தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்படும்! உயர் நீதிமன்றம் எச்சரிக்கை! எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு! சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!ஓணம் திருநாள்: பிற்பகல் வரை செயல்படும் ரயில் முன்பதிவு மையங்கள்!சென்னையில் இரவு நேர மின்சார ரயில்கள் இன்று முதல் ரத்து!நீண்ட நாள்களுக்குப் பிறகு குறைந்த தங்கம் விலை!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!

புத்துணர்வுக்கு புதிய பயிற்சி!

உறங்க வேண்டிய நேரத்தில் இயற்கைக்கு மாறாக விழித்திருந்து பணியாற்றுவதால் உடல், மனநலமானது சீர்குலைக்கப்படுகிறது.

Gujarat launches 100-day campaign ahead of International Yoga Day

IANS

Published On :28 ஏப்ரல் 2026, 7:03 am IST

உலகிலுள்ள அனைத்து உயிரினங்களுக்கும் உறக்கம் என்பது மிகவும் இன்றியமையாதது. சிலமணி நேரத்துக்கு ஆழ்ந்து உறங்கினால்தான் மனிதனால் உடல், மன நலனுடன் வாழ இயலும். இந்தக் கணினி யுகத்தில் மனிதனுக்கு உறங்குவதற்கு நேரம் இல்லை.

எனவே, உலகின் பல பகுதிகளில் உடலும் மனமும் ஆழ்ந்த அமைதியை, ஓய்வை, இளைப்பாறுதலைப் பெற அறிதுயில் நிலை என்ற உத்தி கடைப்பிடிக்கப்படுகிறது. அதாவது, உறங்காமலே பெறும் எத்தகைய அழுத்தமும் உளைச்சலும் சோர்வுமற்ற ஓய்வு நிலையாகும். இந்த உத்தியானது நம் நாட்டில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகவே நடைமுறையில் உள்ள "யோக நித்திரை' என்னும் அற்புதமான பயிற்சியாகும்.

நம் நாட்டில் சித்தர்களும், முனிவர்களும் உறக்கத்துக்கு சில விதிமுறைகளை வடிவமைத்துள்ளனர். இடது புறமாக ஒருக்களித்து உறங்க வேண்டும் என அறிவுறுத்தி, அதற்கான விளக்கத்தையும் அளித்துள்ளனர். இவ்வுலகில் உள்ள இருள் - ஒளி சுழற்சியுடன் மனித உடலானது நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ளது. இருள் கவிந்தவுடன் மனிதன் உறங்க வேண்டும். ஆனால், தற்காலத்தில் அனைத்துமே தலைகீழாக நடைபெறுகின்றன.

உறங்க வேண்டிய நேரத்தில் இயற்கைக்கு மாறாக விழித்திருந்து பணியாற்றுவதால் உடல், மனநலமானது சீர்குலைக்கப்படுகிறது. நம் உடலிலே இரைப்பையானது இடது புறத்தில் உள்ளது. இயற்கையான புவியீர்ப்பு சக்தியின் காரணமாக உண்ட உணவும், சுரக்கும் அமிலங்களும் இரைப்பையின் கீழ்ப்பகுதிக்குச் செல்கின்றன. இதனால், மறுநாள் காலையில் நெஞ்செரிச்சல் போன்றவை ஏற்படுவதில்லை.

இது இதய செயல்பாட்டுடன் தொடர்பு கொண்டிருப்பதால் எத்தகைய அழுத்தமும் இன்றி ரத்தமானது தங்கு தடையின்றி பாய்ந்து செல்கிறது. நாம் உறங்கும்போது உடலின் உள்ளுறுப்புகள் அவற்றின் பணிகளை மிக நேர்த்தியாகச் செய்வதால் உடல் மனநலமானது தொடர்ந்து சீராக இருக்கும். ஆழ்ந்த உறக்கம் என்பது கண்களை மூடி உறங்கிக் காலையில் விழிக்கும் செயலன்று. அது இதயத் துடிப்பைச் சீர் செய்யும், உயிரணுக்களைப் புதுப்பிக்கும் ஓர் உயிரியல் நிகழ்வாகும்.

கணினி மற்றும் கைப்பேசியின் நீல நிற ஒளியை நீண்ட நேரம் காண்பதால் சரியான முறையான உறக்கம் ஏற்படுவதில்லை. எனவேதான், உறங்காமலே பெறும் முழுமையான ஓய்வு, அமைதி, மற்றும் புத்துணர்வுக்குப் பயிற்சி முறைகளை உலகெங்கிலும் பயிற்றுவிக்கின்றனர். நம் நாட்டில் யோகப் பயிற்சியின் இறுதியில் சவாசனத்தில் உடல்-மனம் இளைப்பாறும் பயிற்சியானது பயிற்றுவிக்கப்படுகிறது.

நல்ல காற்றோட்டமுள்ள இடத்தில் ஒரு விரிப்பின் மீது மல்லாந்து படுத்துக்கொள்ள வேண்டும். இரு பாதங்களுக்கு இடையில் சுமார் இரண்டடி இடைவெளி இருக்குமாறு வைத்துக் கொள்ள வேண்டும். கைகளை உடலின் பக்கத்தில் உள்ளங்கைகள் மேல்நோக்கி இருக்குமாறு விரல்கள் சற்றே வளைந்திருக்குமாறும் அமைத்துக் கொள்ள வேண்டும். முதலில் சில விநாடிகளுக்கு இயல்பாகச் சுவாசிக்க வேண்டும். பிறகு கால் விரல்களிலிருந்து தொடங்கி தலை வரையிலும் அனைத்து உறுப்புகளையும் தளர்த்தி, அவை முற்றிலும் ஓய்வான, அமைதியான நிலையில் எத்தகைய அழுத்தமும் இன்றி அடங்கி இருப்பதாகக் கருதி உணர வேண்டும்.

இதன் பிறகு நாமே நமக்கு ஓர் அமைதியான சூழலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். (அவரவர் மனதுக்கு உகந்த சூழலை) சான்றாக மலைகள், அருவிகள் நிறைந்த இயற்கைச் சூழலானது நறுமணத்துடன் கூடிய தென்றலுடன் பறவைகளின் இன்னொலியுடன் உங்கள் மனதுக்கு இதமளித்து, எத்தகைய பதற்றமோ, கவலையோ, உளைச்சலோ இன்றி உங்களை வருடிக் கொடுப்பதை உணர வேண்டும். சிறிது நேரத்துக்கு இவ்விதம் இருந்த பிறகு ஒரு ஒளிக்கற்றையானது உங்கள் பாதங்களில் இருந்து தலை வரையிலும் ஊடுருவிச் செல்வதாகக் கருதி உணர வேண்டும். அந்தப் பேரொளியானது உடலின் உள்ளே ஒவ்வொரு பகுதிக்கும் சென்று ஒரு பேரமைதியைத் தோற்றுவிப்பதை உணர வேண்டும்.

பிறகு எளியதொரு மூச்சுப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். மூக்கின் வழியாக இரு நாசித் துவாரங்களின் மூலம் மூச்சை மெதுவாக உள்ளிழுத்து, பிறகு வாயின் வழியாக நாக்கின் நுனிப்பகுதியை ஒரு இலைச்சுருளைப் போலச் செய்து வெளியேற்ற வேண்டும். ஐந்து முறைகள் இவ்விதம் செய்த பிறகு இயல்பாகச் சுவாசிக்க வேண்டும். பிறகு உடலினுள்ளே சென்ற ஒளிக்கற்றை தலையிலிருந்து தொடங்கி பாதங்களின் மூலம் மெல்ல மெல்ல வெளியேறுவதாகக் கருதி உணர வேண்டும். மீண்டும் ஒருமுறை நாசித்துவாரங்களின் மூலம் சுவாசத்தை உள்ளிழுத்து வாயின் மூலம் முன்பு கூறிய முறையில் வெளியேற்ற வேண்டும்.

பிறகு சில விநாடிகளுக்கு அமைதியாக இருந்து, உடலைச் சிறிது சிறிதாக அசைத்து வலப்புறமாக ஒருக்களித்து சில விநாடிகள் அகன்ற பிறகு எழுந்து அமர்ந்து கொள்ள வேண்டும். இவ்விதம் இருபது நிமிஷங்கள் பயிற்சியை மேற்கொண்டால் அது ஆறுமணி நேர ஆழ்ந்த உறக்கத்துக்கு சமமாகக் கருதப்படுகிறது.

இப்பயிற்சியால் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்களின் அளவானது தானாகவே குறைந்து விடுகிறது. இது ஆழ்மனப்பதிவுகளைத் தூய்மை செய்யும் செயல்முறையாகவும் விளங்குகிறது.

மூச்சோட்டம், மின்காந்த ஓட்டம், ரத்த ஓட்டம் மற்றும் உயிரோட்டம் என்னும் இவ்வனைத்தும் எவ்வித ஏற்றத் தாழ்வுகளும் இன்றி இயல்பாக நடைபெறுகின்றன. இதயத் துடிப்பைச் சீராக்குகிறது. உறக்கமின்மையைக் களைகிறது. உடல், மனநலனைப் பேணி ஆற்றலை மிகுதிப்படுத்துகிறது. நம் தோலின் மீது உள்ள ஒருவிதமான அழுத்தமும் அகல்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.