ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல் நடத்துவதைத் தவிர்க்க எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்து, மத்திய கிழக்கில் போர் மூண்டிருக்கிறது. ஈரானில் அரசுக்கு எதிராக நடந்துவரும் போராட்டத்தை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி இருக்கின்றன அமெரிக்காவும் இஸ்ரேலும்.
இஸ்ரேல்-அமெரிக்காவின் கூட்டுத் தாக்குதலில் ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டிருக்கிறார். அவரது முடிவுடன் போர் முடிந்துவிடப் போவதில்லை என்பதை ஈரான் உறுதிப்படுத்தியிருப்பதன் மூலம் முழு அளவிலான போருக்கு வித்திடப்பட்டிருக்கிறது. ஈரானின் அணுசக்தித் திட்டம் தங்களுக்கான அச்சுறுத்தல் என்று இஸ்ரேல் ஆரம்பத்திலிருந்தே சொல்லி வருகிறது.
தங்களது அணுசக்தித் திட்டம் மின்சார உற்பத்தி உள்ளிட்ட ஆக்கபூர்வமான செயல்பாடுகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என ஈரான் பலமுறை கூறியும் அதை நம்ப இஸ்ரேலும், அமெரிக்காவும் தயாராக இல்லை. அணுசக்தித் திட்டம் என்கிற பெயரில் அணு ஆயுதம் தயாரிப்பதற்காக யுரேனியத்தை ஈரான் செறிவூட்டுவதாக அவை தெரிவித்தன.
இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துத்தான் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஈரானின் அணுசக்தி மையங்களைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அந்தத் தாக்குதலில் அமெரிக்காவும் இணைந்தது. ஈரானின் நடான்ஸ், ஃபோர்டோ போன்ற இடங்களில் நிலத்துக்கு அடியில் அமைக்கப்பட்டிருந்த அணுசக்தி மையங்கள் மீது அதிநவீன ஏவுகணைகளை வீசி அமெரிக்கா
தாக்குதல் நடத்தியது. ஈரானும் பதிலடியில் ஈடுபட, 12 நாள்களில் அந்தப் போர் முடிவுக்கு வந்தது. அணுசக்தி மையங்கள் மீதான தாக்குதலுடன் ஈரானின் அணுசக்தித் திட்டங்கள் முடிவுக்கு வந்துவிட்டதா என்றால் இல்லை.
தாக்குதலுக்கு முன்னரே அந்த மையங்களிலிருந்து யுரேனியத்தை பாதுகாப்பாக இடம் மாற்றிவிட்டதாக அறிவித்த ஈரான், தனது அணுசக்தித் திட்டங்களை மீண்டும் தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டது இப்போதைய போருக்கு வழிவகுத்திருக்கிறது. ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்களைத் தயாரிக்காது என்று ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான் திட்டவட்டமாகத் தெரிவித்தும் ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டுத் தாக்குதல் நடத்தியிருக்கின்றன.
பேச்சுவார்த்தைக்கு இடையே அமெரிக்கா தனது போர்க் கப்பல்களை மத்திய கிழக்கில் நிறுத்தியதை எந்தக் காரணத்தைக் கூறி ஏற்க முடியும்? ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என சர்வதேச அணுசக்தி முகமை (ஐஏஇஏ) அண்மையில்கூடத் தெரிவித்தது.
எந்த ஒரு சர்வதேச அமைப்பையும் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாத டிரம்ப், ஐஏஇஏ-வை மட்டும் மதித்துவிடுவாரா என்ன? ஈரான் மீது ராணுவ நடவடிக்கைகளை எடுக்க முற்பட்டால், அதற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவை என எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர் கூறியதையும் டிரம்ப் உதாசீனப்படுத்தினார்.
ஈரானில் உள்நாட்டுப் பிரச்னை தொடர்ந்து இருந்து வருகிறது. அதை அடக்குவதற்கு அந்த நாட்டின் அரசுப் படையினர் மேற்கொண்ட அடக்குமுறைகள் நிச்சயம் விமர்சனத்துக்குட்பட்டவை. ஆனால், அதையும் ஒரு காரணமாகக் கூறி, இது உங்கள் தலைமுறைக்கு கிடைக்கும் ஒரே வாய்ப்பு. நீண்ட காலமாக நீங்கள் அமெரிக்க உதவியைக் கேட்டீர்கள். இப்போது நீங்கள் கேட்டதைச் செய்யும் அதிபர் (டிரம்ப்) உங்களுக்குக் கிடைத்துள்ளார்' என்று டிரம்ப் கூறியது அப்பட்டமான ஏகாதிபத்தியம்.
அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் ஈரானின் ஹார்மோஸ்கான் மாகாணத்தில் ஒரு தொடக்கப் பள்ளியில் குண்டுகள் விழுந்து 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர். ஈரானின் வருங்காலத் தலைமுறைகளுக்குக் கவலைப்படும் டிரம்ப், அந்த நாட்டின் எத்தனை வருங்காலத் தலைமுறையை தனது செயல்களால் பிஞ்சிலேயே அழித்திருக்கிறோம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
அமெரிக்கா, இஸ்ரேலுக்குப் பதிலடி கொடுப்பதாக பஹ்ரைன், குவைத், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஈரான் வான்வழித் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இந்த நாடுகளில் வசிக்கும் மக்கள், வேலை தேடி வந்த வெளிநாட்டவர் என லட்சக்கணக்கானோரை மரண பயத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது இந்தப் போர்.
ஈரானில் ஆட்சி மாற்றத்துக்கான போர் என்று பகிரங்கமாகச் சொல்லிவிட்டுத்தான் இந்தப் போரை அமெரிக்கா தொடங்கியது. கமேனி கொல்லப்பட்டிருப்பதன்மூலம் ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிடும் என்று அமெரிக்காவும், இஸ்ரேலும் நம்புகின்றன.
இராக்கின் சதாம் ஹுசைன், லிபியாவின் மும்மார் கடாஃபியைத் தொடர்ந்து இப்போது ஈரானின் அயதுல்லா அலி கமேனி அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டிருக்கிறார். சில வாரங்களுக்கு முன்பு, வெனிசுலா நாட்டில் அத்துமீறி நுழைந்து அந்த நாட்டு அதிபர் கைது செய்யப்பட்டு அமெரிக்காவுக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்.
அத்துமீறி இன்னொரு நாட்டின் மீது ராணுவத் தாக்குதல் நடத்துவதும், அதிபர்கள் கொல்லப்பட்டு ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்படுவதும் அமெரிக்காவுக்கு வழங்கப்பட்டிருக்கும் தனி உரிமை என்றால், ஐக்கிய நாடுகள் சபை என்கிற அமைப்பின் தேவைதான் என்ன? வல்லான் வகுத்ததே சட்டம் என்கிற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் போக்கு இப்படியே தொடர்ந்தால், இதன் அடுத்தகட்டம் அணு ஆயுதப் போரில் முடியக்கூடும் என்று எச்சரிக்கத் தோன்றுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் - புகைப்படங்கள்

ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்!

இஸ்ரேலுக்குப் பதிலடி! ட்ரோன், பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவிய ஈரான்!

ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?
வீடியோக்கள்

காற்றில் ஊழல் செய்த கட்சி திமுக: எடப்பாடி பழனிசாமி | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | சஹிப்ஸதா ஃபர்ஹான் மட்டும் அடித்தால் போதுமா?: கோட்டைவிட்ட பாகிஸ்தான்! | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS
தினமணி வீடியோ செய்தி...

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

