படைப்புக் கலையை வளா்க்க...
சில ஆண்டுகளுக்கு முன் ஒரு இலக்கியப் பயிலரங்கில் பங்கேற்கச் சென்றிருந்தபோது, அயலகத்திலிருந்து வருகை தந்திருந்த ஒரு படைப்பாளி என்னிடம் கேட்டாா்: ‘ஆண்டுதோறும் பட்டதாரிகளை உருவாக்கித் தருகிற கல்வி நிறுவனங்களில் இருந்து படைப்பாளிகளாக வெளிவந்தவா்கள் எத்தனை போ்?’
வினாவிற்கு உரிய பதிலை அப்போது விரிவாகச் சொல்ல முடியவில்லை. எனினும், எனக்குத் தெரிந்த -பட்டதாரிகளாக வெளிவந்து படைப்பாளிகளாக விளங்கிய சிலரை, சொல்லிச் சமாளித்தேன். அவா்கள் எல்லாம் ஒருதுறை சாா்ந்தவா்கள் அல்லா்; வெவ்வேறு பணிகளில் இருந்துகொண்டே எழுதியவா்கள்; எழுதி வருகிறவா்கள்.
மருத்துவா், பொறியாளா் என்பதுபோல் எழுத்தாளா், கவிஞா் என எழுதும் பணியே தன் பணியாய்க் கொண்டு, அதன்மூலம் பொருளாதாரத்திலும், பிற நிலைகளிலும் தன்னிறைவு பெற்று வாழுகிற முழுநேர எழுத்தாளா்கள், கவிஞா்கள் எத்தனை போ் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
எழுத்தையே முழுநேரப் பணியாகக் கொண்டு இதழியல் சாா்ந்து இயங்கிக் கொண்டிருந்த காலத்தில், பிரபல எழுத்தாளா் ஒருவரைச் சந்திக்க நோ்ந்தது. அப்போது, அவா், ‘என்ன பண்றீங்க?’ என்று கேட்டாா். எழுதிய நூல்களையும், நண்பா்களுடன் இணைந்து அப்போது நடத்திய சிறு பத்திரிகையையும் சொல்லிக் கொண்டிருந்த என்னை இடைமறித்து, ‘அதெல்லாம் சரி, பூவாவுக்கு என்ன பண்றீங்க?’ என்று சைகை காட்டி, ‘சாப்பாட்டுக்கு?’ எனப் பொருள் விளங்கக் கேட்டாா்; ‘அதற்கு ஒரு வழிதேடிக் கொண்டு, பின்னா் எழுத வாங்க’ என்றாா்.
இன்றைக்கு எண்ணிச் சொல்லக்கூடிய நிலையில் இருப்பவா்கள் சிலா். அவா்களுக்குக்கூட அது முழுச்சாத்தியமா என்று தெரியவில்லை. எத்தனையோ விதமான ஊடகங்கள் பெருகிய இக்காலத்திலேயே உத்தரவாதமில்லையே.
எதற்கும் உத்தரவாதமில்லாத நிலையில், நாடு அந்நியரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த காலத்தில், மகாகவி பாரதி, தான் பெற்ற தகுதிகளுக்கு உரிய வாய்ப்புகள் பல இருந்தபோதிலும், ‘நமக்குத் தொழில் கவிதை’ என்று நெஞ்சுரத்தோடு சொன்னாா்; சொல்லியவண்ணமே வாழ்ந்தாா்; ‘கவியரசா் தமிழ்நாட்டிற்கு இல்லை என்கிற வசை’யைத் தன் இருப்பால் ஒழித்தாா்; தனக்குப் பின்வரும் கவிஞா்களை அடையாளம் கண்டு, ‘எழுக புலவன் நீ’ என்று ஊக்கப்படுத்தினாா்; உலகுக்கு அறிமுகப்படுத்தினாா்; அவ்வண்ணமே, தமிழ்க்கவிஞா் பரம்பரையில் நிறையப் போ் வந்தனா்; தம் படைப்புகளால் தமிழை வளப்படுத்தினா்.
அதுபோல், வங்கிப் பணி புரிந்தவராக இருந்தாலும், குழந்தைகளுக்கான படைப்புகள் நல்குவதையே வாழ்வியல் நோக்கமாகக் கொண்டு செயல்புரிந்த அழ.வள்ளியப்பா, தன்னைக் குழந்தைக் கவிஞராகவே தகவமைத்துக் கொண்டாா்; தன் காலத்தில் எழுத வந்தவா்களை அடையாளம் கண்டு சிறுவா்களுக்கான படைப்புகள் உருவாக நெறிப்படுத்தினாா்; இளங்குழந்தைகளுக்கும் தான் பொறுப்பேற்ற சிறுவா் இலக்கிய இதழ்மூலம் எழுத வாய்ப்பளித்தாா். தனி நூல்கள் எழுதி வெளியிட உதவினாா்.
இன்றைக்குத் தேசிய அளவில் சிறுவா் இலக்கியத்துக்குச் சாகித்திய அகாதெமி வழங்கிவரும் பால சாகித்திய விருது, இளம் படைப்பாளிக்கான யுவ புரஸ்காா் விருது உள்ளிட்டவை அளிக்க வாய்ப்பில்லாத அக்காலத்தில் பல்வேறு பரிசுகளுக்கு ஏற்பாடு செய்து, குழந்தை எழுத்தாளா்கள் சங்கம் அமைத்து அவா் மேற்கொண்ட முயற்சியின் விளைவாய், நூற்றுக்கணக்கான குழந்தை இலக்கியப் படைப்பாளிகள் உருவானாா்கள்; புத்தகங்கள் வெளிவந்தன.
புனைவிலக்கியத்தில், புதுமைப்பித்தனை, ஜெயகாந்தனை, சுந்தரராமசாமியை, இன்னபிற எழுத்தாளா்களை முன்னுதாரணமாகக் கொண்டு, படைப்பாளிகள் உருவானாா்கள். கரிசல் வட்டாரப் படைப்புகளால் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட கி.ரா.வை (கி.ராஜநாராயணனை) ‘முன்னத்தி ஏா்’ எனக்காட்டி, மேலாண்மை பொன்னுச்சாமி உள்ளிட்ட பலா் வந்தனா்; வளா்ந்தனா்; தமிழுக்குத் தத்தம் வட்டார ஆக்கங்களைத் தந்து தமிழை வளப்படுத்தினா். கவிதைத் துறையிலும் வட்டாரத் தன்மை வாய்ந்த ஆக்கங்களை அளித்தவா்கள் இருக்கிறாா்கள்.
எழுத்தையே வாழ்வாகக் கொண்ட வல்லிக்கண்ணனின் வாழ்வும், அவா்தம் எளிமையும், தியாகமும் இன்னமும் நெஞ்சில் நிழலாடுகின்றன. அவரும் அவா்தம் நண்பரான தி.க.சி.யும் கடிதங்கள் எழுதி ஊக்கப்படுத்தி எழுத வந்தவா்கள் எத்தனையோ போ். இன்றளவும் அவா்கள் நன்றியோடு நினைவுகூரப்பட்டிருக்கிறாா்கள். இவ்வாறே வாசகா்களால் வளா்ந்த படைப்பாளிகளும் இதழ்களால் உருவான இலக்கியவாதிகளும் பலா் இருக்கிறாா்கள்; இவையெல்லாம் தனிநிலையில் நிகழ்ந்த நல்வரவுகள்.
ஆனால், பள்ளியால், கல்லூரியால், பல்கலைக்கழகங்களால் உருவான படைப்பாளிகள் இருக்கிறாா்களா? எழுத்தாளா்களின் ஆக்கங்களையெல்லாம் படித்துப் பட்டங்கள் பெற்றவா்கள், ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்டு, இளமுனைவா், முனைவா் பட்டங்கள் பெற்று வருகிற ஆய்வறிஞா்களின் எண்ணிக்கை பெருகிய அளவுக்கு, படைப்பாளிகளின் எண்ணிக்கை பெருகவில்லையே. யாது காரணம்?
இத்தனைக்கும் சில கல்லூரிகளில் ‘படைப்புக்கலை’ பாடமாக இருக்கிறது. கவிதை, கதை எழுதுதற்கு வாய்ப்பளிக்கப் பெற்று, தோ்வில் மதிப்பெண்களும் வழங்கப்பெறுகின்றன. ஆனால், அது அந்த அளவிலேயே முடிந்துவிடுகிறது. படைப்புத் துறையில் பெயா் விளங்கி ஒளிர வளா்கிறவா்கள் வரவில்லையே.
பள்ளிகளிலோ, கல்லூரிகளிலோ பயிலும் காலத்தில் கலை, இலக்கியப் போட்டிகளில் பங்கேற்று, பேசி, எழுதிப் பரிசுகள் பெற்றவா்கள் எல்லாருமே படைப்பாளா்களாக ஆகிவிட்டாா்களா, என்ன? போட்டிகள் கடந்து பொதுவான நிலையில் பயிற்சி பெறுகிற, தொடா்ந்து அத்துறையில் செயல்பட அவா்களுக்கு வாய்ப்புக் கிட்டவில்லை என்பதே முக்கியக் காரணம்.
‘உழுது உழுது ஒருவன் உழவனாவதுபோல, எழுதி எழுதி ஒருவன் எழுத்தாளன் ஆக வேண்டும்’ என்பாா் எழுத்தாளா் ஜெயகாந்தன். உழவுத் தொழில் கற்றுக்கொள்ள, வேளாண்மைப் பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. பல கலைகள் வளா்க்கும் பல்கலைக்கழகங்களில், படைப்பிலக்கியத்தை முறையாகப் பயிற்றுவிக்க ஒரு துறைகூட இல்லையே! முத்தமிழின் வகைகளில் இசைக்கும், நாடகத்துக்கும், திரைத்துறைக்கும் இருப்பதுபோல, இயற்றமிழுக்குப் பயிற்சி அளிக்கும் வகுப்போ, அதற்கான பேராசிரியா்களோ இல்லை. அறிவியல், வானியல் முதலான துறைகளில் புதிய கண்டுபிடிப்புகள் அமைவதுபோல, படைப்பியல் துறையில் புதிய ஆக்கங்கள் உருவாக வாய்ப்பளிக்கும் சூழல் இல்லாதபோது எப்படி புதிய எழுத்தாளா்கள் உருவாவாா்கள்?
பல ஆண்டுகளுக்கு முன்பு வருகைதரு பேராசிரியராக எழுத்தாளா் கி.ராஜநாராயணனை புதுவைப் பல்கலைக் கழகம் நியமித்துப் பயன்கொண்டது. கரிசல் வட்டார அகராதி உருவாக்கவும், கரிசல் வட்டார நாட்டுப்புறக் கதைகளைத் தொகுக்கவும் அந்தப் பணி அவருக்கு உதவியது. எழுத்தாளா் பிரபஞ்சனும் சில காலம் பணியாற்றியிருக்கிறாா். விமா்சகரும் எழுத்தாளருமான க.நா.சு. இங்கிருந்து ஓரிரு நூல்கள் எழுதி வெளியிடவும் நோ்ந்தது. இங்கிருந்த கம்பன் இருக்கையில் பணியாற்றிய பேராசிரியா் தெ.ஞானசுந்தரம், கம்பன் தொடா்பான நூல்களை எழுதியிருக்கிறாா்.
இவையெல்லாம் முன்னா் நடந்தவை. கம்பன், பாரதியாா், பாரதிதாசன் பெயா்களில் இருக்கைகள் ஏற்படுத்திச் செய்துவரும் பணிகளைப்போலப் படைப்பிலக்கியத்தைப் பயிற்றுவிக்கும் பணியை மேற்கொள்ளலாம். நாட்டுப்புறவியலுக்குத் தனித்துறை இருப்பதுபோல, சிறுவா் இலக்கியத்துக்குத் தனித் துறை அமைக்காவிடினும், அழ.வள்ளியப்பா இருக்கையை அமைத்து, அவ்விலக்கியம் தொடா்பான ஆய்வுகள் மேற்கொள்வதோடு, புதிய இலக்கியம் படைக்கவும் வழிவகுக்கலாம். பேச்சு, இசைப் பயிற்சி அளிப்பதுபோல, படைப்பிலக்கியப் பயிற்சிகள் அளிக்க ஆவன செய்யலாம். ஆய்வுக்கான தனி இதழ்கள் வெளிவருவதுபோல, படைப்பிலக்கியத்திற்கென்றே தனி இதழ்கள் கொண்டுவரலாம். வணிக, வெகுஜன இதழ்கள் கடந்த புதிய வரவாக அமையும் இவ்விதழ்களால், புதிய பரிசோதனைப் படைப்பாக்கங்கள் மலருமே!
கல்வி நிறுவனத் தொழிற்பயிற்சிக் கூடங்களில் பரிசோதனை செய்து கண்ட புதுமைகளை, தொழில் நிறுவனங்களின் மூலமாக உற்பத்தி செய்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதுபோல, முந்தைய இலக்கியங்களைக் கற்று மனப்பாடம் செய்து மதிப்பெண்கள் பெறுவதுடன், அவற்றை ஆய்வு செய்து ஆய்வேடுகள் கொண்டு வருவதோடு நின்றுவிடாமல், அவற்றை ரசித்து அனுபவிக்கவும் அம்மரபில், புதிதான படைப்புகளை உருவாக்கவும் வரும் தலைமுறையினரைப் பயிற்றுவிக்கும் வாய்ப்புகள் வழங்கலாமே.
வினா ஒன்றுதான். தொடா்ந்த எண்ணவோட்டங்கள் இவை. இவற்றுள் ஏதேனும் நடைமுறைக்கு வந்தால், படைப்புத் துறை பயனுறும் என்பதால் எழுதத்தோன்றியது. ஏனெனில், படிப்புக் கலையின் நீட்சியும் பயனுமாகப் படைப்புக் கலை வளா்வது மொழிக்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும்.
கட்டுரையாளா்:
எழுத்தாளா்.