
உலகின் தற்கால நிகழ்வுகள் குறித்து நமக்கு சில கேள்விகள் எழுகின்றன. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஒழுங்குமுறைமை மடிந்துவிட்டனவா? இல்லை புதிதாக ஒரு ஒழுங்கமைப்பு உருவாக்கப்படவே இல்லையா? நாம் இன்னும் கற்கால உலகில்தான் இருக்கிறோமா? இல்லையென்றால் 17, 18-ஆம் நூற்றாண்டில் இருந்த பழைய நிலைக்குத் திரும்புகிறோமா? என்பவைதான் அவை.
இப்போது 5 கண்டங்களில் ஒரே நேரத்தில் சண்டை நடைபெறுவதை உலகம் அச்சத்துடன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. சர்வதேச வர்த்தகக் கட்டமைப்பைச் சீர்குலைக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்ட செயலால் உலகம் முழுவதும் முன்னெப்போதும் இல்லாத வர்த்தகப் பதற்றம் அதிகரித்துள்ளது.
2022, பிப்ரவரியில் உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்தது. 2023 அக்டோபரில் இருந்து இஸ்ரேலுக்கும் ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஹூதி, ஈரான் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.
இதுதவிர, கடந்த 30 ஆண்டுகளாக சீனா பல்வேறு பகுதிகளில் ஆதிக்கம் செலுத்த முற்படுகிறது. 26 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற கார்கில் போருக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் மீண்டும் ஒரு பெரிய மோதலை நடத்தியுள்ளன. ஈரான் மீது அமெரிக்கா பூமியைத் துளைத்து தாக்கும் குண்டுகளை வீசியுள்ளது.
ஐரோப்பாவில் அச்சு இயந்திரத்தின் வருகை அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சீர்திருத்தம், மறுமலர்ச்சி ஆகியவை மனிதநேய இயக்கங்களுக்கு வலுவூட்டின. அந்தக் காலகட்டத்தில் எழுந்த நவீன சிந்தனைகளைப் போன்ற எழுச்சி இப்போதும் இந்த நேரத்திலும் நமக்கு அவசியமாகிறது.
1648-ஆம் ஆண்டு வெஸ்ட்பாலியா அமைதி ஒப்பந்தம் மூலம் ஐரோப்பாவில் நீடித்து வந்த '30 ஆண்டு போர்' மற்றும் '80 ஆண்டு போர்' ஆகியவை முடிவுக்கு வந்தன. இதன்பிறகு, 17-ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் பிரான்ஸ் தலைமை அமைச்சரான கார்டினல் டி ரிச்செலியூ ஒவ்வொரு நாடும் அதனதன் தேச நலன்களுக்காக மட்டும் செயல்படுவது என்ற கருத்தை முன்வைத்தார். இது மோதல்களைத் தவிர்க்க வழிவகுத்ததுடன், அதிகாரச் சமநிலை, நாடுகள் இடையே ஒத்துழைப்பு, கூட்டமைப்பு ஆகியவற்றை உருவாக்க முதல்படியாக அமைந்தது.
பின்னர், இது டச்சு நாட்டைச் சேர்ந்த மனிதநேய ஆர்வலரும் பல்துறை வல்லுநருமான ஹ்யூகோ க்ரோடியஸால் புதிய கருத்தாக்கமாக உருவாக்கப்பட்டது.
17-ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில் பிரிட்டன் மன்னர் மூன்றாம் வில்லியம் மூலம் இந்தப் புதிய சர்வதேச அரசியல் முறை நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. இப்போது, சர்வதேச அளவில் நாடுகள் இடையே உறவை மேம்படுத்தும் நடைமுறைகளுக்கு இதுவே அடிப்படைக் கட்டமைப்பாகவும் இருந்தது.
இதன்பிறகு, 1815-ஆம் ஆண்டு வியன்னா மாநாடு மூலம் பிரெஞ்சுப் புரட்சி மோதல்கள், நெப்போலியன் நடத்திய போர்கள், ரோமப் பேரரசு கலைப்பு ஆகியவற்றுக்குப் பிறகு எழுந்த பிரச்னைகளுக்கு தீர்வுகாணப்பட்டது. இதன்மூலம், அடுத்த 99 ஆண்டுகளுக்கு (முதல் உலகப் போர் ஏற்படும் வரை) ஏதோ ஒருவகையில் பெரிய மோதல்கள் எழாமல் அமைதி நீடித்தது. (1854-56 கிரிமியா போர்களைத் தவிர).
1892, மே மாதம் ரஷிய வெளியுறவு அமைச்சர் நிகோலே கிர்ஷிக்கு அந்நாட்டு ராணுவ ஜெனரல் நிகோலாய் ஒர்புச்சேவ் ஒரு குறிப்பை எழுதினார். அதில் போர் எந்தெந்தச் சூழல்களில் எழுகிறது என்பதை விளக்கியிருந்தார். 'முன்பு யார் முதலில் தாக்குதலைத் தொடங்கினார்கள் என்பதுதான் போர் தொடங்கக் காரணமாக இருந்தது. ஆனால், இப்போது முதலில் யார் அணி திரள்கிறார்கள் என்பதே போர் உருவாகக் காரணமாகி விடுகிறது' என்று கூறியிருந்தார்.
1914, ஜூன் 28-ஆம் தேதி ஆஸ்திரிய-ஹங்கேரி பட்டத்து வாரிசு பிரான்ஸ் பெர்டினண்ட் கிளர்ச்சியாளர்களால் படுகொலை செய்யப்பட்டார். அடுத்த ஒரு மாதத்துக்குள் போருக்கான அணி திரளத் தொடங்கியது. போருக்கு துணிந்த ஒவ்வொரு நாடும் ஒரு நியாயப்படுத்தும் காரணத்தைக் கூறிக் கொண்டன. ஐரோப்பாவை ஒரு பெரும் போர் தொற்றிக் கொண்டது.
ஆஸ்திரியா-ஹங்கேரி, ஜெர்மனி ஆகியவை ஓரணியில் திரள, எதிராக ஐரோப்பாவில் உள்ள ராணுவ வல்லமைமிக்க பிற நாடுகள் போர்க்கொடி தூக்கின. முதல் உலகப் போர் தொடங்கியது. 1918-இல் 1.7 கோடி பேரை பலி கொண்ட பிறகுதான் அந்தப் போர் ஓய்ந்தது.
20 ஆண்டுகளுக்குப் பிறகு, இதேபோன்ற போர்க் கூட்டணி அமைப்பின் காரணமாக இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. 1938-இல் ஜெர்மானியப் படை ஆஸ்திரியாவை ஆக்கிரமித்தது; ஜெர்மன் மொழி பேசும் செக்கோஸ்லோவாகியா நாட்டின் ஒருபகுதியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. அடுத்த ஓராண்டில் 1939 செப்டம்பர் 1-ஆம் தேதி ஹிட்லரின் நாஜிப்படை போலந்துக்குள் புகுந்தது.
ஆங்கிலேய-போலந்து ஓப்பந்த விதிகளின்படி ஜெர்மனி மீது போரை பிரிட்டன் அறிவித்தது. அடுத்த இரு நாள்களில் பிரிட்டனுக்கு ஆதரவாக பிரான்ஸýம் போரில் குதித்தது. இறுதியாக இரண்டாம் உலகப் போர் முடிவடைந்தபோது 8.5 கோடி உயிரிழப்புகள் ஏற்பட்டிருந்தன.
இந்த அணி திரளும் போக்கு, போர் கூட்டணி முறை ஆகியவை தொடர்ந்து பனிப்போராக முன்னெடுக்கப்பட்டது. வல்லரசு நாடுகள் அனைத்தும் ஒன்று மற்றொன்றை அழிக்கும் அளவுக்கு அணு ஆயுதத்தைப் பெருக்கிக் கொண்டன. யார் அணுகுண்டு வீசினாலும் அவர்களும் அழிவுக்கு உள்ளாவார்கள் என்ற அளவுக்கு நிலைமை சென்றது.
1991-இல் சோவியத் ரஷியா உடையும் வரை இந்த நிலை தொடர்ந்தது. தற்போது, முன்னெப்போதும் இல்லாத அணு ஆயுதங்களின் தயாரிப்பில் உச்ச காலகட்டத்தில் இருக்கிறோம்.
2001, செப்டம்பர் 11-இல் அமெரிக்காவில் உலக வர்த்தக மைய அடுக்குமாடி கட்டடங்கள், அந்நாட்டு ராணுவத் தலைமையகமான பென்டகன் ஆகியவற்றை பயங்கரவாதிகள் விமானங்களைக் கடத்திச் சென்று மோதி தகர்த்தனர். இதையடுத்து, தாராளமய ஜனநாயகம் புறக்கணிக்கப்பட வேண்டிய கருத்தாக்கமாகியது. இந்த மோசமான பயங்கரவாதத் தாக்குதல் சர்வதேச அளவில் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற புதிய கோணத்தை நோக்கி உலகை நகர்த்தியது.
2001 முதல் 2021-ஆம் ஆண்டு காலகட்டம் வரை ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த போர்கள், மோதல்கள் அந்நாட்டு மக்களுக்கு ஜனநாயகத்தை மீட்டுத் தரவில்லை. ஆப்கானிஸ்தானில் போருக்கு, அமெரிக்கா 2.3 டிரில்லியன் டாலர் வரை அதாவது ஒரு நாளுக்கு கிட்டத்தட்ட 300 கோடி டாலர் செலவிட்ட போதிலும் ஆப்கானிஸ்தானில் ஜனநாயகம் மேம்படவில்லை.
20 ஆண்டுகளுக்கு முன்பு, எந்த தலிபான்களை ஆப்கானிஸ்தான் ஆட்சிப் பொறுப்பில் இருந்து அமெரிக்கா வெளியேற்றியதோ, அதே தலிபான்களிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டுத் திரும்பும் நிலை ஏற்பட்டது.
தங்கள் நாட்டைப் பாதுகாக்கும் உரிமை என்ற பெயரில் 2011-இல் லிபியா மீதான அமெரிக்கப் படையெடுப்பு அந்த நாட்டு ஜனநாயகத்தை மீட்டுத் தரவில்லை. 2003 -ஆம் ஆண்டு ஈராக் மீதான அமெரிக்கப் படையெடுப்பு ஈராக் அதிபர் சதாம் உசேனை ஒழிப்பதற்காகவே இருந்தது. அதேபோல, லிபியாவில் மம்மர் கடாஃபியின் சர்வாதிகார ஆட்சியை ஒழிப்பதே அமெரிக்கப் படையெடுப்புக்கு காரணமாக இருந்தது.
1990-களில் கம்யூனிஸத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, சீனா ஜனநாயகமாக மாறவில்லை, அங்கு பெரிய அளவிலான மக்களின் தன்னெழுச்சிப் போராட்டமும் ஏற்படவில்லை. பிற நாடுகளுடன் கலாசார மோதல்களையும் நிகழ்த்தவில்லை. சீனாவின் தேசநலனாகக் கருதப்படும் விஷயங்களே அந்நாட்டை வழி நடத்தின.
மக்களும், நாடுகளும் இப்போதும் இரு அடிப்படை விதிகளைக் கொண்டே நிர்வகிக்கப்படுகின்றன. இவை 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கொள்கைகள். அவை, முதலில் நாட்டு நலனுக்கு முன்னுரிமை அளிப்பது, அடுத்து அதிகாரத்தை முறையாகப் பகிர்வது மற்றும் பிற நாடுகளுடன் தேவைக்கு ஏற்ப இணைந்து செயல்படுவது.
இதன்படி நாம் இப்போது மீண்டும் பழைய உலகின் ஒழுங்கமைப்புக்கே திரும்பிவிட்டோம். இது வரும் ஆண்டுகளில் படிப்படியாக மீண்டும் ஒரு புதிய ஒழுங்கமைப்பை நோக்கிச் செல்வதற்கான அடித்தளமாகவும் இருக்கும்; இருந்தால் மனித இனத்துக்கு நல்லது.
கட்டுரையாளர்:
முன்னாள் மத்திய அமைச்சர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.