

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் நிகழ்ந்த அமளிகள் ஜனநாயக நடைமுறைகளுக்கு ஏற்புடையவைகளாகத் தெரியவில்லை. எதிர்க்கட்சிகள்தான் அமளியில் ஈடுபட்டன என்றபோதிலும் ஆளுங்கட்சி அதற்கான வாய்ப்புகளை வகுத்துக் கொடுத்ததைப்போல இருந்தது.
பட்ஜெட் கூட்டத் தொடர் அமைதியாக நடைபெறாததற்கு இரண்டு முக்கியமான காரணங்களை கூறலாம். முதலாவது, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவையில் பேச அனுமதிக்கப்படவில்லை. இரண்டாவது, அமெரிக்க-இந்திய வர்த்தக ஒப்பந்தம் குறித்த அறிக்கையை முதலில் நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி தாக்கல் செய்யவில்லை. மாறாக, அதை அமெரிக்க அதிபர் வெளியிட்டார். அதற்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.
முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி நரவணே எழுதிய புத்தகத்தில் கூறப்பட்டுள்ள கருத்துகள் குறித்து ராகுல் காந்தி பேச முயன்றபோது அதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ராகுல் காந்தி பேச வந்த பொருள், ஏற்கெனவே பொதுவெளியில் பல்வேறு தளங்களில் வெளிவந்ததுதான். புதிய செய்தி ஒன்றுமில்லை. அவரைப் பேச அனுமதித்துவிட்டு அவரது குற்றச்சாட்டுக்கு முறைப்படி விளக்கம் தெரிவித்திருந்தால் பிரச்னை அத்துடன் முடிந்திருக்கும்.
ஜனநாயகத்தில் முக்கியமான கருத்துச் சுதந்திரம் மறுக்கப்படுவது, அதுவும் நாடாளுமன்றத்திலேயே பிரதான எதிர்க்கட்சித் தலைவருக்கு மறுக்கப்படுவதை ஆளுங்கட்சி உணர்ந்து செயல்பட்டிருக்க வேண்டும். இரண்டாவது, நீண்ட நாள்களாக இழுபறியில் இருந்துவந்த அமெரிக்க-இந்திய வர்த்தக ஒப்பந்தம் திடீரென முடிவாகி விட்டதாக முன்னிரவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தது. அது வரையில் ஒப்பந்தம் குறித்து அரசிடமிருந்து எந்தத் தகவலும் நாட்டு மக்களுக்கு தெரிவிக்கப்படவில்லை.
இந்திய- ஐரோப்பிய யூனியன் இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கும் பின்னணியில், அதிபர் டிரம்ப் தடாலடியாகத் தன்னிச்சையாக ஒப்பந்தத்தை அறிவித்திருக்கக்கூடும். வேறு வழியில்லாமல்கூடப் பிரதமர் அதை வரவேற்றுத் தனது தர்மசங்கடத்தை மறைக்க முற்பட்டிருக்கலாம்.
நாட்டின் முக்கியமான வர்த்தக ஒப்பந்தம் ஒன்று உலகின் வல்லரசான அமெரிக்காவுடன் முடிவாகி இருப்பது வரவேற்கதக்க ஒன்றுதான். ஆனால், நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் குறித்த தகவலை பிரதமர் நாடாளுமன்றத்தில்தானே அறிக்கையாக வெளியிட்டிருக்க வேண்டும்.
அவ்வாறு செய்யாதது நாடாளுமன்றத்தை அதாவது ஜனநாயகத்தில் நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களின் பிரதிநிதிகளாக இருக்கும் உறுப்பினர்களைக் கொண்ட அவையை அவமதிக்கும் செயல் என எதிர்க்கட்சிகள் கூறுவதில் தவறு காண இயலவில்லை. இவையெல்லாம் போதாது என்று, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பதில் அளிக்க பிரதமர் அவைக்கு வராததற்கு அவையில் ஆட்சேபகரமான நிகழ்வுகள் நடைபெற வாய்ப்பு இருப்பதாக தனக்குக் கிடைத்த தகவலை அவருக்கு தெரிவித்ததுதான் என்று மக்களவைத் தலைவர் கூறியது கூடுதல் அமளிக்கு வித்திட்டு விட்டது.
இப்போது, இந்த பிரச்னை மக்களவைத் தலைவரை பதவி நீக்கம் செய்யும் கோரிக்கை வரை வந்து நிற்கிறது. எரியும் தீயில் எண்ணெய் வார்ப்பதுபோல, எதிர்க்கட்சி பெண் எம்.பி.க்கள் அவையில் பிரதமர் இல்லை என்றாலும் அவரது இருக்கைக்கு அருகில் கூடி நின்ற விடியோவை நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வெளியிட்டார்.
அதைத் தொடர்ந்து, பெண் எம்.பி.க்கள் மக்களவைத் தலைவர் அறைக்குள் சென்று அவரிடம் வாக்குவாதம் செய்த விடியோவையும் வெளியிட்டுள்ளார். நாடாளுமன்ற அவைகளுக்குள் நடைபெறும் நிகழ்வுகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுகின்றன. ஆனால், அவற்றில் சில குறிப்பிட்ட காட்சிகளை அவைக்கு பொறுப்பான அமைச்சரே வெளியிடுவது நடைமுறைகளுக்கு ஏற்புடையவையா என்ற கேள்வி எழுகிறது. மேலும், மக்களவைத் தலைவர் அறைக்குள் நிகழ்ந்த ஒன்றை தனிப்பட்ட முறையில் பொதுவெளியில் வெளியிடுவதும் சரியா என்ற கேள்வியும் எழுகிறது.
இது மக்கள் பிரதிநிதிகளை அதாவது மக்களை அவமதிக்கும் செயல் என்பதால் கிரண் ரிஜிஜு தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ரேணுகா செüத்ரி வலியுறுத்தியுள்ளார். இதை இனிமேல் மேலும் பலர் வலியுறுத்தக்கூடும்.
நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறும்போது பிரதமரும் மற்ற அமைச்சர்களும் கூட்டத்தில் தவறாது பங்கேற்று உறுப்பினர்களின் பேச்சைக் கேட்பது, அதற்கு தக்க முறையில் பதில் அளிப்பது, சுட்டிக்காட்டப்படும் குறைகளுக்கு நிர்வாக ரீதியிலான நடவடிக்கைகளை எடுப்பது, பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது என ஆக்கபூர்வ செயல்பாடுகளில் ஈடுபட்டு எதிர்க்கட்சிகளை வாயடைத்துப் போகச் செய்ய வேண்டும். அவ்வாறு செயல்பட்டால் அரசியல் செல்வாக்கு தானே வளரும்.
கூட்டத் தொடர் காலங்களில் பிரதமரும், அமைச்சர்களும் பிற நிகழ்ச்சிகள் மற்றும் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களைத் தவிர்த்து, அக்கறையுடன் அவை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தால் எதிர்க்கட்சிகளின் தேவையற்ற தொடர் விமர்சனங்களைத் தவிர்க்கலாம் என்பதை ஆளுங்கட்சி இனிமேலாவது உணர வேண்டும்.
பிரதமரை மகிழ்விக்க வேண்டும் என்பதற்காக அமைச்சர்கள் கடந்த காங்கிரஸ் ஆட்சி கால செயல்பாடுகளையும், தலைவர்களையும் அளவு கடந்து விமர்சிப்பதும், வரலாற்று நிகழ்வுகளில் குறை கண்டு பேசுவதும் திராவிட கட்சிகளை காப்பி அடிப்பதுபோல இருக்கிறது.
எத்தனை காலத்துக்கு அவ்வாறு பேசிக் கொண்டிருக்க முடியும் என்பதை ஆளுங்கட்சி உணர வேண்டும். நாட்டுக்கும், மக்களுக்கும் தேவை ஆக்கபூர்வ செயல்பாடே தவிர, அவை குழப்பமும் அமளியும் அல்ல. எதிர்க்கட்சிகளை விமர்சிக்க அனுமதிப்பதும், அவர்களது விமர்சனங்களுக்குப் புள்ளி விவரங்களுடனும், தர்க்க ரீதியாகவும் பதிலளிப்பதும்தான் ஆக்கபூர்வமான நாடாளுமன்ற ஜனநாயக நடைமுறை. விவாதம் இல்லாவிட்டால், நாடாளுமன்றம் எதற்காக?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.