ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

நிதானமே பிரதானம்...

திருமண உறவுகளில் பொறுமையின்மை மிகவும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துகிறது.

News image

Center-Center-Kochi

Updated On :27 மார்ச் 2026, 12:59 am

இரா. சரவணன்

வேகம் மட்டுமே வெற்றியின் அளவுகோல் என்று தீர்மானிக்கப்பட்ட ஒரு விசித்திரமான காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒருகாலத்தில் காத்திருத்தல் என்பது வாழ்வின் அங்கமாகவும், மனப்பக்குவத்தின் அடையாளமாகவும், ஒருவகை தவமாகவும் போற்றப்பட்டது. ஆனால், இன்றைய உடனடி கலாசாரத்தில், ஒருசில நிமிஷங்கள்கூட காத்திருக்க விரும்பாத நிலையே மனிதர்களின் பொதுவான இயல்பாக மாறிவிட்டது.

தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி மனிதனிடமிருந்த அடிப்படை சகிப்புத்தன்மையையும், நிதானத்தையும் மெல்ல மெல்லப் பறித்துவிட்டது.

நிமிஷம் தாமதத்தால் நிதானத்தை இழந்துவிடுகிறது இன்றைய தலைமுறை. இதனால், அமைதியையும் பொறுமையையும் இழப்பதோடு நமது பண்பாட்டு விழுமியங்களை அவர்கள் அறிந்துகொள்ள வாய்ப்பில்லை. அதற்கான நேரமும் அவர்களுக்கு இல்லை.

நிதானம் ஒருவிதமான இயலாமை என்றும், காத்திருத்தல் கால விரயத்தின் உச்சம் என்றும் சித்தரிக்கப்படும் காலச் சூழலுக்குள் நாம் தள்ளப்பட்டிருக்கிறோம்.

சாலை சந்திப்புகளில் போக்குவரத்து சமிக்ஞைக்காக சில நிமிஷங்கள்கூட காத்திருக்க முடியாத இன்றைய மனநிலை சகிப்புத்தன்மை எந்த அளவுக்கு வற்றிப் போயிருக்கிறது என்பதைக் காட்டுகிறது. இந்தச் சூழலில் வாழும் சராசரி மனிதன் சவால்கள் நிறைந்த வாழ்க்கைப் பயணத்தில் எவ்வாறு தெளிவான முடிவுகளை எடுக்க முடியும்?

இன்றைய மனிதர்களை ஆட்கொண்டுள்ள இந்தப் பொறுமையின்மைக்கு, நம் உள்ளங்கைகளில் தவழும் நவீன தொழில்நுட்பமும் ஒரு முக்கியக் காரணியாக உருவெடுத்துள்ளது. ஒரு வலைப்பக்கம் திறக்க 2 நொடிகள் தாமதமானாலே நம் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. சமூக ஊடகங்களில் சில விநாடிகள் மட்டுமே ஓடும் காணொலியைக்கூட முழுமையாகப் பார்க்கும் பொறுமை இன்றைய தலைமுறையினரிடம் இல்லை.

அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் காத்திருக்கும்போது, செல்ல வேண்டிய தளத்துக்கான பொத்தான் ஏற்கெனவே அழுத்தப்பட்டிருந்தாலும், அதை மீண்டும் மீண்டும் அழுத்திக்கொண்டே இருக்கும் பலரின் செயல்பாடு, குறிப்பிட்ட நபரின் நிலையற்ற எண்ண ஓட்டம் எந்த அளவுக்கு தீவிர பதற்றத்துக்கு உள்ளாகியுள்ளது என்பதைக் காட்டுகிறது.

உணவகத்தில் உணவு கொண்டுவர சில நிமிஷங்கள் தாமதமானால் அங்கிருப்பவர்களிடம் கடும் கோபத்தைக் காட்டுவதும், பல்பொருள் அங்காடியின் பணம் செலுத்தும் வரிசையில் ஒரு நிமிஷம் காத்திருப்பதைத் தண்டனையாகக் கருதி வன்சொற்களைப் பிரயோகிப்பதும் இன்று சாதாரணமான நிகழ்வுகளாகி விட்டன.

இந்த அவசரப் போக்கின் மிக மோசமான பாதிப்பு, மனித உறவுகளில் மிகத் தீவிரமாக எதிரொலிக்கிறது. இன்றைய உரையாடல்கள் அடுத்தவர் சொல்வதை காது கொடுத்துக் கேட்பதற்கான களமாக இல்லை. மாறாக, அவர் பேசி முடிப்பதற்குள் நாம் என்ன பதில் சொல்லலாம் என்ற தவிப்பே முன்னிற்கிறது. செவிமடுக்கும் திறன் அருகி வருவதால், உறவுகளுக்கிடையே புரிதலும் குறைந்து, சிறு பிரச்னைகளும் விரிசல்களை ஏற்படுத்துகின்றன.

முன்பெல்லாம் கடிதங்களுக்காக வாரக்கணக்கில் காத்திருந்த காதலும் பாசமும், இன்று வாட்ஸ்}ஆப் போன்ற செயலிகளில் ஒரு செய்திக்கு ஒரு நிமிஷத்தில் பதில் வராவிட்டால், சந்தேகப்படும் அளவுக்குப் பலவீனமடைந்துள்ளன. சகிப்புத்தன்மை இல்லாத உறவுகள் கண்ணாடிப் பாத்திரங்களைப் போலச் சிறு அதிர்வுகளுக்கே உடைந்து சிதறுகின்றன.

திருமண உறவுகளில் பொறுமையின்மை மிகவும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துகிறது. தம்பதியிடையே கருத்து வேறுபாடுகளை நிதானமாகப் பேசித் தீர்த்துக்கொள்ள யாரும் முன்வருவதில்லை. சிறு பிரச்னைகளை உடனடியாகத் தீர்க்க வேண்டும் என்ற அவசரத்தில், இன்று விவாகரத்துகள் அதிகரித்து வருகின்றன.

இளைய தலைமுறையினரோ பெற்றோரின் கருத்துகளைக் காது கொடுத்துக் கேட்கும் பொறுமையின்றி, உடனடியாக விவாதத்தில் குதிக்கின்றனர். ஒரு சிக்கலான கணக்கைத் தீர்க்க ஐந்து நிமிஷங்கள் முயன்று பதில் கிடைக்காவிட்டால், உடனடியாக கூகுளில் தீர்வைத் தேடுகின்றனர். அது விரைவான பதிலை அளிக்கலாம்; ஆனால், சிக்கலைத் தீர்க்கும் திறனையும், சிந்தனை ஆற்றலையும் வளர்ப்பதில்லை.

நிரந்தரமான பதற்றமும் அவசரமும் நம் உடல் ஆரோக்கியத்தைக் கடுமையாகப் பாதிக்கின்றன. உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள், சர்க்கரை நோய் போன்றவை அதிகரிப்பதற்கு மன அழுத்தமும் ஒரு முக்கியக் காரணம். இடைவிடாத அவசரம் நம் உடலின் மன அழுத்த ஹார்மோன்களை அதிகரிக்கச் செய்து, நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைக்கிறது.

பொறுமையை மீண்டும் நம் வாழ்வில் கொண்டுவர தினமும் சில நிமிஷங்களாவது தியானம் செய்ய வேண்டும். அது பொறுமையை வளர்க்கும் சிறந்த கருவி. வாரத்தில் ஒரு நாளாவது மின்னணு சாதனங்களை ஒதுக்கிவைத்துவிட்டு, இயற்கையுடன் நேரம் செலவிட வேண்டும்.

வாழ்க்கை என்பது ஒருபோதும் ஓட்டப் பந்தயமல்ல; அது ரசித்து அனுபவிக்க வேண்டிய ஒரு நெடிய பயணம். வேகம் என்பது இயந்திரங்களுக்குத் தேவைப்படலாம்; ஆனால், மனிதர்களுக்கு விவேகமும் நிதானமுமே அவசியம்.

இயற்கையில் ஒரு விதை விருட்சமாவதற்குக் காலஅவகாசம் தேவைப்படுகிறது. இயற்கையை ரசிக்க, உணவை ருசிக்க, உறவுகளை நேசிக்க என ஒவ்வொன்றுக்கும் பொறுமை மிக அவசியம். நாம் தொழில்நுட்பத்தை ஆளுமை செய்ய வேண்டுமே தவிர, அது நம்மை ஆளுமை செய்ய அனுமதிக்கக் கூடாது.

எனவே, நிதானமே பிரதானம் என்பதை உணர்ந்து, அதற்கேற்ப மாறினால் மட்டுமே பதற்றம் இல்லாத ஓர் ஆரோக்கியமான சமுதாயத்தைப் படைக்க முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.