FOLLOW US

ON GOOGLE DISCOVER

லடாக்கில் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் கிளை: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!முத்தரப்பு டி20 தொடர்: தெ.ஆ.க்கு அதிர்ச்சியளித்தது நமீபியா!நேபாளத்தில் சிக்கியிருக்கும் எஞ்சியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ்மோகன்புழல் காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு! நேபாள வெள்ளத்தில் 320 இந்தியர்கள் மாயம்! வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்!எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்! செங்கோட்டையன்திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனு

மின் உற்பத்தியில் புதிய அத்தியாயம்

புவிவெப்பக் கிணறு என்றால், பூமியின் ஆழத்தில் உள்ள இயற்கையான வெப்ப ஆற்றலை (கொதிநீர் அல்லது நீராவி வடிவில்) வெளியே எடுத்துப் பயன்படுத்துவதற்காகத் தோண்டப்படும் ஒரு சிறப்புக் கிணறு ஆகும்.

புவிவெப்பக் கிணறு - படம்: ஏஎன்ஐ

Published On :40 வினாடிகள் முன்பு

பெ.நா. மாறன்

நிகழாண்டு ஜூலை மாதம் 17-ஆம் தேதி இந்திய வரலாற்றின் முக்கிய நாள்களில் ஒன்று. ஓஎன்ஜிசி நிறுவனத்தின் ஆராய்ச்சிப் பிரிவான ஓஎன்ஜிசி சக்தி கேந்திரம் மூலமாக இந்தியா முன்னெடுத்துள்ள புவிவெப்ப ஆற்றல் திட்டத்தின் முக்கிய மைல்கல்லை அடைந்ததன்மூலம் இந்தியாவின் மின் உற்பத்தியில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கப்பட்ட நாள் அது.

கடல் மட்டத்தில் இருந்து 14,000 அடி உயரத்தில் லடாக் பகுதியில் பூகா பள்ளத்தாக்கில் 1,000 மீட்டர் ஆழம் வரை தனது இரண்டாவது கிணற்றின் துளையிடும் பணியை ஓஎன்ஜிசி வெற்றிகரமாக முடித்ததைத் தொடர்ந்து, ஜூலை 17-ஆம் தேதி லடாக்கின் துணைநிலை ஆளுநர் வி.கே.சக்ஸேனா முன்னிலையில் அந்த இரண்டு கிணறுகளின் அதிகாரபூர்வத் தொடக்க விழா நடைபெற்றது. இது இந்தியா மேற்கொண்டுவரும் முன்னோடி புவிவெப்ப ஆற்றல் திட்டத்தின் முதல்படி. அங்கே அமைக்கப்பட்டு வரும் 1 எம்.வி. முன்னோடி மின் நிலையத்துக்குத் தேவையான புவிவெப்பக் கிணறுகள்தாம் அவை.

புவிவெப்பக் கிணறு என்றால், பூமியின் ஆழத்தில் உள்ள இயற்கையான வெப்ப ஆற்றலை (கொதிநீர் அல்லது நீராவி வடிவில்) வெளியே எடுத்துப் பயன்படுத்துவதற்காகத் தோண்டப்படும் ஒரு சிறப்புக் கிணறு ஆகும்.

பொதுவாக, பூமியின் மையப் பகுதி மிகக் கடுமையான வெப்பத்தைக் கொண்டது. சில இடங்களில் பூமிக்கு அடியில் ஓரிரு ஆயிரம் மீட்டர் ஆழத்திலேயே வெப்பநிலை அதிகமாக இருக்கும். இந்த வெப்பத்தை மின்சாரம் தயாரிக்கவும், குளிர்ப் பிரதேச நாடுகளில் கட்டடங்களை வெப்பப்படுத்தவும் பயன்படுத்திக் கொள்ளும் வழக்கம் உள்ளது.

இதற்கு பொதுவாக இரண்டு அதிஆழ்கிணறுகள் தேவை. அவற்றில் ஒன்று, உற்பத்திக் கிணறு. அது பூமியின் அடியில் 1,000 மீட்டர் முதல் 3,000 மீட்டர் ஆழம் வரை தோண்டப்படும். அதன் மூலம் பாறைகளுக்கு இடையே உள்ள அதிக வெப்பமுள்ள சுடுநீர் அல்லது நீராவி மேல் நோக்கி உறிஞ்சி எடுக்கப்படும். அதன்மூலம் மின் உற்பத்தி நிலையத்தின் டர்பைன்கள் இயக்கப்பட்டு, சுத்தமான மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். புவியின் வெப்பம் தடையின்றி தொடர்ந்து கிடைத்துக்கொண்டே இருக்கும் என்பதால், இது புதுப்பிக்கத்தக்க ஆற்றலாகக் கருதப்படுகிறது.

இரண்டாவது, மறுஉட்செலுத்தும் கிணறு. இது மேலே கொண்டுவரப்பட்ட நீராவி அல்லது சுடுநீர் மின்உற்பத்திக்குப் பிறகு குளிர்ந்த நீராக மாறி விடுவதால், அந்த நீரை மீண்டும் பூமிக்கு அடியிலேயே செலுத்தப் பயன்படுத்தப்படும். இது பூமிக்கு அடியில் உள்ள நீர்மட்டத்தையும் அழுத்தத்தையும் நிலையாக வைத்திருக்க உதவும்.

காற்றாலை மின்சாரம் காற்றின் வேகம் உள்ள சில மாதங்களையும், சூரிய மின்சக்தி என்பது பகல் பொழுதையும் மட்டுமே சார்ந்து இருப்பதுபோல் அன்றி புவி வெப்பம் சார்ந்த மின் உற்பத்தி நிலையங்கள் 24 மணிநேரமும் 365 நாள்களும் தொடர்ச்சியாக செயல்பட முடியும் என்பது கூடுதல் நன்மை.

மொத்த மின் உற்பத்தி அடிப்படையில், உலக அளவில், சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு அடுத்து இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது. வேகமாக வளரும் பொருளாதார நாடு என்பதால் இந்தியாவின் மின் பயன்பாட்டுத் தேவையும் வேகமாக அதிகரித்து வருகிறது. மின் உற்பத்தியில் இந்தியா சுயசார்பு அடைந்திருப்பதற்கான முக்கிய காரணம், நம் மொத்த உற்பத்தியில் சுமார் 75 சதவீத அளவுக்கு நிலக்கரியைச் சார்ந்திருப்பதும், நம் நாட்டில் நிலக்கரி உற்பத்தி போதுமான அளவுக்கு இருப்பதும்தான். இந்தியாவின் மின் உற்பத்தி சுமார் 1,800 டெராவாட் ஹவராக இருக்கிறது. சிஇஏ-யின் நீண்டகாலத் தேவை முன்கணிப்பின் அடிப்படையில், 2030-இல் இந்தியாவின் ஆண்டு மின் தேவை 2,170 டெராவாட்டாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், கூடுதல் தேவைக்கான மின்சாரத்தை நிலக்கரியை உபயோகித்து உற்பத்தி செய்வது சாத்தியமில்லை. உலகளாவிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு அடிப்படையிலான எச்சரிக்கைகளின் காரணமாக, வெளி அழுத்தங்களைத் தாண்டி நிலக்கரி உபயோகத்தைக் குறைத்துக் கொண்டே ஆகவேண்டிய சுய கடப்பாடுகளுக்கும் உள்ளாகி உள்ளோம். அதற்காகவாவது புதுப்பிக்கத்தக்க சக்திகளின் அடிப்படையில் மின் உற்பத்தி அதிகரிக்கப்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.

இந்தியாவின் சூரிய மின்சக்தி மற்றும் காற்றாலை மின்சக்தி உற்பத்தி, மொத்த மின் உற்பத்தியில், நான்கைந்து ஆண்டுகளில் 10 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்ந்துள்ளது சாதனை. அவை இன்னும் அதிக அளவு உயர்வதற்கு சாதகமான புவியியல், இயற்கை வாய்ப்புகளும் இங்கே உள்ளன. கடந்த நான்கைந்து ஆண்டுகளில், சூரிய மின்சக்தி மற்றும் காற்றாலை மின் உற்பத்தியை அதிகரித்ததன் மூலம் நிலக்கரி சார்ந்த மின் உற்பத்தியை சுமார் நான்கு சதவீத அளவுக்கு இந்தியா குறைத்துள்ளது.

சீனா, அமெரிக்கா போன்ற நாடுகள் நம்மைவிடப் பல மடங்குகள் அதிக மின்சாரம் உற்பத்தி செய்தாலும் அதற்கு புதுப்பிக்கத்தக்க சக்திகள் மற்றும் இயற்கை எரிவாயுவை அதிகமாக உபயோகிக்கின்றன. அதிக அளவில் மின் உற்பத்தி செய்யும் பிரேஸில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள், நீர்மின்சாரம், அணுசக்தி மின்சாரம், காற்றாலை, சூரியசக்தி ஆகியவற்றைச் சார்ந்தே இருக்கின்றன. உலக அளவில் நிலக்கரியைச் சார்ந்து மின்சார உற்பத்தி செய்யும் முக்கிய நாடாக இந்தியா இருக்கிறது.

ஐஇஏ-வின் அண்மைக்கால மதிப்பீட்டின்படி, 2025-இல் உலக அளவில் புதுப்பிக்கத்தக்க சக்தி சார்ந்த மின் உற்பத்தியின் பங்கு 34 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இப்போதுதான் 25 சதவீத அளவை எட்டி உள்ளோம். அதை இன்னும் அதிகரிக்க புதிய சாத்தியக் கூறான புவி வெப்பம் சார்ந்த மின் உற்பத்தியையும் தொடங்கி அதிகரிக்க வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம்.

உலக அளவில் 35-க்கும் மேற்பட்ட நாடுகள் புவி வெப்பக் கிணறுகள் மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்கின்றன. அமெரிக்கா, இந்தோனேசியா, பிலிப்பின்ஸ், துருக்கி போன்ற நாடுகள் இந்த வரிசையில் முன்னிலையில் உள்ளவை. குறிப்பாகச் சொல்வதென்றால், கென்யா நாட்டின் மொத்த மின்சார தேவையில் 45 சதவீதம் புவி வெப்பக் கிணறுகள் மூலமே பெறப்படுகிறது. இந்தியா இப்போதுதான் இந்தத் துறையில் தடம் பதித்துள்ளது.

இந்தியாவில் சுமார் 300-க்கும் மேற்பட்ட இயற்கை சுடுநீர் ஊற்றுகள் மற்றும் புவி வெப்ப மண்டலங்களை இந்திய புவியியல் ஆய்வு மையம் கண்டறிந்துள்ளது. லடாக்கில் பூகா, சுமதங் பள்ளத்தாக்குகள், சத்தீஸ்கரில் பல்ராம்பூர் மாவட்டத்தின் தத்தாபானி பகுதி, ஹிமாச்சல் பிரதேசத்தின் மணிகரன், கசோல் பகுதிகள் மற்றும் தெலங்கானா, குஜராத், மேற்குவங்கம், ஜார்க்கண்ட், உத்தரகண்ட், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களின் சில இடங்கள் என்று பலவும் கண்டறியப்பட்டுள்ளன.

இந்திய புவியியல் வரைபடத்தின்படி இந்தியாவில் அதிகபட்சமாக சுமார் 10,000 மெகாவாட் மின்சக்தியைப் புவி வெப்ப ஆற்றல் மூலம் உற்பத்தி செய்யும் திறன் உள்ளது.

இந்தியாவில் புவி வெப்ப வளங்களின் ஆழம் சராசரியாக 1,500 மீட்டர் முதல் 3,000 மீட்டர். இந்த ஆழத்தில் சுமார் 100 டிகிரி செல்சியஸ் முதல் 160 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலை நிலவுகிறது. லடாக் பூகா பகுதியில் மட்டும் 500 முதல் 1,000 மீட்டர் ஆழத்திலேயே, 140 டிகிரி செல்சியஸ் முதல் 200 டிகிரி செல்சியஸ் வரையிலான அதிக வெப்பம் கிடைக்கிறது. எனவேதான் இந்தியாவின் முதல் திட்டம் அங்கே அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த 1 எம்வி திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்து மின்சார விநியோகம் 2027-இல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முன்னோடித் திட்டம் வெற்றிகரமாக செயல்படத் தொடங்கியதும், இரண்டாம் கட்டமாக 20 மெகாவாட் முதல் 50 மெகாவாட் வரையிலான பெரிய திட்டங்களை அங்கு செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் ஆண்டு பட்ஜெட்டில் 30 சதவீதத்துக்கும் அதிகமாக பெட்ரோலியப் பொருள்களின் இறக்குமதிக்கே செல்கிறது. மின் உற்பத்திக்கான பெட்ரோலியப் பொருள்களின் தேவை கிட்டத்தட்ட இல்லை எனலாம். ஆனால், சுமார் 13 சதவீதம் (எல்பிஜி மற்றும் எல்என்ஜி வடிவங்களில்) சமையல் எரிவாயுத் தேவைக்கானதாக உள்ளது. இந்தியாவின் மின் உற்பத்தி அபரிமிதமாக உயர்ந்து எவ்வளவுக்கெவ்வளவு மின்சார அடுப்புகள் உபயோகத்துக்கு வருகின்றனவோ அவ்வளவுக்கு எரிவாயு இறக்குமதி குறைந்து அந்நியச் செலாவணியைச் சேமிக்க முடியும்.

வருமானம் குறைவாக இருந்தாலும்கூட, செலவினத்தைக் கட்டுப்படுத்தினால் வளமாக இருக்க முடியும் என்ற திருவள்ளுவர் கருத்தின் அடிப்படையில் இறக்குமதியைக் குறைப்பதன்மூலம் மிச்சமாகிற நமது அந்நியச் செலாவணியை நாட்டின் முன்னேற்றத்துக்கான முதலீடுகளில் உபயோகிக்க முடியும். இந்தியா வல்லரசாவதற்கு அது முக்கியத் தேவை.

கட்டுரையாளர்:

எழுத்தாளர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.