ஈரோடு புத்தகத் திருவிழா 2005-இல் முதலில் நடைபெற்றது. தொடக்க ஆண்டில் ஒரு பெண் தனது ஒரு வயதுக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு விளையாட்டுச் சாமான்கள் விற்கும் கடைக்குச் சென்று வேடிக்கை காட்டுவதுபோல் புத்தகத் திருவிழாவுக்கு அழைத்து வந்தார். தினசரி புத்தக அரங்குகளைச் சுற்றி வருவது, மாலை நேரத்தில் சொற்பொழிவு கேட்பது தாய்க்குப் பிடித்துப் போய்விட்டது. தாய்க்கு அவ்வளவாகப் படிப்பில்லை. தந்தை ஆறாம் வகுப்பைத் தாண்டவில்லை. கல்விப் பின்புலம், செல்வப் பின்புலம் ஏதுமில்லாத சாதாரண கிராமப்புறக் குடும்பம்.
குழந்தை ஐந்து வயதைக் கடந்த நிலையில் பள்ளிக்குச் செல்லும் சிறுவனான பின்பும் புத்தகத் திருவிழாவுக்கு அழைத்துவருவதும் சின்னச் சின்ன நூல்களை விளையாட்டுப் பொருள்களை வாங்கிக் கொடுப்பதும் தவறாமல் நடைபெற்றது. எட்டு வயது, பத்து வயது என்று வளர்ந்த பிறகு சிறுவன் ஆசையாக புத்தகங்கள் வாங்குவதையும் அவற்றை விளையாட்டாய் வாசிப்பதையும் வழக்கமாக்கிக் கொண்டான். இதெல்லாம் இயல்பாக நடைபெற்றது.
கதைப் புத்தகங்களையும் சிறுவர் நூல்களையும் தொடர்ந்து வாசித்து வந்த சிறுவன், ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு படித்தபோது நல்ல, ஆழமான, ஆங்கில அறிவியல் நூல்களை ஆர்வத்துடன் வாசிக்கத் தொடங்கினான். மாணவரின் வகுப்பில் படித்த இரண்டு மூன்று சக நண்பர்கள் ஐஐடியில் சேர்ந்து படிக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். ஐஐடி குறித்தெல்லாம் ஏதும் தெரிந்திராத இந்த மாணவர் தானும் ஐஐடியில் சேர்ந்து படித்தால் என்ன என்று யோசித்தார்.
சக மாணவர்களுடன் ஐஐடி தேர்வுப் பயிற்சி மையத்தில் சேர்ந்தார். ஒரு மாதத்தில் அங்கு சொல்லிக் கொடுக்கப்பட்டவை இயந்திரகதியாக உள்ளதாக எண்ணி வெளியேறினார். புத்தகங்களை மட்டுமே ஆசானாக, ஆசிரியராகக் கருதி ஆழ்ந்து கற்கத் தொடங்கினார். ஏராளமாகப் படித்தார். எந்தத் தேர்வையும் எதிர் கொள்ளும் அளவுக்கு ஆழமாகவும் ஈடுபாட்டுடனும் முழுமையாகவும் படித்தார். ஐஐடி தேர்வு முறை பற்றியும் அறிந்து கொள்வதற்கும் நூல்களே பயன்பட்டதாகத் தெரிவிக்கிறார். அலட்டிக்கொள்ளவில்லை. பதற்றம் அடையவில்லை.
ஐஐடி தேர்வெழுதி அதில் வெற்றி பெற்று தற்போது இந்தியாவின் சிறந்த ஐஐடிகளில் ஒன்றான கரக்பூர் ஐஐடியில் கடைசி ஆண்டு பொறியியல் பட்டப்படிப்புப் படித்துக் கொண்டிருக்கிறார். அடுத்து அறிவியல் உயர் ஆய்வுகளை மேற்கொள்ள விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். இந்த மாணவரின் வரலாற்றை தொடக்கத்திலிருந்து கட்டமைத்தது நூல்களே. அண்மையில் தனது வாழ்க்கையில் புத்தகத் திருவிழா ஏற்படுத்திய தாக்கத்தை ஒரு நீண்ட கடிதம் மூலம் நெகிழ்வுடன் தெரிவித்திருந்தார்.
இதே போன்று ஒரு சிறுமியை அவளது தந்தை குழந்தைப் பருவத்திலிருந்தே புத்தகத் திருவிழாவுக்கு அழைத்து வந்துள்ளார். அந்தச் சிறுமிக்கு திருவிழா என்றாலே ஆண்டுக்கொரு முறை ஆகஸ்ட் மாதத்தில் 12 நாள்கள் நடைபெறும் கோலாகலமான புத்தகத் திருவிழாதான். வாசிப்புக்கு வசப்பட்ட அந்தச் சிறுமி எட்டாம் வகுப்பு படிக்கிறபோது ஒரு சிறு நூலை எழுதி வெளியிட்டுள்ளார்.
தந்தை செய்ததெல்லாம் புத்தக திருவிழாவுக்கு அழைத்துச் சென்றதுதான். ஊரில் ஒரு திருவிழா, எல்லோரும் குடும்பம் குடும்பமாகச் செல்கின்றனர், நாமும் போகிறோம் என்ற அளவுடன்தான் அவரின் செயலும் இருந்துள்ளது. மாணவி "நான் நூல் எழுதி விட்டேன்' என்று சொன்ன பிறகு அதை அச்சிட்டுக் கொடுத்தவர் தந்தை. மாணவி எழுதிய நூல் புத்தகத் திருவிழாவில் அமைக்கப்பட்டிருந்த மாவட்டப் படைப்பாளர் அரங்கம் என்ற சிறப்பரங்கத்தில் வைத்து விற்பனை செய்யப்பட்டது.
அதில் கிடைத்த தொகையை வைத்து நூல்கள் வாங்கியுள்ளார் அந்த மாணவி. புத்தகத் திருவிழா அந்த மாணவியின் வாழ்க்கையில் ஓர் அங்கமாகிவிட்டது. அந்த மாணவி அண்மையில் தனது பதினெட்டாவது வயதில் பதினெட்டாவது நூலை எழுதி வெளியிட்டுள்ளார்.
சர்வதேச சட்டம் படிக்க வெளிநாடு சென்றுவிட்ட இந்த மாணவி நிகழாண்டின் புத்தகத் திருவிழாவில் பங்கேற்கும் நோக்கில் சொந்த ஊர் வந்துள்ளார். ஒரு தமிழ் நூல்; மற்றவை ஆங்கில நூல்கள். படிப்பாளிகளை மட்டுமல்ல, படைப்பாளிகள் பலர் உருவாவதற்கு புத்தகத் திருவிழாக்கள் காரணமாக இருந்துள்ளன.
ஒரு கிராமத்து ஏழைப் பெண் கூலித் தொழிலாளி ஒருவர் அலுவலகம் வந்தார். தன் மடியில் கட்டிக் கொண்டு வந்த ரூபாய் நோட்டுக் கட்டுகளை மேஜையில் வைத்துக் கும்பிட்டு இதை எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். அதற்கும் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு புத்தகத் திருவிழாவுக்கு நன்கொடையாகக் கொடுக்க விரும்புவோர் ஒரு லட்சம் ரூபாயை அவர்கள் பெயரிலேயே வங்கியில் வைப்பு நிதியாகப் போட்டு அதில் கிடைக்கும் வட்டியை மட்டும் ஆண்டுதோறும் புத்தகத் திருவிழா நடத்த உதவிடும் வகையில் வங்கியிலிருந்து அறக்கட்டளைக் கணக்குக்கு நேராக வரும் வழிவகை செய்யலாம் என்ற அறிவிப்பு புத்தகத் திருவிழாவின் மாலை நேரச் சொற்பொழிவு நிகழ்வில் வெளியிடப்பட்டது.
அந்தக் கூட்டத்தில் பல்லாயிரம் பார்வையாளர்களில் ஒருவராக இந்தப் பெண் தொழிலாளி இருந்துள்ளார். இவரின் கணவர் விபத்தில் இறந்திருந்த நிலையில் நஷ்டஈடு வழக்கு நடைபெற்று கிடைக்கப்பெற்ற ரூ. மூன்று லட்சத்தில் இரண்டு லட்சத்தை தீர்ப்பின்படி நீதிமன்றமே ஒரு வங்கியில் வைப்பீடு செய்து அதன் வட்டியை எடுத்துக் கொள்ளும் ஏற்பாட்டைச் செய்திருந்தது. மீதமுள்ள ஒரு லட்சம் தொகையில் சிறு தொகைகூட தன் செலவுக்கென்று எடுத்துக் கொள்ளாமல் வழங்க முன்வந்துள்ளார்.
இத்தகைய ஏழை மக்களிடம் நன்கொடை பெறுவதில்லை என்று எவ்வளவோ சொல்லியும் அவர் கொஞ்சமும் அசைந்து கொடுக்கவில்லை. வேறு வழியின்றி கணக்கு ஒன்றை ஒரு வங்கியில் அவர் பெயரிலேயே தொடங்கி அதில் அந்தத் தொகை வைப்புத் தொகையாக வைக்கப்பட்டது. பள்ளிப் படிப்பைத் தாண்டாத அந்த ஏழை விவசாயக் கூலித் தொழிலாளி சுமார் 10 கி.மீ. தொலைவிலிருந்து தினசரி புத்தகத் திருவிழாவுக்கு வந்து சிறுசிறு புத்தகங்களையும் வாங்கிக் கொண்டு சொற்பொழிவுகளையும் கேட்டுச் சென்றுள்ளார். கணவரை இழந்து வெறுமையிலிருந்த என் வாழ்வில் பெரும் நம்பிக்கையையும் துணிச்சலையும் அளித்தது இந்தப் புத்தகத் திருவிழாவில் வாங்கிச் சென்ற நூல்களும் கேட்ட உரைகளும்தான் என்கிறார். இந்தத் திருவிழா நல்லா நடக்கனும். அதற்கு "சிறு ஒத்தாசைதான் இந்தத் தொகை' என்று நெகிழ்வுடன் குறிப்பிட்டார்.
அருகில் உள்ள மாவட்டத்தைச் சேர்ந்த இன்னொரு தொழிலாளி புத்தகத் திருவிழாவுக்கு நன்கொடையளிப்பதற்காகவே ஒரு மண்ணுண்டியை வாங்கி அதில் ஆண்டு முழுக்க சிறுகச் சிறுகச் சேர்த்துள்ளார். அவருக்கும் பெரிய படிப்பில்லை. அவரின் இரண்டு குழந்தைகள் படிக்கின்றனர். தினசரி சில சில்லறைக் காசுகளையாவது உண்டியலில் போடுவதைப் பழக்கப்படுத்திக் கொண்டார். குழந்தைகளின் பிறந்த நாளன்று இருநூறு, ஐநூறு என்று ரூபாய் நோட்டுகளைப் போட்டுள்ளார்.
ஆண்டுக்கொரு முறை ஆகஸ்ட் மாதத்தில் புத்தகத் திருவிழா நடைபெறும்போது அந்தத் தொழிலாளி தனது மனைவி, குழந்தைகளுடன் வந்து உண்டியலை அப்படியே வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். வழங்கியவர் முன்னிலையில் புத்தகத் திருவிழா தன்னார்வலர்களால் உண்டியல் உடைக்கப்படுகிறது. பதினைந்தாயிரம், இருபதாயிரம் என்று தொகை இருந்தது. கடந்த பத்து ஆண்டுகளாக இடை
விடாமல் இந்தச் செயலை ஒரு காணிக்கை செலுத்துகிற உணர்ச்சியுடன் தொடர்ந்து செய்து வருகிறார்.
அண்டை மாவட்டங்களிலிருந்து மட்டுமல்லாமல் தொலைதூர மாவட்டங்களிலிருந்துகூட தினசரி போக வர 200 கி.மீ., 300 கி.மீ. சிலர்அதற்கு மேலும் பயணம் மேற்கொண்டு சிரத்தை எடுத்தேனும் குடும்பம் குடும்பமாக புத்தகத் திருவிழாவுக்கு வரும் பலரையும் பார்க்க முடிகிறது.
மாணவர்களுக்கு புத்தக சேமிப்பு உண்டியல் வழங்கும் திட்டம் பல ஆண்டுகளாகவே உயிர்ப்புடன் செயலில் உள்ளது. திருவிழாவின் முகப்பில் உண்டியல்கள் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன. புத்தகங்கள் வாங்கிக் கொண்டு திரும்பும் மாணவர்கள் உண்டியல்கள் வாங்கிச் செல்லலாம். உண்டியலின் அசல் விலையில் ஒரு தொகையை திருவிழாவை நடத்தும் அமைப்பு ஏற்கிறது. அந்தச் சலுகையுடன் கிடைக்கும் உண்டியலை வாங்கிச் சென்று ஆண்டு முழுக்க சேமித்து உண்டியலை உடைக்காமல் எடுத்து வந்து தன்னார்வலர்கள் முன்னிலையில் திருவிழாவிலேயே உடைத்து அதில் கிடைக்கப்பெறும் தொகைக்கு புத்தகங்கள் வாங்கினால் கூடுதல் கழிவு கொடுக்க பதிப்பாளர்களுடன் பேசி தக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வாங்கும் நூல்களை தன்னுடைய சொந்தத் தொகையில் வாங்குவது போன்ற உணர்வை மாணவர்கள் பெறுகின்றனர். ஆண்டுக்கு பத்தாயிரம், இருபதாயிரம் என்ற எண்ணிக்கையில் மாணவர்கள் உண்டியல்களை வாங்கிச் செல்கின்றனர். நிரப்பிய உண்டியல்களை வைத்துக்கொண்டு குதூகலத்துடன் வரிசையில் நிற்கும் சிறுவர்களைப் பார்ப்போர் பரவசப்படுவர்.
இருநூற்றைம்பது ரூபாய்க்கு நூல்கள் வாங்கிவரும் மாணவர்கள் அனைவருக்கும் "நூல் ஆர்வலர்' என்ற சிறப்புச் சான்றிதழ் அங்கேயே அப்போதே பேரவைத் தன்னார்வலர்களால் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு பத்தாயிரம் மாணவர்களுக்குக் குறைவில்லாமல் இந்தச் சான்றிதழ்கள் பெறுகின்றனர்.
சமூக நோக்கத்துடனும், நன்நம்பிக்கையுடனும் நடத்தப்படுகிற புத்தகத் திருவிழாக்களால் வாசிப்பு வாழ்வியலாக வளரும் என்பதே பாடமும் படிப்பினையும் ஆகும்.
(ஈரோடு புத்தகத் திருவிழா- 2026 ஜூலை 31 முதல் ஆக.11 வரை)
கட்டுரையாளர்:
தலைவர், மக்கள் சிந்தனைப் பேரவை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







