தூத்துக்குடி - நரசாபூா் இடையே செப். 7 முதல் சிறப்பு ரயில்வார இறுதி விடுமுறை: 2,755 சிறப்பு பேருந்துகள் இயக்கம்ஆக. 25 முதல் இரவு நேர புறநகா் ரயில்கள் ரத்துபொறியியல் கலந்தாய்வு: 3-ஆம் சுற்றில் 68,640 மாணவா்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு அடுத்த 10 மாதங்களில் இந்திய வடிவமைப்பிலான கைப்பேசிகள்: அஸ்வினி வைஷ்ணவ்

காவல் நிர்வாகத்தில் கையூட்டின் பங்களிப்பு

புலன் விசாரணை உள்ளிட்ட நிர்வாகச் செலவினங்களுக்கு கையூட்டு தொகுப்பு நிதியை எதிர்பார்த்திருக்கும் காவல் நிலையங்களின் அவல நிலையை மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என நம்புவோம்.

மாதிரிப் படம்

Published On :22 ஆகஸ்ட் 2026, 6:53 am IST

சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட கள ஆய்வில் கையூட்டு கலாசாரம் அதிக அளவில் நிலவிவரும் அரசுத் துறைகளின் பட்டியலில் காவல் துறை முக்கிய இடம் பெற்றுள்ளது என்றும், கையூட்டு கொடுக்க நேரிட்டதாக பொதுமக்களில் பலர் வெளிப்படையாகக் கூறும் அரசுத் துறையாக காவல் துறை இருந்து வருகிறது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

காவல் துறையினருக்கு பரந்த அளவிலான அதிகாரங்களை சட்டம் வழங்கியுள்ளது. குறிப்பாக, வழக்குப் பதிவு செய்தல், விசாரணை நடத்துதல், கைது செய்தல், பிணையில் விடுவித்தல், நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தல், போக்குவரத்து விதிகளை அமல்படுத்துதல் உள்ளிட்ட பல பணிகளை மேற்கொள்ளும் காவல் துறையினருக்கு "விருப்புரிமை' அதிகாரத்தை சட்டம் வழங்கியுள்ளது.

இந்த அதிகாரத்தை காவல் துறையினர் தவறாகப் பயன்படுத்துகின்ற நடைமுறையானது, காவல் துறையில் கையூட்டு பெறுவது அதிக அளவில் இருப்பதற்கான காரணங்களில் முக்கியமானதாகும்.

சட்டத்தின் ஆட்சியை சமுதாயத்தில் நிலைநாட்டுவதற்காக காவல் துறைக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவ்வாறு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மீது உரிய கண்காணிப்பும், பொறுப்புக்கூறலும் அவசியமானதாகும். அவை இல்லாதபோது, அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதும், அதன் தொடர்ச்சியாக கையூட்டு பெறுகிற நடைமுறையும் காவல் துறையில் வெளிப்படுகிறது.

அதிகாரம், ஊழல் ஆகிய இரண்டுக்கும் இடையேயான தொடர்பு குறித்து லார்ட் ஆக்டன் (1834-1902) என்ற பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர் மற்றும் அரசியல் சிந்தனையாளர் 1887-ஆம் ஆண்டில் பிஷப் மாண்டெல் கிரெய்டனுக்கு எழுதிய கடிதத்தில் "அதிகாரம் ஊழலுக்கு வழி வகுக்கும்; கட்டுப்பாடற்ற, முழுமையான அதிகாரம் முழுமையான ஊழலுக்கு வழிவகுக்கும்' என்று குறிப்பிட்டுள்ளார். லார்டு ஆக்டனின் இந்த கருத்து நம் நாட்டு காவல்துறைக்கு மிகவும் பொருத்தமானதாக உள்ளது.

காவல் துறை உள்ளிட்ட அனைத்து மாநில அரசுத் துறைகளில் நடைபெறுகிற ஊழல், கையூட்டு போன்றவற்றைக் கண்காணித்து, சட்ட நடவடிக்கைகளை "ஊழல் கண்காணிப்பு மற்றும் தடுப்பு இயக்ககம்' மேற்கொண்டு வருகிறது.

600-க்கும் குறைவான அலுவலர்களை உள்ளடக்கிய ஊழல் கண்காணிப்பு மற்றும் தடுப்புப் பிரிவானது தமிழகத்தில் உள்ள பல லட்சம் அரசு ஊழியர்கள் ஊழல் செய்கிறார்களா?, கையூட்டு பெறுகிறார்களா? என்பதைக் கண்காணித்து, உரிய நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில் இருக்கிறது.

2020-21 முதல் 2024-25 வரையிலான ஐந்து ஆண்டுகளில் ஊழல் கண்காணிப்பு மற்றும் தடுப்பு பிரிவானது 727 மாநில அரசு ஊழியர்கள் கையூட்டு வாங்கியபோது, அவர்களைப் பொறிவைத்துப் பிடித்ததாக பொதுவெளியில் புள்ளி

விவரங்கள் உள்ளன. ஆனால், கையூட்டு பெறுகிற செயல்கள் காவல் துறையில் தினமும் வெளிப்படையாக நடைபெற்றாலும், கையூட்டு பெறுகிற காவல் துறையினரைப் பெறிவைத்து பிடித்த வழக்குகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு என்பது வியப்பை அளிக்கிறது.

தங்களது குடும்ப நிதி நிலையை மேம்படுத்துவதற்காக அரசுத் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களில் சிலர் கையூட்டு பெறுகின்றனர். அரசுத் துறை ஊழியர்களைப் போன்று, தங்களது குடும்ப நிதி நிலையை மேம்படுத்துவதற்காக காவல் துறையிலும் சிலர் கையூட்டு பெறுகின்றனர். அது மட்டுமின்றி, காவல் துறையின் அன்றாட நிர்வாகச் செலவுகளுக்காகவும் கையூட்டு பெறுகிற நடைமுறை காவல் துறையில் தொடர்கிறது.

அனுமதியின்றி ஆர்பாட்டம், மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபடுபவர்களை காவல் துறையினர் கைது செய்து, ஒரு மண்டபத்தில் தங்க வைத்து, மாலையில் விடுவிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. இவ்வாறு கைது செய்யப்

படும் பல நூறு நபர்களுக்கு காவல் துறையினர் மதிய உணவு வழங்க வேண்டும். இதற்கான செலவுகளை காவல் துறையினர் எப்படிச் சமாளிக்கின்றனர்?

கைது செய்யப்பட்டு, காவல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒவ்வொரு நபருக்கும் உணவு வழங்க வேண்டிய பொறுப்பு காவல் துறையைச் சார்ந்தது. கைதி ஒருவரின் காலை சிற்றுண்டி, மதிய உணவு, இரவு உணவு ஆகியவற்றுக்கு தலா ரூ.25}ஐ உணவுப் படியாக அரசு நிர்ணயம் செய்துள்ளது. இந்த உணவுப் படியைக் கொண்டு கைதிகளுக்கு காவல் துறையினரால் உணவு வழங்க முடியாது.

பல்வேறு கோரிக்கைகளுடன் காவல் நிலையத்துக்கு வரும் நபர்களிடம் இருந்து காவல் நிலைய எழுத்தர் பெறுகிற அன்பளிப்பு எனப்படும் கையூட்டு தொகையின் ஒரு பகுதியை இந்த மாதிரியான செலவினங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

2022}ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட ஐந்தாவது தமிழ்நாடு காவல் ஆணையமும் காவல் துறையின் பொறுப்பிலுள்ள கைதிகளுக்கு தற்போது வழங்கப்படும் உணவுப் படி மிகவும் குறைவாக உள்ளது என்றும், தற்போதுள்ள விலைவாசிக்கு ஏற்ப, கைதிகளுக்கான உணவுப் படியை உயர்த்த வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளது; அந்த பரிந்துரை இன்னும் அரசாணையாக மாறவில்லை. தமிழ்நாடு காவல் துறை ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான கொடுங்குற்ற வழக்குகளைப் பதிவு செய்கிறது. ஒவ்வொரு வழக்கிலும் சம்பவ இடத்தைப் பார்வையிடுதல், வழக்கு தொடர்பான இடங்களில் சோதனையிடுதல், குற்றவாளிகளைக் கைது செய்தல், நீதிமன்றக் காவலில் இருக்கும் கைதிகளை காவல் துறையின் பொறுப்பில் எடுத்து விசாரணை மேற்கொள்ளுதல், வழக்கு தொடர்பான ஆதாரங்களைத் திரட்டுதல் போன்றவற்றுக்குப் பின்னர்தான் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுகிறது.

ஒவ்வொரு குற்ற வழக்கிலும் புலன் விசாரணை மூன்று மாதங்களிலிருந்து இரண்டு ஆண்டுகளும், சில வழக்குகளில் அதற்கு மேலும் நடைபெறுகிறது. புலன் விசாரணைக்கான செலவுகளை காவல் துறையினர் தங்களது ஊதியத்தில் இருந்து செலவு செய்ய மாட்டார்கள். புலன் விசாரணைக்குத் தேவைப்படும் தொகையை ஏதேனும் ஒரு வகையில் கையூட்டாக காவல் துறையினர் பெற்று, அந்த தொகையைப் புலன் விசாரணை செலவுகளுக்குப் பயன்படுத்துகின்றனர்.

காவல் துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் ஆண்டுதோறும் "புலனாய்வுச் செலவுத் தொகை' என்று ஒவ்வொரு மாவட்ட காவல் அதிகாரிக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அப்படி வழங்கப்படும் தொகை மிகவும் குறைவாக இருப்பது மட்டுமின்றி, பல மாவட்டங்களில் அந்தத் தொகையை புலனாய்வு அதிகாரிகளுக்கு வழங்காமல், மாவட்ட அதிகாரியே பயன்படுத்திக் கொள்கிறார் என்பதும் கள நிலவரமாக உள்ளது.

புலன் விசாரணையின்போது கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை நீதிபதி முன் ஆஜர்படுத்தி, நீதிமன்ற காவல் பெறுவதற்காக, கடந்த காலத்தில் பேருந்து மூலம் கைதிகள் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கைதிகளின் பாதுகாப்பு உள்ளிட்ட சில காரணங்களால், அவர்களைப் பேருந்தில் அழைத்துச் செல்லப்படுவது தற்போது தவிர்க்கப்படுகிறது. காவல் நிலைய பொறுப்பு அதிகாரியின் காவல் வாகனம் அல்லது காவல் நிலைய எழுத்தரிடம் உள்ள "கையூட்டு தொகுப்பு நிதி'யில் இருந்து ஏற்பாடு செய்யப்படும் வாடகை கார் மூலம் கைதிகளை நீதிமன்றம் அழைத்துச் செல்லப்படும் நடைமுறை தற்போது பின்பற்றப்படுகிறது.

சமுதாயத்தில் குற்றங்கள் நிகழ்வதைக் கட்டுப்படுத்துவதில் தரமான புலன் விசாரணை முக்கியப் பங்காற்றுகிறது. ஆனால், கையூட்டு மூலம் திரட்டப்படும் நிதியிலிருந்து பல வழக்குகளில் புலன் விசாரணை தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்படுகிற துர்பாக்கிய நிலை நம் நாட்டில் நிலவுகிறது. இந்தச் செயல்களைக் காவல் தலைமையகம் கண்டும் காணாமல் மெüனமாக இருந்து வருகிறது.

சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக நூற்றுக்கணக்கான வெளிமாவட்ட காவலர்களை வரவழைத்து, பணியமர்த்துகிற நடைமுறை பல மாவட்டங்களில் ஆண்டுதோறும் பின்பற்றப்படுகிறது. சில நாள்கள் தங்கிப் பணிபுரியும் வெளிமாவட்ட காவல் துறையினருக்கு தங்கும் இடம், உணவு ஆகியவற்றை சம்பந்தப்பட்ட காவல் நிலையங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்கான செலவுகளில் ஒரு பகுதியை காவல் நிர்வாகம் கொடுத்தாலும், மீதமுள்ள பெரும் தொகையை தொடர்புடைய காவல் நிலையங்கள் அன்பளிப்பு என்ற பெயரில் பெறப்படும் கையூட்டிலிருந்து சமாளிக்க வேண்டிய நிலையுள்ளது.

ஊழல், கையூட்டு இல்லாத ஆட்சி நிர்வாகத்தை ஏற்படுத்தும் முயற்சியை மேற்கொண்டுவரும் தமிழ்நாடு அரசு, புலன் விசாரணை உள்ளிட்ட நிர்வாகச் செலவினங்களுக்கு கையூட்டு தொகுப்பு நிதியை எதிர்பார்த்திருக்கும் காவல் நிலையங்களின் அவல நிலையை மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என நம்புவோம்.

கட்டுரையாளர்:

முன்னாள் காவல் துறை உயரதிகாரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.