பெ. நா. மாறன்
"உலகம் ஒவ்வொரு மனிதனின் தேவைக்கும் போதுமானதை வழங்குகிறது. ஆனால், ஒவ்வொருவரின் பேராசைக்கும் அல்ல' என்பது மகாத்மா காந்தியின் கூற்று. உலகின் எந்த முக்கிய எதிர்மறை நிகழ்வுக்கும் இந்தக் கருத்தைப் பொருத்திப் பார்க்க இயலும். எல்லா அழிவுகளுக்குப் பின்னும் யாரோ ஒருவருடைய பேராசை மட்டுமே காரணமாயிருக்கும்.
மேற்காசிய போர் உலக அளவிலான சில தலைவர்களின் பேராசைகளைச் சுட்டிக் காட்டியுள்ளது என்கிற அளவில் கடந்து போகின்ற ஒன்றாக இல்லாமல், நமக்குள் இருக்கிற ஒரு பேராசையையும் சுட்டிக்காட்டி சுய பரிசீலனைக்கு உள்ளாக்கி இருக்கிறது எனலாம்.
நாட்டில் போதுமான அளவு கச்சா எண்ணெய் இருப்பு இருக்கிறது. இறக்குமதி ஒட்டுமொத்தமாக நின்று போனால்கூட 70 நாள்கள் வரை சமாளிக்கும் அளவுக்கு பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் முதலானவற்றுக்குத் தட்டுப்பாடு இருக்காது; அதற்குள் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு விடும்; எனவே, பதற்றம் வேண்டாம் என்று மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டும்கூட நிலைமைக்கு ஏற்ப தம் எரிபொருள் செலவைக் குறைத்துக் கொள்ளும் கட்டுப்பாட்டு எண்ணம் இன்றி பெட்ரோல் நிலைய வாசல்களில் நீண்ட வரிசைகளில் நின்று பாட்டில்களையும் கொண்டு போய், கிடைக்கிற அளவுக்கு வாங்கி நிரப்பிக் கொள்ளும் நிலையில்தான் நம் தேச பக்தி இருக்கிறது.
கூடவே, சமையல் எரிவாயு உருளை விநியோகத்துக்குத் தட்டுப்பாடு வந்துவிடும் என்கிற பேரச்சம், ஒரு பக்கம் உள் பதுக்கலுக்கும், மறுபக்கம் குழப்பம் விளைவிக்கும் நீண்ட வரிசைகளுக்கும் காரணமான காட்சிகளையும் கண்டோம். குடும்பங்களுக்கு சிலிண்டர்கள் விநியோகத்தில் பிரச்னை இல்லாமல் பார்த்துக் கொள்வதற்கு மத்திய, மாநில அரசுகள் முழுப் பிரயத்தனம் செய்த நேரத்திலும், வீட்டளவில் மாற்று ஏற்பாடுகளைச் செய்து கொள்வதற்கு நிறைய கால அவகாசம் இருந்தும், ஏதோ மறுநாள் முதலே சிலிண்டர் விநியோகம் ஒட்டுமொத்தமாக நின்று போகப் போவது மாதிரியான கற்பனை பயத்துடன் படித்தவர்கள் வரை பதறிய பரிதாபங்களும் அண்மையில் அரங்கேறின.
வணிக ரீதியிலான சிலிண்டர்கள் விநியோகம் சில நாள்களுக்கு முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருந்த போதும், அதன் பிறகு ஒருபகுதி மட்டுமே விநியோகம் செய்யப்பட்டுக் கொண்டிருந்த போதும் சிறிய அளவிலான தேநீர்க் கடைகளும், வடை, பஜ்ஜி, போண்டா போன்ற சாமானியர்களின் சிற்றுண்டிகளைத் தயாரித்து சாலை ஓரங்களில் விற்றுப் பிழைத்துக் கொண்டிருந்த சிறிய கடைகளும் மட்டுமே மூடப்பட்டன. பெரும்பாலான பெரிய உணவகங்களிலும் திருமண மண்டபங்களிலும் எந்தக் கட்டுப்பாடும் இன்றி உணவுப் பொருள்களின் தயாரிப்புகளும் வீணடிப்புகளும் வழக்கம்போல் தொடர்கின்றன.
போர் முடிவுக்கு வந்தாலும் வராவிட்டாலும், மத்திய அரசு எந்த நாட்டுடனாவது பேச்சுவார்த்தை நடத்தி வர்த்தக ஒப்பந்தங்கள் செய்து சமையல் எரிவாயு இறக்குமதியை உறுதி செய்து நம் வீட்டின் அடுப்புகள் தடையின்றி எரிவதற்குத் தேவையான சிலிண்டர்கள் கிடைத்து விட்டால், நம் உலகம் வசந்தமாகி விடும் என்கிற அளவில்தான் இருக்கிறது நமது சுயநலம் மிகுந்த சமூகப் பார்வை.
பொதுமக்களுக்கு எரிவாயு சிலிண்டர்கள் தடையின்றிக் கிடைக்க வேண்டும் என்பதுதான் குடிமக்கள் நலன் நாடும் எந்த அரசுக்குமான முதன்மைக் குறிக்கோளாக இருக்க முடியும். விறகு, கரி, உமி, எரு போன்ற எரிபொருள்களை பெண்கள் உபயோகித்து அடுப்பெரித்து சுவாசப் பிரச்னைகளுக்கு உள்ளாகி ஆரோக்கியத்தை இழந்து குறைந்த வயதில் மரணித்துக் கொண்டிருந்த பரிதாப நிலையில் இருந்து மீட்கப்பட வேண்டும் என்ற அக்கறையில்தான் எல்லா வீடுகளுக்குமான சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்புகள் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் மூலம் மத்திய அரசால் கொடுக்கப்பட்டன.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 14 கோடி வீடுகளுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டிருந்த எரிவாயு இணைப்புகள், இன்றைய தேதியில் 33 கோடியாக உயர்ந்தது அந்த நல்லெண்ண அடிப்படையில்தான்.
அரசு எந்த நல்லெண்ண நடவடிக்கை மேற்கொண்டாலும், அதன் முழு நல்வினைப் பயனையும் பொதுமக்களின் சுயநலம் மிகுந்த பேராசை கொஞ்சம் நீர்த்துப் போகச் செய்து விடும் என்பதற்குப் பல எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும்.
குடும்ப அட்டைகளையே முதல் உதாரணமாகச் சொல்லலாம். ஏழை எளியவர்களுக்கான அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய் முதலான அத்தியாவசியப் பொருள்களை குறைந்த விலையில் வழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்ட குடிமைப் பொருள் வழங்கு துறையின் நடவடிக்கை, கொஞ்சம் கொஞ்சமாக விரிவாக்கம் பெற்று மக்களின் இருப்புச் சான்றிதழாக மதிக்கத்தக்க அளவுக்கு குடும்ப அட்டைகள் முக்கியத்துவம் பெற்றபிறகு எத்தனை போலி குடும்ப அட்டைகள் நடமாட ஆரம்பித்தன! குடும்ப அட்டைகளின் அடிப்படையிலான அரசு சலுகைகள் சரியான நபர்களுக்குப் போய்ச் சேர வேண்டும் என்பதற்காக, குடும்ப அட்டைகளைப் பரிசீலித்தபோது, நாடு முழுவதும் இரண்டரை கோடி கூடுதல் அட்டைகள் நீக்கப்பட்டன என்பது நம் வரலாறு.
வாக்காளர் தீவிர திருத்த விஷயத்திலும் எத்தனை கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டனர் என்பது அனைவரும் அறிந்ததே. எஸ்.ஐ.ஆர். எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடத்த உத்தேசிக்கப்பட்டபோது அதன் முக்கியத்துவம் உணராமல் எதிர்ப்புகள், கூக்குரல்கள் எழத்தான் செய்தன. ஆனால், போலி மற்றும் கூடுதல் வாக்காளர் அட்டைகள் அடையாளம் காணப்பட்டு நீக்கப்பட்ட பிறகான தேர்தல்கள் சரியான வாக்கு சதவீதத்தைக் காட்டி இந்திய ஜனநாயகத்துக்கே புதிய தன்னம்பிக்கையையும் வாக்காளர்களுக்குப் பெருமையையும் சேர்த்திருப்பதை இப்போது உணர்ந்து வருகிறோம்.
அகில இந்திய அளவில் முகவரிகளின் அடிப்படையிலான குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை என்பது குடும்பங்களின் எண்ணிக்கைதானே? குடும்பங்களுக்கான சிலிண்டர் இணைப்பு என்பது சற்றேறக் குறைய அதே எண்ணிக்கையில் தானே இருந்தாக வேண்டும்? ஆனால், சுமார் 20 கோடி குடும்ப அட்டைகள் மட்டுமே உள்ள இந்தியாவில், 33 கோடி சிலிண்டர் இணைப்புகள் உள்ளனவே. (ஒரு இணைப்பில் இரண்டு சிலிண்டர் என்று இருந்தாலும் அது ஓர் இணைப்பாகத்தான் கருதப்படும்). சிலிண்டர் இணைப்புக்கான விண்ணப்பத்தில் குடும்ப அட்டை ஓர் ஆதரவு ஆவணம் கிடையாது என்பதுதான் இத்தனை கூடுதல் இணைப்புக்கான காரணம்.
ஒரே நபர் இரண்டு முகவரியில் இரண்டு இணைப்புகள் வைத்திருப்பதும், ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்த தலைமுறையினர் தனித்தனி சிலிண்டர் இணைப்புகள் வைத்திருப்பதும் இதற்கான கூடுதல் காரணங்கள். இதில், எதற்கும் இருக்கட்டும் என்று பல வீடுகளில் வாங்கி வைத்த கூடுதல் இணைப்புகள் செயலற்ற இணைப்பு என்கிற பெயரில் ஒவ்வொரு முகமையிலும் இருக்கும். கள்ளச் சந்தை விற்பனைக்கு இவை துணை போகும் வாய்ப்புகள் அதிகம்.
இப்போதைய உடனடித் தேவை சிலிண்டர் இணைப்பு விஷயத்தில் எவ்வளவு சரியாக குடும்பங்களின் தேவை அடிப்படையில் அவை கொடுக்கப்பட்டுள்ளன என்பதைக் கணக்கெடுக்கும் பணி என்று உணர்த்தி இருக்கிறது இந்த தற்காலிக சிலிண்டர் தட்டுபாடு பிரச்னை.
மாநில வாரியாக விநியோகிக்கப்பட்டிருக்கும் குடும்ப அட்டைகள் எவ்வளவு, எரிவாயு இணைப்புகள் எவ்வளவு என்ற புள்ளிவிவரம் முகவரி வாரியாக அரசிடம் இருக்கும்போது அவற்றை ஒருங்கிணைத்தால் ஏராளமான கூடுதல் இணைப்புகள் இருப்பது தெரியவரும். நியாயமான காரணங்களுக்காக கூடுதல் இணைப்புகள் இருக்குமென்றால் பரிசீலித்து வழங்கலாம்; மற்றவை நீக்கப்பட வேண்டும்.
அப்போதுதான் போர்க்காலச் சூழல் முடிவுக்கே வந்தாலும்கூட மீண்டும் ஓர் இக்கட்டு இதே கோணத்தில் வரும்போது ஓரளவு சுலபமாகவே அதை எதிர்கொள்ள முடியும். பற்றாக்குறை காலத்தில் பகிர்ந்தளிக்க வேண்டிய கட்டாய சூழலில் சுயநலவாதிகள் வீடுகளுக்கு கூடுதல் சிலிண்டர்களும், நியாயம் காத்த ஏழைக்குக் கிடைக்காமலே போகும் அநியாயமும் தவிர்க்கப்பட்டு, ஏழை, பணக்காரர் நகர} கிராம பாகுபாடு இன்றி தேவைப்படும் அனைவருக்கும் விநியோகம் செய்ய அரசுக்கு எளிமையாக இருக்கும்; கள்ளச் சந்தை விற்பனையும் தடுக்கப்படும்.
சிலிண்டர்களைச் சார்ந்திருக்காமல் வீடுகளுக்கான சமையல் எரிவாயு விநியோகிப்பதற்கான குழாய் இணைப்பு விஷயத்தில் வட மாநிலங்கள் (குறிப்பாக குஜராத், மகாராஷ்டிரம் போன்றவை) வேகமாகத் தயாராகி வருகின்றன. அகில இந்திய அளவில் 1.6 கோடி வீடுகள் இணைப்புக் குழாய்கள் பெற்று விட்டன. தமிழ்நாட்டில் சுமார் ஒரு லட்சம் வீடுகள் மட்டுமே இணைப்புக் குழாய்களைப் பெற்றிருக்கின்றன. தமிழகத்தில் எரிவாயு இணைப்புக் குழாய்கள் பதிப்பதில் என்ன பிரச்னை இருக்கிறது? என்று கண்டறிந்து அரசியல் மாச்சர்யங்களின்றி மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சியாக பொதுமக்களின் சந்தேகங்கள் போக்கப்பட்டு அவர்களின் ஒத்துழைப்புடன் இந்தப் பணி வேகப்படுத்தப்பட வேண்டும்.
எல்லா வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என்ற உறுதியை தம் தேர்தல் அறிக்கைகளில் அளித்துள்ள தமிழகத்தின் பிரதான கட்சிகள், எல்லா வீடுகளுக்கும் எரிவாயுக் குழாய் இணைப்புப் பணி குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்கப்படும் என்ற உத்தரவாதம் தரவில்லை என்பது அவர்களுக்கே இதன் முக்கியத்துவம் குறித்த கவனம் இல்லை என்பதைக் காட்டுகிறது; இது வருத்தத்துக்குரிய விஷயம்.
கட்டுரையாளர்:
எழுத்தாளர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சமையல் எரிவாயு உருளைகளை கூடுதல் விலைக்கு விற்றால் புகாா் அளிக்கலாம்

தில்லியில் ஓராண்டில் 45,000 குடும்ப அட்டைகள் ரத்து

எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசு

2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


