
தரவக மையங்களின் தாகம்!
செயற்கை நுண்ணறிவில் இந்தியா முன்னேற வேண்டுமெனில், 'பசுமை தரவக மையங்கள்' என்ற அணுகுமுறையை முன்னிலைப்படுத்த வேண்டும்.

பிரதிப் படம்
உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அனைத்துத் துறைகளிலும் ஆழமாக வேரூன்றிக் கொண்டிருக்கும் வேளையில், அதற்குத் தேவையான தரவக மையங்களின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகிறது.
இத்தகைய தரவக மையங்கள் அதிகமான தண்ணீர், மின்சாரம் மற்றும் நிலப்பரப்பை உபயோகிப்பதன் காரணமாக அமெரிக்கா, ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா, தென்கிழக்காசியா உள்ளிட்ட பல நாடுகளில் உள்ளூர் மக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தரவக மையங்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். குடிநீர், மின்சாரம், இயற்கை வளங்களை அளவின்றி அதிகமாக தரவக மையங்கள் பயன்படுத்துவதால் விவசாய நிலங்கள் அழிக்கப்படுவதாகவும், ஒலி, ஒளி மாசுபாடு உருவாவதாகவும் ஏற்பட்டுள்ள அச்சம் உலகின் அனைத்து நாட்டு மக்களிடமும் காணப்படுகிறது.
கடுமையான நீர்ப் பற்றாக்குறையையும், மின்சார நெருக்கடியையும் எதிர்கொண்டு வரும் இந்தியா, உலகின் முன்னணி தரவக மையங்களுக்கு விடுக்கும் அழைப்பு வியப்பை ஏற்படுத்துவதாகவும் வளங்களை மிக அதிகமாக நுகரும் இத்தகைய தொழில்நுட்ப நிறுவனங்களை நீண்ட காலம் சமாளிப்பதில் இந்தியாவுக்குப் பிரச்னை ஏற்படலாம் என்றும் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
நாட்டின் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவக மையங்களின் தலைநகராக சென்னை உருவெடுத்து வருகிறது. அடுத்த சில ஆண்டுகளில் பல புதிய தரவக மையங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு வளாகங்கள் உருவாகும் என்று தொழில்துறை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கடலுக்கடியில் அமைந்துள்ள பல சர்வதேச ஒளியிழைக் கம்பிகளின் இணைப்பு, நம்பகமான தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பு, வளர்ந்த தொழில்துறை சூழல் மற்றும் ஒப்பீட்டளவில் குறைந்த நிலம் மற்றும் செயல்பாட்டு செலவுகள் ஆகியவை சென்னை மீது முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
பயிற்றுவிக்கப்படும் ஒவ்வொரு செயற்கை நுண்ணறிவு மாதிரியும், பயன்படுத்தப்படும் ஒவ்வொரு மேகக் கணிமைச் சேவையும், பார்க்கப்படும் ஒவ்வொரு இணையவழி காணொலித் தளமும், ஆயிரக்கணக்கான சேவையகங்களைக் கொண்ட தரவக மையங்களின் கட்டமைப்பு வழியாகவே இயங்குகின்றன. இந்தக் கட்டமைப்பு அதிகமான மின்சாரத்தை நுகர்வதுடன், பெருமளவு வெப்பத்தையும் வெளியிடுகின்றன.
செயற்கை நுண்ணறிவை உருவாக்குவதற்கான உலகளாவிய போட்டி, தரவக மையங்களின் பொருளாதார அமைப்பையே மாற்றியமைத்துள்ளது. வழக்கமான தரவக மையங்களில் தரவுச் சேமிப்பும், அன்றாடக் கணிமைப் பணிகளுமே முதன்மையாக இருந்தன. ஆனால், செயற்கை நுண்ணறிவுக்கான தரவக மையங்கள் மிகுந்த செயல்திறன் கொண்ட வரைகலைச் செயலாக்க அலகுகளைச் சார்ந்துள்ளன.
இவை வழக்கமான கட்டமைப்புகளைவிடப் பல மடங்கு அதிக மின்சாரத்தை நுகர்கின்றன. செயற்கை நுண்ணறிவுக்குத் தேவையான உயர் செயல்திறன் கொண்ட கணினிக் கட்டமைப்புகளின் விரைவான விரிவாக்கம் காரணமாக உலகளாவிய தரவக மையங்களின் மின்சார நுகர்வு 2030-ஆம் ஆண்டுக்குள் இரு மடங்குக்கும் மேலாக உயரக்கூடும் என சர்வதேச எரிசக்தி நிறுவனம் வெளியிட்டுள்ள மதிப்பீடு கூறுகிறது.
கோடைக்கால வெப்ப அலைகளின்போது, வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் குளிரூட்டும் சாதனங்களின் பயன்பாடு அதிகரிப்பதால், ஏற்கெனவே சென்னையின் மின் நுகர்வு உயர்ந்துள்ளது. இதனுடன் அதிக மின்சாரம் தேவைப்படும் செயற்கை நுண்ணறிவு தரவக மையங்கள் இணைந்தால் மின் கட்டமைப்பின் மீது கூடுதல் அழுத்தம் ஏற்படலாம்.
தரவக மையங்கள் மிகப் பெரிய அளவில் வெப்பத்தை உருவாக்குகின்றன. அந்த வெப்பத்தைக் கட்டுப்படுத்துவதற்கு, ஆவியாதல் அடிப்படையிலான குளிர்விப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் கட்டடங்களில், மிக அதிக அளவு தண்ணீர் தேவைப்படுகிறது. உலகம் முழுவதும் தண்ணீர்ப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் நகரங்களில், அதிக அளவு தண்ணீரை நுகரும் எண்மக் கட்டமைப்புகளுக்கு தொடர்ந்து அனுமதி வழங்க வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தரவக மையங்கள் மின்வலையமைப்புகளுக்கும் நீர்வளங்களுக்கும் ஏற்படுத்தும் பெரும் அழுத்தத்தை எதிர்கொள்ள, உலகின் பல பெரிய நகரங்களின் மேயர்கள் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர். வலுவான சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாமல், செயற்கை நுண்ணறிவு சார்ந்த கட்டமைப்புகள் நீடித்த வளர்ச்சியை அடைய முடியாது என்பதே அவர்களின் வாதம்.
ஐரோப்பிய ஒன்றியம், அதிக வளங்களை நுகரும் மிகப் பெரிய தரவக மையங்களுக்குப் பதிலாக, புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்தும், குறைந்த வளங்களை நுகரும் பிராந்திய அளவிலான தரவக மையங்களுக்கு முன்னுரிமை அளிக்கத் தொடங்கியுள்ளது.
அமெரிக்காவின் பல மாநிலங்களில் புதிய தரவக மையங்களை அமைப்பதற்கு முன்பு அந்தப் பகுதியில் போதுமான தண்ணீரும் மின்சாரமும் உள்ளதா என்பதை ஆய்வு செய்வது கட்டாயமாக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தின் மீது ஏற்படும் தாக்கங்களும் மதிப்பிடப்படுகின்றன.
செயற்கை நுண்ணறிவில் இந்தியா முன்னேற வேண்டுமெனில், 'பசுமை தரவக மையங்கள்' என்ற அணுகுமுறையை முன்னிலைப்படுத்த வேண்டும். சூரிய மற்றும் காற்றாலை போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களின் பயன்பாடு, தரவக மையங்களில் உருவாகும் கழிவுவெப்பத்தை மீள்பயன்படுத்துதல், சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை குளிர்விப்பிற்குப் பயன்படுத்துதல், மழைநீர் சேகரிப்பு, உயர் ஆற்றல் திறன் கொண்ட குளிர்விப்பு அமைப்புகள் மற்றும் கட்டாய நீர், ஆற்றல் திறன் தரநிலைகள் போன்றவை எதிர்காலக் கொள்கைகளின் முக்கிய அங்கமாக இருக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





