
அரசு சேவைகளுக்காக 'வெற்றி தமிழ்நாடு சூப்பர் செயலி'! ஐடி துறை அறிவிப்புகள் என்னென்ன?
சட்டப்பேரவையில் செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அறிவிப்புகள் குறித்து...

அமைச்சர் குமார் - DIPR
அரசு சேவைகளுக்காக ரூ. 5 கோடி மதிப்பில் வெற்றி தமிழ்நாடு சூப்பர் செயலி உருவாக்கப்படும் என தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் குமார் சட்டப்பேரவையில் இன்று தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் அவர் அறிவித்துள்ளதாவது:
வெற்றித் தமிழ்நாடு சூப்பர் செயலி
கைபேசியில் அரசு பிறப்புச் சான்றிதழ், குடும்ப அட்டை மற்றும் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் உள்ளிட்ட 500 அரசு சேவைகளைத் தங்களது கைபேசிகள் மூலம் நேரடியாகப் பெறுவதற்கு ஏதுவாக "வெற்றித் தமிழ்நாடு சூப்பர் செயலி" அறிமுகப்படுத்தப்படும். ரூ.5 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
தமிழ் இணைய மொழி ஆய்வகம்
செயற்கை நுண்ணறிவுடன் கூடிய "தமிழ் இணைய மொழி ஆய்வகம்" எனும் இணையதளம், தமிழ் இணையக் கல்விக்கழகம் மூலம் உருவாக்கப்படும். முதற்கட்டமாக, ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். இத்திட்டம் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் கல்வித் திட்டங்களில் விரிவுபடுத்தப்படும்.
மின்-அலுவலக பயன்பாட்டிற்கான செயற்கை நுண்ணறிவுக் கருவி
மின்-அலுவலக பயன்பாட்டிற்கான செயற்கை நுண்ணறிவுக் கருவியானது, அலுவல்சார்ந்த தகவல்தொடர்பின் தரத்தினை உயர்த்துவதுடன் இறுதி முடிவெடுக்கும் அதிகாரத்தை சம்பந்தப்பட்ட அலுவலருக்கே அளிக்கும். முன்னோடித் திட்டமாக செயல்படுத்தப்படுவதுடன், அதன் முடிவுகளின் அடிப்படையில், அனைத்து அரசுத் துறைகளுக்கும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும்.
தமிழ்நாடு பண்பாட்டு மின் நிலவரை தெற்குமண்டல விரிவாக்கம்
பொதுமக்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் பயன்பாட்டிற்காக தமிழ்நாட்டின் பண்பாட்டு மரபுகளை ஆவணப்படுத்தி, இணையத்தில் வழங்கும் அறிவுத் தொகுப்பு முயற்சியான தமிழ்நாடு பண்பாட்டு மின் நிலவரைத் திட்டம் -இரண்டாம் கட்டத்தினை செயல்படுத்தும். இதன்மூலம், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள 500 பண்பாட்டுத் தளங்கள் மற்றும் நிகழ்வுகள் ரூ. 60 லட்சத்தில் ஆவணப்படுத்தப்படும்.
சுகாதாரம் மற்றும் வேளாண்மைத் திட்டங்களுக்கான செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் அமைக்கப்படும். சுகாதாரம் மற்றும் வேளாண்மைத் திட்டங்களுக்கான செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரிகளானது, அத்துறைசார் திட்டங்கள் மற்றும் சேவைகளை திறம்பட செயல்படுத்துவதற்கு துணைபுரியும்.
தமிழ்நாடு தொழில்முனைவோருக்கான இலவச செயற்கை நுண்ணறிவுச் சேவைகள்
மாநிலத்தில் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தயாரிப்புகளின் வளர்ச்சியை விரைவுபடுத்தும் வகையில் "தமிழ்நாடு தொழில்முனைவோருக்கான இலவச செயற்கை நுண்ணறிவுச் சேவைகள்" திட்டம் செயல்படுத்தப்படும். அரசுக்குச் சொந்தமான அதி உயர் செயல்திறன் கொண்ட GPU கணினிக் குழுமம் ( (Ultra-High-Performance Graphics Processing Unit Compute Cluster) நிறுவப்படும். இத்திட்டம் ரூ.10 கோடியில் செயல்படுத்தப்படும்.
வெற்றித் தமிழ்நாடு இணையதளம்
பொதுமக்கள் தங்களது ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை அரசுடன் பகிர்ந்து கொள்ளவும் மற்றும் அரசின் பொதுச் சேவைகள் மீதான தங்களது மதிப்பீட்டினை வழங்கும் வகையிலும், வெற்றித் தமிழ்நாடு இணையதளம் உருவாக்கப்படும். இத்திட்டம் ரூ.1 கோடியில் செயல்படுத்தப்படும்.
வெற்றித் தமிழக தொழில்நுட்பப் புத்தாக்க நிதியம்
தமிழ்நாடு தொழில்நுட்ப மையத்தின் (iTNT Hub) மூலமாக வெற்றித் தமிழகம் ஆழ்நிலைத் தொழில்நுட்பப் புத்தாக்க நிதியம் ஏற்படுத்தப்படும். இந்நிதியத்தில் 25 சதவீதம் SC/ST நிறுவனர்களுக்கென தனியாக ஒதுக்கப்படும். இந்நிதியம் ரூ.50 கோடி தொடக்க நிதித்தொகுப்புடன் உருவாக்கப்படும்.
வெற்றித் தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு சிறப்பு மையம்
தமிழ்நாடு மின்னணு நிறுவனம் (ELCOT) மூலம் வெற்றித் தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு சிறப்பு மையங்கள் (Vetri Tamil Nadu Artificial Intelligence Centres of Excellence - VTN AI COE) நிறுவப்படும். தெரிந்தெடுக்கப்பட்ட துறைகளில் செயற்கை நுண்ணறிவுக் கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சி, திறன் மேம்பாடு, புத்தொழில் நிறுவன (Startups) வளர்காப்பு மற்றும் பொறுப்புடன்கூடிய செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தும். ரூ.20 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
Summary
Vetri Tamil Nadu Super App for government services IT Department announcements
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







