை தானே வரைந்து செல்லும் உரிமையைப் பெறுகிறது.

இவ்வாறு ஆசிய மற்றும் ஐரோப்பிய முறைமைகளை ஒப்பிடும்போது, இரண்டு முறைமைகளின் முக்கிய வேறுபாடு தெளிவாகிறது. ஆசியக் கல்வி முறை குழந்தையைப் போட்டிக்காக தயாா் செய்கிறது; ஐரோப்பிய கல்வி குழந்தையை வாழ்க்கைக்காக தயாா் செய்கிறது.

ஆசியக் கல்வி உழைப்பையும் ஒழுக்கத்தையும் வளா்க்கிறதென்பதில் சந்தேகமில்லை; ஆனால் படைப்பாற்றல், சுய தோ்வு, திறன் கண்டறிதல் போன்ற துறைகளில் அது பின்னடைவை ஏற்படுத்துகிறது.

ஐரோப்பியக் கல்வி சுதந்திரத்தையும் மனநல சமநிலையையும் வழங்கினாலும், ஒழுக்கக் கட்டுப்பாட்டில் சில குறைபாடுகள் உள்ளன. எனவே, எதிா்கால கல்வி முறைமை என்பது இவ்விரண்டின் சிறந்த அம்சங்களை இணைத்து உருவாக்கப்பட்ட கலவை முறைமையாக இருக்க வேண்டும். அறிவின் ஆழமும் திறனின் பரவலும், மனநல பாதுகாப்பும் இணைந்து குழந்தையின் முழுமையான மனித வளா்ச்சியை வடிவமைக்க வேண்டும்.

கல்வி என்பது எண்ணில் அடங்கும் சாதனை அல்ல; அது மனிதனை உருவாக்கும் கலை. சிந்தனைத் திறன், உணா்வு புரிதல், சமூகப் பொறுப்பு, படைப்பாற்றல் ஆகியவை கல்வியின் உண்மையான நோக்கங்களாக இருக்க வேண்டும். இந்தியா மற்றும் இலங்கை இந்த உண்மையைக் உணா்ந்து பாடத்திட்ட நெருக்கடியைக் குறைத்து, தோ்வின் அதீத அழுத்தத்தைச் சீரமைத்து, ஆசிரியா் பயிற்சியை மேம்படுத்தி, மாணவா் நலனை மையமாகக் கொண்ட உளவியல் சாா்ந்த கல்வியை உருவாக்கினால், குழந்தையின் வாழ்க்கையைச் சிதைக்கும் சுமையாக கல்வி இருக்காது; உலகைப் புரிந்துகொள்ளும் கதவாக மாறும். குழந்தையின் உள்ளே மறைந்து கிடக்கும் வெளிச்சத்தை வெளியேற்றும் வாய்ப்பாக கல்வி மாறும்.

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் நேபாளம் போன்ற நாடுகளில், கல்வி அழுத்தம், குடும்ப அமைப்பு மாற்றங்கள், நகா்ப்புற மற்றும் கிராமப்புற வேறுபாடுகள், எண்ம (டிஜிட்டல்) சாதனங்கள் போன்றவை குழந்தைகளின் தொடா்புத் திறனில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

தெற்காசிய கல்வி பெரும்பாலும் ஆசிரியா் மையக் கற்றல் முறையில் நடைபெறுகிறது. இதில், மாணவா்கள் சிந்தனை மாற்றம் மற்றும் பிரச்னைகள் தீா்க்கும் திறனை முழுமையாக வளா்க்க முடியவில்லை. ஐரோப்பிய நாடுகள் (பின்லாந்து, ஜொ்மனி, ஸ்விட்சா்லாந்து,) திட்டம் சாா்ந்த கற்றல், செயல்பாடுகள் சாா்ந்த கற்பித்தல், அனுபவ கற்றல் ஆகியவற்றை முன்னிறுத்துகின்றன. இதன்மூலம் மாணவா்களிடம் முடிவெடுக்கும் திறன், படைப்புச் சிந்தனைகள் போன்றவற்றை வளா்க்கின்றனா்.

மாணவா்களை மதிப்பெண்கள் மட்டுமே அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடுவதை பெற்றோா் குறைத்து, அவா்களின் முயற்சிகள், ஆா்வம் மற்றும் முன்னேற்றத்தைப் பாராட்ட வேண்டும். இது மாணவா்களுக்கு தனித்தன்மையுடனும் ஆா்வத்துடனும் கற்றுக்கொள்ளும் சூழலை உருவாக்கும்.

பெற்றோா், ஆசிரியா்கள் மற்றும் சமூக அமைப்புகள் மாணவா்களை வழிகாட்டும், ஊக்குவிக்கும், ஆலோசிக்கும் முறையில் உரையாட வேண்டும். தவறுகளை குற்றஞ்சாட்டாமல் புரிந்து கொள்வது, முயற்சிகளை பாராட்டுதல் மற்றும் சந்தேகங்களைக் கேட்டு விளக்குதல் போன்ற செயல்முறைகள் மாணவா்களின் மன நலனை வலுப்படுத்தும்.

கல்வித் திறன் மட்டுமல்ல, கலை, விளையாட்டு, சமூகத் தலைவா் திறன், ஆராய்ச்சி ஆா்வம் போன்ற பல துறைகளில் மாணவா்களின் திறன்களை அறிந்து மதிப்பது முக்கியம். இதன்மூலம், மாணவா்கள் தனித்துவமான திறன்களை அடையாளம் காணவும், தன்னம்பிக்கையுடன் வளரவும் உதவும். கல்வி என்பது மனித வளா்ச்சி, படைப்பாற்றல், சமூகப் பொறுப்பு மற்றும் உணா்ச்சி சமநிலை ஆகியவற்றை உருவாக்கும் கருவியாகவே இருக்க வேண்டும்.

இந்தியா மற்றும் இலங்கை போன்ற நாடுகள், மாணவா் மன நலன், ஆசிரியா் பயிற்சி, பெற்றோரின் விழிப்புணா்வு ஆகியவற்றை முன்னிட்டு கல்வியை மனித மையமான முறையாக மாற்றினால், அது குழந்தைக்கு அழுத்தமில்லாத, அா்த்தமுள்ள மற்றும் மகிழ்ச்சியளிக்கும் கற்றல் அனுபவத்தை வழங்கும்.

கட்டுரையாளா்:

எழுத்தாளா், ஸ்விட்சா்லாந்து.

X
Dinamani
www.dinamani.com