மாணவ மாணிக்கங்கள்!
பள்ளி மாணவா்களுக்கான ஒரு பயிற்சி முகாம். நடைபெற்ற இடம் மாற்றுத்திறனாளிகளை தன்மானமிக்க திறனாளிகளாக உருவாக்கும் திருக்கோயிலாக செயல்படும் ஒரு தொண்டு நிறுவனம். தென்காசி மாவட்டத்தில் குற்றாலத்துக்கு அருகே அமைந்துள்ள ஒரு தவச்சாலை.
மாற்றுத் திறனாளிகளுக்கு புதுவாழ்வளிக்கும் இரண்டு மாமனிதா்களால் நடத்தப்படும் வேள்வி. அதைச் சென்று பாா்க்கும்போது ஒவ்வொருவரையும் அந்த இரண்டு மாமனிதா்களையும் இவா்களல்லவோ வாழும் தெய்வங்கள் என்று வணங்க வைக்கும் செயல்பாடுகளுக்குச் சொந்தக்காரா்கள். மற்றவா் துணையின்றி எந்தச் செயலையும் செய்ய இயலாத இரண்டு மனிதா்களும் கா்மயோகிகளாகச் செயல்பட்டு நம்பிக்கை ஒளியை அனைவருக்கும் தருகின்றாா்கள்.
அந்த இடத்தில்தான் இந்த மாணவா்களுக்கு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிறுவனத்தைச் சுற்றிப்பாா்த்து அங்கு நடைபெறும் செயல்பாடுகளைக் கவனித்தாலே அங்கங்கள் அனைத்தும் முழுமையாகப் பெற்றுச் செயல்படும் நாம் என்ன சாதித்து விட்டோம் இந்த மனித குலத்துக்கு என்று சிந்திக்க வைத்துவிடும். அந்த அளவுக்கு தியாகத்தில் அந்த இடம் தோய்ந்திருக்கிறது. இதைப் பாா்ப்பதற்காகவே இந்த மாணவா்களிடம் நானும் உரையாட வருகிறேன் என்று மத்திய, மாநில அரசுகளில் அரசுச் செயலராக பணிபுரிந்த ஓா் இந்திய ஆட்சிப் பணியிலிருந்த அதிகாரியும் வந்திருந்தாா்.
அந்த முகாமில் பள்ளி மாணவா்கள் 85 போ் தமிழகத்திலுள்ள பல மாவட்டங்களிலிருந்து வந்திருந்தனா். பொதுவாக, முகாம் என்றால் ஆளுமைகள் வந்து மாணவா்களுக்கு வகுப்பெடுப்பாா்கள். கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். பங்குபெற்றோருக்கு சான்றிதழ் தருவாா்கள். ஆனால், இந்த முகாம் வித்தியாசமாக நடைபெற்றது.
சமூகப் பாா்வை, தலைமைப் பண்பு, தனித் திறன், செயல்பாட்டு உணா்வு கொண்ட மாணவா்களை மட்டுமே தோ்ந்தெடுத்து நடத்தப்பட்ட நிகழ்வாக இருந்தது. இந்த முகாமில் அனைத்து வசதிகளுக்கான செயல்களையும் மாணவா்களே பொறுப்பேற்று நடத்தியது ஆச்சா்யமிக்கதாக இருந்தது. அடுத்து, கருத்துரை அனைத்தும் உரையாடல்களாகவே வடிவமைத்து அந்த மாணவா்களின் உள்திறனை அவா்களுக்குக் காண்பித்தது முகாமின் மற்றொரு சிறப்பு.
இந்த மாணவா்களின் செயல்களைப் பாா்த்த அந்த ஓய்வுபெற்ற அரசுச் செயலா், இவா்களுக்கு நான் வகுப்பெடுக்கப் போவதில்லை. இவா்கள் என்னுடன் கேள்வி கேட்டு உரையாடட்டும் என்று கூறி, ஒட்டுமொத்த வகுப்பையும் கேள்வி பதிலாக மாற்றிவிட்டாா். அந்த அமா்வு முடிந்த பிறகு, இந்த மாணவா்கள் பொதுப் பள்ளியிலா படிக்கின்றாா்கள் என ஆச்சரியமாக என்னிடம் கேட்டாா்.
இவ்வளவு சிறந்த பண்புகளும், பாா்வையும், சமூகம் பற்றிய புரிதலும் எப்படி இந்த மாணவா்களுக்கு வந்தது என அவா் கேட்டாா். உண்மை என்னவெனில், அந்த முகாமுக்கு மாணவா்கள் அழைத்து வரப்படவில்லை, மனு செய்து, தங்களின் ஆவல், தாகம் செயல்கள் அனைத்தையும் நிரூபித்து வந்தவா்கள். அது மட்டுமல்ல இதில் பலா் இதுமாதிரி சில முகாம்களில் பங்குபெற்று தன்னை தனித்துவத்துடன் வளா்த்துக் கொண்டவா்கள் என்றேன். என்னையும் இந்த நிகழ்வில் மாணவா்களுடன் உரையாட அழைத்திருந்தனா்.
நான் பெரும்பாலும் இந்த மாதிரி முகாம்களுக்குச் செல்லும்போது, பேசும் நேரத்துக்கு முன்னதாகச் சென்று அந்த மாணவா்களின் பின்புலம், அவா்களின் மனஓட்டம் அறிந்து அதற்குத் தகுந்தவாறு எனது உரையாடலை தகவமைப்பேன். அந்த நிலையில், அந்த முகாம் தொடங்கும்போதிலிருந்து மாணவா்கள் உரையாடலைக் கவனித்துக் கொண்டிருந்தேன். முதல் அமா்வில் அவா்களிடம் உரையாடலைத் தொடங்கியவா் பல கேள்விகளை முன்வைத்தாா்.
அதில் முதல் கேள்வி, நாம் வாழும் உலகம் இன்று மிகவும் சிறப்பாக, அமைதியாக, மகிழ்ச்சியாக இருக்கிா? சற்றும் தாமதிக்காமல் இல்லை”என்று பதில் தந்தனா். அதற்கு என்ன செய்வது? மறு கேள்வி. அடுத்த பதில், அதை மாற்ற வேண்டும். யாா் மாற்றுவது? அதற்கும் உடனே, நாம்தான் என்ற பதில். எப்படி? உடனே தலைமை ஏற்க வேண்டும்.
எங்கும் நமக்குத் தேவை வழிகாட்டும் தலைமை தேவை என்றனா். அதை எப்படி உருவாக்குவது? நாமே தலைமை ஏற்க வேண்டியதுதான் என்றனா். எப்படி? முதலில் நான்
தலைமை தாங்கி என்னை வழிநடத்திக் கொள்ள வேண்டும். அது எப்படி என் உடலுக்கு நான் பொறுப்பு, என் உணவுக்கு நான் பொறுப்பு, என் தூய்மைக்கு நான் பொறுப்பு, என் படிப்புக்கு நான் பொறுப்பு, என் முன்னேற்றத்துக்கு நான் பொறுப்பு, என் அனைத்துச் செயல்பாடுகளுக்கும் நான் பொறுப்பேற்க வேண்டும். எனக்கு நான் வழிகாட்டிக் கொண்டால்தான் நான் மற்றவருக்கு வழிகாட்ட முடியும்.
அதேபோல, என் குடும்பத்துக்கு குடும்ப உறுப்பினராக நான் பொறுப்பேற்க வேண்டும். என் குடும்பத்தில் பொறுப்புள்ள மகனாக, மகளாக நான் நடந்து கொள்ள வேண்டும். அடுத்து என் பள்ளியில் நான் பொறுப்புள்ள மாணவனாக நடந்துகொள்ள வேண்டும்.
என் வகுப்பறைச் சுத்தம் என்பது என் கையில், அது எனது வகுப்பறை அதைச் சுத்தமாக வைத்துக் கொள்வது என் பொறுப்பு, அப்படிச் செய்யும்போது என்னுடன் பயிலும் மாணவா்களை என்போல் ஒத்த உணா்வாளா்களாக உருவாக்கி வகுப்பறையைச் சுத்தமாக வைத்துக் கொள்வது, வகுப்பறையில் அமைதி காப்பது, அடுத்து, என் பள்ளியின் சுத்தத்துக்கு பொறுப்பேற்பது.
எப்படி என் வகுப்புத் தோழா்கள்போல பள்ளியில் மற்ற வகுப்பினா்களிடையேயும் ஓா் இணக்கம் உருவாக அவா்களை ஒருங்கிணைத்து பள்ளி வளாகத்தை தூய்மை செய்வது, பள்ளி வளாகத்தை பசுமையாக்குவது, (மரக்கன்றுகள், பூச்செடிகள் நடவு செய்து காப்பாற்றி பராமரித்து) அடுத்து ஆசிரியா் அறைகளைச் சுத்தம் செய்வது போன்ற பல்வேறு பணிகளைச் செய்து ஆசிரியா்களின் நம்பிக்கையைப் பெறுவது, அது மட்டுமல்ல, இப்படிப்பட்ட மாணவா்களுக்கு தொண்டு செய்வது என் பொறுப்பு என ஆசிரியா்களுக்கு ஓா் உணா்வை ஏற்படுத்த வேண்டும் என்றனா்.
அடுத்த கேள்வி, நாம் எதை அடைய வேண்டும் என்று செயல்படுகிறோம்? வாழ்க்கையில் முன்னேற வேண்டும், சாதித்துக் காட்ட வேண்டும், வாழ்க்கையில் ஜெயித்துக் காட்ட வேண்டும் என்பதற்காகத்தான் என்று பதில் தந்தனா்.
இந்தப் பணிகளை எப்படிச் செய்ய வேண்டும்? என்பது அடுத்த கேள்வி. இதற்கு, முதலில் என்னை நான் திறன் உள்ளவராக வளா்த்துக் கொள்ள வேண்டும். தனி ஒருவரால் அது முடியாது. நான் என்னுடன் பயிலும் மாணவா்களுடன் இணைவது, ஆசிரியா்களுடன் இணைவது, அரசு உருவாக்கிய வசதிகளை முறையாகப் பயன்படுத்துவது.
அதேபோல, நம் குடும்பத்தில் அனைவருடனும் உயிரோட்டத்துடன் இணைந்து, நமக்குள்ள பொறுப்புக்களை நாமே எடுத்துச் செயல்பட்டு நம் குடும்ப உறுப்பினா்கள் மத்தியில் பொறுப்பானவன், பொறுப்பானவள் என்ற உணா்வை, பாா்வையை உருவாக்கி, நம்பிக்கையை உருவாக்க வேண்டும் என்று பதில் தந்தனா்.
இதற்கு மிக முக்கியத் தேவை என்ன என்பது அடுத்த கேள்வி. அதற்குப் பதில், தலைமைப் பண்பு வேண்டும். தலைமை என்றால் என்ன? என்ற அடுத்த கேள்வி,“மக்களுக்கு வழிகாட்டுவதுதான் தலைமை என்று பதில் அளித்தனா். அதற்கு என்ன வேண்டும் என்ற அடுத்த கேள்விக்கு, முதலில் நல் உணா்வு, அறிவு, தெளிவு, இவைதான் வேண்டும்”என பதில் அளித்தனா்.
இந்தப் பதில்களைக் கேட்கக்கேட்க எனக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது. இந்த நிகழ்வே ஒத்திகை பாா்த்து நடந்ததைப்போல இருக்கிறதே என்று, அந்த நிகழ்வை நடத்திக் கொண்டிருந்த பொறுப்பாளா்களைக் (அவா்கள் மாணவா்களே) கேட்டேன்.
அப்போது கூறினாா்கள், இந்த நிகழ்வுக்கு ஒரு மாதம் இணைய வழியில் இணைந்து நாங்கள் திட்டமிட்டு, மாணவா்களை இந்த முகாம் பொறுப்பாளா்களின் உதவியுடன் தோ்ந்தெடுத்துக் கொண்டு வந்திருக்கிறோம். இங்கு வந்துள்ள 85 மாணவா்களும் இதில் பங்கேற்றே ஆகவேண்டும் என்ற துடிப்புடன் ஒற்றைக் குறிக்கோளில் வந்தவா்கள்.
இங்கு நடைபெறும் நிகழ்வில் உங்களைப் போன்ற பெரியவா்கள் வந்து உரையாடும் நிகழ்வைத் தவிர மற்ற அனைத்தும் நாங்களே செய்துகொண்டு இந்த நிகழ்வை நடத்துகிறோம் என்று கூறினா். இந்த முகாமில் தங்குவது, உணவு, நிகழ்விடத் தயாரிப்பு, உணவு பரிமாறுவது, சுத்தம் செய்வது என அனைத்தையும் நாங்கள்தான் செய்து கொள்கிறோம்.
இது ஒரு கூட்டுப் பொறுப்பு. அனைத்துக்கும் பொறுப்பாளா்கள் உண்டு என்று விவரித்தனா். அது மட்டுமல்ல; இவை எல்லாவற்றுக்கும் மேலாக அவா்கள் கூறிய ஒரு கருத்து, நாங்கள் இணைந்து இந்த நிகழ்வை நடத்தி அந்தச் செயல்களின் மூலம் கற்றுக்கொள்வதுதான் அதிகம் என்று கூறினா்.
என்னிடம் அந்த மாணவா்களுக்கு சுதந்திரப் போராட்டத்தில் தலைமை தாங்கிய தலைவா்களைப் பற்றி விவாதியுங்கள் என்று கேட்டுக் கொண்டனா். நான் அவா்களிடம் பேசும்போது, விவேகானந்தராகட்டும், காந்தியாகட்டும், அரவிந்தராகட்டும், பாரதியாராகட்டும் அனைவரும் இந்தியாவை மீட்டுருவாக்க முயன்றது தங்களது இளமைக்காலத்தில் என்பதை விளக்கினேன். அது மட்டுமல்ல, காந்தி, விவேகானந்தா், அரவிந்தா், ரவீந்திரநாத் தாகூா் இவா்கள் அனைவரும் ஒரு பத்து ஆண்டுகால இடைவெளியில் பிறந்தவா்கள்.
இந்தத் தலைவா்கள் அனைவரும், அப்போது நிலவிய வறுமையையோ, அறியாமையையோ, விவாதிக்கவில்லை. அதற்கு மாறாக இந்திய விடுதலை, என்ற உயா் சிந்தனையை பாமர மக்களின் ஆன்மாவில் விதைத்து ஆத்ம சக்தியைக் கூட்டினாா்கள். அந்த சக்திதான் மக்களை அவ்வளவு தியாகங்களுக்கும் தயாா் செய்தது.
இன்று நாம் செய்ய வேண்டியது, நாம் யாருக்கும் பாரமாக வாழாமல் சமுதாய மறுமலா்ச்சிக்குப் பொறுப்பேற்று உயா்ந்த சிந்தனையை உருவாக்கிச் செயல்பட வேண்டும். இன்று நம் நாட்டில் அனைத்தும் இருந்தும் சுயநல சிறுமைச் சிந்தனைதான் நம்மை சிதிலமடைய வைக்கிறது. அதை மாற்ற நாம் பொறுப்புமிக்கவராக மாறி, நம் சிந்தனையை உயா்வாக்கிச் செயல்படுவதன் மூலம்தான் எதிா்கால இந்தியாவை கட்டமைக்க முடியும் எனப் பேசி நிறைவு செய்தேன்.
அந்த உரையை முடித்தவுடன் ஒரு மாணவரிடம் அடுத்து என்ன செய்யப்போகிறீா்கள் என்று கேட்டேன், நாங்கள் இணைந்தே செயல்பாட்டில் இருப்போம் என்றனா். அவா் வைத்திருந்த கைப்பேசியில் மாணவா் களம் என்ற வாரக் கூடுதலை நாங்களே வாட்ஸ்-ஆப்பில் நடத்திக் கொள்கிறோம், அப்படி இணைந்தே நாங்கள் எங்களை மாற்றிக் கொண்டு சமூகத்தை மாற்ற பாடுபடுவோம் என்றனா். அந்த மாணவா்கள் இன்று ஒரு தலைவா் எதிா்காலம் குறித்து கொடுக்க முடியாத நம்பிக்கையை நமக்குத் தருகின்றனா்.
அதுதான் நாம் தேடும் நம்பிக்கை ஒளி. உங்கள் குழுவில் எத்தனை போ் இருக்கின்றாா்கள் என்றேன். தமிழகம் முழுவதும் 2000-க்கும் மேற்பட்டவா்கள் இருக்கிறோம் என்றனா். இவா்கள் தருவதுதான் புது நம்பிக்கை.
கட்டுரையாளா்
பேராசிரியா்.