இது போருக்கான காலம் அல்ல!

இஸ்ரேல் - ஈரான் போர் தீவிரம் அடைந்து வருவது குறித்து...
இது போருக்கான காலம் அல்ல!
Published on
Updated on
3 min read

இஸ்ரேல் - ஈரான் போர் தீவிரம் அடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள அணுசக்தி தலைமையகம் தீக்கிரையானது. எண்ணெய் வயல்கள் நாசமாகி விட்டன. இதுவரை சற்றேறக்குறைய 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஈரான் நடத்திய பதில் தாக்குதலில் இஸ்ரேலில் 24 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இருதரப்பிலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள்.

அணுகுண்டு தயாரிப்பில் ஈரான் தீவிரம் காட்டுவதாகக் கூறி, அந்த நாட்டின் மீது இஸ்ரேல் விமானப்படை கடந்த ஜூன் 13-ஆம் தேதி தாக்குதல் நடத்தியது. அன்றைய தினம் ஈரானின் 4 அணுசக்தி தளங்கள் அழிக்கப்பட்டன. நாட்டின் மூத்த அணு விஞ்ஞானிகள் 9 பேர், ராணுவத் தளபதிகள் 3 பேர் உள்பட ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் நகரங்களைக் குறிவைத்து ஈரான் ராணுவம் ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் அதிதீவிரத் தாக்குதல்களை நடத்தியது.

இஸ்ரேல் நகரங்களைக் குறிவைத்து ஈரான் ராணுவம் 400 ஏவுகணைகளை வீசியது. இதில் பெரும்பாலான ஏவுகணைகள் நடுவானில் இடைமறித்து அழிக்கப்பட்டன. எனினும், சில ஏவுகணைகள் இஸ்ரேல் பகுதியில் விழுந்தன. இஸ்ரேலின் பாட்யாம் நகரில் அடுக்குமாடிக் குடியிருப்பின் மீது ஈரான் ஏவுகணை விழுந்து வெடித்துச் சிதறியது. இதில் ஆறு பேர் உயிரிழந்தனர்; 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இஸ்ரேலின் வேறு சில பகுதிகளின் மீதும் ஏவுகணைகள் விழுந்தன.

ஈரானின் இலக்கியமும், ஈரான் மொழித் திரைப்படங்களும் மறக்க முடியாத ஆகச்சிறந்த படைப்புகள் என்பதை நாம் மறுதலித்துவிட முடியாது. "அனடோலியா', ஈரான் மற்றும் மேற்கு மத்திய ஆசியாவின் சில பகுதிகள், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் மேற்கு பகுதிகளை உள்ளடக்கிய ஈரானிய மொழிகளில் எழுதப்பட்ட தொகுப்பு. எஞ்சியிருக்கும் மிகப் பழைமையான நூல்கள் ஜொராஸ்ட்ரியானிஸத்தின் புனித நூலான அவிஸ்டாவில் உள்ளன.

ஈரானிய சோட்டியன் மற்றும் சாகாவின் போட்டனியஸ் பேச்சு வழக்கு அழிந்துபோன மொழிகளில் வரையறுக்கப்பட்ட எழுத்துகள் உள்ளன. இவை குருதேஸ் மற்றும் பாஸ்டோ மொழிகளின் நவீன இலக்கியங்களை உள்ளடக்கியவை.

மிக முக்கியமானவை பாரசீக மொழிகளில் பேச்சு வழக்கில் உள்ள இலக்கியங்கள்தான். இஸ்லாத்துக்கு முந்தைய காலத்தின் பழைய பாரசீக மற்றும் மத்திய பாரசீக மொழிகள் மற்றும் குறிப்பாக இஸ்லாமிய காலத்தின் நவீன பாரசீக பார்சி அல்லது டாரி ஆகியவை அடங்கும்.

இலக்கியம் என்பது மனித வெளிப்பாட்டின் ஒரு வடிவம். ஆனால், வார்த்தைகளில் வெளிப்படுத்தப்படும் அனைத்தும் ஒழுங்கமைக்கப்பட்டு எழுதப்பட்டாலும்கூட இலக்கியமாகக் கருதப்படுவதில்லை. அப்படிப்பட்ட இலக்கியங்கள் பாரசீக இலக்கியம், புதிய பாரசீக மொழிகள்; நவீன பாரசீகம் என்று அழைக்கப்படும் மரபின் தொடர்ச்சி 9-ஆம் நூற்றாண்டுகளில் இருந்து அரபு எழுத்துகளின் சற்று நீட்டிக்கப்பட்ட வடிவத்துடன், பல அரபு வார்த்தைகளைக் கடனாகப் பெற்று எழுதப்பட்ட பாரசீக மொழிகளின் வடிவம்; புதிய பாரசீகத்தின் இலக்கிய வடிவங்கள் ஈரானின் பார்சி என்று அழைக்கப்படுகிறது. இவையே அந்த நாட்டின் அதிகாரபூர்வ மொழியாகும்.

மேலும், ஆப்கானிஸ்தானில் டாரி என்று அழைக்கப்படுகிறது. அங்கு அதுவும் பாஸ்டோவும் அதிகாரபூர்வ மொழிகளாகும். இது தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தானில் உள்ள தாஜிக்குகளால் சிவிலிக் எழுத்துகளைப் பயன்படுத்தி எழுதப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக மேற்கு மத்திய ஆசிய இந்திய துணைக்கண்டம் மற்றும் துருக்கியில் புதிய பாரசீக மொழி ஒரு மதிப்புமிக்க கலாசார மொழியாகவும் மரபின்வழி நீண்டு வருகிறது.

இந்திய துணைக்கண்டத்தின் இந்தோ ஆரிய மொழிகளுடன் சேர்ந்து ஈரானிய மொழிகள் இந்தோ ஐரோப்பிய மொழிகள் குடும்பத்தின் பழைமையான கிளைகளில் ஒன்றான இந்தோ-ஈரானிய கிளையைச் சேர்ந்தவை. கிட்டத்தட்ட 3,000 ஆண்டுகளாக எஞ்சியிருக்கும் பழைய ஈரானிய மொழிகளில் எழுதப்பட்ட ஆவணங்கள் அந்த நாட்டின் பழைமையைப் பறைசாற்றும்.

ஈரானிய இலக்கியங்களில் மிக முக்கியமானவை, அவிஸ்டாவில் பாதுகாக்கப்பட்ட பண்டைய புராணங்களின் எச்சங்கள். அவை ஈரானிய தெய்வங்களை நோக்கி எழுதப்பட்ட நூல்கள்; பாரசீகக் காவியக் கதைகள். காலத்தாலும், சீளத்தாலும் அழிக்க முடியாத பழைமையின் பண்பாட்டுப் பெட்டகங்கள்.

தற்போது அந்த நூல்களில் காணப்படும் ஒரே பழைய ஈரானிய மொழி அச்சமீனியா மன்னர்களால் கியூனிபாம் எழுத்தில், கல்வெட்டுகளில் பயன்படுத்தப்பட்ட பழைய பாரசீகம், கி.மு. 6 மற்றும் 4-ஆம் நூற்றாண்டுகளை உள்ளடக்கியது. இத்தகைய நீண்ட நெடிய வரலாற்றை இப்போதைய போர் சிதைத்து விடுமோ என்கிற அச்சம் எல்லோர் மனதிலும் ஆழப் பதிந்துகிடக்கிறது.

ஈரானில் 9 கோடி மக்கள் வசிக்கும் இந்த நிலப்பரப்பு வடமேற்கு துருக்கியின் மேற்கு ஈரானும் ஹரீபியன் கடலும், வடக்கே ஆப்கானிஸ்தானும், தென்கிழக்கே பாகிஸ்தானும், தெற்கே பாரசீக வளைகுடாவும் சூழ்ந்திருக்கிற இந்த நாடு போர் தாக்குதலால் நிலை

குலைந்துபோய் நிற்கிறது.

பாரசீக தேசிய கவியான அப்துல் காசிம் ஃபெர்டோவ்சி, கவிஞரும் தத்துவ ஞானியுமான ரூபி, நவீன ஈரானியக் கவிதையின் ஒரு முக்கிய முகமாகக் கருதப்படும் பாரூக்பரோக்ஜாக் - இவர்களின் குரலை இந்தப் போர் ஒருபோதும் நசுக்கி விடாது என்று

நம்புவோம்.

ஆனால், ஈரான் மக்களுக்கு எதிராக நாங்கள் போராடவில்லை; ஈரானின் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக நாங்கள் போராடுகிறோம் என்கிறது இஸ்ரேல். ஈரான் ராணுவ முகாமுக்கு அருகில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு தெரிவித்திருக்கிறது இஸ்ரேல்.

ஈரானுக்குப் பக்கபலமாக ரஷியா, சீனா, வட கொரியா, துருக்கி நாடுகள் அணிவகுத்து நிற்கின்றன. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும், ஐரோப்பாவும் ஓரணியில் திரண்டிருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில், இஸ்ரேல் - ஈரான் இடையே போர் நீடிப்பது மூன்றாம் உலகப் போருக்கு வித்திட்டு விடும்.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் அமெரிக்காவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்கள் மீது ஈரான் ராணுவத் தாக்குதல் நடத்தினால் எங்களின் முழு பலத்துடன் தாக்குதல் நடத்துவோம். மோசமான விளைவுகளை ஈரான் சந்திக்க வேண்டுமென்று அமெரிக்கா எச்சரித்திருக்கிறது.

இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாகவும், நைல் நதி விவகாரத்தில் எகிப்து எத்தியோப்பியா இடையே சமரசத்தை ஏற்படுத்தியதாகவும், இஸ்ரேல் - ஈரான் இடையே ஒப்பந்தத்தை ஏற்படுத்தி போருக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் எங்களால் முடியும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருக்கிறார். ஆனால், நாளுக்கு நாள் பதற்றம் அதிகரிக்கிறதே தவிர, போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கே இடமில்லாமல், ஈரான் திட்டவட்டமாக களத்தில் நிற்கிறது.

இஸ்ரேலில் டெல் அவிவ் நகர் அருகே உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் தூதரக கட்டடம் லேசாக சேதமடைந்தது. ஆனால், ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதைத் தொடர்ந்து அமெரிக்க தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கிறது.

டெஹ்ரானில் உள்ள ஈரான் அரசு தொலைக்காட்சி நிறுவனம் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்கியபோது, பெண் செய்தி வாசிப்பாளர் நேரலையில் செய்தி வாசித்துக் கொண்டிருந்தார்; ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதை நேரலையில் பார்த்து உலகமே அதிர்ச்சிக்குள்ளானது. இஸ்ரேலின் இந்தத் தாக்குதலால் தொலைக்காட்சி நிறுவனம் தீப்பற்றி எரிந்தது.

இரு நாடுகளுக்கும் இடையே ஒரு சமமான நிலைப்பாட்டை இந்தியா கொண்டிருக்கிறது. எந்த நாட்டுக்கும் ஆதரவாக இல்லை. ஏனெனில், இஸ்ரேலிடம் இருந்து ட்ரோன்கள், தகவல் தொழில்நுட்ப உதவிகளை இந்தியா பெறுகிறது. அதேவேளை ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய், அந்த நாட்டின் சாபஹார் துறைமுகத்தை இந்தியா நிர்வகித்து வருகிறது. ஒரு நாட்டுக்கு ஆதரவாக இந்தியா செயல்பட்டால், மற்றொரு நாட்டுக்கு எதிரியாகிவிடும்.

எடுத்துக்காட்டாக, இந்தியா-பாகிஸ்தான் பிரச்னையில் துருக்கி, அஜர்பைஜான் ஆகிய நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவு குரல் கொடுத்தன. எனவே, அந்த நாடுகளுடன் ஒப்பந்த உறவுகளை இந்தியா முறித்துக் கொண்டது. பாகிஸ்தான் விவகாரத்தில் இந்தியாவுக்கு இஸ்ரேல் நேரடியாக ஆதரவு அளித்தது. எனினும், இஸ்ரேல்-ஈரான் மோதலில் நடுநிலையைக் கடைப்பிடிக்க வேண்டிய நிலைதான் இந்தியாவுக்கு இருக்கிறது.

உலக எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஏற்றுமதியில் சுமார் 40 சதவீதம் ஹார்முஸ் நீரிணை கடல்பாதை வழியாகவே செல்கிறது. இந்தியா, சீனா, தாய்லாந்து, தென் கொரியா, வியத்நாம் ஆகிய நாடுகள் மட்டுமன்றி, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், ஆப்பிரிக்க நாடுகளும் இந்தப் பாதை வழியாகத்தான் எண்ணெயை தங்கள் நாட்டுக்கு கொண்டுவருகின்றன. இந்த ஹார்முஸ் பாதையை இஸ்ரேல் மூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

எந்தவொரு போரும் உலகில் இதுவரை நிலையான அமைதியை ஏற்படுத்தியதில்லை. மாறாகப் பல மனித உயிர்களைப் பலிகொண்டு பேரழிவுகளைத்தான் ஏற்படுத்தியிருக்கின்றன. இஸ்ரேல்-ஈரான் மோதலை வேடிக்கை பார்த்துக் கொண்டிராமல், உடனடியாக சமரசத்தை ஏற்படுத்துவது உலக நாடுகளின் கடமை; குறிப்பாக, வல்லரசுகளான அமெரிக்கா, ரஷியா, சீனாவின் கடமை.

பிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பதுபோல இது போருக்கான காலமல்ல!

கட்டுரையாளர்:

முன்னாள் அமைச்சர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com