மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

இந்தியாவின் கண்ணியத்தில் சமரசம் கூடாது!

டொனால்ட் டிரம்ப் தரப்பிலிருந்து இந்தியாவை நோக்கி வெளிவரும் அறிக்கைகள்...

News image

AP

Updated On :28 ஏப்ரல் 2026, 2:01 am

டொனால்ட் டிரம்ப் தரப்பிலிருந்து இந்தியாவை நோக்கி வெளிவரும் அறிக்கைகள், கொள்கை நிலைப்பாடுகளின் அண்மைக்கால போக்கு, ராஜதந்திர மரபுகளின் எல்லைகளை மீறி, பகிரங்கமான ஆத்திரமூட்டல் எனும் தளத்துக்குள் நுழைந்துவிட்டது. நாம் தற்போது காண்பது, இரு நாடுகளுக்கு இடையிலான நலன்களில் ஏற்படும் முரண்பாட்டை மட்டுமல்ல; மாறாக, அச்சுறுத்தும் வகையிலான சொல்லாடல்கள், தன்னிச்சையான ஆணைகள் வாயிலாக இந்தியாவின் இறையாண்மையை இழிவுபடுத்த முற்படும் ஒரு கவலைக்கிடமான போக்கே ஆகும்.

இதைவிடவும் மிகுந்த கவலையளிக்கும் விஷயம் என்னவென்றால், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இதற்கு அளித்துள்ள போதிய வலுவற்ற, மென்மையான பதிலடியாகும்; இது, உலக அரங்கில் நாட்டின் கண்ணியத்தைப் பாதுகாப்பதில் அந்த அரசுக்கு உள்ள விருப்பம் குறித்து தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது.

"பிரதமர் மோடியின் அரசியல் வாழ்க்கையை என்னால் அழிக்க முடியும்' என்று டிரம்ப் மீண்டும் மீண்டும் கூறிவருவது வெறும் தனிப்பட்ட தாக்குதல் மட்டுமல்ல; அவை இந்திய மக்களின் ஜனநாயக விருப்பத்துக்கு இழைக்கப்படும் அவமதிப்பாகும். இத்தகைய கூற்றுகள் இந்தியாவின் உள்நாட்டு அரசியல் களத்தில் ஒரு நேரடித் தலையீடாக அமைகின்றன; எந்தவொரு இறையாண்மை கொண்ட நாடும் வலுவான மறுப்பு இல்லாமல் இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஒரு நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை ஒரு வெளிநாட்டுத் தலைவரால் பகிரங்கமாக அச்சுறுத்தப்படும்போது, குறிவைக்கப்படுவது ஒரு தனிநபர் மட்டுமல்ல, மாறாக கோடிக்கணக்கான குடிமக்களின் ஜனநாயக ஆணையாகும். இத்தகைய கருத்துகளுக்கு முன் மெüனம் காப்பது, ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு முன்னுதாரணத்தை இயல்பாக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.

இனவெறி மற்றும் ஆழ்ந்த மனவேதனை தரும் ஒரு கருத்தை டிரம்ப் அண்மையில் பெரிதுபடுத்தியதும் அதே அளவு கண்டிக்கத்தக்கது. அதில் அவர் இந்தியா போன்ற நாடுகளை "நரகக் குழிகள்' என்று வர்ணித்தார். இந்த மொழி இழிவானது மட்டுமல்ல, அது அறியாமையில் ஊறிய ஒரு மனநிலையையும் வெளிப்படுத்துகிறது. உலகளாவிய அறிவு, கலாசாரம், ஜனநாயக விழுமியங்களுக்கு அளப்பரிய பங்களிப்பைச் செய்த ஒரு நாகரிகமான இந்தியாவை, இது போன்ற கீழ்த்தரமான கேலிச்சித்திரங்களாகச் சுருக்க முடியாது.

140 கோடிக்கும் அதிகமான மக்களைக் கொண்ட ஒரு நாட்டை இவ்வாறு வர்ணிப்பது, இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனையும் அவமதிப்பதாகும். இதற்கு ஒரு கண்ணியமான ராஜதந்திரக் குறிப்பு தேவையில்லை; மாறாக உறுதியான, சந்தேகத்துக்கு இடமில்லாத கண்டனம் தேவை.

பொருளாதாரத் துறையில், இந்திய ஏற்றுமதிகள் மீது தன்னிச்சையாக விதிக்கப்படும், அதிகரிக்கப்படும் சுங்க வரிகள் ஒருவகை அடக்குமுறைப் போக்கையே மேலும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. வர்த்தகப் பிரச்னைகள் பொறுப்புடன் கையாளப்படும்போது, உரையாடல், பரஸ்பர மரியாதையின் மூலம் தீர்க்கப்படுகின்றன. இருப்பினும், இங்கு கையாளப்பட்ட அணுகுமுறை, ஒத்துழைப்பைக் காட்டிலும் நிர்ப்பந்தத்தையே பிரதிபலிக்கிறது.

அர்த்தமுள்ள கலந்தாலோசனையின்றி தண்டனைக்குரிய சுங்க வரிகளை விதிப்பதன்மூலம், இந்தியாவின் பொருளாதார நலன்களைத் தங்கள் விருப்பப்படி புறக்கணிக்க முடியும் என்ற செய்தியை அமெரிக்கா அனுப்புகிறது. மூலோபாயக் கூட்டாண்மைகள் இவ்வாறு கட்டமைக்கப்படுவதில்லை; மாறாக, சார்புநிலைகள் இவ்வாறுதான் திணிக்கப்படுகின்றன.

இந்தியாவின் இறையாண்மைக்கு இழைக்கப்படும் அவமதிப்பின் மிகத் தெளிவான எடுத்துக்காட்டு, அதன் எரிபொருள் கொள்கை தொடர்பான கட்டளைகளில்தான் உள்ளது. ரஷிய கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்கக் கூடாது என்ற டிரம்ப்பின் உத்தரவும், அதைத் தொடர்ந்து 30 நாள்களுக்கு நிபந்தனைக்கு உட்பட்ட மற்றும் தற்காலிக "அனுமதி' வழங்கப்பட்டதும், ஓர் அவமதிப்பே தவிர வேறொன்றுமில்லை.

இந்தியா தனது எரிசக்தி தேவைகளை நிறைவு செய்ய வாஷிங்டனிடம் அனுமதி பெற வேண்டிய ஓர் அடிமை நாடு அல்ல. எரிசக்தி பாதுகாப்பு ஒரு மிக முக்கியமான தேசிய முன்னுரிமையாகும்; மேலும், இந்தத் துறையில் எடுக்கப்படும் முடிவுகள் இந்தியாவின் நலன்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். ஒரு வெளிநாட்டு சக்தி இதுபோன்ற நிபந்தனைகளை விதிக்கவும், பின்னர் அவற்றை தன்னிச்சையாக மாற்றியமைக்கவும் முடியும் என்ற எண்ணம், இந்தியாவின் மூலோபாய சுயாட்சியின் ஆணிவேரையே தாக்குகிறது.

புவிசார் அரசியல் தாக்கங்களும் அதே அளவு தீவிரமானவை. ஈரான் சம்பந்தப்பட்ட மோதல்கள் போன்றவற்றில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் நிபந்தனையின்றி அணிசேருமாறு இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சிகள், மேற்காசியாவில் இந்தியா நீண்ட காலமாகப் பின்பற்றி வரும் சமச்சீரான ஈடுபாட்டுக் கொள்கையைச் சீர்குலைக்கின்றன.

இந்தியா, வரலாற்று ரீதியாக, பரஸ்பர மரியாதை மற்றும் பகிரப்பட்ட நலன்களின் அடிப்படையில், இந்தப் பகுதியில் உள்ள பல நாடுகளுடன் ஆக்கபூர்வமான உறவுகளைப் பேணி வருகிறது. ஒரு இருமுனை அணிசேர்ப்பைத் திணிப்பது இந்தச் சமநிலையைக் குலைப்பது மட்டுமல்லாமல், நிலையற்ற புவிசார் அரசியல் சூழலில் இந்தியாவைத் தேவையற்ற அபாயங்களுக்கும் உள்ளாக்குகிறது.

பாகிஸ்தானுடனான ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு இந்தியாவைத் தாம் வற்புறுத்தியதாகவும், போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொள்ளும்படி கட்டாயப்படுத்தியதாகவும் டிரம்ப் கூறுவது இன்னும் கவலையளிக்கிறது. அவை மிகைப்படுத்தப்பட்டவையா, இல்லையா என்பது ஒருபுறம் இருக்க, இத்தகைய கூற்றுகளை கேள்விக்கு உட்படுத்தாமல் இருக்க முடியாது. இந்தியாவின் பாதுகாப்பு முடிவுகள் வெளித் தாக்கங்களுக்கு உட்பட்டவை என்ற ஓர் அபாயகரமான பிம்பத்தை அவை உருவாக்குகின்றன.

தனது மூலோபாய சுதந்திரத்தை தொடர்ந்து வலியுறுத்திவரும் ஒரு நாட்டுக்கு, இந்தக் கண்ணோட்டம் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஓர் இறையாண்மை கொண்ட நாடு, தனது ராணுவ, பாதுகாப்புக் கொள்கைகள் முற்றிலும் தனது தேசிய நலன் குறித்த மதிப்பீட்டின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகின்றன என்பதைச் சந்தேகத்துக்கு இடமின்றி தெளிவுபடுத்த வேண்டும்.

இந்தியாவின் வரலாறு தற்போதைய சூழ்நிலைக்கு முற்றிலும் முரணாக உள்ளது. பெரும் தியாகங்களின்மூலம் தனது சுதந்திரத்தை மீட்டெடுப்பதற்கு முன்பு, இந்த தேசம் சுமார் 200 ஆண்டுகள் காலனித்துவ சுரண்டலைத் தாங்கிக்கொண்டது. இந்தியா ஓர் இறையாண்மை கொண்ட குடியரசாக உயர்ந்து நிற்பதை உறுதி செய்வதற்காக எண்ணற்ற சுதந்திரப் போராட்ட வீரர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர். தற்போது, வெளி சக்திகள் வெளிப்படையாக நிபந்தனைகளை விதித்து, மறைமுக அச்சுறுத்தல்களை விடுக்கும் ஒரு சூழ்நிலையைக் காண்பது அந்த சுதந்திரத்துக்குச் செய்யப்படும் துரோகமாகும்.

அமெரிக்கா போன்ற உலக வல்லரசுகளுடனான ஈடுபாடு அவசியமானதும் நன்மை பயக்கக்கூடியதும் ஆகும்; ஆயினும், அது சமத்துவம், பரஸ்பர மரியாதை ஆகிய அடிப்படைகளின் மீதே முன்னெடுக்கப்பட வேண்டும். நட்பு என்பது அடிபணிதலைக் குறிப்பதல்ல; அதேபோல, கூட்டாண்மை என்பது ஒருதலைபட்சமான கோரிக்கைகளுக்கு இணங்குவதையும் உணர்த்தாது. தேசிய நலன்கள் அபாயத்துக்குள்ளாகும் சூழலில் அழுத்தம் எங்கிருந்து வந்தபோதிலும் "இல்லை' என்று உறுதியாகக் கூறும் ஆற்றல் ஒரு வலிமையான அரசுக்கு இருக்க வேண்டும்.

எனவே, இந்திய அரசு தெளிவுடனும் உறுதியுடனும் பதிலளிப்பது இன்றியமையாததாகும். இந்தியாவை ஒரு "நரகக் குழியாக" வர்ணிப்பது போன்ற அவமதிக்கும் கருத்துகள், மிகக் கடுமையான சொற்களால் கண்டிக்கப்பட வேண்டும். நாட்டின் தலைமைக்கு எதிரான மிரட்டல்கள், ஏற்றுக்கொள்ள முடியாத தலையீடுகளாகக் கருதி நிராகரிக்கப்பட வேண்டும். பொருளாதார மற்றும் உத்திசார் முடிவுகள், இறையாண்மைக்குரிய தனிச் சிறப்புரிமைகளாகக் கருதி உறுதியாகப் பாதுகாக்கப்பட வேண்டும். இதற்குச் சற்றேனும் குறைந்த அளவிலான எதிர்வினை, பலவீனத்தையே உணர்த்துவதுடன், மேலும் பல அத்துமீறல்களுக்கும் வழிவகுத்துவிடும்.

அதே நேரத்தில், வெளிப்புற அழுத்தங்களால் ஏற்படும் பாதிப்பைக் குறைப்பதற்கு, இந்தியா தனது பொருளாதார மீள்திறன், எரிசக்தி பல்வகைப்படுத்தல் மற்றும் வியூகத் தயார்நிலை போன்ற உள்நாட்டுத் திறன்களை வலுப்படுத்த வேண்டும். உண்மையான இறையாண்மை என்பது வெறுமனே அறிவிக்கப்படுவதல்ல; அது இடர்ப்பாடுகளை எதிர்கொள்ளும்போது சுதந்திரமாகச் செயல்படும் திறனின் மூலமே நிரூபிக்கப்படுகிறது.

சுருக்கமாகச் சொன்னால், டொனால்ட் டிரம்ப்பின் சமீபத்திய நடத்தை, மரியாதைக்குரிய சர்வதேச உறவுமுறைகளின் நெறிமுறைகளிலிருந்து மிகவும் கவலையளிக்கும் ஒரு விலகலாகும். அதே அளவு கவலையளிப்பது, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் பதில் நடவடிக்கையானது, தேசிய கண்ணியத்தைக் காக்கத் தேவையான உறுதியைக் கொண்டிருக்கவில்லை என்ற கருத்தாகும்.

இந்தியாவின் சுயமரியாதையைக் குலைக்கும் எந்தவொரு முயற்சியையும் அசைக்க முடியாத எதிர்ப்புடன் எதிர்கொள்ள வேண்டும்; ஏனெனில், இந்தியாவின் கண்ணியத்தில் சமரசம் கூடாது.

கட்டுரையாளர்:

அகில இந்திய பார்வர்டு பிளாக்

மத்தியக் குழு பொதுச் செயலாளர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.