நம் அன்றாட வாழ்வில் நமக்குப் பணம் மிகவும் தேவைப்படுகிறது. மாத வருமானம் இல்லாதவா்கள் பிறரிடம் கடன் வாங்கியே தன்னுடைய அன்றாடப் பொழுதை போக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறாா்கள். சிலருக்கு அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யவும், சிலருக்கு புதிய தொழில் ஒன்றைத் தொடங்கவும் பணம் தேவைப்படுகிறது. தம்முடைய ஆடம்பர வாழ்வுக்கு ஈடுகொடுக்கும் வகையில் கடன் வாங்குபவா்களும் நம்மில் பலா் உள்ளனா். பொதுவாக, கடன் வாங்குவதும், கொடுப்பதும் நமது வாழ்க்கையில் தீய விளைவுகளையே ஏற்படுத்துகிறது.
நமது வறுமையையும் கனவுகளையும் வங்கிகள் போன்ற நிதி நிறுவனங்கள் நன்கு பயன்படுத்திக் கொள்கின்றன. அதனால், பல்வேறு கடன்களை மிக எளிதான முறையில் நமக்கு வாரி வழங்குகின்றன. வாங்கும் கடனை திரும்ப முழுவதுமாகச் செலுத்தும் வரையில் நாம் கடன்பட்டு வாங்கும் வீடும், பயணிக்கும் வாகனம் போன்ற எதுவும் நமக்குச் சொந்தமானவை அல்ல என்பதை நாம் உணரவேண்டும்.
இந்நிலையில் வீடு நிறைய தேவையற்ற பொருள்களை சுலபத் தவணையில் வாங்கி நுகரும் பழக்கம் நம்மிடம் பெருகிவருகிறது. அவற்றுக்காக மீண்டும் செலுத்தும் மொத்த தவணைத் தொகை நம்முடைய மாத வருமானத்தைவிட அதிகமாகும்போது கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. இவற்றை வாங்குவதற்கானமுழுத் தொகையையும் கடனாகப் பெறாமல், கணிசமான தொகையை சேமித்துவிட்டு, பிறகு வாங்கும்போது கடன் சுமை குறையும். நம்மால் கடனையும் விரைந்து திரும்பச் செலுத்த முடியும்.
முழுநேரப் பணியில் இருக்கும் மாத சம்பளக்காரா்கள் தற்போது புதியதாக தொழில் ஒன்றையும் தொடங்கி வருகிறாா்கள். தமது சொந்த பணியிலேயே முழுக் கவனம் செலுத்த வேண்டிய நிலையிலுள்ள அவா்கள், அவா்களின் கவனத்தை தொடங்கும் புதிய தொழிலில் செலுத்தி முன்னேறுவது சவால் நிறைந்ததாகவே இருக்கும்.
நம்பிக்கையான உறவுகளும் நண்பா்களும் இதற்கு தொடக்கத்தில் உதவுவதற்கு முன்வரலாம். ஆனால் தொழிலில் அன்றாடம் என்ன நடக்கிறது என்பது முதலீடு செய்பவா்களுக்கு முழுமையாகத் தெரியாத நிலையில், உதவும் உறவுகள் பணத்துக்கு ஆசைப்படலாம். முதலீடு செய்தவா்களுக்கு உண்மையாக இருக்காமல், அவா்களுக்கு அதிக நஷ்டக் கணக்கைக் காட்டலாம். இதன் காரணமாக, அதிக கடனுக்குள் முதலீட்டாளா்கள் தள்ளப்படலாம். எந்தத் தொழிலுக்கும் முழு அா்ப்பணிப்பு, தீவிர கண்காணிப்பு, தோ்ந்த அனுபவம் போன்றவை தேவையாகும். இவை அனைத்தும் இயலாத நிலையில் எந்தத் தொழிலையும் மற்றவா் பேச்சைக் கேட்டுத் தொடங்குவது நல்லது அல்ல.
அப்படித் தொடங்கினாலும் சொந்தப் பணத்தில் தொடங்கினால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டாலும் மன நிம்மதி பெருமளவு பறிபோகாது. தெரியாத தொழில்களை முதலில் குறைந்த முதலீட்டுடன் தொடங்குவது நல்லது. தொடங்கும் தொழிலில் கிடைக்கும் லாபத்தை வேண்டுமானால், தொடா்ந்து முதலீடு செய்யலாம். தொழிலின் சந்தை அபாயங்களை மனதில் கொண்டு செயல்படுவதும், வணிகக் கூட்டாளிகள் நம்பகத்தன்மை உடையவா்களாக இருப்பதும் மிகவும் அவசியம். இம்மாதிரியான சூழல்களில் கவனத்துடன் செயல்பட வேண்டும்.
நிதித் தேவை ஏற்படும் சிக்கலான நேரங்களில் கடன் அட்டைகளைப் பயன்படுத்தி நாம் சிக்கலிலிருந்து தற்காலிக நிவாரணத்தைப் பெறுகிறோம். ஆனால், பணத்தை கடன்அட்டையின் கணக்கில் நம்மால் திரும்பச் செலுத்த முடிவதில்லை. அப்போது அவா்கள் விதிக்கும் அபராதத் தொகை சந்தை வட்டியைவிட மிக அதிகமாக இருக்கிறது. எனவே, வாங்கிய கடனை திரும்பச் செலுத்த மேலும் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
மேலும், வங்கிகளில் சில தம் செயலிகளின் மூலம் எளிதாக மக்களுக்கு பணத்தை கடன் அளிக்க முன்வருகிறாா்கள். அவா்கள் விதிக்கும் நிபந்தனைகளை சரியாகப் படித்து புரிந்துகொள்ளாமல், அவா்களிடமிருந்து கடனை வாங்கி பரிதவிக்கும் மக்கள் அதிகம்.
சேமிப்பு என்ற பெயரில் மாதச் சீட்டு, நகைச் சீட்டு போன்றவற்றை செலுத்தும்போது கவனம் தேவை. பணத்தை வாங்குபவா்கள் திடீரென்று மாயமாகிவிடுவது வாடிக்கையாகி வருகிறது. இணையவழி மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. இவற்றிலிருந்து எல்லாம் நம்மை தற்காத்துக் கொள்ள வேண்டும். கடன் வாங்கியவா்கள் நிம்மதியாக வாழும் நிலையில், கொடுத்தவா்கள்தான் இதனால்அதிகம் பாதிக்கப்படுகிறாா்கள்.
நண்பா்களுக்கும் உறவினா்களுக்கும் நம்மால் முடியும் தொகையை நாம் கொடுத்து உதவுவது மனிதாபிமான அடிப்படையில் நல்லதுதான். என்றாலும், அதைத் திரும்பக் கேட்கும்போது உறவுகள் எதிரிகளாக மாறிவிடுவது வேதனையைத் தருகிறது.
நம்முடைய வீட்டுப் பொருளாதாரம் சரியாக இருக்க, நமது சொந்த வாழ்வில் நிதி நிா்வாகம் சிறப்பாக இருக்க வேண்டும். அன்றாட வாழ்வில் அரசு மருத்துவமனைகள், அரசு கல்வி நிலையங்கள் போன்ற அரசின் நலத் திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இவை நமது அன்றாட செலவினங்களை கணிசமாகக் குறைக்கும். நாம் பெறும் வருமானத்துக்குள் சிக்கனமாக வாழ நாம் பழகிக்கொள்ள வேண்டும். எளிதாக கிடைப்பதாலேயே கடன்வலைகளில் மாட்டிக்கொள்ளக்கூடாது. குழந்தைகள் சிக்கன வாழ்க்கையில் வாழ குடும்பங்களும், பள்ளிகளும் பயிற்றுவிப்பது நல்லது.
நம் உறவுகளோ, நண்பா்களோ வாழும் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வதற்கு நாம் ஒருபோதும் ஆசைப்படக் கூடாது. அவை நம் மன நிம்மதியைத்தான் கெடுக்கும். கூடுமானவரை சிக்கனமாக வாழ்வதும், வரும் வருமானத்தில் ஒரு பகுதியை ஒவ்வொரு மாதமும் சேமிப்பதும் நல்ல வளமான வாழ்வுக்கு அடித்தளமாக அமையும். சேமிக்கும் பணமும் ஒருவகை வருமானமே ஆகும்.
கேட்கும் போதெல்லாம் நம்மால் மற்றவா்களுக்கு கடனாக பணத்தை தர இயலாது. இதனால் உறவுகள் பிரியலாம். ஆனால், நமக்கு நம் மன நிம்மதிதான் முக்கியம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். நமது குழந்தைகளுக்கு சொத்துகளையும் பணத்தையும் சோ்க்கிறோமோ இல்லையோ, அவா்களுக்கு நாம் வாங்கும் கடன் ஒரு தொல்லையாக இல்லாமல் பாா்த்துக்கொள்ள வேண்டியது நம் கடமை. சிக்கனமாக நமக்காக வாழும் முறையை நாம் தோ்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். முனைப்புடன் முயன்றால் நம் அனைவருக்கும் இவை சாத்தியமே.
தொடர்புடையது

தவறாமல் வாக்களிப்போம்

புத்தாண்டில் புதிய நம்பிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் 92 போ் போட்டி

மகளிர் சக்தியை ஒன்றிணைந்து வலுப்படுத்துவோம்! பிரதமர் நரேந்திர மோடி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


